Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 8

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

தாத்தா

நலமோடு இருப்பேன் இந்நகரில் பின்தொடர்ந்து வரும் நீ திரும்ப வேண்டும். உன் ரூபமற்ற வருகையை உணர்ந்து இலைகளும் பூக்களும் சலனிக்கின்ற இத்தெருவில். திரும்பவும் சொல்கிறேன் தாத்தா உன் பேரனாகிய நான் பத்திரமாக இருப்பேன் இந்நகரில்!
-சீனு ராமசாமி ('ஒரு வீட்டைப்பற்றிய உரையாடல்’ தொகுப்பில் இருந்து)

மாலையில் ஒருநாள் மகனுடன் பூங்காவுக்குச் சென்றுஇருந்தேன். மாநகரத்துப் பறவைகள் வந்தமர்ந்து சிறகிசைக்கக் கொஞ்சம் மரங்களும்; மரத்திடை விரியும் மஞ்சள் வெளிச்சமும்; அந்த மஞ்சள் வெளிச்சமே மகரந்தமாகிச் சூல்கொண்டு பூத்ததுபோல் தரையெங்கும் சிதறிக்கிடக்கும் மஞ்சள் கொன்றைப் பூக்களும் பூங்காவை ஆசீர்வதித்துக்கொண்டு இருந்தன.

நுழைவாயிலில், குழந்தைகளுக்குப் பிடித்தமான பலூன்கள், நீண்ட கழியில் ரப்பர் பேண்டுகளால் கட்டப்பட்டு, காற்றில் கையாட்டியபடி விற்பனைக்குக் காத்திருந்தன. பக்கத்தில் ஒரு துருப்பிடித்த ரங்கராட்டினம், சின்னஞ்சிறு பெட்டிகளில் மயில், யானை, சிங்கம், வாத்து போன்றவை வரையப்பட்டு, இரண்டிரண்டு குழந்தைகளாக எதிரெதிரே அமரவைத்து, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக அடிவயிற்றுப் பயத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தது. பஞ்சுமிட்டாய், வேர்க்கடலை என அடுத்தடுத்த வண்டிகள் அந்த இடத்தைச் சிறுவர்களுக்கான சந்தையாக மாற்றியிருந்தன.

அணிலாடும் முன்றில்! - 8

பூங்காவில் நுழைந்து, ஆங்கோர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தான் மகன். அடுத்தொரு சீஸா; அப்புறம் சறுக்கு மரம்; பின்பும் கை வலிக்கும் வரை ஊஞ்சல் என அவனது தினசரித் திட்டங்கள் தெரிந்தபடியால், கண்காணிப்பு வளையத்துக்குள் அவனைவிட்டுவிட்டு, அருகில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.

எனக்குப் பக்கத்தில் நான்கைந்து முதியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். நடைப் பயிற்சிக்குப் பின் வழக்கமாக மாலையில் கூடும் ஜமா. சாப்பிட்ட மாத்திரைகள்; சர்க்கரைக்கு எடுத்துக்கொண்ட ஊசி; சமீபத்தில் காலமான பால்ய சிநேகிதனின் மரணத்துக்குச் சென்று வந்தது; முதுகு வலி; தேர்தல்; மருமகளின் காபி; தீர்க்க முடியாத அன்றைய சுடோகு என அரட்டைக் கச்சேரி தொடர்ந்து கொண்டு இருந்தது.

கொஞ்சம் அவதானிக்கையில், அவர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள்ளும் அவரவர் பேரன்களோ, பேத்திகளோ இருப்பதை அறிய முடிந்தது. மாலை முதிர்ந்து இரவுக்குள் விழுந்துகொண்டு இருந்தது. பூங்காவைக் கொசுக்களிடம் ஒப்படைத்துவிட்டு, கேட்டைப் பூட்டுவதற்குள் மகனுடன் வெளியேறினேன். எனக்கு முன்பாக, அந்தப் பெரியவர்கள் தத்தம் பேரன், பேத்திகளின் விரல்கள் பிடித்தபடி இருட்டுக்குள் நடந்து கரைந்துபோனார்கள்.

அப்பா - மகன் உறவுக்கும்; தாத்தா - பேரன் உறவுக்கும் என்ன வித்தியாசம் என நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்பா - மகன் உறவில், ஒரு ப்ரியம்; ஒரு வாஞ்சை; ஒரு தோழமை; ஒரு கண்டிப்பு; ஒரு கவனம்; ஒரு கவலை; ஒரு பதற்றம்; எல்லாவற்றுக்கும் மேல் ஓர் எதிர்பார்ப்பு எங்கோ அடி ஆழத்தில் ஒளிந்துகிடக்கிறது.

மாறாக, தாத்தா - பேரன் உறவில்... ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தை தன் ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலை காட்டுகிறது. கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. ஆகவே, அந்த உறவில் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது.

ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால்வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான். பால்யத்தின் கண்கள் வழியாகப் பார்க்கையில் பிரமிப்புடன் தெரிந்த இந்தப் பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது. புள்ளியாகி வளர்ந்து தேய்ந்து மீண்டும் புள்ளியாகி இணையும் புள்ளிதான் தாத்தா - பேரன் உறவோ?

அணிலாடும் முன்றில்! - 8

தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப்பற்றிய செடியின் பெருமிதம் அப்பா மகன் - உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா - பேரன் உறவோ?

நான் பிறப்பதற்கு முன்பே அப்பாவைப் பெற்ற தாத்தா இறந்துவிட்டார். ஆதலால், அம்மாவைப் பெற்ற தாத்தாவிடம், அதுவும் கோடை விடுமுறைக்கு வரும்போது மட்டுமே தாத்தாவின் ஸ்நேகத்தை நான் உணர முடிந்தது.

ஸ்நேகம் என்ற வார்த்தைக்குள் அதை அடக்கிவிட முடியாது. இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒருநாளும் நான் என் தாத்தாவின் கைப்பிடித்து பூங்காவுக்கோ; கடைத்தெருவுக்கோ நடந்து சென்றதாக ஞாபகம் இல்லை. சென்ற தலைமுறை ஆண்களைப்போலவே, அவர் எங்களைவிட்டு விலகி இருந்தார் அல்லது மனதளவில் நெருங்கி இருந்தார் என்றும் சொல்லலாம்.

தாத்தா என்றவுடன் அவரது முழுச் சித்திரம் தவிர்த்து ஒவ்வொன்றாக தனித் தனிச் சித்திரமாக மனசுக்குள் விரிவடைகிறது. முதலில் தாத்தாவின் கண்ணாடி. தாத்தா அறியாமல் தாத்தாவின் கண்ணாடியை அணிந்து, இந்த உலகை கிட்டப் பார்வையிலோ அல்லது தூரப் பார்வையிலோ பார்க்காத பேரன்கள் உண்டா? தாத்தா கண்ணாடியைத் துடைக்க ஒரு மஞ்சள் வெல்வெட் துணி வைத்திருப்பார். அந்தத் துணிக்குள் மடங்கி அது ஒரு சிறு பெட்டிக்குள் உறங்குவதை நாங்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருப்போம்.

பேப்பர் படிக்க; தொலைக்காட்சி பார்க்க என தாத்தா ஒவ்வொரு முறை தேடும்போதும் கண்ணாடி தொலைந்திருக்கும். படுக்கைக்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் எனத் தேடி எடுத்துத் தருவோம். ஆயினும் அடுத்த முறையும் தொலைந்துவிடும். கண்ணாடிதான் தொலைகிறதா? அல்லது தாத்தாதான் வேண்டும் என்றே தொலைத்துவிடுகிறாரா என்பது கடைசி வரை எங்களுக்குப் புதிராகவே இருந்தது.

அடுத்து, தாத்தாவின் டிரான்சிஸ்டர் ரேடியோ. அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, தாத்தா ரேடியோவின் காதுகளைச் செல்லமாகத் திருக ஆரம்பிப்பார்.

இலங்கையில் ஆரம்பித்து, திருச்சி, சென்னை என ஒரு சுற்று வந்து மீண்டும் இலங்கைக்கு வந்து தாத்தா நிற்கும்போது, நாங்கள் எழத் தொடங்கிவிடுவோம். நாங்கள் என்றால், நாங்கள் மட்டும் இல்லை பக்கத்து, எதிர் வீடு களில் இருப்பவர்களும்தான். சத்தமாக வைத்து அவர்களுக்கும் சேர்த்து இலவச வானொலி சேவையை தாத்தா செய்துகொண்டு இருந்தார். அந்த இலவச வானொலி சேவை பிள்ளைகளின் பரீட்சை நேரங்களில் யுத்த சேவையாகவும் மாறிவிடுவது உண்டு.

வானொலிக்கு அடுத்து தாத்தாவிடம் நாங்கள் பிரமித்தது அவரது ஈசி சேர். இருபுறமும் நீண்ட கைகள் வைத்து, சாய்கோணத் தில் ஒரு முக்கால் படுக்கையாகத் தோன்றும் அதில் இடம்பிடிக்க, எங்களுக்குள் போட்டி நடக்கும். தாத்தா தன் சக நண்பர்களைக் காண வெளியே சென்று இருக்கும் நேரத்தில் மட்டுமே இந்தப் போட்டி. மற்றபடி, அந்த ஈஸி சேரில் அமர யாரையும் தாத்தா அனுமதித்தது இல்லை. பகல் கனவுகளுடன் நீண்ட தாத்தாவின் உறக்கங்கள் இன்னமும் அந்த பழைய ஈஸி சேரில் உறைந்துகிடக்கின்றன.

தாத்தா எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு சாமி படங்களுக்கு முன் நின்று, தேவாரம், திருவாசகம் என ஊனுருகிப் பாடுவார். பின்பு, முன்பு சொன்ன வானொலி ராஜ்ஜியம். 8 மணிக்கு இரண்டு இட்லிகள். பகல் 12 மணிக்கு பருப்பு சாதமும் கீரையும். வாரம் இருமுறை அவற்றுடன் மீன். பிற்பகல் உறக்கத்துக்குப் பிறகு தெரு நண்பர்களுடன் அரட்டை. இரவு 8 மணிக்கு சப்பாத்தி. 8.05-க்கு விளக்கை அணைத்து உறங்கிவிடுவார்.

இந்த ஒழுங்கை அவர் கடைசி வரை காப்பாற்றி வந்தார். பகல் 12 தாண்டியும் சாப்பாடு வரவில்லை என்றால், எதுவும் பேசாமல் அருகில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்து படுத்துவிடுவார். அப்படி அவர் செய்தார் என்றால், அது ஆயாவுக்கும் வீட்டில் உள்ள மாமிகளுக்கும் பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. ஆகையால், அடித்துப் பிடித்து வேலை செய்வார்கள். அதே போல், இரவு 8-க்குப் பிறகு யாரும் தொலைக் காட்சி பார்க்கக் கூடாது. ஓசை செய்யாமல் உறங்க வேண்டும். நாங்கள் வளர வளர... தாத்தாவின் இந்தக் குணம் ஆணாதிக்கத்தின் எச்சமா... அடக்கு முறையின் உச்சமா... ஒழுங்கு முறையின் மிச்சமா எனக் குழம்புவது உண்டு!

நான் அறிந்து ஆயாவும் தாத்தாவும் பேசிக் கொண்டதே இல்லை. நான் பிறப்பதற்கும் முன்பாகவே அவர்களிடையே பேச்சுவார்த்தை நின்றிருந்தது. கல்யாணங்களில் பாத பூஜை செய்ய அழைக்கும்போது மட்டும், இருவரும் சேர்ந்து நிற்பார்கள். எந்தத் தருணத்தில் அவர்களுக்குள் இடைவெளி விழுந்தது? ஏன் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை? அந்த சிறு வயதில் எங்கள் மனம் என்னும் எல்லையை மீறிய கேள்விகள் இவை. மனக்கடலில் குதித்து முத்தெடுத்தவர் எவர் உளர்?

தாத்தா மீது எனக்குச் சிறு குற்றச்சாட்டு இருந்தது உண்டு. தன் பிள்ளைகள் மூலம் பிறந்த பேரன்களிடம் காட்டும் அதே பாசத்தை, தன் பெண்கள் மூலம் பிறந்த பேரன்களான எங்களிடம் காட்டுவது இல்லை என்பதே அது. பெண் குழந்தையின் வாரிசு இன்னொரு வம்சத்தின் விழுது அல்லவா என்கிற பாரபட்சம் காட்டுகிறாரோ என்றும் நினைப்பேன். ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. இதே தாத்தாதான் ஏதோ ஒரு விசேஷத்துக்கு காஞ்சி புரம் வந்திருக்கையில், நான் வீட்டில்

இல்லை என்று அறிந்து, என் பள்ளிக்கே வந்து, பள்ளி முடியும் வரை மெயின் கேட்டில் காத்திருந்து, ஆயிரக்கணக்கான யூனிஃபார்ம் முகங்களில் என் முகத்தை அடையாளம் கண்டு, இந்தியன் காபி ஹவுஸில் ரவா தோசையும் காபியும் வாங்கித் தந்து, 100 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றார்.

வருடங்களுக்கும் முன்பு தாத்தா இறந்தபோது சேர்த்துவைத்த அத்தனை அன்பும் ஆயாவிடம் இருந்து அழுகையாக வெளிவந்தது. எனக்கு ப்ளஸ் டூ பரீட்சை நடந்துகொண்டு இருந்த காலமாகையால், நெய்ப் பந்தம் பிடித்துவிட்டு, இடுகாட்டில் இருந்து நேராக ஊர் திரும்பி னேன்.

வழி முழுக்க தாத்தா வாங்கித் தந்த ரவா தோசையும்; பாக்கெட்டில் அவர் திணித்த 100 ரூபாயும் வந்துகொண்டே இருந்தன!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan