மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

##~##

இரோம் சர்மிளா

டல் உள்ளுறுப்புகள் அனைத்தும் பாதி செயலிழந்து,  வெளுத்துப்போய், மாதவிடாய் நின்று 10 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருக்கும் 'இந்தியாவின் இரும்பு பெண்மணி’ மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவின் வாழ்க்கைக் கதையே இந்த நூல். மலையாளத்தில் பி.சிறீராஜ் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மு.ந.புகழேந்தி.

உலகின் நீண்டகால உண்ணாநிலை போராட்டம் இரோம் சர்மிளாவுடையது. அவரது ஒரே கோரிக்கை, மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப் படைச் சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனெனில், அந்தச் சட்டம் மணிப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டது. ஆயுதப் படை யாரையும் சுடலாம், யார் வீட்டுக்குள்ளும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அவர்களைக் கேள்விகேட்க முடியாது. நடுராத்திரியில் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் புகுந்து, தூங்குபவர்களை இழுத்துச் செல்வது, இளைஞர்களை சிறையில் அடைத்து பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது, பெண்களை நடுத்தெருவில் கட்டிவைத்து துப்பாக்கியால் சுடுவது... என ஆயுதப் படையின் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் பதைபதைக்கவைக்கின்றன. பேருந்துக்காகக் காத்திருந்த 10 பேரை ராணுவம்

விகடன் வரவேற்பறை

கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதை நேருக்குநேர் பார்த்த பிறகுதான், இதை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தவர் சர்மிளா.

மணிப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், பழக்கவழக்கங்கள்... என வரலாற்று ஆதாரத்தோடு தொடங்கும் இந்த நூல், மணிப்பூர் பெண்களின் போராட்டக் குணங்களை பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறது. மன்னாராட்சியோ... மக்களாட்சியோ... அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதில் மணிப்பூரிகள் ஒருபோதும் தயக்கம் காட்டியதே இல்லை. அப்படிப்பட்ட கடந்தகாலப் போராட்டங்கள் பலவற்றுக்கும் பெண்களே தலைமை ஏற்றுள்ளனர். இந்த மரபில் வந்தவர்தான் இரோம் சர்மிளா.

சர்மிளாவின் உடல், இப்போது தளர்ந்துவிட்டது. ஆனால், போராட்டக் குணம் மேலும் வலுவடைந்திருக்கிறது. இன்னும்கூட மணிப்பூரில் 'ஆயுதப் படைச் சிறப்புச் சட்டம்’ விலக்கிக்கொள்ளப்படாத நிலையில் பத்திரிகைகளுக்கு செய்தியாக, அரசின் பார்வையில் ஒரு குற்றவாளியாக தன் போராட்டத்தைத் தொடர்கிறார் சர்மிளா. 'இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமை. நிச்சயம், சத்தியம் வெல்லும்’ என்பது சர்மிளாவின் நம்பிக்கை!

விகடன் வரவேற்பறை

நச்சுகளைக் களை! www.toxicswatch.org

அணு உலை தொடங்கி வனங்களை அழிக்கும் 'வளர்ச்சித் திட்டங்கள்’ வரை... அரசாங்கத்தின் அனைத்து வகையான அநீதிகளையும், அதற்கு எதிரான இயக்கங்கள் மற்றும் மக்களின் நடவடிக்கைகளையும் அப்டேட் செய்கிறார்கள் இந்தத் தளத்தில். சூழலைக் கெடுக்கும் சிமென்ட் கம்பெனிக்கு எதிரான மெக்ஸிக்கோ மக்களின் போராட்டம், சட்டத்துக்குப் புறம்பாக மக்களுக்கே தெரியாமல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்திய ஜார்கண்ட் மக்கள், கூடங்குளம் போராட்டத்தின் இன்றைய நிலவரம்... என உள்ளூர் தொடங்கி உலகளாவிய அளவில் போராடும் மக்களின் குரலாக இருக்கிறது 'நச்சுகளைக் கண்காணிக்கும்’ இந்தத் தளம்!

விகடன் வரவேற்பறை

இரவு

இயக்கம்: எஸ்.புவி;  வெளியீடு: ஓ.கே. சினிமாஸ்

தன் காதலிக்கு போன் வழியே தொல்லை கொடுக்கும் அறை நண்பனைக் கண்டிக்கிறான் தில்ஷான். அவன் அசந்து தூங்கும் சமயத்தில் தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்துவிடுகிறான் நண்பன். இப்போது தில்ஷானைத் தேடி இன்னொரு நண்பன் வர, கொன்றவன் தப்பித்து ஓடுகிறான். ஒரு பக்கம் தில்ஷானின் நண்பன் துரத்த, இன்னொரு பக்கம் தில்ஷானின் ஆவி துரத்த... கொலைகாரன் என்ன ஆனான் என்பது க்ளைமாக்ஸ். ஆரம்பமும் முடிவும் இல்லாத கதை. ஆனால், டெரர் காட்சிகளும், சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், புவியின் திரில்லர் மியூஸிக்கலும் நம்மை படத்தோடு ஒன்றச் செய்கின்றன!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

இரண்டாம் உலகம்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்;

வெளியீடு: சோனி மியூஸிக்; விலை:

விகடன் வரவேற்பறை

99

எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மெஸ்மரிசக் குரலில் 'என் காதல் தீ...’ சுகத் தாலாட்டு. 'பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும் பயணப்படுவது காதல்’ போன்ற வரிகள் மூலம் படத்தின் கதைக்கு டிரெய்லர் கொடுக்கும் வைரமுத்துவின் வரிகள், 'குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலில் குலுங்கும் பூ இதுவே’ என பாடல் முழுக்க காதல் கொண்டாடுகிறது. சமீபமாக ஒவ்வொரு ஆல்பத்திலும் 'ஹைலைட்’ பாடலைப் பாடும் சக்திஸ்ரீ கோபாலனின் இந்த ஆல்பம் அட்டகாசம். 'மன்னவனே என் மன்னவனே...’ புல்வெளிப் பனித்துளியாக உருகுகிறது சக்திஸ்ரீயின் குரல். நாட்டுப்புற ஜதியை கிடார் மீட்டலுடன் இணைத்திருக்கும் ஹாரிஸின் கம்போசிஷன்... வசீகரிக்கும் ரிதம். தனுஷ் குரலில் 'தனுஷ் பிராண்ட்’ பேத்தாஸ், 'பழங்கள்ளா... விஷமுள்ளா...’ பாடல். வேற்றுக் கிரகத்தில் நடுக்காட்டில் நள்ளிரவில் தனித்திருக்கும் ஒரு மந்தகாச உணர்வை உண்டாக்குகிறது, 'ராக்கோழி ராக்கோழி கூவுமுன்னே’ பாடலின் முதல் சில நிமிடங்கள். ஹரிஹரன், ஸ்ரீராமின் குரல்களும் ரகசியம் பேசும் தொனியில் கிலி சேர்க்கின்றன. 'மன்னவனே என் மன்னவனே’, 'ராக்கோழி ராக்கோழி’ பாடல்கள் 'ஒன்ஸ்மோர்’ ரகம்!

விகடன் வரவேற்பறை