
வாலி, ஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
தமிழ் பட்ட கடன்!
##~## |
எழுபது
எண்பதுகளில்...
கம்பன் விழாக் கவியரங்கங்களில், நான் கலந்துகொண்டு பாடுகையில் -
கோடம்பாக்கம் தமிழைக் காரைக்குடிக்கும் கொண்டுவந்துவிடுவானோ என்று - முத்தமிழ்த் துறையில் ஆழங்காற்பட்டோர் முனகியதுண்டு.
அவர்களது அய்யப்பாட்டை அறவேஅகற்ற, அடியேன் ஆரம்பத்திலேயே பாடினேன் அடியில் கண்டவாறு:

'அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்;
இங்கே நான் -
வண்ணமொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்!’
தொடர்ந்து -
தன்னிலை விளக்கமாய், ஓர் அறுசீர் விருத்தமும் பாடினேன்!
'ஆசுகவி அடியே னல்ல;
அடிவயிற்றின் பாட்டைப் பாடும்
காசுகவி; காசில் லாது
கடன்சொலும் படாதி பர்க்கோ
ஓசுகவி; ஆயி னும்நான்
ஓயாமல் தமிழின் மேன்மை
பேசுகவி; பேசிப் பேசிப்
பேசரிய இன்பந் துய்ப்போன்!’
- கற்பனைக்கு ஒரு தமிழையும், விற்பனைக்கு ஒரு தமிழையும், கைவசமும் பைவசமும் வைத்திருப்பவன் நான்.
எந்தத் தமிழை எங்கே வைக்க வேண்டும் என்ற -
நியாயத்தைக்கூடத் தெரிந்து வைத்திடாத நிரட்சர குட்சியா நான்?
தமிழ்பால் எனக்குத் தாளாத காதல் உண்டு; தமிழ் தந்ததல்லவா - எனது சோறும் சோமனும்!
எனினும் -
என் முதல் நன்றி பசுந்தமிழுக்கல்ல; பனை மரத்துக்குத்தான்!

நெடுநாள் முன்னாடி 'நெடுமரமே! நெடுமரமே!’ என்றொரு கவிதை எழுதினேன் - செட்டி நாட்டுப் பக்கம் நடந்த ஒரு தமிழ் விழாவையட்டி வெளியான சிறப்பு மலரில்!
'நெடுமரமே!
நெடுமரமே!
நீர் ஊற்றாமலே - நீ
நீண்டாய் விசும்பு நோக்கி;
ஆனால் -
ஆர்க்கும்...
நிற்கக்கூட
நிழல் தர -
வக்கற்ற உன்னை
வசை பாடாமல்...
வாழ்த்தி
வணங்குவேன் -
தலைக்கு மேல் - என்
தடக் கைகள் தூக்கி!
பனையே! நெடும்
பனையே!
எங்களுக்கு
எள்முனை நிழல் தராவிடினும் -
எங்கள் தமிழ்நிற்க - உன் போல்
எவர் தந்தார் தண்ணிழல்?
நீ -
தராவிடில் - எங்கள்
தமிழ்ச் செல்வங்களைத்
தின்றிருக்குமே காலமெனும்
தீயழல்!
வாய்வழி
வாய்வழியாய் வந்து -
வண்டமிழ்க் காவியங்கள்
வாழ்வது எத்துணைக் காலம்?
ஒண்டமிழை - உன்
ஓலையில் நீ உட்கார்த்தாவிடில் -
எழுதாக் கிளவி என்றாகியிருக்கும்
எங்கள் தமிழும் இத்துணை காலம்!
நாட்டோரே!
நம் -
பாமரம் தீர்த்தது
பனை மரம்;
அதற்கு நன்றி சொல்வோம்
அனைவரும்!’
சினிமாவில் - 'சிலுக்கதிகாரம்’ எழுதினாலும், சிந்தையில் நிறைந்திருந்தது சிலப்பதிகாரம்!
பட உரையாடல்களில், பாடல்களில் தமிழை யாரேனும் தவறாக உச்சரித்தால், மூத்திரம் போகுமிடத்தில் மிளகாய்த்தூளை வைத்தது போலிருக்கும் எனக்கு!
மாத்திரை - மருந்து வகையில் மட்டுமல்ல; மணித் தமிழிலும் உண்டு. எழுத்தின் ஒலி அளவை எடுத்தோதுகிறது இலக்கணம் நமக்கு!
இப்படியெல்லாம் இருக்கையில் - உச்சரிப்பு பற்றி ஓர் எச்சரிப்பு வேண்டாமா?
லகரம்;
ளகரம்;
ழகரம்;
மூன்றையும் தெளிவாகத் தேங்காய் உடைத்தாற்போல் - உச்சரித்த காலம்ஒன்று இருந்தது தமிழ் சினிமாவில்!
வட நாட்டுப் பாடகர்கள் வந்து பாடுவதால் - இன்றைய பாடல்கள் -
சீரார் தமிழுக்குச் சிரங்கு பிடித்தாற்போல் இருக்கிறது.
'சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன்!’ என்று -
வைணவத்தில் ஒரு வழக்கிருக்கிறது; அதையட்டி -
பிறப்பால் ஒரு வைணவன் என்பதாலும், பிரபந்தங்களில் ஊறியவன் என்பதாலும் - சில விஷயங்களைப் பேசப் புகுந்தேன்!
தமிழ் சினிமாவில், தமிழ் சீவித்திருப்பதற்கு மிக மிக மிக மிக -
முக்கியமானவர்
மூவர்;
கலைஞர் -
சிவாஜி -
டி.எம்.எஸ் - இம்
மூவரல்லால் வேறு
யாவர்?
கலைஞரால்
கண்டுகொண்டோம் -
பூந்தமிழின்
புலமை;
சிவாஜியால்
சிறக்கக் கண்டோம் -
வண்டமிழின்
வலிமை;
டி.எம்.எஸ்ஸால்
தெரியக் கண்டோம் -
இருந்தமிழின்
இனிமை!
அகவை தொண்ணூற்றை, அடுத்த ஆண்டு தொட இருக்கிறார் திரு.டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்.
1956-ல் - என் வாழ்வில் விளக்கேற்றிவைத்த புண்ணியவான் அவர்தான்.
ஒரு தபால் கார்டில் எழுதியனுப்பினேன் ஒரு முருகன் பாட்டை.
அதை - H.M.V-யில் பாடி இசைத்தட்டாக வெளியிட்டு -
என் பாட்டுப் பயணத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார் அண்ணன் டி.எம்.எஸ்.
அவரது ஆரம்ப காலப் பாட்டு ஒன்று. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது - எந்த வீட்டுக் கல்யாணப் பந்தலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி யாயினும் - அதில் அது ஒலிக்கும்
கவிஞர் திரு N.S. சிதம்பரம் அவர்கள் எழுதி தனி ரிக்கார்டாக - சுருட்டி ராகத்தில் திரு.டி.எம்.எஸ் பாடியது அந்தப் பாட்டு!
'மங்கலமாய் வாழ வேண்டும்;
மற்றென்ன வேண்டும்!’

- இந்தப் பாட்டைக் கேட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்து கோபுரத்தின் மீதேறிச் சத்தியம் செய்தனர் -
சிறைக்குப் போகுமுன் இது எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு என்று!
அந்த அளவு -
பாகவதரை விழுங்கித் தொண்டையில் வைத்துக்கொண்டு பாடியிருந்தார் டி.எம்.எஸ்.
அவர் விலாசத்தை அறிந்துகொண்டு, நான் தபால் கார்டில் எழுதி அனுப்பிய பாடல்தான் -
இன்றளவும் இறவாமல் இருக்கிறது.
அதுதான் -
'கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே! உனை மறவேன்!’ - என்பது!
மும்பையில் - 'முலுண்ட்’ எனும் இடத்தில் நான் என் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன் 1960-ல்.
முலுண்டில் - 'வாணி வித்யாலயா’ என்றொரு பள்ளி உண்டு. அங்கு, பாட வந்திருந்தார் திரு.டி.எம்.எஸ்.
உடனே, நான் ஓடிப் போய் பார்த்து - அவரை என் வீட்டுக்கு வரும்படி வேண்டினேன். அட்டி யின்றி வந்தார்.
நோய்வாய்ப்பட்டிருந்த என் தாய் தீவிர டி.எம்.எஸ் ரசிகையாவார்.
ஒரு பாடலைப் பாடச் சொல்லி, என் அம்மா கேட்டார்கள். என் அம்மாவுக்கு மிக மிக இஷ்டமான பாட்டு அது.
உடனே - ஓர் ஆர்மோனியப் பெட்டியைப் பக்கத்து வீட்டில் இருந்து வரவழைத்து -
டி.எம்.எஸ் பாடினார், என் அன்னை அகம் குளிர.
அந்தப் பாடல்தான் - 'ஏன் பிறந்தாய் மகனே!’ எனும் 'பாகப்பிரிவினை’ பாட்டு!
அப்போதெல்லாம் நான் நினைத்தது இல்லை - பின்னாளில் ஆயிரக்கணக்கான என் சினிமாப் பாடல்களை அண்ணன் டி.எம்.எஸ் பாடுவார்கள் என்று!
தன்னுடைய குரல்வளம் - திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் புகழ்பெற, ஓரளவு உதவிஉள்ளது என்று டி.எம்.எஸ் அவர்கள் பேசுவதை-
சிலர், ஜீரணிக்க மறுக்கிறார்கள். ஆனால், நான் சத்தியம் செய்து சொல்லுகிறேன் -
திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் பாடல் களுக்கு உயிர் கொடுத்தது திரு.டி.எம்.எஸ்-ஸின் வெண்கல நாதம்தான்.
அவ் இருவரின் புகழுக்கு - திரு.டி.எம்.எஸ் குரலின் பங்களிப்பு அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே - திரு.டி.எம்.எஸ். தன் குரல் பற்றி சற்று 'வித்யா கர்வம்’ என்பார்களே - அதுபோல் ஒரு மதிப்பீடு கொண்டிருப்பது -
அகந்தை யாகாது. அது அக்மார்க் - அரிச்சந்திர உண்மை!
தமிழுக்குத்தான் நாமெல்லாம் கடன்பட்டிருக்கிறோம். ஆனால்-தமிழ், டி.எம்.எஸ்ஸுக்குக் கடன் பட்டிருக்கிறது.
பிழையற உச்சரித்து; அதன் புகழ்க் கொடியை வானளாவப் பறக்கவிட்டதால்! விடுவதால்!
- சுழலும்...