சினிமா
Published:Updated:

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

##~##

'கல்யாணத்திற்குப் பிறகு சாதாரணமாக வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும்’ என்று கூறுவது உண்டு. கல்யாணத்திற்குப் பிறகு அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, 'கல்யாண பரிசு’க்குப் பிறகு ஒரு (ஏ)மாற்றம் கிடைத்தது, பிரபல பின்னணிப் பாடகர்களான திரு. ஏ.எம்.ராஜா - ஜிக்கி தம்பதிக்கு.

பாடல்களைப் பொறுத்தவரையிலும் சரி, அவர் இசையமைத்ததிலும் சரி... வெற்றி பெறவில்லையா என்ன? வெற்றி கிடைத்தது. ஆனால், இந்த வெற்றி, இவரைப் பொறுத்தவரையில் வேறு விதத்தில் வேலை செய்து விட்டது!

'கல்யாண பரிசு’ படத்தில் எல்லா பாடல் களுமே 'ஹிட்’ ஆகி, சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் அப்போது கவர்னாராயிருந்த மேதியிடம் பெற்றார். இதற்குப் பிறகுதான் இந்தத் தம்பதிக்கு பாட்டுப் பாடும் சான்ஸ் குறைய ஆரம்பித்தன. இப்போது சுமார் எட்டு வருட இடைவெளியில் பாடாமலே இருக்கிறார்கள்.

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

'உங்களைப் பாட யாரும் ஏன் அழைக்கவில்லை...?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு ராஜா - ஜிக்கி இருவருமே சிரிக்கின்றனர். காரணம் தெரியாமல் விழிக்கிறோம்.

'' 'நாங்கள் ஏன் திரையில் பாடுவதில்லை?’ - இதே கேள்வியைத்தான் நாங்கள் சந்திக்கிற ஒவ்வொரு ரசிகரும், ஒவ்வொரு நண்பரும், ஏன், எல்லோருமே கேட்கிறாங்க. இது ஒரு ஸ்டாண்டர்டு கேள்வியாகப் போச்சு. அதையே நீங்களும் கேட்டுட்டீங்க... அதனாலேதான் சிரிச்சோம்...'' என்கிறார்கள் ராஜாவும் ஜிக்கியும்.

''என்னைப் பாட அழைக்காததற்கு நான் ஒரே ஒரு காரணத்தைத்தான் கூற முடியும். ஒருவேளை, அது சரியாக இருந்தாலும் இருக்கலாம்; இல்லாவிட்டாலும் போகலாம்...'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்துச் சொல்கிறார்...

''சாதாரண பின்னணிப் பாடகனாக இருந்த நான், 'கல்யாண பரிசு’ படத்துல இருந்து இசையமைப்பாளரா மாறிட்டேன். மற்றவர்கள் என்னைப் பாட அழைத்தால், நான் இசையமைப்பாளர் தகுதியிலிருந்து கீழிறங்கிப் பாட வருவேனா என்று எல்லோரும் ஒருவேளை சந்தேகப்பட்டிருக்கலாம். இப்போதும் சொல்கிறேன், எனக்கு அந்தமாதிரி எண்ணமே இல்லை. இன்றும் யார் பாடச் சொல்லி அழைத்தாலும் போகத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார் ராஜா.

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

'இவருக்கு, இவர்தான் பாடவேண்டும்’ என்ற கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறும் இவர், 'கல்யாண பரிசு’க்கு முன் எல்லா இசையமைப்பாளர்களிடமும், எல்லா நடிகர்களுக்கும் தான் குரல் கொடுத்ததைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்.

முதன்முதலாக டூயட் பாடி, புரட்சி செய்த தம்பதி, ராஜா - ஜிக்கி.

ராஜா, 1951-ல் திரையுலகில் நுழைந்தவர். முதன் முதலாக அவருக்குப் பாடச் சந்தர்ப்பம் அளித்தவர் ஜெமினி அதிபர் வாசன் அவர்கள்தான் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார். பாடிய படம், 'சம்சாரம்’.

ராஜா - ஜிக்கி திருமணத்தின்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டது, இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு பிரபல தினசரி பத்திரிகை, இவர்கள் திருமணத்தைப் பற்றிய செய்தியைப் போடும்போது இவர்கள் இருவர் பெயரையும் இணைத்து, 'ராஜாஜிக்கி கல்யாணம்’ என்று போட்டுவிட்டது. அவ்வளவுதான். எல்லோரும் மூதறிஞர் ராஜாஜிதான் கல்யாணம் செய்துகொள்கிறார் என்று நினைத்து ஒரே அமளிதுமளி.

நான்கு பெண் குழந்தைகளையும், இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றிருக்கும் இவர்களுக்கு, வசதிக்குக் குறைவில்லை. இருவருமே தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே உள்ள நகரங்கள் வரை தங்கள் குழுவினருடன் கச்சேரி செய்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிக்கி, இப்போது ஐந்தாறு மாதங்களாக மீண்டும் படத்தில் பாட ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'மீண்டும் வாழ்வேன்’, 'தேனும் பாலும்’, 'தங்க கோபுரம்’ ஆகிய படங்களில் பாடியிருக்கிறார்.

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

தமிழில் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும், மலையாளப் படங்களுக்குத் தொடர்ந்து பாடிக்கொண்டுதான் வருகிறார் ராஜா.

''என் மனைவி என்னை முந்திக்கொண்டு ஆறு மாதங்களாக மீண்டும் தமிழ்ப் படத்தில் பாட ஆரம்பித்திருக்கிறாள். எனக்கு இப்போதுதான்  சௌகார் ஜானகி தயாரிக்கும் 'ரங்கராட்டினம்’ படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பார்ப்போம்... நம்ப டயம் நல்லா இருந்தா, நிச்சயம் இப்போகூட ஒரு மாற்றம் ஏற்படலாம்'' என்று நம்பிக்கையோடு இருக்கிறார் ராஜா.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ராஜாவுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டால், அது அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தானே!

- சுந்தரம்