Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 9

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

சித்தி

'சித்திக்குத் தந்திர உபாயங்களோ நிர்வாகத்துக்குத் தேவையான முரட்டுக் குணங்களோ கொஞ்சம்கூடத் தெரியாது. இருப்பினும், சித்திப் பேச்சுக்கு மறு பேச்சில்லை. சித்தி உருட்டல் மிரட்டல் என்றால் என்னவென்று அறியாத பெண்!’
 - வண்ணநிலவன் ('எஸ்தர்’ சிறுகதையில் இருந்து...)

ம்மா இறந்து ஐந்து வருடங்கள் கழித்து, அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வீட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் உறவினர்கள் அப்பாவிடம் பேசிப் பேசி, அவர் மனதைக் கரைத்து, இரண்டாவது கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைத்திருந்தனர்.

அம்மா இறந்தபோது, தம்பிக்கு ஒன்றைரை வயது. அப்போது அவன் சென்னையில் அம்மாவைப் பெற்ற ஆயா வீட்டில் இருந்தான். அம்மாவின் ஈமச் சடங்குகள் முடிந்த பிறகு, ''கொஞ்ச காலம் இந்தக் குழந்தை எங்ககூடவே இருக்கட்டும். எங்க பொண்ணு ஞாபகம் வரும்போதெல்லாம் இவன் முகம்தான் ஆறுதலா இருக்கு'' என்று அப்பாவிடம் அனுமதி வாங்கி, ஆயா என் தம்பியை தங்களிடம் வைத்துக்கொண்டார்கள். நான் அப்பாவிடம் வளர்ந்தேன். அப்பாவைப் பெற்ற ஆயாவுக்கு வயதாகிக்கொண்டே வந்தது.

அணிலாடும் முன்றில்! - 9

''எவ்வளவு காலம்தான் தனியாவே இருப்ப? உன் புள்ளைங்கள வளர்க்கறதுக்காகவாவது ஒரு கல்யாணம் பண்ணிக்கோ'' என ஒவ்வொருவரும் நச்சரிக்க ஆரம்பிக்க, ஐந்து வருடங்கள் கழித்து அப்பா ஒப்புக் கொண்டார்.

அப்பா சம்மதித்த அந்த இரவும் அன்று அவர் சொன்ன வார்த்தைகளும் இப்போதும் கண் முன் நிற்கின்றன. அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அப்பாவுக்குப் பெண் பார்க்கும் முயற்சியில் இருந்த அத்தை, மாமாவைப் பார்த்து அப்பா சொன்னார்... ''ரொம்பப் பணக்கார இடத்தில் பெண் பார்க்க வேணாம். நடுத்தரக் குடும்பமா பாருங்க. அப்பா, அம்மா இல்லாத பெண்ணா இருந்தா நல்லது. அப்பதான் தாயோட அருமையும், தாய் இல்லாத வேதனையும் புரியும். என் பசங்களை நல்லா வளர்ப்பா!'' அப்பாவின் விருப்பப்படியே திண்டிவனத்தில் ஒரு பெண் பார்த்தார் மாமா. சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்து, ஐந்தாறு தம்பி - தங்கைகளுடன் வளர்ந்த பெண் என்று சொன்னதுமே, அப்பாவுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. வீடு வீடாகச் சென்று, அப்பாவின் கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுக்கவும்; அப்பாவின் கல்யாணத்தை அருகில் இருந்து பார்க்கவும் எத்தனை பிள்ளைகளுக்கு வாய்க்கும்?

''எங்கப்பாவுக்குக் கல்யாணம் நடக்கப்போகுது... எங்க வீட்டுக்குப் புதுசா சித்தி வரப்போறாங்க''

- ஆற்றங்கரையில் கபடி விளையாடிக்கொண்டு இருக்கையில் கூட்டாளிகளிடம் நான் பெருமையாகச் சொன்னேன்.

கூட்டத்தில் இருந்த வளர்ந்த பையன் ஒருவன் என்னை அருகில் அழைத்துக் கேட்டான்...  

''சித்தின்னா என்னான்னு தெரியுமா?''

''தெரியும், எங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க.''

''அதில்லடா... நீ சினிமா பார்த்ததுஇல்லையா?''

''பார்ப்பேன்... ஏன்?''

''அதுல காட்டுவாங்களே... சித்தின்னா கொடுமைப்படுத்துறவங்க. நிறைய வேலை செய்யச் சொல்வாங்க. சாப்பாடே போட மாட்டாங்க. கட்டையால அடிப்பாங்க...''

அவன் சொல்லச் சொல்ல, நான் எப்போதோ பார்த்த ஒன்றிரண்டு பழைய படங்களின் காட்சிகள் ஞாபகம் வர ஆரம்பித்தன.

''இப்ப என்னடா பண்றது? கல்யாணத்த நிறுத்திரலாமா?'' என்றேன் நடுங்கியபடியே.

''அது உன்னால முடியாது. கொடுமைப்படுத்தினா... வீட்டைவிட்டு எங்கியாச்சும் ஓடிடு. அந்தப் படத்துல அப்படித்தான் காட்டுவாங்க'' என்றான்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நான் வீட்டைவிட்டு ஓடுவதுபோலவும்; ரயிலில் டிக்கெட் இல்லாமல் மாட்டிக்கொள்வதுபோலவும்; ஹோட்டல்களில் டேபிள்துடைப்பது போலவும் ஏதேதோ காட்சிகள் தோன்றிக்கொண்டே இருந்தன. அதிகாலையில் அருகில் படுத்து இருந்த அப்பாவின் விரல்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அப்பா புரண்டு படுத்து, என்னை அணைத்துக்கொண்டார். நான் அப்படியே உறங்கிப்போனேன்.

அதற்கடுத்த மாதம் அப்பாவின் திருமணம் நடந்தது. முன் நாள் பெண் அழைப்பு. திருமண மண்டபத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கோயிலில் இருந்து சீர் வரிசைத் தட்டுகளுடன் சித்தியை அழைத்து வந்தார்கள். இருபுறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தர... நடந்து வந்த பெண்கள் கூட்டத்தில் சித்தியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். நடந்தபடியே தலை குனிந்தும், அவ்வப்போது நிமிர்ந்தும் வந்த சித்தி, ஏதோ ஒரு கணத்தில் என்னை உற்றுப் பார்த்ததுபோல் இருந்தது. நான் பயத்தில் கண் களைத் திருப்பிக்கொண்டேன்.

சித்தியின் சொந்தக்காரர்கள் யாரோ, மண்டபத்தில் விளையாடிக்கொண்டு இருந்த என்னையும் தம்பியையும் கூட்டிக் கொண்டுபோய், மண மகள் அறையில் இருந்த சித்தியிடம் அறிமுகப்படுத்தினார்கள். ''பார்க்கணும்னு சொன்னியே... இவங்கதான் முதல் தாரத்துப் பசங்க.''

அணிலாடும் முன்றில்! - 9

சித்தி எங்கள் பெயர்களையும்; என்ன வகுப்பில் படிக்கிறோம் என்பதையும் விசாரித்தது. தம்பியை அருகே அழைத்து, ''ஏன் மூக்கு இப்படி ஒழுவுது. சளி புடிச்சிருக்கா?'' என்று கேட்டபடி, தன் கையில் இருந்த எம்ப்ராய்டரி பூப்போட்ட புத்தம் புதுக் கைக்குட்டையால் மூக்கைச் சிந்தச் சொல்லித் துடைத்துவிட்டது. தாம்பூலத் தட்டில் இருந்து ஆப்பிள் எடுத்துக் கொடுத்து இருவரையும் சாப்பிடச் சொன்னது. கொஞ்சம் கொஞ்ச மாகப் பயம் விலகி, என் மனதில் சித்தியைப்பற்றி வரைந்து இருந்த ராட்சசி சித்திரத்தை அழித்து, அன்பான தேவதை சித்திரத்தை வரைய ஆரம்பித்தேன்.

சித்தி வீட்டுக்கு வந்த அடுத்த வாரம், ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் சென்றது. அப்போது இயக்குநர் கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு’ படம் ரிலீஸாகி, காஞ்சிபுரம் சங்கம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது.

நாங்கள் ஒரு மதியக் காட்சியில், 'முந்தானை முடிச்சு’ படம் பார்த்தோம். பாக்யராஜ் ஒரு வாத்தியார். குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறார், ஊர்வசி அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் என, படம் பார்க்கப் பார்க்க... அப்பாவும், நானும், சித்தியுமே அந்தக் கதையின் பாத்திரங்களாக இருப்பதுபோலத் தோன்றியது. சித்தியும் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

படம் முடிந்து வந்து இரவு அப்பாவிடம் சொல்ல, அடுத்த நாள் அவரும் பார்த்துவிட்டு வந்து சொன்னார் ''ஆமாண்டா... கொஞ்சம் கொஞ்சம் என்னை மாதிரிதான் இருக்கு.'' இப்போதும் 'முந்தானை முடிச்சு’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்கையில், அன்று தோன்றிய அதே உணர்வுக்குள் திரும்பவும் பயணிப்பேன்.

எங்கள் கிராமத்தில் எல்லோரும் பட்டுத் தறி நெய்பவர்கள். அப்பாவும் இன்னொரு போலீஸ்காரரும் மட்டுமே அரசாங்க வேலையில் இருந்தார்கள். என் கூட்டாளிகள் அனைவரும் புத்தக மூட்டைக்கு விடை கொடுத்துவிட்டு, சிறு வயதிலேயே கையில் அலுமினியத் தூக்குச் சட்டியில் பழைய சோற்றை ஊற்றிக்கொண்டு, அதிகாலையில் எழுந்து பக்கத்து ஊர்களில் பட்டுத் தறி நெய்யச் செல்வார்கள்.

அப்பா என்னை அந்தக் காலத்திலேயே கான்வென்ட் பள்ளியில் படிக்கவைத்தார். சுற்றி உள்ள கிராமங்களுக்கு எல்லாம் சேர்த்து, சிறு நகரமாக ஜயன்பேட்டை என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் இருந்து குதிரை வண்டி வரும். 8.30-க்கு என்னை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு கிராமமாகச் சென்று, மாணவர்களுடன் பள்ளியை அடைகையில் 10 மணி ஆகியிருக்கும்.

அணிலாடும் முன்றில்! - 9

ஒவ்வொரு நாளும் காலை உணவின்போது என் அட்டகாசம் தொடங்கும். ''ஏன் ரவா உப்புமா பண்ணீங்க? எனக்கு சேமியா உப்புமாதான் வேணும்'' என்பேன். அப்பா எட்டிப்பார்ப்பார். ''என்னடா?'' என்பார். ''எனக்கு சேமியா உப்புமாதான் வேணும். இல்லன்னா... ஸ்கூலுக்குப் போக மாட்டேன்'' என்பேன்.

அப்பா சைக்கிளில் கடைக்குச் சென்று சேமியா வாங்கி வருவார். எதுவும் பேசாமல் சித்தி செய்து கொடுக்கும். ஒரு முறை நான் மதிய உணவில் உப்பு அதிகம் என்று தட்டைத் தூக்கி சித்தியின் முகத்தில் எறிந்துவிட்டேன். மூக்குத்தியில் தட்டு பட்டு, மூக்கின் சில்லு உடைந்து ரத்தம் வந்த பிறகுதான் என் தவறு புரிந்தது. சித்தி எதுவும் சொல்லாமல் பழைய சேலையில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு இருந்தது. அப்பா என்னை அடிக்கக் கை ஓங்கியவர், என்ன நினைத்தாரோ... அப்படியே பின் வாங்கி உள்ளே சென்றுவிட்டார். குற்ற உணர்வில் அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

பள்ளியில் படிக்கையில், வீடு முழுதும் நிறைந்து இருந்த புத்தகங்கள் என்னைக் கவிதையின் உலகுக்குக் கூட்டிச் சென்றன. நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். காஞ்சியின் தேரடி வீதியில் தெருவடைத்துப் பந்தல்கள் போட்டு நடக்கும் பிரமாண்டமான இலக்கிய விழாக்களில் கான்வென்ட் யூனிஃபார்மோடு மேடை ஏறி நான் கவிதை படிப்பேன். கூட்டம் வியந்து ரசித்து என் வயதுக்காகவே கை தட்டும்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் என் கவிதைகளைத் தொகுத்து 'தூசிகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டேன். அப்பா கடன் வாங்கி அச்சகத்துக்குக் காசு கொடுத்தார். அப்படியும் மேலும் 2,000 தர வேண்டி இருந்தது. சித்தி தன் நகையைக் கழற்றிக் கொடுத்தது. ஓம் என்று வரைந்து, அதற்கு கீழ் மூன்று கோடுகள் போட்டு லாபம் என்று எழுதி இருந்த அடகுக் கடையில் நகை, பணமாக மாறி, புத்தகமாக வெளிவந்தது.

எத்தனையோ இரவுகள், அப்பாவும் நானும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு அகாலத்தில் வீடு திரும்புவோம். அப்போது எல்லாம் சித்தியிடம் இருந்து எந்த முணுமுணுப்பும் நான் அறிந்து வந்தது இல்லை.

இப்போது திரும்பிப் பார்க்கையில், என் பால்யத்தில் எள்ளளவும் சித்தி என்னைக் கொடுமைப்படுத்தியதே இல்லை. சித்திக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும், எந்தப் பாரபட்சமும் இல்லாமல், எல்லோரையும் ஒன்றாகவே வளர்த்தது. அந்த அறியாத வயதில் சிறுபிள்ளை அடங்களால், நான்தான் சிலவேளைகளில் சித்தியைக் கொடுமைப்படுத்தி இருக்கிறேன்.

இரண்டாம் தாயாக இருந்து என்னை வளர்த்த சித்திக்கு அன்பைத் தவிர, என்னால் என்ன தந்துவிட முடியும்?

இப்போதும் தாயில்லாக் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம், அன்பானதொரு சித்தி கிடைக்க அடிமனசு வேண்டிக்கொள்கிறது!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan