மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கிருஷ்ணவேணி - 21

கிருஷ்ணவேணி
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணவேணி ( பா.ராஜநாராயணன் )

கிருஷ்ணவேணி - 21


தொடர்கள்
கிருஷ்ணவேணி - 21
கிருஷ்ணவேணி - 21
 
கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி - 21
கிருஷ்ணவேணி - 21
கிருஷ்ணவேணி - 21
கிருஷ்ணவேணி - 21

குளவு மரத்தின் உச்சியில் இருந்து காட்டுப் பூனையின் வேகத்தில் குதித்து இறங்கிய விக்கிரமனை அத்தனை பேருமே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

''எந்துருடே... இத்தர வேகத்தி பேய் மாறி இறங்குதாம்?'' என்றான் மந்திரம்.

''ஆமாடே, பேடியாத்தான் இருக்கு'' என்று பதற்றமானான் மாத்திக் காணி. சரசரவென மரத்திலிருந்து இறங்கியவன், அருவியை நோக்கி ஓட ஆரம்பித்தான். பிள்ளையார் சிலை தாண்டி, தடாகம் பகுதியில் அங்கும் இங்கும் ஓடினான். பின்னாலேயே மற்ற இருவரும் துரத்திச் செல்ல, இன்னும் வேகம் கூட்டித் தேடினான்.

''எடே, எந்துரு தேடுத... பறைஞ்சு கள மொதல்ல'' என்றான் மந்திரம்.

''கையில ஒரு சின்ன பெண்ணப் பிடிச்சிட்டு இருக்கு. பெரிய பொம்பளயாட்டும் அதுண்ட கையப் பிடிச்சிட்டிருந்த பெண்ணு கிருஷ்ணவேணி மாதிரி காணினு. சத்தியமா இங்கினதான் கண்டேம். இங்கினிதான்'' என்று பாறையில் அறைந்து அடித்துச் சொன்னான் விக்கிரமன்.

மந்திரமும் மாத்தியும் ஒருவரை ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

''விக்கிரமா... விக்கிரமா...'' என்கிற குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது விக்கிரமனுக்கு.

காணிக் குடியிருப்பு, பூசாரியின் வீடு. வாசலில் விக்கிரமன், முருகன், மாத்தி மூன்று பேரும் நின்றிருந்தார்கள். வீட்டுக்குள்ளிருந்து கொஞ்சமாகக் கசிந்துகொண்டு இருந்தது குரல். ''இனி நெக்கு ஒண்ணு இல்லா. கவனமா இருக்கணும். கண்ட நேரம் கண்ட இடத்திச் «சிற்றரது கூடாது. மனசுலாயா? போ, இந்த விபூதிய எப்பவும் வெளிய போவப்பமும், ராத்திரி கிடக்கப்பமும் பூசிட்டுப் படு'' என்று யாருக்கோ சொல்லிக்கொண்டு இருந்தார் பூசாரி.

அடுத்த சில நிமிடங்களில், அங்கிருந்து வெளியே வந்தவன் காளிக் காணி. வெளியே விக்கிரமன், மந்திரம், மாத்தி மூன்று பேரும் நின்றிருந்தார்கள்.

காளியைக் கூர்ந்து கவனித்தார்கள். மூன்று மாதங்களில் சீக்குக் கோழி உயிர் பிழைத்தது மாதிரி ஆகியிருந்தான்.

''இப்பம் எப்படிடே இருக்க?'' என்றான் விக்கிரமன்.

''பரவாயில்லண்ணே, படாதபாடு பட்டாச்சு'' என்றான் சன்னமான குரலில்.

''வெளிய யாரு, உள்ளுக்கு வா...'' என்று குரல் சற்று வேகமாகவே வந்தது பூசாரியிடமிருந்து.

''சரிடே, பாத்துப் போ!'' என்று காளிக் காணியை அனுப்பிவிட்டு, விக்கிரமன் கொஞ்சம் இறுகிய முகத்துடன் பூசாரியின் குடிசைக்குள் நுழைந்தான். பூசாரிக்கு அவ்வளவு ஆச்சர்யம். ''விக்கிரமனா...'' என்றார்.

''ஆமா சாமி. «உச்சைக்குத் தேனெடுக்குப் பெய்ய, அங்க ஏதோ பெண்ணெல்லாம் காணுதுன்னு புலம்புதாம். குரல் வேற கேக்குதுன்னு பறைஞ்சாம்'' என்று விக்கிரமனுடன் வந்த மாத்திக் காணி சொல்ல, பெரிதாகச் சிரித்தார் பூசாரி.

''விக்கிரமன் குரல் கேக்குதுன்னு பறைஞ்சா ஆச்சர்யம்தாம், இங்கு வாடே!'' என்று விக்கிரமனை உட்காரவைத்து, நாடி பிடித்துப் பார்த்தார்.

''அட! ஒண்ணுல்ல. இவனுக்கு உடம்பு மனசு ரெண்டுமே சுத்தமா இருக்கு'' என்றவர், ''இந்தா'' என்று கொஞ்சம் விபூதியை எடுத்துப் பூசிவிட்டார்.

''சாமி, நான் ஒண்ணு கேக்கணும்'' என்றான் விக்கிரமன்.

''என்ன?'' என்று ஆச்சர்யமாகப் பார்த்தார் பூசாரி.

''ஏதேதோ சொப்பனம் வருது. இடைஞ்சலா இருக்கு. உறக்கத்தியாரும் அய்யாளோட தம்பியும் வெள்ளத்தி வீழ்ந்த மாதிரி சொப்பனம் கண்டு. அன்னு ராத்திரி உண்மைக்குமே வீழ்ந்து கிடக்காங்க. சினிமா படத்தி போல சில விஷயங்கள் எக்கு மட்டு தெரியுது. அது எங்ஙன?'' என்றான்.

பூசாரிக்கும் இந்த விஷயம் புதிராக இருந்தாலும், ''விக்கிரமா! சில விஷயங்களை இப்படிச் சேர்த்து நினைக்கக் கூடாது. சொப்பனத்தைச் சொப்பனமாவே வெச்சுக்கோ. மறந்துடு. நடந்த காரியத்தை நடந்ததாவே நினைச்சுக்கோ. எல்லாம் சரியா இருக்கும்'' என்றார். விக்கிரமனுக்குக் குழப்பம் இப்போதுதான் இன்னும் அதிகமானது.

ருவிக்கரை பிள்ளையார் சிலைக்கு அருகே இருந்த உறக்கத்தியாருக்கு, அந்த மதிய நேரத்தில் ஏதேதோ யோசனை ஓடிக்கொண்டு இருந்தது. 'எல்லாம் முடிஞ்சாச்சு. போதும்னு நிம்மதியா இருந்தேன். கடேசி நேரத்துல தம்பியும் வந்து நம்ம கண்ணுக்கு முன்னால போய்ச் சேரணும்னு இருக்கு. என்னத்தச் சொல்ல?' - யோசனையுடனேயே பச்சைப் பாக்கை பல்லால் சுரண்டியும், வாயில் ஒரு பக்கமாக அதக்கிவைத்தும் கரைத்துக்கொண்டு இருந்தவருக்கு, நேரம் எடுக்க எடுக்க... தலை கிறுகிறுஎன்று சுற்ற ஆரம்பித்தது.

தம்பி இறந்ததற்குப் பிறகு பொங்கிச் சாப்பிடும் பழக்கத்தையும், மீன் பிடிப்புக்குப் போவதையும் சுத்தமாக நிறுத்திவிட்டிருந்தார். 'கண்ணுப் பார்வை கொஞ்சம் தடுமாறுது. இங்கினியே கெடப்போம். கிடைச்சதச் சாப்பிடுவோம்' என்று அமைதியாகிவிட்டவருக்கு, அன்று அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்றுஎதிர் பார்க்கவில்லை.

மூன்று பேர் அருவிக் கரை பார்த்து வந்தார்கள். சடசடவென ஆகாயத்திலிருந்து குதிக்கும் அருவியை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு, அருவிக் கரையில் சித்தி, புத்தி தேவியருடன் இருக்கிற பிள்ளையாரைப் பார்த்தார்கள். ''பாத்தியாடே, ஊரே பிள்ளையாரு பிரம்மச்சாரின்னு சொல்லிக்கிட்டுகிடக்கு. இங்க மட்டும் தம்பிக்குப் போட்டியா ரெண்டு பொண்டாட்டியோட பிள்ளையாரு உட்கார்ந்திருக்காரு!'' என்றான் ஒருவன்.

பேசுவது காதில் விழும் தூரத்தில் மிதமான போதையில் இருந்த உறக்கத்தியாருக்கு, இவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும்... 'எவனுவளோ கோட்டிக்காரப்பயலுவ வந்திருக்கானுங்க!' என்று அங்கேயே ஒரு மரத்தடியில் படுத்துக்கிடந்தார்.

வந்தவர்கள், நிதானமாக பாட்டில் சரக்கைத் திறந்து, ரசித்து ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். விதி யாரை விட்டது? அவர்கள் ரசித்தது அருவியை மட்டுமில்லை... பிள்ளையாருக்கு அருகில் இருந்த சித்தி, புத்தி தேவி சிலைகளின் அழகை!

''என்னமா செஞ்சிருக்கானுங்க. பிள்ளையாரு யோகக்காரருதாம்டே!'' என்று சிலைக்கு அருகில் சரக்கு கிளாஸூடன் பேசிக்கொண்டு இருந்த ஒருவன், சட்டென்று சித்தி தேவியின் மீது உடுத்தப்பட்டு இருந்த சிவப்பு நிறப் புடவையைக் கொத்தாகப் பிடித்து இழுத்து உருவி எறிந்தான். இன்னொருவன் புத்தி தேவி சிலையைத் தொட்டான். எதிரில் இருப்பது சாமி சிலை என்பதை மறந்தார்கள்.

கிருஷ்ணவேணி - 21

பிள்ளையார் சிலை அருகே படுத்தவாறு லேசான போதையில் கவனித்துக்கொண்டு இருந்த உறக்கத்தியாருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்தது என்பது தெரியவில்லை. ''எடுல அருவாள... படுபாவிப் பயலுவளை வெட்டிச் சாய்ச்சுப்புட்டுத்தான் அடுத்த சோலி!'' என்று கையில் சிக்கிய தடியை தூக்கிக்கொண்டு ஆவேசமாக எழுந்து நின்றார். ''சாமி சிலையவாலே தொடுத... உம்கூடப் பொறந்தாளத் தொடுல. ஒரு பய உசுரோட இங்கேயிருந்து போவ முடியாது!'' என்று மூன்று பேரையும் நோக்கிப் பாய்ந்தார் ஆவேசமாக!

எதிரில், வயதான பெரியவர் ஒருவர் சத்தம் எழுப்பிப் பாய்ந்து வருவது பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனார்கள், போதையில் இருந்தவர்கள்.

''என்னடே! பாட்டையா அவம் பொண்டாட்டியத் தொட்ட மாதிரி ஓடியாரான்?'' என்றான் ஒருவன். கையில் இருந்த கிளாஸை இன்னொருவன் உறக்கத்தியாரை நோக்கி வீச, குறி தப்பிப் போய் விழுந்தது டம்ளர். உறக்கத்தியார் விடவில்லை... ''சண்டாளப் பயலுவளா! சாமி சிலை மேலயாலே கை வைக்கீங்க. உருப்படுவீங்களால?'' என்று தடியால் நாலா பக்கமும் சுழற்றி எடுக்க, அடி பொறுக்க மாட்டாமல் தெறித்து ஓட ஆரம்பித்தார்கள் மூவரும்.

''இன்னிக்கு ஒரு பய அணைக் கரை தாண்ட முடியாது...'' என்று சுழற்றிச் சுழற்றி கண் மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, மூன்று பேரும் ரத்த விளாறாக படகுத் துறை பார்த்து ஓட ஆரம்பித்தார்கள்.

தூரத்தில் படகில் இருந்தே கவனித்தான் படகுக்காரன் ஒருவன்.

மாட்டைத் துரத்தும் புலி வேகத்தில் உறக்கத்தியார் பாய்ந்து வருவ தைப் பார்க்கக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவ்வளவு பலசாலியாக அந்தப் பாட்டையாவை யாரும் பார்த்ததில்லைதான்!


கிருஷ்ணவேணி - 21
 
கிருஷ்ணவேணி - 21
- திகிலடிக்கும்...
கிருஷ்ணவேணி - 21