
வாலிஓவியம் : மணி
இரு தலைப்புகள்!
##~## |
அறுபது
ஆண்டுகள் முன்...
ஒரு MULTISTOREY BUILDING கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் போதே -
இடிந்து விழ, அதன் இடிபாடுகளில் சிக்கி - நூற்றுக்கணக்கான உழைப்பாளர் மண்ணில் புதையுண்டனர்!
இது நடந்தது - அன்றைய பம்பாயில் -
நான் வாழ்ந்திருந்த நாள்களில்.

இந்த அவல நிகழ்வை ஆறு பத்திகளில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்த Times of India
கீழ்க் கண்டவாறு கவித்துவமான ஒரு தலைப்பைக் கொடுத்திருந்தது.
‘Sons of Toil- Under
Tons of Soil!’
'ஏராளமான
எடைகொண்ட
மண்ணுக்கடியில் - உழைப்பின்
மைந்தர்கள்!’
- என்று இதை மொழிபெயர்த்தால் நன்றாகவா இருக்கும்?
திரு.அகிலனுக்கு 'ஞான பீட விருது’ கிடைக்கிறது.
அகிலன் அவர்கள் தபால் இலாகாவில் பணியாற்றியவர்.
இதை மனத்தில்கொண்டு - அன்றைய Indian Express
அவர் விருது பெற்றதைப் பாராட்டு முகத்தான், கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.
‘A MAN WITH LETTERS; NOW
A MAN OF LETTERS!’
'Letter’ என்பதற்குக் கடிதம் என்றொரு பொருளும் - எழுத்து என்றொரு பொருளும் உள்ளதை ஓர்ந்துதான் -
Express இப்படி 'Pun’ செய்திருந்தது!

அகிலனைப் பற்றிய இந்தக் கணிப்பை நான் வெகுவாக ரசித்தேன்.
ஏனெனில் - அவர் என் பால்ய கால நண்பர் என்பது மட்டுமல்ல -
கடிதங்களைக் கரத்திலும்; கதைகளைக் கருத்திலும் தாங்கி நின்றதைத் தமியேன் நன்கறிவேன்.
அகிலன் -
திருச்சி தென்னூர்வாசி; அடியேன் திருவரங்கவாசி.
வாரம் இரு முறையாவது - ஸ்ரீரங்கத்திலிருந்து பஸ் ஏறி -
தென்னூருக்குப் போவேன் - அவர் குடியிருந்த நெ.5. பட்டாபிராமப் பிள்ளைத் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு!
இருவரும் -
பொடி நடையாகப் பேசிக்கொண்டே -
அருகிலிருந்த ஒரு Coffee Club-க்குப் போவோம்.
அந்த ஹோட்டல் இருந்த இடம் - 'கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட்’ பக்கம்!
அது -
குதிரை வண்டிக்காரர்களுக்காகக் கலைவாணர் தன் சொந்த செலவில் கட்டிக்கொடுத்தது.
'கிந்தனார் குதிரை வண்டி நிலையம்’ - என்று அதற்குப் பெயர் சூட்டி -
சின்னதாய் ஒரு திறப்பு விழாவும் நடத்தினார் கலைவாணர்.
அந்த விழாவில், அவருக்கே உரித்தான நகைச்சுவைப் பாணியில், திரு.N.S.K. அவர்கள் கீழ்க் கண்டவாறு உரையாற்றினார்கள்.
''எல்லாரும் என்னைக் கேக்குறாங்க - 'ஏன்யா, குதிரெ வண்டிக்காரங்களுக்கு இப்படியரு Stand கட்டிக் கொடுத்தீங்க’ன்னு!
அய்யா! இந்த உலகத்துல - எவனாச்சும், நாம முன்னுக்கு வர்றதெ விரும்புவானா?
ஆனா - குதிரெ வண்டிக்காரன் மட்டும் தான் -
நாம வண்டியில ஏறி உக்காந்தவுடனே, வஞ்சனையில்லாமெ -
'அய்யா! முன்னுக்கு வாங்க; முன்னுக்கு வாங்க’ன்னு, ஆசையாச் சொல்றான்.
அதனாலதான், அவங்க பரந்த உள்ளத்தை மதிச்சு - இந்த வண்டி ஸ்டாண்டைக் கட்டிக் குடுத்தேன்!''
- இப்படிக் கலைவாணர் அற்றை நாளில் ஆற்றிய உரையைப் பற்றியும் -
இன்னும் இதுதான் என்றில்லாமல், நானும் அகிலனும் -
ஆளுக்கொரு கோப்பை காப்பியை வைத்துக்கொண்டு பேசுவோம் பேசுவோம் - அப்படிப் பேசுவோம்.
பிறகு -
ஸ்ரீரங்கம் பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு - அவர் வீடு திரும்புவார்.
இத்தகு என் இனிய நண்பர் 'ஞான பீட’ விருது பெற்றதை -
- Express ஏடு, ரத்தினச் சுருக்கமாக -
‘A MAN WITH LETTERS; NOW
A MAN OF LETTERS!’
- என்று எழுதியிருந்ததை என்னணம் என்னால் மறக்க ஏலும்?
இன்றளவும் - அவ் ஆங்கில ஏடுகளில் வந்த, கவித்துவமான இரு Captions-ம் fevicol போட்டு ஒட்டியது போல் என் நெஞ்சுள் அப்பிக்கிடக்கின்றன!
மேற் கூறியவற்றை நான் ஏன் நினைவுகூர்கிறேன் என்றால் -
எதைச் சொன்னாலும் 'சுருங்கச் சொல்லும்’ சூத்திரத்தை எனக்கு அவ் ஆங்கில ஏடுகள்தாம் கற்பித்தன!
பிறகுதான் -
நான் சின்னச் சின்ன வரிகளில், சில நிகழ்வுகளைப் பதிவு செய்யப் பழகினேன்.
நான் விகடனில் எழுதிய 'அவதார புருஷ’னில் -

மந்தரை, கைகேயியின் மனத்தைக் கலைக்
கையில் -
'ராமனுக்கு
ராஜ்ஜியம்;
பரதனுக்கு
பூஜ்ஜியம்!’ - எனக் கூறுவதாய்க் குறிப்பிட்டிருந்தேன்.
தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடரில் -
என் இளமைக் கால சினேகிதர் திரு.சுஜாதா, இது சுத்த சுயம் பிரகாசமான சிந்தனை என்று சிலாகித்திருந்தார்!
ஒரு கம்பன் விழாக் கவியரங்கம்; இராமனைப் பற்றிக் குறிப்பிட்டேன் -
'இராவணனை இராவணம் செய்த
இராவணன்!’ - என்று!
- அதே விழாவில் கம்பன் கழகத் தலைவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் பற்றிக் குறிப்பிட்டேன் -
'நாகூர் தந்த
தாகூர்; எனினும் -
தாகூரை மிஞ்சிய
நா கூர்!’ - என்று!
ஒரு சிலப்பதிகார விழாவில் பாடினேன், யார் கோவலன் என்று!
'புகாரில் பிறந்தவன்;
புகாரில் இறந்தவன்!’
கண்ணதாசன் மறைவையட்டி - ஓர் இரங்கற் கூட்டம் நடந்தது.
'மகாகவி கண்ணதாசனின்
மரணத்திற்குக் காரணம் -
மதுவருந்தியது; இது தெரிந்து -
மது வருந்தியது!’
- என் இதயம் கனக்க இப்படிப் பாடினேன்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைவின் போது, விகடனில் ஒரு கவிதை எழுதினேன்.
'உன் உதடுகளில்
உட்கார்ந்தது -
என் முதல் வரி; உலகறிந்தது
என் முகவரி!’
குஜராத் பூகம்பம் பற்றிக் 'குமுத’த்தில் ஒரு நீண்ட இரங்கற் பா;
'இதோ!
இவர்கள் -
கண் மூடியதால்
மண் மூடியவர்களல்ல;
மண் மூடியதால்
கண் மூடியவர்கள்!’ - என எழுதினேன்.
கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்துச் சின்னஞ் சிறார்கள் சாம்பலானபோது, நான் ஏறத்தாழ ஒரு நாத்திகனாகவே ஆனேன்.
'கோயில்கள் - நிறையக்
கொண்ட ஊர் குடந்தை; இந்த -
அநியாயத்திற்கு
அத்துணை தெய்வங்களுமா
உடந்தை?’
கலைஞர் அவர்கள் எழுதிய நூல் - 'தொல்காப்பியப் பூங்கா’;
கோவையில், நான் தலைமை ஏற்று நூலை வெளியிட்டேன்; கலைஞரும் உடனிருந்தார்கள்.
அப்போது நான் பேசினேன்;
''கலைஞர் - முதன்முதல் படத்திற்கு, உரையாடல் எழுதப் புகுந்த ஊர் இது. 'கோவை’ என்றால், கலைஞருக்குப் பழைய நினைவுகள் வரும்;
'கோவை’ என்ற சொல்லைத் திருப்பிப் போட்டாலும் - கலைஞர் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள்!
ஏனெனில் - 'கோவை’ எனும் சொல் திருப்பிப் போடுகையில் - 'வைகோ’ என்று ஆகும்!''
உண்மையில், வைகோவை சிறை மீட்க வேண்டுமென்ற எண்ணம் - அப்போது அவரது சிந்தையில் இருந்தது!
என் - முப்பத்தைந்தாண்டு கால நண்பர் திரு.வைகோ.
அவர் சிறை மீண்டதும் சொன்னேன்;
'சிறையிலும் நீங்கள் என்னை மறக்கவில்லையே!’ என்று;
'எப்படி?’ என்றார்.
நான் சொன்னேன்;
'சிறைச் சாலையில் - நீங்கள் தினமும் ஆடியது -
வாலிபால்தானே!’
- சுழலும்...