Published:Updated:

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று

சிவா... இனியன். தனியன். சமயங்களில் சனியன். சிங்கிள் டிகிரி சிங்கம். டபுள் டிப்ளமோ டாங்க்கி!

சிக்கலான தலைமுறைக்காரன். பிறந்தது கிராமமும் அல்ல... சிட்டியும் அல்ல... சிறு நகரம். தமிழிலும் புலமை

கிடையாது... ஆங்கிலமும் நிறையப் புரியாது... தமிங்கிலீஸன். டைப்ரைட்டிங் பழகவில்லை. கம்ப்யூட் டரும் அறிந்தது இல்லை. ஆனாலும் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் உண்டு. பெண் சிநேகம் பெரிய விஷய மாக இருந்ததால், அந்தக் காலத்து நதியா தொடங்கி, இந்தக் காலத்து சோனம் கபூர் வரை காதலித்துக் கொண்டே இருப்பான்.

தேன் கிண்ணம் வெறியன், ஜி.வி.பிரகாஷ§க்கும் பிரியன். மிக்ஸிங்குக்கு மட்டுமே பெப்ஸி-கோக் பயன்படுத்துபவன். பூரி, பொங்கல், இட்லி, தோசை, முட்டை பரோட்டா மெனுவைத் தன்னளவில் தாண் டாதவன். பீட்ஸா, பர்கர் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுபவன். 'விண்ணைத் தாண்டி வருவாயா'வை வி.டி.வி என அழைக்க மனம் ஒப்புபவன். சிலம்ப ரசனை எஸ்.டி.ஆர் என விளிப்பதை வெறிகொண்டு எதிர்ப்பவன். இன்னும் அன்பை மட்டுமே முன்வைத்து நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுபவன். அல்சாமால், ஸ்பென்சர் பிளாசா, சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யூ என சென்னையுடன் வளர்ந்து வருபவன். இவ்வாறாக... இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவே தனிக் கரையாக அலையும் பங்கரையே சிவா!

சில பல வேலைகள் கண்ட சிவா, ஒரகடம் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் மேனேஜர். ஆமாம், மாதவன் வயசுதான் சிவாவுக்கும். மேடிக்கு இருப்பது மச்சம். சிவாவுக்கோ அதில் எப்போதும் ஒச்சம்.

பிரச்னை என்னவெனில், 'சிவா சித்தப்பா'வுக்கு இப்போ 37 வயது. முதலில் வீட்டில் கல்யாணம் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு வற்புறுத்தியபோது, அசால்டாக மறுத்து வந்தான். இப்போது இவனே கேட்டாலும், யாரும் கண்டுகொள்வது இல்லை. காரணம்... சிவாவை டைட் குளோசப்பில் அணுக வேண்டும்.

தொடர் கதை: ஒன்று

அழகான பெண்கள் 'உன்னை அண்ண னாத்தான் நினைச்சேன்' என்பது தமிழின மரபுதான். ஆனால், சுமாரான டிக்கெட்டுகளே, 'உங்களை அங்கிளாத்தான் நினைச்சேன்' என்கிறார்கள் சிவாவிடம்.

கண்ணாடியில் சிவா தன்னை ரசிக்கிறான். ஆனால், கலர் போட்டோக்களில் தன்னைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். அங்கிளின் அடை யாளங்கள் தெளிவாகவே தென்படுகின்றன.

ஏராளமான ஏ.சி கிர்ர்ர்ரிடும் தாராளமான கேபின்கள் நிறைந்த ஆபீஸில், பேரழகுப் பெண்கள், பீட்டர் குட் பையன்களுக்கு நடுவே, " 'வ... குவாட்டர் கட்டிங்'குக்கு எப்பிடி டாக்ஸ் ஃப்ரீ குடுக்கலாம். இட்ஸ் இடியாட்டிக் யு நோ?" எனப் பேசித் தன் இருப்பைத் தக்க வைத்து வருகிறான் சிவா.

பெல்லி டான்ஸ் இடுப்புக்காகவே ஷகிரா ரசிகன். ரெண்டு பெக் போட்டுவிட்டு அதே போல் ஆடி, அதிர்ச்சி தரும் நடிகன். தண்ணிஅடிக்கக் கூப்பிட்டால், தாயுமானவன்போல் வருவான். கலையும்போது ஒரு தற்கொலை முயற்சியும், சில கொலை முயற்சிகளையும் நிகழ்த்தி இருப்பான். ஆனால்... சுவாரஸ்யன்.

மைனா' அமலா பாலின் கண் களை நமக்கும் பிடிக்கும்தான். ஆனால், அவன் அந்த விழிகள் குறித்து அடுத்த வாரமே ஒரு புத்த கம் வெளியிடும் அளவு பேசுவான். திடுக்கென உங்கள் தாய், தகப்ப னைத் திட்டுவான். பெருந்துயர் பகிரும் நிமிடங்களில் ஆறுதலாக இருப்பான். சமயங்களில் பெருந் துயரங் களையும் தருவான்.

"இப்ப என்னடா, அவ உன்னை வேணாம்னுட்டா. விடுறா... நீ ஏன்டா ஷவர்ல குளிக்க ஆசைப்படுறே... வா, வந்து மழையில நனை மச்சான். காதலிக்கிறது ஆண்மைன்னா... காதலை விட்டுக்குடுக்கிறது பேராண்மைடா!" - என்பான்.

'ஜெயம்' ரவி நடித்த பட டைட்டிலின் அர்த்தம் புதிதாகப் புரிந்ததுபோல் இருக்கும். டக்கென்று, "சரி மச்சான்... ரெண்டு வருஷ லவ்வுன்றியே... முடிச்சுட்டியா? - என ஏடா கூடமாகக் கேட்டு, பொளேர் என அறை வாங்குவான்.

அப்போதும் தயங்காமல், "மச்சான் சிக்கன், ஆம்லேட், பேபி கார்ன் மட்டுமே சைடு டிஷ் இல்லடா. டிரிங்குனு உட்கார்ந்தா, நீயும் எனக்கு சைடு டிஷ்தான்!" - எனச் சிரிப்பான்.

உலகில் சிவாவின் ஒரே பிரச்னை... பெண்! 'உலகத்துக்கு வேண்டுமென்றால் நீங்கள் ஓர் ஆளாக இருக்கலாம். ஆனால், யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்!' என்ற 'வலை பாயுதே' வாசகம் வரை படிப்பவன். அந்த யாரோ ஒருத்திக்கு உலகமாக என்ன, பிரபஞ்சமாகவே இருக்கப் பிரியப்படுகிறான். பச்... நோ யூஸ்!

சிவாவுக்கும் பெண்களுக்குமான உறவு, ஸ்பெக்ட்ரமுக்கும் ஆ.ராசாவுக்குமான உறவைப் போல செம சிக்கலாகவே இருக்கிறது. உதார ணமாக... அவனது ஆட்டோகிராஃபில் இருந்து சில பக்கங்கள்...

பதின்பருவத்தில் குத்தவைத்த அத்தைப் பெண்ணை லவ்வினான். 'அரிது அரிது அழகிய ஃபிகர்கள் கிடைப்பது அரிது. அதனினும் அரிது அத்தைப் பெண் அழகாக இருப்பது'. அந்த விஷயத்தில் சிவா ஸோ லக்கி. 'மண் வாசனை' பாண்டியன் மாதிரி போய் பச்சை மட்டை கட்டி, பஞ்சாரத்தில் டூயட் பாட

ஆயத்தமானான். ஆனால், அவன் கனவில் மணல் லாரியை விட்டான் அண்ணன். மூத்தவன் ஓலை கட்ட, இளையவன் பந்தியில் கைப்பிள்ளை ஆனான். 'ஓலையை வேண்ணா நீ கட்டு, அவளை நான்தான் கட்டுவேன்' என டெரர் ஃபேஸ் காட்ட முடிவெடுத்தான்.

"மங்க... உனக்காகத்தான் தெட்சிணாமூர்த்தி கடையில மசால் தோசை கட்டிட்டு வந்தேன்டி..."

"டேங் யூ சிவா"- கண்களிலும் சிரித்தாள்.

"கீரந்தங்குடி திருவிழால ஒன் நெனைப்பு வந்துச்சா... வாழத்தாரு ஏலம் எடுத்தேன். தவுட்டுல பொதைச்சா... நாளைக்கே பழுத் துரும்டி. என்னைப் பிடிக்குமா?"

"டேங் யூ சிவா!"

"ந்தா... நீ பரீச்ச இந்தப் பேனாலதான் எழுதணும். ஹீரோ பென்னு மங்க..."

"டேங் யூ சிவா!"

"எங்கண்ணன்ட்ட எல்லாம் பேசாத. திமிர் பிடிச்ச நாயி அவன்..."

"டேங் யூ சிவா!"

ஒருநாள் வெட்டாத்து மணலில் கிரிக்கெட் ஆடும்போது கருவாயன் கபில் சிக்ஸர் அடித்தான். பந்து பர்லாங் தாண்டி காட்டாமணிப் புதரில் விழுந்தது. பந்தை எடுக்க சிவா புதர் புகுந்தான். தேடிக்கொண்டே போனால்... பாதி காட்டா மணியை வெட்டி, குச்சி நட்டு ஒரு மினி குடிசை. 'மகமாயி... மகமாயி... மகமாயி...' அண்ணனும் மங்கையும் கட்டிப்பிடித்து... ஓ மை காட்!

இவனைப் பார்த்ததும் கைலியை வாரிச் சுருட்டிக்கொண்டு, செருப்பை அங்கேயே விட்டுப் புறமுதுகிட்டான் அண்ணன். மங்கை, கழட்டிவைத்த மாமா சட்டையை விசுக்கென்று மாட்டிக்கொண்டு, அப்படியே முட்டியில் முகம் புதைத்துக் கேவத் தொடங்கினாள் மங்கை.

தொடர் கதை: ஒன்று

"அழாத... அடியே மங்க நிறுத்து..."

"இத யார்ட்டயும் சொல்ல மாட்டன்னு சத்தியம் பண்ணு சிவா."

"சத்தியமா சொல்ல மாட்டேன்..."

"டேங் யூ சிவா!"

அப்புறம் மங்கை அவனும் இல்லாமல் அண்ணனும் இல்லாமல் பெங்களூரில் இருக்கும் ஃபாரஸ்ட் ரேஞ்சர் பையனான பங்காளியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு போனாள்.அந்த காட்டாமணி விஷ§வல் அவனை 'சிவப்பு ரோஜாக்கள்' கமலாக மாற்றியது. காதல் வெறி மட்டுமே ஏறியது. மென் மனசுக்காரன் பாருங்க... மாட்டு வண்டியில் டன் கணக்கில் மயிலிறகு லோடு அடிக்கத் தொடங்கினான்!

யாரைப் பார்த்தாலும் அவனுக்குக் காதல் கபாலத்தைப் பிராண்டியது. கார்த்தி வீட்டுக்கு கோயம்புத்தூரில் இருந்து கோடை லீவுக்கு வந்திருந்த கீதாவுக்கு பிராக்கெட் போட்டான். அவன் வீட்டில்தான் டி.வி இருந்தது. அவன் அப்பா பைக் வைத்திருந்தார். 'ஒலியும் ஒளியும்' காட்டி, ஞாயிறு 'சக்திமான்' காட்டி, பைக்கில் பெரிய கோயில் அழைத்துப் போனான்.

"உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு சிவா... ஐ லைக் யூ. கோயம்புத்தூர்ல உன்னை மாதிரி பசங்களையே பார்க்க முடியாது தெரியுமா?"

"இந்த ஊர்லயும் உங்களை மாதிரி பொண்ணுங்களையே பார்க்க முடியாதுங்க... ஐயும் லை யூ!"

லீவு முடிந்தது. வீட்டு அட்ரஸ் கொடுத்துவிட்டு, அவன் தந்த காளியம்மன் விபூதியோடு பஸ் ஏறினாள் கீதா. அல்லும் பகலும் 'மினி பானுப்ரியா' கீதாவின்

நினைவுகள் துரத்தி அடிக்க... சாப்பிட, தூங்க முடியாமல் திரிந்தான். ஒருநாள் அஞ்சறைப் பெட்டியில் அம்மா சுருட்டிவைத்த 100 ரூபாய்களைக் கவ்விக்கொண்டு கோவைக்கு பஸ் பிடித்தான். சுந்தராபுரத்தில் கீதா வீடு. காலேஜ் கிளம்பி சுடிதாரில் கொழுகொழு என வெளியே வந்த கீதாவைப் பார்த்ததும் அவனுக்குப் பார்வை மங்கி, பரவச மயக்கம் சுழட்டியது. அவனைப் பார்த்ததும் கண்களில் கலர் பல்போடு சிரித்த கீதா, உள்ளே பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்தாள்,

"மம்மி... இங்க வா. வில்லேஜ்ல இருந்து சிவா அண்ணன் வந்துருக்காரு..."

கல்லூரியில் கவிதாவைக் காதலித்தான். அங்கும் போட்டி அதிகம். கவிதா சாலிய மங்கலத்தில் இருந்து சைக்கிளில் வந்தாள். இவனுக்கு வீட்டில் இருந்து நண்டுக் குழம்பு கொண்டுவந்தாள். 'நீங்க தி.ஜாவோட 'அம்மா வந்தாள்' படிச்சிருக்கீங்களா? ச்சே, என்னா ரைட்டிங்... நேத்து சுராவோட 'ஜே.ஜே சில குறிப்புகள்' படிச்சுட்டுத் தூங்கவே இல்ல... வாழ்க்கையைத் தத்துவ தரிசனமாப் பாக்கு றாரு...' என்றெல்லாம் ஜீனியஸ் முகமூடி மாட்டி பூச்சாண்டி காட்டினான்.

அவளுக்கு லெண்டிங் லைப்ரரியில் திருடிய புத்தகங்களைப் பரிசளித்தான். அன்பிலும் அக்கறையிலும் மொக்கி மொக்கி எடுத்தாளே தவிர... கவிதாவுக்கு ரொமான்ஸ் வந்ததாகத் தெரியவில்லை.

சினிமா மற்றும் இலக்கியத் தாக்கத்தில் இருந்ததால், வெறிகொண்டு ஒரு நாடகத் துக்குத் தயாரானான். ரெண்டு கிலோ

பான்டேஜ் வாங்கி உடம்பு முழுக்கச் சுற்றிக் கொண்டு, ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டதாகக் குரல் மாற்றி காலேஜுக்கு போன் அடித்தான். அங்கங்கே பான்டேஜுடன் நண்பனின் விடுதி அறையில்கிடந்தான். நண்பர்கள் பீர் மணக்க ஓடி வந்தார்கள். அவனைச் சுற்றி உட்கார்ந்து சீட்டு ஆடினார்கள். கவிதா

வருவாள். அனுதாப அலை வீசுவாள். கைப் பிடித்து, தோள் தூக்கி ஜூஸ் கொடுப்பாள். எல்லோரையும் அனுப்பிவிட்டு, அவளிடம் கண்ணீர் மல்க காதலைச் சொன்னால்... நிச்சயம் சக்சஸ்.

கவிதா வந்தாள்...

"என்னாச்சுப்பா..?"

"பைக்ல போய் கார்காரன் மோதி..."

"அச்சச்சோ... அப்போ உன்னால வர முடியாதா?"

"எங்கே?"

"என் கல்யாணத்துக்கு..." என்றாள்.

மாப்பிள்ளை தி.மு.க மாவட்டச் செயலாளர் மகன்!

அதன் பிறகு பலப் பல அப்ரோச்கள். எத்தனையோ பொன்மொழிகளைக் கடந்து முப்பதைத் தொட்டபோது, ஒரு மூர்க்கமான முடிவுக்கு வந்திருந்தான்.

'சொன்னாத்தானே பிரச்னை... நாம லவ் பண்ணுவோம். ரசிப்போம்... சிரிப்போம்... அதுவா வரும்!'

சென்னைக்கு வந்து சேர்ந்த இத்தனை ஆண்டுகளில் அவன் நெஞ்சாம்பழம் வெம்பிக் கனிந்து, வெயில் மழை பாராது காற்றில் ஆடுகிறது... ஒரு கிளியையும் காணோம்!

இப்போது சேர்ந்த இந்த கார்ப்பரேட் கம்பெனியில் இருக்கிற பெண்களைப் பார்க்கவே சிவாவுக்குக் கிறுக்குப் பிடிக்கிறது. கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த மாதிரி எல்லாப் பசங்களுடனும் கை தட்டிக்கொள் கிறார்கள். சிவாவிடம் மட்டும் மார்பு மறைத் துக் கை கட்டிப் பேசுகிறார்கள். பெர்ஃப்யூம் மணக்கிறது. இங்கிலீஷ் கனக்கிறது. 'இவள் களுக்காகவே இங்கிலீஷ் கத்துக்கணும்டா'. அப்படியே தத்துப்பித்தென்று பீட்டரில் பிக்கப்பும் பண்ணிக்கொண்டான். குறிப்பா, இந்த மோனிகா இருக்காளே... அவள் சிரித் தால், செத்து ஆவியாகி, அவள் பெட்ரூமில் ஆயுசுக்கும் அலையலாம். ஒய் நாட்?

சிவா முடிவெடுத்து, தன் ரூம்மேட்டின் கார்கோக்களை அணிய ஆரம்பித்த தினத்தில் தான்... ஆபீஸ் செக்யூரிட்டி அந்த மேட்டரைச் சொன்னான். சிவாவுக்கு ஆபீஸ் நிக் நேம் சித்தப்புவாம். உபயம் மோனிகா!

ப்ளஸ் டூ படிக்கும் ஹவுஸ் ஓனர் பெண் ணைக் கடந்த இரண்டு மாதங்களாகக்

காதலித்து வந்தான். அவள் வரும் நேரம், 'பூக்கள் பூக்கும் தருணம்' பாட்டைச் சத்தமாக வைத்துவிட்டு, மெட்ரோ வாட்டர் பிடிக்கப் போவான். அவள் சிரிப்பாள். அவன் பார்க்காத நேரம் தங்கச்சியிடம் 'கொரங்கு பாக்கறதைப் பாரு' என்பாள்.

போன மாதம் அந்தப் பெண், 'அங்கிள்... டாடி உங்களைக் கூப்பிட்டாங்க. மெட்ரோ வாட்டருக்கு குடம் எடுத்துட்டு வாங்க' என்ற படி வராந்தாவில் ஓடிய இரவில், ஆஃப்புடன் இன்னொரு 'வ'வையும் முழுங்கினான்.

இப்படியான சிவாவின் நெடிய சரித்திரத் தில் வந்தவள் வெண்மதி. எல்.எல்.ஏ பில்டிங்கில் அஜயன் பாலா புக் ரிலீஸுக்குப் போனபோது, ஜீன்ஸ் காட்டன் குர்தா, சணல் பையோடு வந்த பெண் படைப்பாளி. நம்ம வேவ்லெங்த் துக்கு இலக்கியப் பெண்தான் கரெக்ட் என இறுதி முடிவெடுத்தானாம் சிவா. இதன் பொருட்டுச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான்... சாரு நிவேதிதாவிடம் இவளைப் பேசவிடக் கூடாது. சிவாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி லீனா மணிமேகலை, குட்டி ரேவதியுடன் பேசிக்கொண்டு இருந்தாள் வெண்மதி. ப்ளாக்கர்ஸ் வருவதற்குள் இவளிடம் பேசிவிட வேண்டும்.

தனியே வந்தவளிடம்,

"ஹாய் ஐ'ம் சிவா..."

"ஹாய்... நிறைய சொல்றாங்கப்பா உன்னைப்பத்தி... நான் வெண்மதி..."

"டீ சாப்பிடலாமா?"

"நான் தம் அடிப்பேன்" - எனச் சிரித்தாள்.

டீ கடையில் ஓப்பனிங்கிலேயே தேர்ட் கியர் போட்டான் சிவா.

"ஆக்சுவலா, ஒரே ஒரு உலக சினிமா பண்ணணும்கிறதுதான் என் லட்சியம். புரொடியூஸர் கையில இருக்கான்... அந்த லைன் சொல்லவா?"

"போச்சுடா... உங்களுக்கும் சினிமா ஆசையா?"

"என்னங்க பண்றது... தமிழ்நாட்ல அழகா இருக்கிற எல்லாப் பசங்களும் ஹீரோ

ஆகணும்னு துடிக்கிறானுங்க. சுமாரா இருக்குற வன்லாம் டைரக்டரா ஆகணும்னு தவிக்கிறானுங்க."

"அப்போ, நீங்க டைரக்டர்தான் ஆகணும் சிவா..."

"இட்ஸ் ஓ.கே. இந்த பல்பை சந்தோஷமா வாங்கிக்கிறேன் மதி."

"யார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரப் போறீங்க?"

"ஸ்ட்ரெய்ட்டா டைரக்ஷன்தான் மதி. பிராப்ளம் என்னன்னா... ஊர்ல அண்ணன் ஒருத்தர் சொல்வாரு... மனுஷனுக்கும் கொரங் குக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தானாம்."

"ம்... என்னவாம்?"

"மனுஷனோட இயல்பு, பற்றி விடுதல். இன்னொண்ணைப் பிடிச்சுட்டுத்தான் இருக் கிறதைவிடுவானாம். குரங்கோட இயல்பு... விட்டுப் பற்றுதல்... கிளை தாவித் தாவிப் போய்க்கிட்டே இருக்குமாம்."

"பின்றீங்க சிவா... நீங்க மனுஷனா... இல்ல, கொரங்கா?"

"பிராப்ளமே அதுதான் மதி. நான் மனுஷக் கொரங்கு!"

"ஹாஹ்ஹாஹ்ஹா..."

இதை சிவா விவரித்தபோது நாங்கள் குடித்து இருந்தோம். சிவா சொன்னான்,

"மச்சான்... இனிமே லவ்... கல்யாணம் எல்லாம் வேணாம்னு தோணுதுடா...சிங்கிளா இருந்துடுறேன்டா. ஆளாளுக்குக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிடுறீங்க. நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கு ஒரு டாஸ்மாக் பாரா என் ரூம் இருக்கட்டும்டா!" என்றான். ஏனோ திடீரென அழுதான்.

"சிவா... என் அழகா... அழாதடா. நீ அழுதா அழகாவே இல்லடா மச்சான்" - பதறினேன்.

தொடர் கதை: ஒன்று

"அது ஏன் மச்சான்... எனக்கு மட்டும் எந்தப் புள்ளையும் ஐ லவ் யூ சொல்லவே மாட்டேங்குது?"

"மச்சான் நீ அழவே மாட்டியே தங்கம். திடீர்னு என்னடா இவ்ளோ ஃபீல் பண்றே?"

"இல்ல மச்சான் எனக்கும் லைஃப் பத்தி நிறையக் கனவு இருந்துச்சுடா. காதல்... கல்யாணம்... ஃபேமிலி... உலக சினிமான்னு... எதுவுமே நடக்கலியேடா!" - என்றவனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டேன்.

சிவாவை இதுவரை நீங்கள் சந்தித்து இருக்க மாட்டீர்கள். இனி, எப்போதும் சந்திக்கவே மாட்டீர்கள்.

"ஐ லவ் யூடா மச்சான். தேங்க்ஸ் ஃபார் த கேர்டா!" என்றான் நாங்கள் கலைந்த போது.

அழுகை வருகிறது நண்பர்களே. மருந்தீஸ் வரர் கோயில் அருகே இருக்கிற காவல் நிலையத்தின் வாசலில் கிடக்கிறது சிவாவின் பைக்.

சாலை விபத்தில் செத்துப்போனான் சிவா!