மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவிழி - 43

அறிவிழி
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிழி ( Anton Prakash )

அண்டன் பிரகாஷ்

##~##

 ணினித் துறையின் மீது எனக்கு ஆர்வம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு என் பதில்... 'சிலிக்கான் சில்லுப் புரட்சி’! சுஜாதா எழுதிய இந்தத் தொடரின் ஏதோ ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் மீதான மோகம் எனக்குள் தோன்றிருக்க வேண்டும்.

  ஒரு வீட்டுக்கு செங்கல் போல, கணினி தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருந்து இயக்குவது 'சில்லு’ எனச் செல்லமாக அழைக்கப்படும் Microprocessor. ஒவ்வொரு Microprocessor-க்குள்ளும் Semiconductor எனப்படும் 'கூறுகள்’ இருக்கும். இதன் மொழிபெயர்ப்பை 'குறைக்கடத்தி’ என்று படித்ததாக நினைவு. பயப்படாதீர்கள்... Semiconductor-களின் அடிப்படைக்குள் இந்தக் கட்டுரை செல்லப்போவது இல்லை.

உங்கள் முன்புள்ள கணினி, அலைபேசி, தொலைக்காட்சி, அதைக் கட்டுப்படுத்தும் ரிமோட்... என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் இயங்கு பொருட்கள் Semiconductor கொண்டதாக இருக்கும். இன்டெல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கோர்டன் மூர்

அறிவிழி - 43

யூகமாகச் சொல்லியது கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நிறைவேறியபடி வருவதால், அதை 'மூர் விதி’ என்றே மாற்றிவிட்டார்கள். '18 மாதங்களில், Microprocessor-களில் இருக்கும் Semiconductorகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிடும்’ என்பதுதான் அந்த விதி. சராசரிப் பயனீட்டாளர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், 18 மாதங்களுக்கு ஒருமுறை மின்னணு சாதனங்களின் வலிமை இரண்டு மடங்காகும். உங்கள் கையில் இருக்கும் சாதாரண அலைபேசி 10 வருடங்களுக்கு முன்னிருந்த கணினியைவிட வலிமை வாய்ந்தது.

இன்றைய நாளில் 300 பில்லியன் டாலர்களுக் கும் அதிகமான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் Semiconductor -ஐ தயாரிக்க பிரதானமாகப் பயன்படுத்தப்படுவது சிலிக்கான். பள்ளிக்கூட வேதியியல் அட்டவணையில் 'Si’ என்ற குறியீடு கொண்ட சிலிக்கான், மின்சாரத்தைக் கடத்துவதில் கில்லாடியாக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

சிலிக்கானை வைத்து Semiconductorகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இருப்பவர்களின் இரண்டு குறிக்கோள்கள்... 1. Semiconductor-களின் அளவை எப்படிக் குறைப்பது?, 2. மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து இயங்கும் வேகத்தை எப்படி அதிகரிப்பது?

இது தொடர்பாக, சென்ற வாரத்தில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சிலிக்கானுக்குப் பதிலாக 'கார்பன் நானோ டியூப்’ எனப்படும் செயற்கை வேதியியல் கூறு ஒன்றைப் பயன்படுத்தி Semiconductorகளை உருவாக்கி இருக்கிறார்கள். கார்பன் அணுத்துகள்களைத் தட்டையாக உருட்டி, அவற்றில் இருந்து செய்யப்படும் Semiconductorகள், அளவில் மிகச் சிறியதாகவும், குறைந்த அளவு மின்சாரத்தைக்கொண்டு இயங்குவதாகவும் தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதனால் நீங்கள் கத்திரிக்காய் வாங்கிவந்த ப்ளாஸ்டிக் கேரிபேக், சில மாதங்களில் உங்கள் கையில் இருக்கும் அலைபேசியின் மெமரியாக மாறிவிடும்!

அறிவிழி - 43

ட்விட்டர், தொடர்ந்து வளர்ந்துவருகிறது. ஃபேஸ்புக் அளவுக்குப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை இல்லை என்றாலும், சராசரி பயனீட்டு அளவு, ஃபேஸ்புக்கைவிட ட்விட்டரில் அதிகம். இதன் காரணமாக, ட்விட்டரின் வருமானம் அதிகரித்தபடியே இருக்க, பொதுச் சந்தையில் நுழைவதற்கான ஆரம்பக்கட்ட முஸ்தீபுகளில் இருக்கிறது ட்விட்டர். செய்திகளைப் பரவலாக எடுத்துச் செல்லும் Broadcasting போன்ற வசதியுடன் பயனீட்டாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவும், எளிதான வகையில் இருக்கும் இந்தச் சமூக ஊடகம், பாரம்பரிய ஊடங்கங்களால், ஃபேஸ்புக் போல போட்டியாக அல்லாமல் நண்பனாகப் பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்காக ட்விட்டர் வெளியிட்ட TV Ad Targeting என்ற வசதி, டி.வி-யில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களின்போது அதைப் பற்றிய ட்வீட்டுகளைக் கணநேரத்தில் கண்டறிந்து, அதிலிருந்து மக்களின் பின்னூட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அளந்தறியும் டி.ஆர்.பி. ரேட்டிங் போலவே, எத்தனை ட்வீட்டுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பதும் விரைவில் வெளிப்படையாகத் தெரியவரும் என நினைக்கிறேன்.

ட்விட்டரிடமிருந்து சென்ற வாரம் வந்த மற்றொரு முக்கிய அறிவிப்பு...

சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவு நிகழ்வுகளின்போது, ட்விட்டர் மிக முக்கிய தொடர்பு ஊடகமாகச் செயல்படுவது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. 'எச்சரிக்கை’ (Alerts) என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் கணக்கில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலான எச்சரிக்கை செய்தியை ட்விட்டாகவும், குறுஞ்செய்தியாகவும் அனுப்ப முடியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட செய்திகள் எச்சரிக்கை மணியுடன் சேர்ந்து அனுப்பப்படும் என்பதால், பயனீட்டாளர்களின் கவனத்தைக் கவர்ந்து படிக்க ஊக்குவிக்கும் என்கிறது ட்விட்டர். உலக சுகாதார நிறுவனம் உள்பட 100 நிறுவனங்களை பைலட் முறையில் தேர்ந்தெடுத்து, இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. பைலட் வெற்றி பெற்றால், நாசா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் ட்விட்டர் அனுமதிக்கும்!

- விழிப்போம்...