மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாஸ்வேர்டு - 26

பாஸ்வேர்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பாஸ்வேர்டு

கோபிநாத்

ஜோதிடம், ஜாதகத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத சரவணப்பெருமாள், ஏழு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பணத்தையும் நிறையத் தன்னம்பிக்கையையும் மூலதனமாகவைத்து, ஒரு தொழில் தொடங்கினான். எல்லாத் தொழில்களிலும் இருக்கிற சிக்கல்கள், தடங்கல்களைத் தாண்டி ஐந்து வருடங்களில் நல்ல நிலைக்கு வந்தான். மூன்று வேளை உணவே உத்தரவாதம் இல்லாத காலத்தில் இருந்து, இன்றைக்கு 45 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான்.

தொழிலில் பிரச்னை, மனசு சரியில்லை, குடும்பப் பிரச்னை என்று எதுவாக இருந்தாலும், அவனிடம் 10 நிமிடங்கள் பேசினால் போதும். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, அதைத் தீர்ப்பதற்கான தெளிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். 'எல்லாம் நல்லா நடக்கும்டா... நடக்கிறது எல்லாம் நல்லதுக்குனே நினைச்சுக்க...’ என்று ஆத்மார்த்தமாகப் பேசி உற்சாகப்படுத்துவான்.

பாஸ்வேர்டு - 26

சரவணப்பெருமாளின் சித்தப்பாவுக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கை உண்டு. அவரின் வற்புறுத்தலால் ஒரு ஜோதிடரைப் பார்க்கப் போனான் அவன். அரை மணி நேரம் அவன் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்த பிறகு, 'தம்பி... நீங்க பட்ட கஷ்டமெல்லாம் இன்னும் ஆறு மாசத்துல முடியப்போகுது’ என்று சொல்லியிருக்கிறார் அந்த ஜோசியர். சரவணன், 'எனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே... நான் நல்லாத்தானே இருக்கேன்’ எனச் சொல்ல, 'தம்பி உங்களுக்கு ஏழு வருஷமா ஏழரை நாட்டுச் சனி நடக்குது. அது இன்னும் ஆறு மாசத்துல முடிஞ்சிடும். அப்புறம் நீங்க அமோகமா இருப்பீங்க’ என்று சொல்லியிருக்கிறார். ஜோதிடரின் கணக்குப்படி, சரவணன் தொழில் தொடங்கிய காலம் ஏழரைச் சனி ஆரம்பித்த காலம். சரவணன் கணக்குப்படி அது அவன் வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்கிய காலம்.

'எப்படி தம்பி... நீங்க நல்லா இருந்திருக்க முடியும்? கடன் வாங்கி கஷ்டப்பட்டு இருப்பீங்களே... அவமானப்பட்டு இருப்பீங்களே!’  என 'ஏழரை நாட்டுச் சனி’யை நிரூபிக்க ஜோதிடர் போராராராராடினார். 'ஆமாம், கடன் வாங்கினேன்; ஆனா, கஷ்டப்படலை. நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சேன்; அவமானப்படலை!’ என்று சரவணன் சிரித்துக்கொண்டே சொல்ல, 'சிலருக்கு ஏழரைச் சனி நிறையக் கொடுக்கும்’ என்று ஏறுக்குமாறான தீர்ப்பு சொன்னார்.

'கெட்ட நேரம்’ என்று ஜாதகத்தால் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில், சாதனைகளைச் செய்து வெற்றிகளைக் குவித்த பலரை நான் அறிவேன். அதேபோல், 'உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கிருச்சு... அடிச்சு தூள் கிளப்புங்க’ என்று உத்தரவாத முத்திரைக் குத்தப்பட்ட காலத்தில், படுபாதாளத்துக்குச் சரிந்தவர்களையும் கண்டிருக்கிறேன். 'இந்த விஷயத்தைச் சரியாகச் செய்ய வேண்டும்’ என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்ட பிறகு, கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால், நிறைய பேர் கடிகாரத்தில் நேரம் பார்ப்பதைவிட ஜாதகக் கட்டத்தில் நேரம் நல்லா இருக்கிறதா என்று பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.

பாஸ்வேர்டு - 26

அதே சமயம், 'நல்ல நேரத்தில் தொடங்கி இருக்கிறோம்... எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ என்ற மனநிறைவு ஒரு நேர்மறை நம்பிக்கையைத் தருகிறது என்பதும் உண்மைதான். நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்படும் தொழில், நல்ல நேரம் பார்த்து நடத்தப்படும் திருமணம், நல்ல நேரத்தில் அரங்கேறும் வைபவங்கள் உளவியல்ரீதியாக நன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. அவ்வளவு ஏன்..? நிலவை ஆராய்ச்சி செய்ய ஏவப்படும் செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்த நல்ல நேரம் பார்த்துதான் 'கவுன்ட் டவுன்’ வைக்கிறார்கள். இதெல்லாம் பன்னெடுங்காலமாக நம் மனதில் பதிந்துவிட்ட சம்பிரதாய நம்பிக்கைகள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி எல்லா இடங்களிலும் நம் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைச் செயல்படுத்தவும் முடியாது.

ங்கள் கீழ்வீட்டு மாமா, தன் வீட்டு போர்ட்டிகோவில் காரை நிறுத்தும்போது முன் பக்கம் கொஞ்சம் இடம்விட்டு நிறுத்துவார். காலையில் வண்டியை எடுக்கும்போது, முதல் கியர் போட்டு வண்டியை ஓர் அடி முன்னால் நகர்த்தி பிறகு ரிவர்ஸில் வண்டியை வீட்டைவிட்டு வெளியே எடுப்பார். 'காலங்காத்தால முதல்ல வண்டியை எடுக்கும்போது பின்னாடி நகர்த்தக் கூடாது. வாழ்க்கையில எப்பவும் முன்னோக்கிப் பயணிக்கணும்’ என்று அதற்கு  விளக்கமும் கொடுப்பார். ஆனால், மாதம்  ஒரு முறையேனும் அலுவல் நிமித்தமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அவர், தன் சித்தாந்தத்தை அங்கு செயல்படுத்த முடியாது. பயணிகள் ஏறி அமர்ந்ததும் ரன்வேயில் இழுத்து நிறுத்துவதற்காக, விமானத்தை ரிவர்ஸில்தான் முதலில் நகர்த்துகிறார்கள்!

னக்கு, தேசிய செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து, ஒரு திங்கட்கிழமை பணியில் சேர வேண்டும். நானும் ஆர்வமாக புதுத் துணி எல்லாம் அணிந்து கிளம்பிய நேரத்தில், வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், 'உன் ஜாதகத்துக்கு இன்னைக்கு நாள் சரியில்லை. அதனால நாளைக்கு வேலையில சேர்ந்துக்கோ’  என்றார். அவர் விடாமல் வற்புறுத்தியதால், அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து, 'இன்னைக்கு நாள் சரியில்லையாம். நான் நாளைக்கு சேர்ந்துக்கவா?’ என்று கேட்டேன். 'அப்படியா..! ஒருவேளை இன்று உங்கள் வேலைக்கான இன்டர்வியூவாக இருந்தால் இப்படிக் கேட்பீர்களா?’ என்று கேட்டார் அவர். அடுத்த அரைமணி நேரத்தில் நான் அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை, 'என்னப்பா இன்னைக்கு நாள் நல்லா இருக்கா?’ என்று கிண்டலடித்துக்கொண்டே இருந்தார் அந்த அதிகாரி. நான் நேரம் காலம் பார்க்கிற ஆள் இல்லை என்று அந்த கார்ப்பரேட் அலுவலகத்துக்குப் புரியவைக்க, முழுதாக ஒரு வருடம் தேவைப்பட்டது!

'நேரம் நல்லா இருந்தாத்தான், எல்லாம் ஒழுங்காக நடக்கும்’ என்று தீர்மானமாக நம்பும் மனம், நாளடைவில் மிகவும் பலவீனமாகி விடும். முனைப்பு இல்லாமல் மேற்கொள்ளும் காரியத்தின் விளைவுகளுக்கு 'கெட்ட நேரத்தை’ பொறுப்பாக்கிவிடுகிறோம். எதையும் சாதிக்கத் திறன் கொண்டவர்கள்கூட, சம்பந்தமே இல்லாமல் தினசரி காலண்டரில் தன் ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறார்கள். பிறந்த நேரம் சரியில்லை, தொடங்கிய நேரம் சரியில்லை, கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்ட நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டாலே, நமக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று உணர்ந்துகொள்ளலாம்.

கொஞ்சம் பணம் காசு வைத்திருப்பவர்களுக்குத்தான், 'நல்ல நேரம்... கெட்ட நேரம்’ எல்லாம். அது இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிற நேரமெல்லாம் நல்ல நேரம்தான். நேரம், சகுனங்களை எல்லாம் நம் வசதிக்கேற்றபடி மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அது உண்டாக்கும் மனத்தடையில் இருந்து மீண்டுவரத்தான் நம்மவர்கள் தயாராக இல்லை!

பாஸ்வேர்டு - 26

பிரபல ஜோசியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஊர் உலகமே அவர் சொல்லும் கணிப்புகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அவர் 'பெர்சனலாக’ என்னிடம் சொன்னது என்ன தெரியுமா? இந்த உரையாடலைக் கவனியுங்கள்...

'நல்ல நேரம், கெட்ட நேரம்... நிஜமாவே இருக்கா சார்?’

'நல்ல நேரம்ங்கிறது என்ன தெரியுமா தம்பி..? நமக்கு நல்ல நேரம் நடந்துட்டு இருக்குங்கிற விஷயம் நமக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான். அது தெரியாதவன் நல்ல நேரத்தை எப்படிப் பயன்படுத்திக்க முடியும் சொல்லுங்க..?’

'சரி... நமக்கு நல்ல நேரம் நடக்குதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?’

'இந்த ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் தூக்கிப்போடுங்க. நமக்கு நேரம் நல்லா இருக்குனு நீங்க நம்பினா, அது நல்ல நேரம். நேரம் சரியில்லைனு நீங்களா நினைச்சுக்கிட்டா, அது கெட்ட நேரம். ஆனா, நேரம் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதை நல்ல நேரம், கெட்ட நேரம்னு முடிவு செய்யறது நாமதான்!’

பொட்டில் அறைந்தது அந்தப் பதில்!

- ஸ்டாண்ட் பை...