மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 14

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : கே.குணசீலன்

##~##
'பெ
ரிய மாரியப்பன் மஞ்சத் தூணுக்குப் பொறத்தாடி நிக்கான் ஐஸ்பால்’. மூச்சைப் பிடித்துக்கொண்டு தூணுக்குப் பின்னால் நின்றுகொண்டு இருந்த பெரிய மாரியப்பன், 'ச்சே’ என்றபடி வெளியே வருவான். கண்ணாமூச்சிக்கு திருநெல்வேலியில் ஏனோ 'ஐஸ்பால்’ என்றுதான் பெயர்!

பெரிய மாரியப்பன், சின்ன மாரியப்பன், பெரிய ஆறுமுகம், சின்ன ஆறுமுகம், குண்டு கண்ணன், ஒல்லி கண்ணன், நெட்டை நெல்லையப்பன், கட்டை நெல்லையப்பன், பெரிய மணி, சின்ன மணி என வயதில் கொஞ்சம் கூடக் குறைய உள்ள நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடுவோம். பாரதியார் சொன்ன மாதிரி மாலை முழுதும் விளையாட்டுதான். சனி, ஞாயிறுகளில் நாள் முழுதும் உண்டு.

மூங்கில் மூச்சு! - 14

கண்ணைப் பொத்திக்கொண்டு, ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணுவதற்குள், ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் ஓடிப் போய் ஒளிந்துகொள்வோம். கண்ணைத் திறந்து பார்ப்பவன் மெள்ள நகர்ந்து, பூனை நடை போட்டு ஒளிந்திருக்கும் ஒவ்வொருவனையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவன் கண்களில் யாரேனும் சிக்கி விட்டால், உடனே அவனது பெயரையும் ஒளிந்து இருக்கும் இடத்தையும் உரக்கச் சொல்லிவிட்டு, ஓடிப் போய் அவன் கண்ணைப் பொத்திக்கொண்டு நின்ற 'தாய்ச்சி’யைத் தொட்டுவிட வேண்டும். அப்படி அவன் தொடுவதற்கு முன் அவனைப் பிடித்துவிட்டால், 'கோழி கோழி’ எனக் கத்தி, மற்றவர்களும் ஓடி வந்து அவனைப் பிடித்துக்கொள்வோம். மீண்டும் ஐஸ்பால் ஒன்றில் இருந்து துவங்கும்.

மூங்கில் மூச்சு! - 14

ஐஸ்பால் தவிர பல விளையாட்டுகள். அதில் ஒன்று 'தூண்புடிச்சு’. இந்த விளையாட்டுக்கு நான்கு தூண்கள் இருந்தால், ஐந்து பேர் விளையாடலாம். நான்கு பேர் ஆளுக்கு ஒரு தூணைப் பிடித்துக்கொள்ள, ஐந்தாமவன் நடுவில் நின்றுகொண்டு மற்ற நான்கு பேரின் அசைவுகளுக்கு ஏற்ப நடனமாடுவான். அவர்கள் தூண் மாறும்போது கிடைக்கும் நொடிப்பொழுதில், இவன் அந்தத் தூணைப் பிடிக்க வேண்டும். சமயத்தில் மூன்று பேர் மட்டுமே இருக்கும்போது, இரண்டு தூண்களில் விளையாடுவோம். நெல்லையப்பர் கோயிலுக்குச் சாமி கும்பிடப் போகும்போது அங்கு உள்ள பெரிய தூண்களை ஏக்கத்துடன் பார்ப்போம். சில நேரங்களில் யாரும் பார்க்காத சில நிமிடங்களுக்குள் கோயிலுக்குள்ளும் 'தூண்புடிச்சு’ விளையாடி இருக்கிறோம்.

அப்படி ஒருமுறை விளையாடும்போது தூணைப் பிடித்து நின்றுகொண்டு இருந்த குஞ்சு, அந்தக் குறிப்பிட்ட தூணைவிட்டு நகராமல் தூணையே வெறித்துப் பார்த்தபடி நின்றுவிட்டான். அந்தத் தூணில் உள்ள 'வயது வந்தோருக்கான பெண்ணின் சிற்பம்’தான் குஞ்சுவைத் தூணோடு தூணாகக் கட்டிப் போட்டுவிட்டது. 'சாமி கும்புட வந்த எடத்துல பண்ணுத வேலையப் பாரு. வீட்டுக்குப் போயி பாடப் புஸ்தகத்த எடுத்து படில’.பின்னால் வந்த 'போத்தி’ மாமா, குஞ்சுவின் பிடரியில் அடித்தார்.

திடீரென்று கடைகளில் பம்பரங்களைத் தொங்கவிடுவார்கள். உடனே, பம்பர சீஸன் ஆரம்பமாகிவிடும். புதிதாக வாங்கும் பம்பரங்களில் ஆணி சும்மா பேருக்குத்தான் இருக்கும். அம்மன் சந்நிதி மண்டபத்தில் ரோட்டோரத்தில் உள்ள பாய் கடையில் பம்பரத்துக்குப் புது ஆணி போட்டுத் தருவார் பாய். பம்பரக் கயிற்றின் ஓரங்களில் முடிச்சு போட்டு சுற்றப் பழகுவோம். எனக்கு முன்பே குஞ்சு பம்பரம்விடப் பழகியதோடு மட்டும் அல்லாமல், நேரடியாகக் கையில் பம்பரத்தைச் சுற்றி ஏந்த ஆரம்பித்துவிட்டான். எத்தனை முறை முயன்றும் எனக்கு அது கைகூடவில்லை. அழுகை அழுகையாக வந்தது. பிறகு குஞ்சுவே என்னைச் சமாதானப்படுத்தி, என் கைகளில் பம்பரத்தைச் சுழலவிட்டான். ஓரளவு சந்தோஷமாக இருந்தது.

நாமாக பம்பரம் விளையாடுவது போக, மற்ற பையன்களுடன் சேர்ந்து போட்டி போட்டு பம்பரம் விளையாடுவதும் உண்டு. போட்டியில் தோற்றால், ஒரு வட்டத்துக்குள் நம் பம்பரத்தை வைத்து மற்றவர்களின் பம்பரங்களைக் கொண்டு நம் பம்பரம் மீது 'ஆக்கர்’ வைப்பார்கள். ஏகப்பட்ட 'ஆக்கர்’களை வாங்கி நம் பம்பரம் பார்ப்பதற்கு அம்மை விழுந்த நோயாளிபோல் காட்சியளிக்கும். அதற்குப் பிறகு, அந்த அலங்கோலப் பம்பரத்தை வைத்துக்கொண்டு நம்மால் கௌரவமாக விளையாட முடியாது. புதுபம்பரம் தான் வாங்க வேண்டும்!

கோலிக்காய் சீஸனும் எப்போதோ தொடங்கி, எப்போதோ முடியும். அந்தச் சமயத்தில் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது, நானும் குஞ்சுவும் டிராயர் பைகளில் கோலிக்காய்களை நிரப்பி இருப்போம். தோளில் பையையும் சுமந்துகொண்டு நாங்கள் நடக்கும் போது, டிராயரில் நிறைந்திருக்கும் கோலிக் காய்கள் ஒன்றோடு ஒன்று உரசி எங்கள் வருகையை அறிவிக்கும். சில சமயங்களில் கோலிக்காய் பாரம் தாங்காமல் டிராயர் இடுப்பைவிட்டு கீழே இறங்கத் துடிக்கும். சிரமப்பட்டு அவ்வப் போது டிராயரைத் தூக்கிவிட்டுக்கொள்வோமே தவிர, கோலிக்காய்களின் எண்ணிக்கையைக் குறைத்ததே இல்லை. அளவில் சின்ன கோலிக்காய்களுடன் ஒன்று இரண்டு 'டாங்கா’ கோலிக்காய்களையும் வைத்திருப்போம். அளவில் பெரிய 'டாங்கா’ கோலிக்காய்தான் மற்ற சிறிய கோலிக்காய்களின் தலைவர். பல போட்டிகளில் விளையாடி நிறைய கோலிக்காய்களைச் சம்பாதித்தோம்.

மூங்கில் மூச்சு! - 14

ஒரு குறிப்பிட்ட போட்டியில் எங்களின் அத்தனை கோலிக்காய்களையும் இழக்க வேண்டி இருந்தது. அப்போதுதான் குஞ்சு சொன்னான், 'எல, கோலி சோடால இருக்குற கோலிக்காயை வெச்சு வெளையாண்டா எல்லா ஆட்டத்துலயும் ஜெயிச்சுரலாமாம், நவநீதன் அன்னிக்குச் சொன்னான்.’

கோனார் கடையில் போய் கோலிசோடா கேட்டோம். 'யாருக்குடே சோடா?’ - கடைக்குள் இருந்து எங்களை எட்டிப் பார்த்து கோனார் கேட்டார். 'எங்க தாத்தாவுக்கு’ என்றான் குஞ்சு. 'சீக்கிரமா பாட்டிலக் கொண்டுவந்துரணும். என்னா?’ கையில் உள்ள சோடா பாட்டிலுடன் குஞ்சுவின் வீட்டுக்கு ஓடி வந்து மாடியில் ஒளிந்துகொண்டு அதைத் திறக்க முயன்றோம். எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை. பெரிய குண்டு பென்சிலை வைத்து அடித்துத் திறக்கலாம் என்று முடிவுசெய்து, பென்சிலைத் தேடும்போது திடீரென்று குஞ்சுவின் அப்பா வந்துவிட்டார். சோடாவை மறைக்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது. 'என்னல செஞ்சுக் கிட்டிருக்கிய? யாருக்கு சோடா?’ என்றார். நான் முழித்த முழியைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக குஞ்சு, 'எனக்குத்தான். கொஞ்சம் கேஸ் டிரபிள்’ என்று சொல்லிவிட்டு, 'ஏவ்... ஏவ்...’ என்று ஏப்பம் விட முயன்று இருமினான். அருகில் இருந்த ஸ்கேலால் எங்கள் இருவரையும் நாலு சாத்து சாத்தி, கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, 'போய் வாங்குன கடைலயே கொண்டு குடுங்கல’ என்று விரட்டினார். கோலி சோடாவில் உள்ள கோலியை இன்று வரை எங்களால் வெளியே எடுத்துப் பார்க்க முடியாமலேயே போய்விட்டது.

சென்னையில் 'கில்லி’ என்றும் 'கிட்டிப் புள்’ என்றும் சொல்லப்படுகிற விளையாட்டை நாங்கள் 'குச்சிக்கம்பு’ என்போம். அம்மன் சந்நிதியில் எப்போதும் இருக்கிற ஜன நடமாட்டத்தை சட்டை செய்யாமல், நேரம் காலம் இல்லாமல் 'குச்சிக்கம்பு’ விளையாடுவோம். கிரிக்கெட்டில் 'கௌன்ட்டி’ மாதிரி 'குச்சிக்கம்பு’ விளையாட்டிலும் 'கௌன்ட்டி’ உண்டு. இப்போது நோ பால் போட்டால் Free hit கொடுக்கிறார்களே. அதுபோல் குச்சிக் கம்பில் உள்ள கௌன்ட்டியில் கம்பை வைத்து ஓங்கி அந்த குச்சியைத் தட்ட வேண்டும். அது எவ்வளவு தூரம் சென்று இருக்கிறது என்பதை அடித்த இடத்தில் இருந்து கம்பை வைத்தே ஒன்று, இரண்டு என்று அளக்க வேண்டும். ஒரு முறை அம்மன் சந்நிதி யில் ஒரு மாலை வேளையில் குச்சிக் கம்பு விளையாடிக்கொண்டு இருக்கும்போது தமிழரசன் அடித்த குச்சி, நடந்து சென்றுகொண்டு இருந்த யாரோ ஒரு மனிதரின் புருவத்தைக் கிழித்துவிட்டது. 'ஐயோ’ என்று அவர் அலறிச் சரியவும், எல்லோரும் காணாமல் போய் விட்டோம். போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. நான் குஞ்சு வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தேன். இத்தனைக்கும் நான் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு யார் வந்து குஞ்சுவைக் கேட்டாலும், 'குஞ்சு மெட்ராஸ் போயிருக்கான்’ என்றார் குஞ்சுவின் பெரியப்பா.

துபோக பெயரே தெரியாத ஒரு விளையாட்டு உண்டு. நிறைய சிகரெட் அட்டைகளை ஓர் இடத்தில் அடுக்கி, கையில் தட்டையான ஒரு கல்லை வைத்துக்கொண்டு அந்த சிகரெட் அட்டைகளை நோக்கித் தரையோடு தரையாகத் தேய்த்து விட வேண்டும். இந்த 'செதுக்குக் கல்’ விளையாட்டுக்கு நல்ல மொஸைக் கல் கிடைத்தால் நன்றாகத் தரையில் வழுக்கிக்கொண்டு செல்லும். இருட்டு லாலாக்கடை ஓனர் பிஜிலி மாமா வீட்டில் தரையில் பதிக்க வைத்திருந்த மொஸைக் கல் பளபளவென்று குஞ்சுவின் கைகளில் தவழ்ந்தது.

சிகரெட் அட்டைகளுக்கு தேரடியில் உள்ள பெட்டிக் கடையில் காத்துக் கிடப்போம். பத்து பைசாவுக்கு பத்து சிகரெட் அட்டைகள் கிடைக்கும். சிகரெட் விற்பனையைப் பொறுத்தே அந்த எண்ணிக்கை எங்களுக்கு அமையும். என்னமோ சிகரெட் கம்பெனி ஏஜென்ட் மாதிரி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அந்தக் கடைக்குச் சென்று குஞ்சு கேட்பான். 'என்ன அண்ணாச்சி? சிகரெட் பாக்கெட் எவ்வளவு போயிருக்கு? இன்னும் எத்தன ஸ்டாக் இருக்கு?’

ரு கட்டத்துக்குப் பிறகு ஷட்டில் காக், வாலிபால், கிரிக்கெட் என நாகரிகமாக கௌரவ விளையாட்டுகளுக்கு மாறினோம். ஷாஃப்டர் ஸ்கூலில் ஃபுட்பால் டீமில், நானும் குஞ்சுவும்  சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே எங்களை அநியாயமாக நீக்கிவிட்டனர். காரணம் இதுதான். கொஞ்சம்கூட யோசிக்காமல், நாங்கள் இரு பக்கமும் கோல்கள் அடித்துக்கொண்டு இருந்தோம். நண்பன் 'தளவாய்’ ராமலிங்கம் ஏசினான். 'எல, ஒங்களுக்கென்ன கோட்டியா? ஏம்ல சேம்சைடு கோல் அடிச்சிய?’ பதில் சொல்லாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு குஞ்சுவைப் பார்த்தேன். 'எங்கள என்னல செய்யச் சொல்லுதெ? எங்களுக்கு எப்போ பந்து கெடைக்கோ, அப்பொதான அடிக்க முடியுது? அப்போ போயி சைடெல்லாம் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா?’ ராமலிங்கத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சென்னைக்கு வந்த பிறகுதான், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அதுவும் பார்ப்பதோடு சரி. எத்தனை முறை உன்னிப்பாகக் கவனித்தாலும் பில்லியர்ட்ஸ், கோல்ஃப் போன்ற விளையாட்டுகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சப்-டைட்டில் இல்லாத சீனப் படம் பார்த்த மாதிரி, எல்லோரும் கை தட்டும் போது நாமும் தட்டிக்கொள்ள வேண்டி இருக் கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் உறவினர் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மணமக்களை வாழ்த்திவிட்டு, மண மேடையில் இருந்து இறங்க முற்பட்டபோது, திருமணத்தை நடத்திய 'குருக்களையா’ எழுந்து என்னை நோக்கி மலர்ந்த முகத்துடன் வந்தார். அடையாளம் பிடிபடுவதற்குள் 'மக்கா, எப்பிடி இருக்கே?’ என்றார். என்னுடன் 'ஐஸ்பால், கல்லா மண்ணா, தூண்புடிச்சு, எறிபந்து’ விளையாடிய பால்ய தோழன் 'சின்ன’ மணிதான் இப்போது குருக்களையா வேஷத்தில் இருந்தான்.

நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் நிறைய காலி நாற்காலிகள்கிடந்த அந்தத் திருமண மண்டபத்தில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தபடி சிறு வயது ஞாபகங் களை மீட்டினோம்.

மூங்கில் மூச்சு! - 14

எங்களுடன் சின்ன வயதில் விளையாடிய நண்பர்களில் சிலர் திருநெல்வேலி யிலும், சிலர் வெளியூர்களிலும், வெகு சிலர் தொடர்பே இல்லாமலும் போய்விட்டனர் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம்.

'சின்னப் புள்ளைல என்னென்ன வெளை யாட்டுலாம் வெளையாடுவோம்? சே, நெனச்சுப் பாக்கவே சந்தோஷமா இருக்கு. இப்போ பயலுவொல்லாம் தெருவுல வெளையாடு தாங்களாடே?’ என்று கேட்டேன். 'பச்... எங்கெ? தெருவே அடைஞ்சுல்லா கெடக்கு’ என்றவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான். என்னவோ யோசித்தவன் பிறகு சொன்னான், 'ஒனக்கு ஒண்ணு தெரியுமா? என் மகனுக்குல்லாம் நாம வெளையாடுனதுல ஒரு வெளையாட்டுகூடத் தெரியாது. வெளியே போயி வெளையாடுலென்னு சத்தம் போடுவென். யார் கூடன்னு கேப்பான். அமைதியாயிருவேன். எந்த நேரமும் டி.வி-யே கதின்னு கெடக்கான். அதென்னது, கார்ட்டூன் நெட்வொர்க்கா? வீட்ல இருவத்து நாலு மணி நேரமும் அந்த சேனல்தான் ஓடுது. ஒன் பையன் பரவாயில்ல. மெட்ராஸ்ல இருக்கான். அவன் எப்பிடி?’ என்று கேட்டான். 'அவனுக்கு போகோ சேனல்’ என்றேன்!

- சுவாசிப்போம்...