ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
##~##
மா
டியில் இருந்து இறங்கி வரும்போது மகளா, அம்மாவா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் வந்ததும்தான் தெரிகிறது... அதே லக்ஷ்மிகரமான முகம்; அதே ஐஸ்வர்யம் பொங்குகிற சிரிப்பு!

தேகத்தைக் காக்கும் வித்தைகளை இங்கே விவரிக்கிறார், நடிகை லட்சுமி.

''தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி, நம்ம உடம்பு பட்டுப்போல இருக்கணும்னா, பாரம்பரியத்தை விடவே கூடாது.

சமைக்கிறது, சாப்பிடறதோட வேலை முடிஞ்சுடறது இல்ல. சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்றதுங்கறது மிகப்பெரிய கலை. குத்துக்காலிட்டு உக்கார்ந்துண்டு, லேசா தண்ணியைத் தெளிச்சு, தரையில கைவைச்சு, அப்படியே சாப்பிட்ட இடத்துல இருக்கிற பருக்கைகளை லாகவமா சேர்த்துக்கிட்டே வந்து, மொத்தமா எடுத்து முடிச்சதும், திரும்பவும் கொஞ்சம் தண்ணிவிட்டுப் பளிச்சுனு துடைக்கணும். அப்படி நேர்த்தியா துடைக்கிறதை வைச்சே, புகுந்த வீட்ல அந்தப் பொண்ணு எப்படி இருப்பா; மாமியார், நாத்தனார்கிட்டே நல்லபேர் வாங்குவாளாங்கறதையெல்லாம் பெத்தவ ஆரூடமாச் சொல்லிடுவா! அதே நேரம், அப்படிக் குனிஞ்சு, கையை ஊனி, வளைஞ்சு துடைக்கறது, அந்தக் கால எக்ஸர்சைஸ்! இதை இன்னி வரைக்கும் கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் லட்சுமி.

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

''அடுத்தாப்ல உணவு. 'ஒரே சமயத்துல அதிகமா சாப்பிட்டா, கலோரி அதிகமாகி, உடம்புக்கு பிரச்னையைக் கொடுக்கும். அதனால, மூணு வேளைங்கறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க’ன்னு இன்னிக்கு நிறையப் பேர் சொல்றாங்க. ஒருவகையில பார்த்தா, இதுவும் அந்தக் காலத்து வழக்கம்தான்! காலைல எட்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி சாம்பார், ரசம், மோர்னு சாப்பாடு; மத்தியானம் இட்லியோ, தோசையோ டப்பால அடைச்சுக் கொடுப்பாங்க. அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு உணவு; விளையாடிட்டு வந்ததும், கைகால் அலம்பிட்டு ஸ்லோகம், ஸ்கூல் பாடம்; முடிஞ்சதும் இரவு உணவுன்னு அழகாத் திட்டமிட்டிருந்தாங்க, வாழ்க்கையை!

இன்னிக்கு, ஏழாவது படிக்கிற என் மகள் சம்யுக்தாவை ஸ்கூலுக்கு அனுப்பறபோது, இதையெல்லாம்தான் மனசுல வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணாப் பண்றேன். அதேபோல, காலை உணவு எட்டு மணிக்குள்ள கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும், எனக்கு! குறைச்சலா, அதே நேரம் அதிக சத்துக்கள் இருக்கிற உணவா சாப்பிடுறதுதான் என் உணவுக் கொள்கை. இதை சினிமா, ஷூட்டிங்னு பரபரப்பா இருந்தபோதும் கடைப்பிடிச்சேன்'' என்கிறார் லட்சுமி.

''அப்புறம் இன்னொரு விஷயம்... தினமும் யோகா பண்றேன். சாயந்திரமானா, கண்டிப்பா எங்க ஏரியாவுல நான் வாக்கிங் போறதைப் பார்க்கலாம். காலைல குளிச்சு முடிச்சதும், பூஜையறைல அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பூஜை பண்ணுவேன்; பிராணா யாமம் செய்வேன்; மனசுல இருக்கிற மொத்தப் பிரச்னை களையும், 'இந்தாப்பா... உங்கிட்டக் கொடுத்துட்டேன்; நீதான் பாத்துக்கணும்’னு பாபாகிட்ட மானசீகமாப் பேசுவேன். இது எல்லாமே, உடம்பையும் மனசையும் மலர்ச்சிப்படுத்தற அற்புதமான விஷயங்கள்!

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

ஒருமுறை, ஷூட்டிங் இடைவெளியில், கொஞ்சம் ரிலாக்ஸ்டா, முதுகை நல்லாச் சாய்ச்சு உட்கார்ந்திருந்தேன். இதைப் பாத்துட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கிட்ட வந்து, 'நல்லா நிமிர்ந்து, முதுகை நேராக்கி உட்காரப் பழகு. சுவாசம் சீராகும்; அப்படிச் சீரான சுவாசம் இருக்கும் போது, சிந்திக்கிறது எதுவுமே தப்பாது; ஒழுங்காச் செயல் படுத்த முடியும். அதுமட்டுமில்லாம, தப்பா எதையுமே சிந்திக்கத் தோணாது’ன்னு அட்வைஸ் பண்ணினார். இதோ... இப்பக்கூட பாருங்க, நிமிர்ந்துதான் உட்கார்ந் திருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார், லட்சுமி.

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

''நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள்; எத்தனையோ மனிதர்கள்; வெற்றிகள், தோல்விகள், சந்தோஷங்கள், காயங்கள்... நம்மளைக் கைதூக்கிவிட்ட வங்களுக்கு நன்றியைச் சொல்லியிருப்போமா? இந்த உலகத்துல நம்மைப் படைச்ச கடவுளுக்கும், நம்மை அடையாளப்படுத்திய நல்ல மனிதர்களுக்கும், தினமும் இரவுப் படுக்கைக்குப் போகும்போது மனசார நன்றி சொல்லிட்டுத் தூங்குவோமே!

அதுல நமக்கு கிடைக்கிற ஆத்மதிருப்தி, நம்ம உடம் பையும் மனசையும் லேசாக்கிடும்; அழகாக்கிடும். முக்கியமா, நம்மளை இத்தனை நெடுங்காலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிற நம்ம உடம்புக்கும் அப்படியே தினமும் தேங்க்ஸ் சொல்லுவோம்.

படுத்த உடனே தூங்கறவங்க அதிர்ஷ்டசாலிங்கன்னு சொல்லுவாங்க. அவங்க ஆரோக்கியசாலிகளும் கூடத்தான்! அந்த வகையில நான் அதிர்ஷ்டம் ப்ளஸ் ஆரோக்கியசாலி!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்தபடி சொல்கிறார் லட்சுமி; ஆரோக்கியலட்சுமி!

- வி.ராம்ஜி,
படங்கள்:  ச.இரா.ஸ்ரீதர்