மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 26

மறக்கவே நினைக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
News
மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

'இந்தியா சுதந்திரம் அடையும் போது உனக்குக் கல்யாணமே ஆயிடுச்சா தாத்தா?’, 'நிஜமாவா சொல்றீங்க... தனுஷ்கோடி கடலுக்குள்ள முங்கி அழியும் போது உங்களுக்கு நல்லா விவரம் தெரியுமா?’, 'நல்லா யோசிச்சு சொல்லுங்க... ரயில்வே கேட்ல வெச்சு எம்.ஜி.ஆரை நேர்ல பார்த்தீங்களா... இல்லை ரயில்ல போகும்போது தூரமா நின்னு பார்த்தீங்களா?’, 'நீ ஆயிரம் சொன்னாலும் பூவானிப் பெரியம்ம பெரிய அதிர்ஷ்டக்காரி... ஒரு மாசமா இழுத்துக்கிட்டு கிடந்த உசுரு, சிவாஜி செத்த அன்னைக்குதான பொசுக்குனு போச்சு!’, 'சொன்னா எங்க நம்பப் போறீங்க... சுனாமி அன்னைக்குத்தான் திருச்செந்தூர்ல கடக்குட்டி பயலுக்கு மொத மொட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... கால் நனைக்கக்கூட தண்ணி இல்லாம அவ்வளவு தண்ணியும் உள்ள போனதை இப்போ நினைச்சாலும் உடம்பே சிலுக்குது!’

- இப்படியாகத் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளிலும் கேட்டவுடன் 'இதற்காகத் தானே காத்திருந்தேன்’ என்பதைப் போல ஆழமாக யோசித்து, மனதின் தாழ்வாரத்தில் படரும் பச்சைக்கொடியாக விரியும் பதில் களிலும்தான் எத்தனையோ பெரிய வரலாற்று நிகழ்வுகள், எதுவுமறியா எளிய மனிதர்களின் நினைவுகளில் நீங்கா எச்சங்களாக மிஞ்சி இருக்கின்றன.

திருநெல்வேலியில் நடந்த மாணவர் போராட்டங்களால் சிறை சென்றிருந்த ஊர் தம்பிகள் கணபதியையும் சுப்பிரமணியனையும் பார்க்கச் சென்றிருந்தேன். உங்கள் யூகம் சரிதான். தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் கணபதியும் வேகமும் விவேகமுமாக இருக்கும் சுப்பிரமணியனும் அண்ணன் - தம்பிகள்தான். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவருமே காங்கிரஸுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்; போஸ்டர் ஒட்டுவார்கள். கட்டக்கடைசியாக காங்கிரஸ் தலைவர்கள், ராஜபக்ஷே கொடும்பாவிகளை எரித்தபோது, சிறைக்கு ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள். கட்டம்போட்ட கம்பிகளுக்கு உள்ளே அண்ணன் - தம்பிகளைப் பார்க்கும்போது, மனதினுள் எழுந்த கதர்வேட்டி ஆவுடையப்பன் மாமாவின் நினைவு, வரலாறு எவ்வளவு வேகமாக தன் உடலைச் சிலுப்பிப் புரண்டு படுத்திருக்கிறது என்பதை உணர்த்தியது!

மறக்கவே நினைக்கிறேன் - 26

'ஓடியா... ஓடியா... பச்சப்புள்ளைங்களுக்கு பிசைஞ்சு கொடுக்க பச்சரிசி இட்லி இருக்கு’ என தெருத் தெருவாகக் கூவிக்கூவி அன்றைய நாட்களில் இட்லி விற்ற கதர் வேட்டி ஆவுடையப்பன் மாமா, சுதந்திர தினத்தில் காங்கிரஸ் கொடியை கூரையில் ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தீவிர காங்கிரஸ்காரர்.

'ஒரு சுருட்டு வாங்கிக் கொடுத்தோம்னு உங்ககிட்ட வந்து ஓட்டு கேட்கல காங்கிரஸ்காரன். சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம்னு கேக்குறான். என் தாத்தன், நேருவுக்கு ஓட்டு போட்டான். எங்க அப்பன், இந்திரா காந்திக்கு ஓட்டு போட்டான். நான், இப்போ ராஜீவ் காந்திக்கு ஓட்டு போடுறேன். அப்புறம் ராஜீவ் காந்தி மவன் வந்தா, அவனுக்கு என் மவனுவ ஓட்டு போடுவானுவ. வேட்டி சீலை குடுத்ததைப் பெருமையாச் சொல்ற கட்சியும், சுதந்திரம் வாங்கிக் குடுத்ததைப் பெருமையா சொல்ற கட்சியும் ஒண்ணா?’ என்று தேர்தல் காலங்களில் மீசை முறுக்கும் ஆவுடையப்பன் மாமாவுக்கு, திருமணமாகி 15 வருடங்கள் கழித்துத்தான் கணபதியும் சுப்பிரமணியனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்களாம்.

ஊரில் முதன்முதலில் இட்லி விற்றது, இரட்டைப்பிள்ளை பெற்றது என ஆவுடையப்பன் மாமா எங்களுக்கு எப்போதுமே ஆச்சர்யம்தான். ஒரே மாதிரி வலதும் இடதுமாக நடுவீட்டில் படுத்துக்கிடக்கும் கணபதியையும் சுப்ரமணியனையும் பார்க்க கதவு வழியாக, ஜன்னல் வழியாக முண்டியடிப்போம். ஆவுடையப்பன் மாமாதான் எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று குழந்தைகளை அருகில் தூக்கிக் காட்டுவார். இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் சிரிப்பது, ஒரே நேரத்தில் அழுவது, ஒரே நேரத்தில் புஷ்பம் அத்தை மார்பில் பால் சப்புவது என கணபதியும் சுப்பிரமணியனும் பிறந்ததிலிருந்தே ஆச்சர்யம்தான். குழந்தைகளாக இருக்கும் அவர்களைப் பார்க்கத்தான் நாங்கள் ஆவுடையப்பன் மாமா வீட்டுக்குப் போவோம். குழந்தைகளுக்கு கண் மை வைப்போம், இட்லிக்கு, மாமாவோடு சேர்ந்து மாவாட்டுவோம், சட்னிக்குத் தேங்காய் திருகுவோம். அப்படித்தான் மாமாவோடு காங்கிரஸ் கட்சிக்காக ஏழு வயதில் பிரசாரம் செய்யப் போனதும்!

ஆவுடையப்பன் மாமா என்ன சொன்னாலும் எங்களுக்குப் பிடிக்கும். ரோசாப் பூ வைத்துக் கொண்டு அவர் பின்னால் நேரு மாமா மாதிரி அலைவது பிடிக்கும். 'கனியம்மா அக்கா ஓட்டு போடு... காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடு’, 'ராணி அக்கா ஓட்டு போடு... ராஜீவ் காந்திக்கு ஓட்டு போடு’ என்று அவர் பின்னாடி கத்திக்கொண்டு அலைவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி, ஊருக்குள் வந்த நாளில் ஆவுடையப்பன் மாமா செய்த காரியம்தான் யாருக்குமே என்றைக்குமே பிடிக்காமல் போய்விட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் வீட்டைவிட்டு வெளியேபோன ஆவுடையப்பன் மாமாவைக் காணாமல், புஷ்பம் அத்தை நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். ஆதிச்சநல்லூர் விலக்கில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஒற்றை ஆளாக ஆவுடையப்பன் மாமா படுத்துக்கொண்டு பஸ்ஸை மறிப்பது தெரியவர, எல்லோரும் அங்கு ஓடினோம். சுடும் வெயிலில் ஆவுடையப்பன் மாமா நடு ரோட்டில் மல்லாந்து படுத்துக்கிடந்ததையும், பேருந்துகள் எதுவும் ஓடாமல் அப்படியே நின்றதையும், நான்கு போலீஸ்காரர்கள் வந்து மாமாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு சென்றதையும், புஷ்பம் அத்தை போலீஸ்காரர்களிடம் கெஞ்சி யதையும், இரண்டு வயதாகியும் இன்னும் காட்டுப்பேச்சிக்கு முதல் மொட்டை போடாமல் ஜடையோடு ஒரே மாதிரி கணபதியும் சுப்பிரமணியனும் அம்மணமாக அழுதுகொண்டு இருந்ததையும் மறுபடியும் நினைத்துப் பார்த்தால், போன செவ்வாய்க்கிழமைதான் நடந்தவைபோல் இருக்கின்றன எல்லாம்!

ஊரிலிருந்து ஆட்கள் போய், ஆவுடையப்பன் மாமாவை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்தார்கள். 'ரெண்டு புள்ளைங்கள 15 வருஷம் கழிச்சுப் பெத்துட்டு எல்லாத்தையும் அநாதையா விட்டுட்டு குடும்பத்த வெளங்காம ஆக்கப்போறியா நீ?’ என்று புத்திமதி சொல்லி மாமாவை வீட்டுக்குள் அடைத்து, 'இந்தா புஷ்பம்... இன்னும் ஒரு வாரத்துக்கு அவன வெளியில எங்கேயும் போகவிடாத. சொன்னாப் புரியாது... அவன் பரம்பரை காங்கிரஸ்காரன். பைத்தியக்காரத்தனமா எதாவது செஞ்சாலும் செஞ்சுக்குவான் ஜாக்கிரதை’ என்றும் சொல்லிவிட்டுப் போனார்கள்.

அன்று முழுவதும் நாங்கள் ஆவுடையப்பன் மாமா வீட்டில் இருந்தோம். அடைக்கப்பட்ட கதவுக்குப் பின்னால் இருந்து மாமா குரல் கொடுப்பார். 'புஷ்பம் ஒண்ணுக்கு வருதுடி... கதவத் தெற. போய்ட்டு வந்திடுறேன்’ என்று. பதிலுக்கு வெளியே இருந்து புஷ்பம் அத்தை குரல் கொடுப்பாள், 'அங்க பயலுவ பால் டப்பா இருக்கு. அதுல இருந்து வைங்க. அப்புறம் நான் எடுத்து வெளியே கொட்டிக்கிறேன்’ என்று. வெளியே இருக்கிற எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம். புஷ்பம் அத்தை எல்லாவற்றையும் மறந்து சிரித்தாள். கணபதியும் சுப்பிரமணியனும்கூட காரணம் தெரியாமல் ஒரே மாதிரி சிரித்தார்கள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தன.

மறக்கவே நினைக்கிறேன் - 26

இரவு முழுவதும் நாங்கள் அங்குதான் இருந்தோம். மாமா, அடைக்கப்பட்ட கதவுக்கு உள்ளிருந்தே கணபதியிடமும் சுப்பிரமணியிடமும் பேசுவார். அப்பா என்ன சொல்கிறார், எதற்காக கதவுக்குப் பின்னால் இருந்தே பேசுகிறார் என்று தெரியாமல் கணபதியும் சுப்பிரமணியனும் தூங்கும் வரை அந்தக் கதவையே தட்டிக்கொண்டு கிடந்தார்கள். வாசலிலும் திண்ணையிலும் புஷ்பம் அத்தை மடியிலும் அப்படி அப்படியே உறங்கிப்போன எங்கள் எல்லோருக்கும் காலையில் காத்திருந்தது அந்தப் பேரதிர்ச்சி!

எப்போதும் கோழி கூவி, காகம் கரைந்து, பால் கறக்க பசு மாடு கத்தி எழுப்பும் ஊரை, அன்று புஷ்பம் அத்தை தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு எழுப்பினாள். வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆவுடையப்பன் மாமாவையும் காணவில்லை. வெளியே கதவுக்குப் பக்கத்தில் ஒரே மாதிரி பெருவிரலைச் சப்பியபடி உறங்கிக்கொண்டிருந்த கணபதியையும் சுப்பிரமணியனையும் காணவில்லை. ஊர் முழுவதும் தேடி ஆள் அனுப்பினார்கள். ஆற்றுக்கு, குளத்துக்கு, கிணற்றுக்கு, ஆதிச்சநல்லூர் மெயின் ரோட்டுக்கு... என எல்லாப் பக்கமும் ஆள் அனுப்பினார்கள். பெற்ற பிள்ளைகளையும் புருஷனையும் காணாமல் புஷ்பம் அத்தை மயங்கி மயங்கி விழுந்தாள். நேரம் ஆக ஆக வேறு வழியில்லாமல் புதுக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். மொத்த ஊரும் முகம்கூட கழுவாமல் ஆவுடையப்பன் மாமாவுக்காகக் காத்திருந்தது.

'பய புத்திகெட்டுப் போய் ராசீவ்காந்தி செத்த இடத்துக்கே போய்ட்டானோ?’

'அப்படியெல்லாம் இருக்காதுப்பா... அம்புட்டுத் தூரம் எப்படி புள்ளையலத் தூக்கிட்டுப் போவான். இங்கதான் எங்கேயாவது காங்கிரஸ்காரன்காரங்க பண்ற போராட்டத்துக்குப் போயிருப்பான்!’ என்று ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனையில் பேசிக்கொண்டிருக்க, கருங்குளம் பொட்டக்குளம் வழியாக கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும் மொட்டை அடித்து தானும் மொட்டை அடித்து எதுவும் நடக்காததுபோல ஆவுடையப்பன் மாமா ஊருக்குள் சைக்கிளில் வந்ததைப் பார்த்து எல்லோரும் வாயடைத்துப்போனார்கள்.

'அடப்பாவி... காட்டுப்பேச்சிக்குப் போடுற மொத மொட்டையை காங்கிரஸுக்குப் போட்டுட்டு வந்துட்டானே கிறுக்குப் பய’ என்று ஊர்க்காரர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது. திண்ணையில் மயங்கி விழுந்துகிடந்த புஷ்பம் அத்தை தன் இரட்டைப் பிள்ளைகளும் புருஷனும் மொட்டையாக வந்து நிற்பதைப் பார்த்து பொறுக்க முடியாதவளாக ஓடிப்போய் மண்ணை அள்ளி மாமாவின் மீது எறிந்தாள். காறிக்காறித் துப்பினாள். கையில் கிடைத்த எல்லாவற்றையும் வைத்து ஆவுடையப்பன் மாமாவை அடித்தாள்.

மறக்கவே நினைக்கிறேன் - 26

'இரக்கத்தோடு ரெண்டு கொடுத்தாளே அந்தக் காட்டுபேச்சி... அவளுக்கு மொத்த முடியும் சடையா ஒட்டினதுக்கு அப்புறம் வந்து மொட்டை அடிக்கிறேன்னு நான் சாவாம கிடந்து விரதம் இருக்க, என் புள்ளைங்களுக்கு மொத மொட்டையே எழவு மொட்ட அடிச்ச நீயெல்லாம்  மனுசனா? இனிமே ஒரு நிமிஷம் உன்கூட இருக்க மாட்டேன்!’ என்று இரண்டு பிள்ளைகளையும் பிடுங்கிக்கொண்டு அம்மன்புரத்துக்குப் போனவள்தான் புஷ்பம் அத்தை.

'புள்ளைங்களுக்கு மண்டையில மயிறு முளைச்சா அதெல்லாம் தானா வந்திருவாப்பா. நான் போய் எதுக்குக் கூப்பிடணும்? அவளா எப்போ வருவாளோ... அப்போ வரட்டும்’ என்று இருந்த ஆவுடையப்பன் மாமாவைப் பார்க்க, 10 வருஷம் கழித்து நெஞ்சு வலியால் இறந்த பின் பிணமாகத்தான் புஷ்பம் அத்தை எங்கள் ஊருக்குத் திரும்பி வந்தாள்.

ஒரு பெரிய மருதமரம் சாய்ந்து மண்டையில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுபோல, அந்த நாள் அப்படியே மறையாத கீறலாக நினைவில் இருக்கிறது. புஷ்பம் அத்தை புதைகுழிக்கு அந்தப் பக்கம் மறுபடியும் அதே மொட்டைத் தலையோடு கணபதியும் சுப்பிரமணியனும் கதறி அழுததும், அதைப் பார்க்க முடியாமல் ஆவுடையப்பன் மாமா துண்டால் முகத்தை மூடிக்கொண்டு சலனமே இல்லாமல் இருந்ததும், கணபதியையும் சுப்பிரமணியனையும் கையைப் பிடித்து ஒரு தாத்தா கூட்டி வந்து ஆவுடையப்பன் மாமாவிடம் ஒப்படைத்ததையும், பக்கத்தில் நின்ற பெரியவர்கள், 'ஏப்பா... ஆனது ஆகிப்போச்சு. இத்தன வருஷம் கழிச்சி புள்ளைங்க வந்து முன்னாடி நிக்குது. அவங்களப் பாத்து எதாவது பேசுப்பா. இனி உன்னை விட்டா அவங்களுக்கு யாரு இருக்கா?’ என்று முகத்தை மூடியிருந்த ஆவுடையப்பன் மாமாவின் துண்டை விலக்கிச் சொன்னார்கள்.

முதல் மொட்டை இழவு மொட்டை போட்டதற்காகப் பிரிந்துபோன தன் பிள்ளைகள் 10 வருடங்கள் கழித்து அதே இழவு மொட்டையோடு முன்னாடி நிற்பதைப் பார்க்க முடியாமல் எழுந்து, 'முடி முளைக்கிறவரைக்கும் என் பக்கத்துல வராதீங்கப்பா. என்னால உங்களைப் பார்க்க முடியாது’ என்று நடுரோட்டில் முக்காடிட்டப்படி ஆவுடையப்பன் மாமா ஓடியதும், இப்போது 10 வருடங்கள் கழித்து அதே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கணபதியும் சுப்பிரமணியனும் கம்பிக்கு உள்பக்கம் நின்றுகொண்டிருப்பதும் வரலாற்றின் வேடிக்கையா, வினோதமா, துரோகமா, வலியா, அபத்தமா, அறியாமையா, அரசியலா, முட்டாள்தனமா... எனக்குத் தெரியவில்லை!

- இன்னும் மறக்கலாம்...