அவ்வமயம், குமரகிரியை ஆண்ட சரபராஜ மன்னனின் கனவில் இறைவன் எழுந்தருளி, கோதாவரியில் இருக்கும் தன்னை மீட்டு எடுத்து, ஆலயம் ஒன்றை அமைக்குமாறு ஆணையிட்டார்.
மன்னனும், தன் ஆட்களுடன் கோதாவரியில் மூழ்கியிருந்த லிங்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அதன் மீது கடப்பாறை பட்டது. குருதி கொப்பளித்து, கோதாவரியே குருதி நிறத்தில் ஓடத் துவங்கியது.
மன்னனும் மற்றவர்களும் அச்சத்துடன் சுவாமியை ஏந்திச் செல்ல, சற்று தொலைவிலேயே லிங்கத்தின் சுமையானது யாராலும் சுமக்க முடியாத அளவுக்குக் கூடியது.
அரசர், அந்த இடத்திலேயே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயமும் எழுப்பினார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், முரமள்ளாவில் உள்ளது பத்ரகாளி சமேத வீரேஸ்வர சுவாமி ஆலயம். முனி மண்டலி என்று அறியப்பட்ட இடமே முரமள்ளாவாக மருவியிருக்கிறது.
கோபுர வாசலைக் கடந்தால், பிரமாண்ட வெளிப்பிராகாரம். பலிபீடம் மற்றும் கொடிமரத்தை அடுத்து இருக்கும் மண்டபத்தில் சுவாமிக்கு நேர் எதிரே இரட்டை நந்தி. இரண்டு நந்திகளில் சிறிய நந்தி உபநந்தி என்றழைக்கப்படுகிறது.
கருவறைக்கு முன்பாக வலது பக்கம் விநாயகர் தரிசனம்.
கருவறையில் வீரேஸ்வர சுவாமி லிங்க வடிவில், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
உக்கிர லிங்கம் என்பதால் தினம் அபிஷேகத்துக்கு முன் சந்தனம் சாத்தி உக்கிரம் தணிக்கப்படுகிறது. இருந்தும் சுவாமிக்குச் சாத்தப்படும் வில்வ இலைகள் நாழிகை நேரத்துக்குள் வாடி வதங்கிவிடுகின்றன.
சுவாமியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக அன்னை பத்ரகாளி, கன்னி வடிவில் சுவாமியின் பீடத்திலேயே எழுந்தருளி இருக்கிறாள்.
லிங்க ரூப வீரேஸ்வர சுவாமியையும், கன்னி வடிவ பத்ரகாளியையும் ஒரே பீடத்தில் அருகருகே தரிசிக்கும் போது, அகத்தில் ஆனந்தம் பொங்குகிறது.
கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்தில் சுவாமியும், அன்னையும் ரிஷப வாகனத்தில் உற்சவ மூர்த்திகளாகக் காட்சி அளிக்கின்றனர்.
|