வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 08
##~## |
பாலிடெக்னிக்ல ஃபைனல் இயர் வரைக் கும் நான் 'தண்ணி வாசனை’யே பார்க்காத கன்னிப் பையன். அது வரைக்கும் சரக்கு அடிச்சது இல்லை, சரக்கு அடிச்சவங்ககிட்ட சகவாசம் வெச்சுக்கிட்டதும் இல்லை. ஆனா, எல்லாத்துக்கும் ஆப்புவெச்ச அந்த நாள்... ஃபேர்வல் பார்ட்டி!
கடைசி வருஷத்தின் கடைசி நாள். ரசிக மகா ஜனங்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஃபேர்வல் பார்ட்டி வந்தது. எல்லாப் பயலுகளும் ஆலாப் பறக்குறான். கையில இருந்தது, வீட்டுல சுட்டது, லவ்வர்கிட்டே லவட்டினதுன்னு மொத்தமா ஒரு ரெண்டாயிரம் ரூபா தேத்தி, நாலு ஃபுல் வாங்கிட்டானுக. பத்தாததுக்கு வஞ்சிரம் வறுவல், சிக்கன் 65, இறால் தொக்குன்னு வெப்பன் இல்லாமலே பல உயிர் களைக் கொன்னு, ரிப்பன் வெட்டாமலேயே ஒரு

மினி முனியாண்டி விலாஸைத் திறந்தானுங்க. 'அதை வாங்கிட்டு வா... இதை வாங்கிட்டு வா’ன்னு ஒரே களேபரம்.
ஒரு பக்கம் எல்லா பிராண்டுலயும் சிகரெட் பாக்கெட். இன்னொரு பக்கம் சிப்ஸ், பப்ஸ், சமோசா, உடைச்ச கடலை, காரக் கடலை, மிளகா தடவின மாங்கா, வெள்ளரி சாலட், ஊறுகா பாக்கெட், நான் வெஜ் சைடு டிஷ், பெப்ஸி, கோக், மிராண்டா, வாட்டர் பாட்டில்னு ஏராளமான அயிட்டங்கள்.
அத்தனையும் சுத்திவெச்சு ஃபுல்லை உடைச்சு 25 கிளாஸ்ல ஊத்திவெச்சிருந்தாங்க. பார்த்தா, மதுரை வீரன் சாமிக்கு மெகா படை யல் போட்ட மாதிரி கிர்ருங்குது.
'டேய் பசங்களா... இன்னிக்குத்தான் கடைசி நாள். இதுவரை குடிச்சவன், குடிக்காதவன், தம் அடிச்சவன், அடிக்காதவன் அத்தனை பேரும் குடிக்கிறோம், அடிக்கிறோம்’னு முதல்லயே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டானுங்க. நமக்குத்தான் அந்த வாசனையே ஆகாதா, 'மச்சி, நான் வேணும்னா ஜூஸ் குடிச்சுக்கிறேன்’னு சொன்னேன். 'இல்ல மச்சி... நீ நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கிறியா, இல்லையா’ன்னு ரொம்ப சீரியஸாக் கேள்வி கேட்டானுங்க. 'நல்லாவே மதிக்கிறேன்டா. அந்த ஆரஞ்சு ஜூஸை எடு’ன் னேன். 'நோ... நோ... நீ சரக்கு அடிச்சாதான் ஃப்ரெண்ட், அடிடா ஒரு ரவுண்ட்’னு ஒரே அழிச்சாட்டியம்.
'மச்சி, ஒரு ரவுண்ட் அடிக்காமக் கிளம்புனா, உன் பாடி இந்த கிரவுண்ட் தாண்டாது!’ன்னு மிரட்டுறான் வயலன்ட் தெலுங்கு சினிமா வெறியன் ஒருத்தன். 'நீ மட்டும் இன்னிக்கு சரக்கு அடிக்கலைன்னா இன்னியோட நம்ம நட்புக்கு டைவர்ஸ்’னு மேலே மேலே விழுந்து உளர்றான் இன்னொருத்தன்.

இந்த இம்சைகள்ல இருந்து தப்பிக்க, அந்தக் கருமத்தை ஒரு மடக்கு குடிச்சுத் தொலைப்போம்னு ஒரு கிளாஸைக் கையில எடுத்தேன். வாய்கிட்ட கொண்டுபோனப்பவே குமட்டிட்டு வந்தது. ஒரே ஒரு நொடி கழிச்சு, 'உவ்வ்வ்வ்வேவ்’னு வாந்தி.
காலையில சாப்பிட்ட இட்லி, கேன்டீன்ல முந்தா நாள் போட்டு மூடாம வெச்சிருந்த பஜ்ஜி, மிளகா, மாங்கான்னு எல்லாமே குடலை வாரிச் சுருட்டிக்கிட்டு கொட்டிருச்சு. அங்கே நான் வாந்தி எடுத்தது மேட்டர் கிடையாது. எங்கே எடுத்தேங்கிறதுதான் மேட்டர். சரக்கு கிளாஸ், மூடியைத் திறந்துவெச்சிருந்த ஃபுல் பாட்டில், சிப்ஸ் பாக்கெட், சிக்கன் 65-னு அந்த பல்லேலக்கா பந்தி முழுக்க நம்ம வாந்தி.
அவ்வளவுதான், அதுவரைக்கும் மூழ்காத ஷிப்பு, மூடாத ஜிப்புன்னு வசனம் பேசி ஃபீலிங்க்ஸ் காட்டினவனுங்க எல்லாம் கொலை வெறியோட எந்திரிக்கிறானுங்க. 'நாங்களே அங்கங்க பிச்சை எடுத்து, பீராய்ஞ்சு, காசு போட்டு சரக்கு வாங்கிவெச்சா, அது மேலயாடா வாந்தி எடுப்பே’னு அத்தனை பேரும் பாய்ஞ்சு வர்றானுங்க. அப்பதான் அவங்களை கூல் பண்றதுக்காக, 'மச்சி... ஒரு

குவார்ட்டர் சொல்லேன்’னு அவனுங்களைப் பார்த்து சொன்னேன்.
'சிவா மனசுல சக்தி’ ஷூட்டிங் சமயம், டைரக்டர் ராஜேஷ்கிட்ட இந்த சம்பவத்தைச் சொன்னப்போ, விழுந்து விழுந்து சிரிச்சவர், 'நல்லா இருக்கே சந்தானம். இதையே நம்ம படத்துல யூஸ் பண்ணிக்குவோம்’னாரு. அப்படித்தான் சரித்திரத்தில் இடம் பிடிச்சது அந்த குவார்ட்டர் பஞ்ச்.
அதுக்கப்புறம் சரக்குல கரை கண்ட பிறகு ஒரு பயலைப் பிறந்த நாள் கொண்டாடாம விடலையே!
லவ் ஜெயிச்சா பார்ட்டி, புட்டுக்கிச்சா டபிள் மடங்கு பார்ட்டி, புது செருப்பு வாங்கினா பார்ட்டி, ஷேவிங் பிளேடு வாங்கினாலும் பார்ட்டி. அவ்வளவு ஏங்க, ஒருத்தன் ஜட்டி வாங்கினான்னு தெரிஞ்சதும் புட்டியைத் திறந்து ஃபுல் நைட்டும் பார்ட்டி. முருகானந்தம்னு நம்ம ஜூனியர் பையன் ஃப்ரெண்டா இருந்தாப்ல. பிறந்த நாளுக்கு தம்பி பார்ட்டி தரலைங்கிற கோபத்துல, ராவோட ராவா 'காணவில்லை’னு அவன் போட்டோ போட்டு போஸ்டர் அடிச்சு, 'காணாமல் போகும்போது கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்’னு கூடுதல் தகவலும் கொடுத்து இருந்தோம். பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் முழுக்க கட்டம் போட்ட சட்டை போட்டு இருந்த முருகானந்தம் சிரிச்சாப்ல.
ஆனா, இப்போதான் தெரியுது, நாங்க செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு. ஸாரிடா முருகா!
(இன்னும் கலாய்ப்பேன்)