
அண்ணன்
'அணில் வால் மீசைகொண்ட அண்ணன் உன்னைவிட்டு புலி வால் மீசைகொண்ட புருசனோடு போய் வரவா?’- கவிப்பேரரசு வைரமுத்து ('கிழக்குச் சீமையிலே’ படப் பாடலில் இருந்து... )
அந்த ஊருக்கு ஒருநாள் வெயில் வந்தது. வெயில் என்றால் வழக்கமாக வரும் வெயில் அல்ல; சந்நதம் வந்து ஆடும் வெறிகொண்ட வெயில். காலங்களுக்கும் முந்தைய ஆதிச் சூரியனில் இருந்து அப்படியே இறங்கி வந்த வெப்ப நதி. ஒரே பார்வையில், அது கிளைகளையும் இலைகளையும் தீப்பிடிக்கச் செய்து மரங் களைக் கருகவைத்தது. ஆழத்தில் அந்த மரங்களின் வேர்கள் வேதனையுடன் சுருண்டு முனகும் வலி மண்ணுக்கு வெளியே நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது.
வெயிலின் பார்வைக்குத் தப்பி தீய்ந்த சிறகுகளுடன் பறவைகள் காட்டுக்குள் ஒளிந்துகொண்டன.
மக்கள் வேப்பங்கொத்துகள் கைகளில் ஆட, மழை வரம் வேண்டி மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றினார்கள். வெயில் கொஞ்சம் தணிந்த மாதிரி இருந்தது.

உண்மையில் வெயில் தணியவில்லை. அதற்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. வெயிலுக்கும் சோர்வு இருக்கும்தானே? அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. கொஞ்சம் வீடுகளேகொண்ட ஒரு கிராமம். புல் பூண்டுகள் எல்லாம் ஏற்கெனவே காய்ந்திருந்தன. இனியும் எரிப்பதற்கு வெயிலுக்கு வேலை இல்லை.
அந்தப் பொட்டல் காட்டில் சிறுவர்கள் கூடி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். வெயில் அவர்கள் விளையாடுவதைப் பார்க்க வசதியாக ஒரு பாழடைந்த மண்டபத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டது.
அது பட்டுத் தறி நெசவைத் தொழிலாகக்கொண்ட ஊர். நெசவாளர் வீட்டுப் பிள்ளைகள் கிழிந்த ஆடைகளுடன் புழுதியே சட்டையாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த விளையாட்டு வெயி லுக்குப் பிடித்திருந்தது.
பனங்காயின் மூன்று கண்களுக்கும் நடுவே நீண்டு வளைந்த கம்பைச் சொருகி பனங்காய் வண்டி விளையாட்டு. தூரத்தில் கானல் நீரில் நீந்திக்கொண்டு இருந்த ஒரு மரத்தை இலக்காக்கி, யார் அதை முதலில் தொடுவது என்கிற பந்தயம் நடந்துகொண்டு இருந்தது. நெருங்கி, முட்காட்டில் பனங்காய் வண்டியை உருட்டியபடி அந்தச் சிறுவர்கள் மரத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
இத்தனை உக்கிரமாக தான் இருந்தும், தன் வெம்மைக்குத் தப்பி இந்தப் பனை மரங்கள் காய்கள் தருவது குறித்து வெயிலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவர்கள் விளையாடுவதற்காகவாவது இனி, பனை மரங்கள் மீது கூடுதல் உக்கிரம் காட்டுவது இல்லை என வெயில் தீர்மானித்தது.
பனங்காய் வண்டிகள் கிழக்குக்கும் மேற்குக்குமாக உருண்டுகொண்டு இருந்தன. தானும் இப்படி கிழக்குக்கும் மேற்குக்கும் உருளும் பெரிய பனங்காய் வண்டிதானோ என்று வெயில் யோசித்தது. அந்த நினைப்பு அதற்கு சந்தோஷமாகவும் இருந்தது, துக்கமாகவும் இருந்தது.
இப்போது விளையாட்டு வேறு வடிவம்கொண்டது. சிறுவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்தார்கள். ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர். வேகமாக எதிரெதிராக ஓட்டிக்கொண்டு வந்து தங்கள் வண்டிகளை மோதவிட்டார்கள். விளையாட்டு மும்முரமாகச் சென்றுகொண்டு இருக்கையில், எங்கிருந்தோ அம்மணக் குண்டியுடன் ஒரு குட்டிப் பையன் ஓடி வந்து இடையில் புகுந்து, தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

கொஞ்சம் உயரமாக இருந்த ஒரு பையன், இன்னொரு பையனிடம், ''டேய்... உன் தம்பிய நகரச் சொல்லு. அடிபடப் போகுது'' என்றான்.
''டேய், வீட்டுக்குப் போடா... இங்க வரக் கூடாது'' என்றான் பக்கத்தில் இருந்த பையன்.
அவன், அந்தக் குட்டிப் பையனின் அண்ணன் என்று வெயில் புரிந்துகொண்டது.
''இல்லண்ணே... நானும் விளையாட்டுக்கு வர்றேண்ணே.''
''உனக்கு எத்தனை தடவை சொல்றது..? பெரிய பசங்க விளையாடுற எடத்துக்கு வரக் கூடாதுன்னு. இனிமே வந்தே... அவ்வளவுதான்'' என்று தன் தம்பியின் தலையில் ஓங்கி ஒரு குட்டுவைத்தான் அண்ணன்.

பின்பும் தம்பி மைதானத்திலேயே அமர்ந்து அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்துத் திரும்பி வந்து,
''இந்தா காசு... போயி ஐஸ் வாங்கிச் சாப்பிடு'' என்று கொடுக்க, ''எனக்குக் காசெல்லாம் வேணாம். நானும் ஆட்டத்துக்கு வருவேன்'' என்று தம்பியின் பிடிவாதம் நீண்டது.
''இனிமே இங்க வருவியா... வருவியா...'' என்று கோபமாகக் கேட்டபடியே தன் கையில் இருந்த கம்பால் தம்பியை அடித்துக் கொண்டு இருந்தான் அண் ணன். தன்னைவிடவும் உக்கிரமாக மனிதர்கள் இருப் பதைப் பார்த்துப் பயந்தபடியே வெயில் அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தது.
பின்பொரு நாள் அந்த ஊருக்கு மழை வந்தது. முதிர்ந்த மழை. அந்த மழைக்குப் பல லட்சம் வயது இருக்கும். ஒவ்வொரு முறை மேகத்தில் இருந்து குதிக்கும்போதும், தன் வயதை அது கூட்டிக்கொண்டே வரும். முதல் முறை அது ஒரு மலைக் காட்டில் குதித்தபோது, அதன் தகப்பன் சொன்னது, ''முதல் முறை மண்ணுக்குப் போகிறாய்... மேகமாகித் திரும்பி வா.''
மலைக் காட்டில் அருவியாகி, ஏதேதோ ஊர்களில் நதியாகிக் கடந்து, கடலில் ஆவியாகி மேகத்தை அடைந்து, மீண்டும் அது ஒரு பெரு நகரத்தில் குதித்தது. ஆடி ஆடி சாக்கடை நீரில் மிதந்து கடலிடம் கலக்கையில், அது தன் வாழ்வின் மிகப் பெரும் அனுபவத்தைத் தன் ஞாபகக் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டது. ஆயிற்று வருடங்கள். பல ஊர்கள், பல அனுபவங்கள், இப்போது அதன் பேரேட்டில்.
ஏனோ மழைக்கு இந்த ஊரைப் பிடித்திருந்தது. காலையில் இருந்து விடாது இந்த ஊரிலேயே பொழிந்துகொண்டு இருந்தது மழை. அந்திக் கருக்கலில் கொஞ்சம் சாந்தமாகி, ஒரு புளியமரத்தின் கிளைகளில் தூறலாக இளைத்து சொட்டிக்கொண்டு இருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பேருந்து அந்த புளியமரத்தடியில் நின்று, ஓரிருவர் இறங்க... பின் கிளம்பிச் சென்றது. அந்த புளிய மரத்தடிதான் அவ்வூரின் பேருந்து நிறுத்தம் என அறிந்துகொண்டது மழை.
கோணிப்பையைக் குடையாக்கி மூன்று பேர் அந்த மரத்தடியில் வந்து நின்றார்கள். இரண்டு ஆண்கள், ஒரு பெண். அந்த கோணிப்பைக் குடையையும் தாண்டி அந்தப் பெண்ணின் கன்னங்கள் நனைந்து இருந்தன. அது தண்ணீரால் அல்ல; கண்ணீரால் என்பது மழைக்கு மட்டும் தெரிந்திருத்தது.
மழை அவர்களை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தது. நடுவில் இருந்தவன் பக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
''ஏ... புள்ள... போற எடத்துல ஒழுங்கா இரு.''
''சரிண்ணே'' என்றது அந்தப் பெண்.
''குடும்பம்னா, ஆயிரம் இருக்கும். அதுக்காக தனியா ஓடி வரலாமா..?''
''உம்...''
''சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்... உங்க அண்ணி என்கூட வாழலியா?''
மறுபடியும் ஒரு ''உம்...''
''என்னமோ... பார்த்து நடந்துக்க'' என்றபடி அருகில் விறைப்பாக இருந்த இளைஞனிடம் திரும்பினான்.
''மாப்ளே...''
விறைத்த இளைஞனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
''ஏ, மாப்ளே... உன்னைத்தாம்பா.''
''ம்... ம்... கேக்குது.''
''அவ அப்படித்தான். எடுத்தேன் கவுத்தேன்னு பேசுவா. அத எல்லாம் மனசுல வெச்சிக்காத'' - என்ற படி கொஞ்சம் ரூபாய் நோட்டுகளை அவன் சட்டைப் பையில் திணித்தான், அந்தப் பெண்ணின் அண்ணன்.
''எதுக்கு இதெல்லாம்'' என்று ஒப்புக்குச் சொன்னாலும், அந்த நோட்டுகளின் கூட்டுத் தொகையைக் கண்களால் எண்ணிக்கொண்டு இருந்தான் விறைத்த இளைஞன்.
தூரத்தில் ஒரு மினி பஸ் வந்து, இவர்களின் கையாட்டலுக்கு நின்று... அந்தப் பெண்ணையும் இளைஞனையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது. வண்டியின் கூடவே ஓடியபடி அந்தப் பெண்ணின் அண்ணன் சொல்லிக்கொண்டு இருந்தான்.
''மாப்ளே... அடிக்காமப் பார்த்துக்கய்யா.''
இப்போது அந்த அண்ணனின் கன்னமும் நனைந்து இருந்தது. அது தண்ணீரால் அல்ல... கண்ணீரால் என்பது மழைக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
அடுத்தொரு நாள் வெயிலும் மழையும் சந்தித்துக்கொண்டன.
வெயில் மழையிடம் சொன்னது, ''அண்ணன் கள் வெயிலின் வார்ப்புகள். கோபத்தின் உக்கிரம் அப்படியே இருக்கிறது.''
மழை குறுக்கிட்டது, ''இல்லை இல்லை... அண்ணன்கள் மழையின் மைந்தர்கள். கண்ணீரின் ஈரத்தைக் கண்டதால் சொல்கிறேன்.''
மழை, வெயில் உரையாடலுக்கு நடுவே நான் நுழைந்தேன்.
''ஒரு அண்ணனாகச் சொல்கிறேன். அண்ணன்களின் கோபம் தன் தோள்களின் மீது ஏற்றிவைக்கப்பட்ட பொறுப்பு உணர்வால் வருவது. அண்ணன்களின் ஈரமும் அதே உணர்வின் இன்னொரு வடிவம்தான்.''
என் பதிலைத் கேட்டு 'ஆமாம்’ என்று ஆமோதித்தபடி மழையும் வெயிலும் இணைந்து வானவில்லாக மாறின!
- அணிலாடும்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan