மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 15

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

ள்ளூர் தினசரி ஒன்றில் ஒரு புகைப்படத்தைப் பிரசுரித்து, அதற்குப் பொருத்தமாக கவிதை எழுதும் போட்டி ஒன்றை அறிவித்து இருந்தார்கள். கழுத்து வரை உடம்பை நிலத்தில் புதைத்து, தலை மட்டும் வெளியே தெரியுமாறு இருந்த ஒரு கழைக் கூத்தாடிச் சிறுமியின் புகைப்படம் அது. வறண்ட அவள் முகத்துக்கு முன் சில சில்லறைகள் சிதறிக்கிடந்தன. கவிதை, போட்டி, பரிசு போன்ற எதையுமே என் மனம் கவனிக்கவில்லை. ஆனால், அந்தச் சிறுமியின் முகமும், பொலிவிழந்த அவளது கண்களும் என்னவோ செய்தது.

மூங்கில் மூச்சு! - 15

ஒரு தபால் அட்டையில்,

'மண்ணில் பிறந்தேன் வழியில்லை
மண்ணுள் புதைந்தேன் வழியுண்டோ?’
  

என்று எழுதிப் போட்டேன். அடுத்த ஒன்றிரண்டு நாட்களிலேயே நான் எழுதியிருந்த அந்த இரண்டு வரிகளுக்கு முதல் பரிசு என்று அந்த நாளிதழில் போட்டிருந்தார்கள். 'எல, நீ கவிதல்லாம் எளுதுவியா? சொல்லவே இல்ல?’ என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 'எனக்குத் தெரிஞ்சா, சொல்லிருக்க மாட்டேனா?’ என்று மனதுக்குள் நினைத்தபடி, 'ஆங், எப்பொவாவது...’ என்று அடக்கத்துடன் சொன்னேன்.

அடுத்த வாரமே நான் எழுதிய கவிதைக்கு முதல் பரிசாக 25 ரூபாய்க்கான காசோலை தபாலில் வந்து சேர்ந்தது.

குஞ்சுவும் நானும் தலை சீவி, பவுடர் போட்டுக்கொண்டு சாரத்தை உருவி எறிந்துவிட்டு, பேன்ட் - சட்டையில் திருநெல்வேலி ஜங்ஷனுக்குக் கிளம்பினோம். வழக்கமாக சைக்கிளில் செல்வோம். அன்றைக்கு பஸ்ஸில்தான் போக வேண்டும் என்று குஞ்சு கறாராகச் சொல்லிவிட்டான். நயினார் குளம் பஸ் ஸ்டாப்பில், 'நீங்கதானே அந்தக் கவிதைய எளுதுனது?’ என்று யாராவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். மாறாக, அந்த வழியாக சைக்கிளில் போன மணி மாமா, 'எலேய், என்ன இங்கென நிக்கிய? கொளாய்லாம் மாட்டிட்டு, சங்சனுக்கு கலர் பாக்கப் போறியளா?’ என்று போகிறபோக்கில் நக்கலாகக் கேட்டுவிட்டுப் போனான். அப்படி அவன் சத்தமாகக் கேட்கவும், பஸ்ஸுக்காகக் காத்து நின்ற சிவகாமி மதினி அடக்க முடியா மல் சிரித்தபடி ஓரக் கண்ணால் எங்களைப் பார்த்தார். இன்னியோட இந்த மணி மாமா சகவாசத்த நாம ஒளிச்சுக்கட்டணும்ல’ - பற்களை நறநறவெனக் கடித்தபடி குஞ்சு சொன்னான்.

மூங்கில் மூச்சு! - 15

வங்கியில் காசோலையை மாற்றிவிட்டு ஜங்ஷனில் உள்ள அரசன் ஐஸ்க்ரீம்ஸ்-ல் போய் அமர்ந்தோம். மெனு கார்டை வாங்கிப் பார்ப்பதற்கு முன், என் சட்டைப் பையில் 25 ரூபாய் இருக்கிறதா என்று எடுத்துப் பார்த்தேன். 'பதற்றத்துல தொலச்சுக் கொண்டாடிராத. அத இங்கெ குடு’ என்று குஞ்சு பத்திரமாக வாங்கி வைத்துக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

மெனு கார்டில் உள்ள ஐஸ்க்ரீம் வகைகள் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. எல்லாமே ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸின் பெயர்கள்போல இருந்தன. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பால் ஐஸும், கப் ஐஸும், ஜவ்வரிசி ஐஸும்தான். கடைசியில் குஞ்சு, ஏதோ ஒரு ஐஸ்க்ரீமைத் தேர்வு செய்து ஆர்டர் செய்தான். 'என்ன ஐஸ்க்ரீம்ல சொல்லியிருக்கெ?’ என்று கேட்டதற்கு, 'எவனுக்குத் தெரியும்? இருபத்தஞ்சு ரூவாக்குள்ள ரெண்டு ஐஸ்க்ரீம் வார மாதிரி சொல்லியிருக்கேன்’ என்றான். வந்த ஐஸ்க்ரீம் அநியாயத்துக்கு நன்றாக இருந்தது. இன்னொன்று வாங்கிச் சாப்பிடலாம் என்றால், கையில் வேறு பணம் இல்லை. பக்கத்து மேஜையில் ஒரு குடும்பம் எல்லா வகை ஐஸ்க்ரீம்களையும் வாங்கித் தின்று தீர்த்துக்கொண்டு இருந்தது. அவர்களை முறைத்துப் பார்த்தபடி குஞ்சு சொன்னான், 'ஒன்ன எவம்ல ஒரே ஒரு கவித எளுதச் சொன்னான்?’

நான் எழுதிய அந்த இரண்டு வரிகளை கவிதை என்று நானுமே கொஞ்ச நாட்களுக்கு நம்பிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் ஒரு பழைய கவிதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது.

'உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்

மூங்கில் மூச்சு! - 15

வகுப்பும்கூட,
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்...
மைத்துனன்மார்கள்.
எனவே,
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே...’

கவிஞர் மீரா எழுதிய 'ஊசிகள்’ தொகுப்பில் இருந்த கவிதையைப் படித்த பின், கவிதை என்பது வேறு சமாசாரம் என்பது புரிந்தது.

ஸ்க்ரீம் ஆசையைத் துறக்க முடிவு செய்து, நல்ல கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது கையில் கிடைத்தது, ஒரு கவிதை.

'கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப் பறவை
தாயைப்போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதி
சாகும் வரை.’

ரொம்ப நாட்களுக்கு இந்தக் கவிதையையே நினைத்துக்கொண்டு இருந்தேன். இந்தக் கவிதையை எழுதிய கலாப்ரியா, திருநெல்வேலிக்காரர் என்பது தெரிந்தவுடன் பயங்கர சந்தோஷமாக இருந்தது. அதற்குப் பிறகு கவிஞர்கள் என்று யாரைப் பார்த்தாலும் பிரமிப்பாக இருந்தது.

கீழப் புதுத் தெருவில் இருந்த மாரியப் பன் அண்ணாச்சியின் மகன் சங்கரன் ஒரு கவிஞன் என்று சொன்னார்கள். ஒரு சின்னப் பெட்டிக் கடையில் உட்கார்ந்தபடி எந்த நேரமும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவன் எழுதிக்கொண்டே இருப் பதைப் பார்த்திருக்கிறேன்.

கணேசண்ணனிடம் ஒருநாள் கேட்டேன், 'நம்ம சங்கரன் கவிதல்லாம் எளுதுவானாமெ! நெசந்தானா?’அன்றைக் குச் சாயங்காலமே கணேசண்ணன், சங்கரனைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டான். கையில் மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்கள். 'சொன்னெம்லா? தம்பிக்கு கவிதைல்லாம் ரொம்பப் புடிக்கும். ஒன் கவிதையெல்லாம் குடு’. சங்கரன் கைகளில் இருந்த கவிதை நோட்டுகளைப் பிடுங்கி என் கையில் கொடுத்தான் கணேசண்ணன். எப்போதுமே அதிகம் பேசாத சங்கரன், அப்போதும் பேசாமல் லேசாகச் சிரித்தபடி அமைதியாகவே இருந்தான். 'ரொம்ப தேங்க்ஸு. ரெண்டு மூணு நாள்ல படிச்சுட்டு திருப்பிக் குடுத்திருதேன்’ என்றேன்.

அன்று இரவு சங்கரனின் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். 'ஒரு கவிஞன் இங்கே அழுகிறான். சமயங்களில் சிரிக்கவும் செய்கிறான்’ என்று முதல் பக்கத்தில் எழுதியிருந்தான் சங்கரன். 'அட’ என்றபடி உள்ளே போனேன். முதலில் 'நெல்லையப்பர் கோயில்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை. ஏழாம் கிளாஸ் தமிழ் வகுப்பில் 'நெல்லையப்பர் கோயில்’ குறித்து ஒரு கட்டுரை எழுதுக என்பதற்கு ஏற்ற மாதிரி ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தான் சங்கரன். பரப்பளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைவிட, நெல்லையப்பர் கோயில் பெரியது என்பதில் தொடங்கி, அதன் ஸ்தல புராணம், பொற்றாமரைத் தெப்பக் குளம், அங்குள்ள புகழ் பெற்ற இசைத் தூண்கள், மற்றும் சிற்பங்கள் என அத்தனை விவரங்களும் விலாவாரியாக அந்தக் கட்டுரையில் இருந்தன. எனக்குத் தெரிந்து, தமிழக அறநிலையத் துறைகூட அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயிலைப்பற்றி அத்தனை விரிவாகச் சொன்னது இல்லை.

மறுநாள் கணேசண்ணனிடம் எதையுமே காட்டிக்கொள்ளாமல் சங்கரனின் நோட்டுப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்தேன். 'ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கெ? நல்லா இல்லையா?’ என்று கேட்டான் கணேசண்ணன். 'சேச்சே. பிரமாதமா இருக்கு’ என்றேன். 'நெல்லையப்பர் கோயில்பத்தின கவித ரொம்பப் பிரமாதமா இருந்திருக்குமெ?’- கண்சிமிட்டிச் சிரித்த கணேசண்ணனைக் கோபத்துடன் முறைத்தேன். 'அடப் பாவி, ஒனக்கும் தெரிஞ்சுதான் என்னை மாட்டிவிட்டியா?’ விழுந்து விழுந்து சிரித்தபடி, 'பொறவு? நான் மட்டும் அத அனுபவிச்சாப் போதாதுல்லா? நீ வேற கவித கிவிதல்லாம் படிக்கெ? அதான். சங்கரன்கிட்ட இன்னும் கவித நோட்டு ஏளு எண்ணம் இருக்கு. வாங்கிட்டு வரட்டுமா?’ அண்ணன் என்றுகூடப்பார்க் காமல் கணேசண்ணனை அடிக்கத் துரத்தினேன்.

கதையோ, கவிதையோ நாம் தேடிச் சென்று படிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் நம்மிடம் வந்து கொடுத்தால், அது இப்படித்தான் ஆபத்தில் போய் முடியும் என்ற பாடம் பயின்றேன்.

அதன் பிறகு தேடிப் படித்த கவிதைகள் பல. அதில் ஒன்று கல்யாண்ஜி எழுதிய இந்தக் கவிதை.

'

மூங்கில் மூச்சு! - 15

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?’

சொல்லிவைத்தது மாதிரி கல்யாண்ஜியும் திருநெல்வேலிக்காரர் என்றார்கள். திருநெல்வேலிக்காரர்கள் அனைவருமே கவிஞர்கள் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

ல்யாண்ஜியின் கவிதைகளுடனே சிறிது காலம் அலைந்தேன். கல்யாண்ஜியின் கூண்டுக் கிளி கவிதையைப்போலவே விக்ரமாதித்யனின் கூண்டுப் புலி கவிதை ஒன்றும் மனதில் பதிந்தது.

'கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்துவிடப்படும் ஜோடி

மூங்கில் மூச்சு! - 15

குட்டி போடச் சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்துகொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுளிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்துகொண்டால் சமர்த்து
ஆதியில் ஒருநாள்
அடர்ந்த பசியக் காட்டில்
திரிந்துகொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்.’

விக்ரமாதித்யனும் திருநெல்வேலிக்காரர் என்பது தெரிந்தவுடன், கீழ ரத வீதியில் குளிருக்குத் தலைப்பா கட்டிக்கொண்டு போகிறவர்கள்கூட பாரதியாராகக் காட்சியளித்தார்கள்.

இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை கவிஞர்கள் நம் ஊரில் ஒளிந்துகிடக்கிறார்களோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

என் தம்பியின் வகுப்புத் தோழனான ரமேஷ் எங்கள் வீட்டுக்குத் தினமும் வந்து போவான். பேச்சுவாக்கில் அவன் கவிதை கள் எழுதுவான் என்ற தகவல் காதில் விழுந்தது. ஏற்கெனவே சங்கரனின் கட்டுரை கள் கவிதை முகமூடி அணிந்து வந்து இம்சித்தது என் நினைவைவிட்டு அகலாமல் இருந்த காரணத்தால், இதைக் கவனிக் காமலேயே இருந்தேன். நாளடைவில் ரமேஷ் என்னிடம் நெருக்கமாகப் பழகத் தொடங்கி, எனது பிரியத்துக்குரிய தம்பிஆனான். 'நீ கவிதல்லாம் எளுதுவியாமெ? கொண்டாயேன். படிப்போம்’ என்றேன். நான் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஏதேதோ காரணம் சொல்லித் தவிர்த்து வந்தான். 'நீங்க வேற? நான்லாம் எளுதுறது கவிதையாண்ணே?’ என்றே சொல்லுவான். அடிப்படையில் கூச்ச சுபாவம்கொண்ட அவனை அப்படியே விட்டுவிட மனம் இல்லை. ஒருநாள் பொய்யாக வரவழைத்துக்கொண்ட கோபத்துடன், 'நீ ஒன் கவிதைஎல்லாம் கொண்டுவரலென்னா, இனிமெ அண்ணன் ஒங்கிட்டெ பேச மாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன். மிகுந்த தயக்கத்துடன் ஒரு நோட்டு புத்தகத்தைக் கொண்டுவந்தான். என் கையில் கொடுத்துவிட்டு உடனே கிளம்பினான். 'படிச்சுட்டு நல்லா இல்லேன்னா ஏசாதீங்கண்ணே. ஏதோ தம்பி எனக்கு தெரிஞ்சத எளுதியிருக்கென்.’

அட்டையிலேயே 'பத்மராஜனின் கவிதைகள்’ என்று எழுதப்பட்டு இருந்தது.

கவிதைகள் எழுதுவதற்கு என் உள்ளம் கவர்ந்த மலையாள எழுத்தாளர், திரைக் கதாசிரியர், இயக்குநர் பத்மராஜனின் பெயரையே ரமேஷ் பயன்படுத்தி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதல் கவிதையைப் படித்தேன்.

'விழியில் விழுந்து
இதயம் கலந்து
உயிரில் கலந்த
உறவே...’

என்ற வரிகளுக்குக் கீழே 'பத்மராஜன்’ என்று எழுதி அழகாகக் கையெழுத்திட்டு இருந்தான்!

- சுவாசிப்போம்...