மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 26

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி

பிழைத்தது பாட்டு!

##~##

ரு படம். அறுபதுகளில் வெளிவந்தது.

முத்துராமன்; ஜெயந்தி - இவர்கள் நடித்து, ஜெயந்தியின் கணவர் திரு.பெக்கட்டி சிவராம் இயக்கியது.

படத்தின் பெயர் 'குலகவுரவம்’; என் மிக நெருங்கிய நண்பர் திரு.கே.ஆர்.பாலன் அவர் கள் தயாரித்தது.

திரு.பெக்கட்டி சிவராம் நல்ல இசையறிவும், ஆங்கில அறிவும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர்.

சிறிது காலம் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 26

கொல்கத்தாவில் - அது, கல்கத்தாவாக இருந்த நாளில் -

கவிஞர் திரு.ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயாவுடன், அவரது ஆங்கில நாடகங்களில் நடித்தவர் திரு.பெக்கட்டி சிவராம்.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர்தான், கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா!

'குலகவுரவம்’ படத்தில் - தாயின் சிதைக்குத் தீ மூட்டிவிட்டு -

கதாநாயகன் தாயை நினைந்துப் பாடுவதாக ஒரு காட்சி.

படத்தின் இயக்குநரான பெக்கட்டி சிவராம், அந்தப் பாடலுக்கான கருத்தை எனக்கு விளக்குகையில் -

ஏற்கெனவே வங்காள மொழியில் தாயைப்பற்றி, ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா எழுதிஇருந்த ஒரு பாடலைச் சொல்லி -

அதுபோன்ற அர்த்தங்கள் வந்தால் நன்றாஇருக்கும் என்று, அந்த வங்காள மொழிப் பாடலையும் உணர்ச்சிபூர்வமாகப் பாடிக் காட்டினார்.

நான் -

அந்த வங்காள மொழிப் பாடலின் இறைச்சிப் பொருளை உள்வாங்கித் தாயைப்பற்றிய தமிழ்ப் பாட்டை எழுதினேன்.

திரு.சுப்பையா நாயுடு அவர்கள் மிக அற்புதமாக -

சுபபந்துவராளி ராகத்தில் அந்தப் பாடலுக்கு இசைமைத்தார்.

திரு.டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக் குரலில் அந்தப் பாடல் பதிவாகி, படமாக்கப்பட்டுவிட்டது.

சென்ஸாருக்குப் போகும்போதுதான் -

தாயின் தகவுகளையெல்லாம் உருகி உருகி உரைக்கப்பெற்ற அந்தப் பாடலின் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 26

சில வரிகளுக்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது -

அவை ஆபாசமாக இருப்பதாக!

கீழ்க்கண்ட வரிகள் - அந்தப் பாட்டின் முதல் சரணத்தில் வருகிறது!

'வன்பசி -
வாட்ட -
உலைப்பால் உன்சேய்
வாடுகையில் - அதற்கு
விலைப்பால் வாங்கி
வழங்காமல் - புடவைத்
தலைப்பால் சேய்முகம்
தனைமூடி - அம்மா! நீ
முலைப்பால் தந்ததை
மறப்பேனா?
மாதா! உன் மடி
மறுபடி நானும் பிறப்பேனா?’

- இப்படிப் போகிறது அந்தப் பாட்டு!

   'முலை’ என்பது ஆபாசமான சொல்; அதை நீக்க வேண்டும்!’ - என்று...

தணிக்கைக் குழுவினரும், தணிக்கை அதிகாரியும் என்னுடன் தர்க்கித்தார்கள்.

''அய்யா! அது ஆபாசமான வார்த்தைஅல்ல; ஆழ்வார்களும், ஆண்டாளும், வள்ளுவனும், கம்பனும், பாரதியும் -

தங்கள் பனுவல்களில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அறநெறிகளையும், அருள் மொழிகளையும் பாடிவைத்துப் போன அந்தப் பாவலர் பெருமான்கள் -

'முலை’ என்பது கெட்ட வார்த்தை என எண்ணியிருப்பரேல், ஏடுகளில் அதற்கு இடம் தந்திருப்பார்களா?''

- என்று கேட்டு, பல பழம் பாடல்களை வரிசையாக எடுத்துரைத்தேன்!

ண்ணனைப் பாலுண்ண அழைக்கிறாள், அசோதை.

'கண்ணா! என் கார்முகிலே! கடல் வண்ணா!
காவலனே! முலை உணாயே!’

       - இது பெரியாழ்வார் பாசுரம்.

'குற்றம் அற்ற முலை தன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே!’

          - இது ஆண்டாள் பாசுரம்.

- மேற்சொன்ன இரண்டு பாடல்களும், வைணவக் கோயில்களில் வைணவ அடியார்களால் வைகலும் பாடப் பெறுபவை!

'கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று’

                 - இது திருக்குறள்.

விடிந்தால் வில்லொடிக்கப் போகிறான், நெருப்புச் சூரியன் வம்சத்தில் வந்த கறுப்புச் சூரியன்.

Christmas Eve  என்பதுபோல, Competition Eve எனும்படியான -

போட்டிக்கு முதல் நாள் இரவு - காகுத்தனின் கண்ணிமைகளுக்கு நடுவே -

வைதேகி நின்றுகொண்டு, விழிகளை மூடவிடாது வருத்துகிறாள்.

அப்போது சீதையின் அவயவங்கள் ரகுவரன் நினைவிற்கு வந்து, ரணமாக்குகின்றன அவனது நெஞ்சத்தை!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 26

'வண்ண மேகலைத்
தேர் ஒன்று; வாள்நெடும்
கண்இ ரண்டு;
கதிமுலை தாம்இரண்டு...’

- இது, நாட்டரசன் கோட்டையில் நீள் துயிலிலிருக்கும், பாட்டரசன் கம்ப நாடனின் பாட்டு.

ளங்கோவடிகள் -

மதுரைக் காண்டத்தில் 'வஞ்சின மாலை’ எனும் காதையில் -

காய்சினம் கொண்ட கண்ணகி பற்றிப் பாடுகிறார் -

' இடமுலை கையால் திருகி - மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து;
வட்டித்து எறிந்தாள்
விளங் கிழையாள்!’
- என்று!

பாரதியும்
பாடியிருக்கிறான்;

'வலிமை சேர்ப்பது
தாய்முலைப் பாலடா!’
- என்று!

ன் வாதங்கள் தணிக்கையாளரிடம் எடு படவில்லை. ஒரு சொல்லை, 'இடம் பொருள் ஏவல்’ பார்த்துப் பொருள் கொள்ளுமளவு - அவர்கள் மாட்டு, மொழியாளுமை இல்லையோ என நான் எண்ண நேர்ந்தது!

விட்டலாச்சார்யாவின் - ஒரு படம்; அது Folklore; அதில், நான் ஒரு நாட்டியப் பாடல் எழுதியிருந்தேன்.

அதில், கீழ்க்கண்டவாறு வரிகள் வருகின்றன. முதல் சரணத்தில்.

'அகில் ஏறும்
முகிலும்;
துகில் மீறும்
நகிலும்...’
என்று.

'துகில் மீறும் நகில்’ என்றால் - 'மதர்ப்பின் காரணமாய், மார்க் கச்சு மீறி நிற்கும் முலை’ - என்று பொருள்.  

சென்ஸாரின் செம்மொழி ஞானத்திற்கு - இந்தப் பொருள் புலப்படாததால், பிழைத்துப்போனது பாட்டு!

2002-ஆம் ஆண்டு - 'குட்டி ரேவதி’ எனும் பெண் கவிஞர் யாத்தளித்த கவிதை நூலின் பெயர் -

'முலைகள்’; நான் வாசித்திருக்கிறேன். அனைத்துக் கவிதைகளும், வாசித்து முடித்த பிறகும் -

மணியோசை போல் - அடித்து ஓய்ந்த பின்னும் அதன் Vibration, சில நொடிகள் செவிக்குள் தங்குமே -

அப்படி என்னுள் சிறிது நேரம் தங்கி, என் சிந்தனையைச் சீண்டி நின்றன.

அக்கவிதைகளில் - விரசமும் இல்லை; விரவா ரசமும் இல்லை!

'கண்ணில் பூ விழாமல் இருப்பவனுக்குத்தான் -

கையில் கிடைத்தது, காகிதப் பூவா, நிஜப் பூவா என்று தெரியும்!’

          - இது காண்டேகர் சொன்னது!

'முலை’ எனும் சொல் கேட்டு, முகஞ்சுளிப்பார்க்குச் சொல்வேன்.

அதனை இடமறிந்து அர்த்தப்படுத்திக் கொள்க!

அது -

பாலுண்ட உணர்வாகவும் இருக்கலாம்; பாலுணர்வாகவும் இருக்கலாம்!

தைத்தான் - நான் பள்ளியில் பயின்ற காலை - ஆங்கில ஆசிரியர் சொல்லிப்போனார்:

Explain with reference to the context!

- சுழலும்...