Published:Updated:

துர்கா

இது உங்களின் கதை

துர்கா

 நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்
முன் பேச்சு...

குழந்தை அஞ்சு இங்கே கீழே விழுந்து அடிபட்டிருக்க, குடும்பமே கதறிக் கொண்டிருக்க, துர்காவுக்கு போன் செய்ய... செல்போன் ஸ்விட்ச்டு ஆஃப்! ஆபீஸ் எண்ணுக்கு அழைக்க, துர்கா லீவு சொல்லியது தெரியவர, ஆனந்தின் உச்சந்தலைக்கு ரத்தம் ஏறுகிறது! துர்கா எங்கே போனாள்?
 
 

துர்கா

- குடும்பத்தாருக்கு மட்டுமல்ல... எல்லாருக்குள்ளும் எழுந்த கேள்வி இது!

##~##

துர்கா மெகா தொடரைத் தாங்கிய 'அவள் விகடன்’ இதழ் வெளியானதுதான் தாமதம்! போட்டிப் போட்டுக் கொண்டு தொலைபேசி அழைப்புகள்... அதுவும் ஆயிரக்கணக்கில்! மூச்சுத் திணறுகிறது எங்களுக்கு. அத்தனையும் மணி மணியான யோசனைகள்!

உங்களில் எத்தனை கதாசிரியர்கள்... எத்தனை இயக்குநர்கள்... அப்பப்பா! பல பேர் பலவிதமான கருத்துக்களை கொட்டிக் குவித்து விட்டீர்கள். சென்னை-சுமித்ரா, மதுரை-ஜெயலட்சுமி, மடிப்பாக்கம்-சுப்புலட்சுமி இவர்கள் மூன்று பேரும், 'துர்காவின் பிறந்த வீட்டில் ஏதோ பிரச்னை...’ என்று சற்றே வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

துர்கா

பெங்களூரு-அம்பிகா, குளித்தலை-மங்கை, பெரம்பூர்-ராஜேஸ்வரி, கோபி-குந்தவி இவர்கள் நான்கு பேரும், துர்கா செல்லும் வழியில் நடந்த ஒரு விபத்துக்குப் பொறுப் பேற்று பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து, துர்கா ரத்தம் கொடுக்கும் வரை கொண்டு போயிருக்கிறார்கள். வழக்கமான சிந்தனை - ஆனால், சொன்ன விதம் அழகு! பாராட்டுக்கள்!

அடையாறு-ஸ்ரீகலா, கோவை-கனகம் பொன்னுசாமி, மதுரை-சாமுண்டீஸ்வரி இந்த மூன்று பேரும் துர்காவின் நாத்தனார் கல்பனாவுக்கும், அவள் கணவனுக்கும் பிரச்னை என எடுத்துக் கொண்டு, துர்காவின் உதவியும், பாசமும் புகுந்த வீட்டுக்கு சமர்ப்பணம் என ஒரு மாறுபட்ட திருப்புமுனையைத் தந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற வாசகிகள் முயன்றால், சுலபமாக எழுத்து உலகில் முன்னுக்கு வந்துவிடலாம். கீப் இட் அப்!

இறுதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த வாசகி சாந்தா, முற்றிலும் வித்தியாசமான ஒரு பாயின்ட்டைப் பிடித்துவிட்டார்! வேற்று மத இளைஞன் ஒருவனை நாத்தனார் சுதா காதலிக்கும் விவரம் அறிந்து, பதறி, அவனை உடனே சந்தித்தே ஆக வேண்டும் என்ற படபடப்புடன் புறப்படும் துர்கா, ஆபீஸுக்கு லீவு சொல்லி, அவனை சந்திக்கப் போகிறாள். அவன் பெயர் அன்வர்! அவனைச் சந்தித்த பிறகு துர்கா எப்படி செயல்படப் போகிறாள்? நல்ல முடிச்சு!

இந்தத் தொடரில் துர்காவின் நாத்தனார் சுதா, ஒரு முக்கிய கதாபாத்திரம். அவருக்குக்கொரு கதையை நான் தீர்மானிக்கவில்லை. சாந்தா தீர்மானித்து விட்டார். அதுவும் எப்படி துர்காவுக்கு இது தெரிந்ததாம்? துர்கா வீட்டை விட்டுப் புறப்படும்போது அவசரத்தில் சுதாவின் செல்போனை மாற்றி எடுத்து வந்துவிட்டாள். அதற்கு அன்வரின் அழைப்பு.

வித்தியாசமாக இருக்கிறதல்லவா தோழிகளே! ஹாட்ஸ் ஆஃப் சாந்தா! இந்த இதழ் 'துர்கா’வின் இயக்குநர் நீங்கள்தான்! நீங்கள் கொடுத்த கருத்தை வைத்துக் கொண்டு சுதாவின் 'ட்ராக்’, இனி நான் (தேவிபாலா) எடுத்துக் கொள்கிறேன்! இனி, அடுத்த எபிஸோட்...

ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு, காற்றடித்து முடித்து, பெட்ரோல் பங்கிலிருந்து வெளிவந்த நிமிடம், செல்போன் அழைத்தது! இது அவளுடைய செல்போனின் ரிங் டோன் அல்ல. வேறுவிதமாக இருந்தது. ஓரமாக வண்டியை நிறுத்தி, கைப்பையிலிருந்த செல்போனை வெளியே எடுத்தாள் துர்கா.

'அடடா! சுதாவோட செல்போன். அவசரத்துல மாத்தி தூக்கிட்டு வந்துட்டேனே. அவளுக்கு வந்த கால் நான் எடுக்கலாமா..?’ - ஒரு நொடி யோசித்தாள். தப்பில்லை. எடுத்து, யாராக இருந்தாலும் உண்மையைச் சொல்லலாமே? 'அன்வர் காலிங்’ என்று திரை மின்ன, பட்டனை அழுத்தினாள். யாரென்று யோசிக்காமல் எதிர்முனை யில் படபடவென பேச்சு புறப்பட்டது!

''சுதா, சீக்கிரம் வர்றேன்னு சொன்னே. அரை மணி நேரமா உனக்காக நான் இங்கே காத்துக்கிட்டிருக்கேன்...'' - துர்காவுக்கு சுருக்கென்றது.

''இந்த விஜயா மஹால் வாசல்ல எவ்வளவு நேரம்தான் நிக்கறது. படக்குனு வா. டிபன் சாப்பிட்டுட்டு கோல்டன் பீச்சுக்குப் போயிடலாம். என்ன பதிலே இல்ல?'' - துர்காவுக்கு ஒரு சில நொடிகளில் அத்தனையும் உள்ளுக்குள்ளே இறங்கிவிட்டது. சுதாவைக் காதலிக்கும் இளைஞர் அன்வர். அவர்களிருவருமே தேர்தல் நாளான அன்று, கோல்டன் பீச் போக திட்டமிட்டு விட்டார்கள். இதை இப்படியே ஆறப் போடக் கூடாது. சில நொடிகள் யோசித்தாள்.

''நீ வர்றியா... இல்லையா?''

''ம்!''

செல்லை அணைத்தவள், 'இன்னிக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங். கட்டாயம் போயாகணும். ஆனா, அதைவிட முக்கியம்... சுதாவோட வாழ்க்கை' என்று மாற்றி மாற்றிக் குழம்பியவள்... கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, போன் செய்து லீவ் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

துர்கா

இங்கே வீடு அமளிதுமளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனந்த், ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்.

''சரிடா! அவ மேலே உள்ள கோபம் இருக்கட்டும். இப்ப ஆட்டோ கொண்டு வா!'' - அப்பா சொல்ல,

''அம்மா, எனக்கு வேலை இருக்கு. நான் போகட்டுமா..?'' - சுதா படபடக்க, ''குழந்தைக்கு அடிபட்ட நேரத்துல, வயசான நாங்க தவிக்கறோம். நீயாவது எங்ககூட இருடி!''

''வேண்டாம்மா! குழந்தையை பெத்தவளுக்கே கவலையோ, அக்கறையோ இல்ல. சுதாகிட்ட நான் எதிர்பார்க்க முடியுமா? நான் சமாளிச்சுக்குவேன். கொடு குழந்தையை!''

''என்னடா ஆனந்த் இப்பிடி பேசறே? சுதா... நீ போகாதே. வந்தவளுக்கு அக்கறை இல்லை. ஆனந்துக்கு நாமதான் துணையா இருக்கணும்!'' - அம்மா ராஜம் ஏற்றிவிட,

''இது துர்காவோட செல்போனாச்சே? விட்டுட்டு போயிட்டாளா?'' - அப்பா கேட்டபடி மேஜையில் இருந்து எடுத்து வர, சுதா அப்போதுதான் நினைவு வந்தவளாக தன் செல்போனைத் தேடினாள். காணவில்லை.

ஆட்டோ பிடித்து அடுத்த இருபது நிமிடங்களில் 24 மணிநேர கிளினிக்குக்கு போக... ட்ரீட்மென்ட்டை ஆரம்பித்த டாக்டர், வெளியே வந்து, ''காயம் பெரிசா இல்லை. ரத்தம் பார்த்து எல்லோரும் பயந்துட்டீங்க. பயத்துலதான் குழந்தைக்கும் மயக்கம். சீக்கிரமே தெளிஞ்சிடும். எதுக்கும் ஒரு எக்ஸ்-ரே எடுத்துடலாம். அவ கண் முழிச்சதும் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்க. யாரு இங்கே குழந்தையோட அம்மா?''

''வேலைக்குப் போயிட்டா. அவளுக்கு பொறுப்பே கிடையாது டாக்டர்...''

''குடும்பப் பிரச்னை எனக்கு அவசியமில்ல. ஜாக்கிரதையா பாத்துக்குங்க...''

அதற்குள் மூத்த சகோதரி கல்பனா, தம்பி ஆனந்துக்கு போன் போட, அவன் விவரம் சொல்ல, அவள் பதறினாள். அம்மா ராஜம் போனை வாங்கி, ''கல்பனா, நானும், அப்பாவும் உன் வீட் டுக்கு வர முடியாது. நீ கிளம்பி வா!''

''சரிம்மா..!''

''அம்மா! அக்கா வர்றாளே... நான் போகட்டுமா?'' - சுதாவுக்கு அன்வரின் கவலை!

''ஏய்... நீயும் போனா, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!''

கையில் தன் செல்போனும் இல்லாமல் சுதா பதறிய நேரம்... பாண்டிபஜார், விஜயா மஹால் வாசலில் வண்டியை நிறுத்தி, துர்கா இறங்கினாள். பூட்டிவிட்டு, விழிகளை சுழலவிட்டாள். பைக்கின் மேல் சாயந்தபடி வெளிர் நீல ஜீன்ஸும், கறுப்பு டி-ஷர்ட்டும் அணிந்து, லேசான ஃபிரெஞ்சு தாடியுடன், நல்ல வெள்ளை நிறத்தில் ஓர் இளைஞன் விழிகளை சுழலவிட... துர்கா நெருங்கி,

''மிஸ்டர் அன்வர்!''

சடக்கென திரும்பியவன்... ''மேடம்! நீங்க யாரு... எப்படி என் பேரை..?''

''சுதாவுக்காக காத்துக்கிட்டிருக்கீங்களா?'' - அவன் முகத்தில் அதிர்ச்சி!

''நான் சுதாவோட அண்ணி... துர்கா! அவ செல்போன் என் கையில தவறுதலா...'' என ஆரம்பித்து சற்று முன் நடந்ததைச் சொல்ல, அன்வர் ஒரு மாதிரி பேச முடியாமல் நின்றான்.

''மிஸ்டர் அன்வர்! இது உங்களுக்கும், எனக்கும் கொஞ்சம்கூட எதிர்பாராத திருப்பம் இல்லையா? இந்த ரோட்டுல நிறைய ஓட்டல்கள் இருக்கு. எதுலயாவது ஒண்ணுல உக்காந்து பேசலாமா..?''

''சரிங்க!''

கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குள் ஒரு உணவகம் இருந்தது. காபி ஆர்டர் செய்தார்கள்.

''ஸாரி மிஸ்டர் அன்வர்... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். சாதி, மத பேதங்களை ஒழிப்போம்னு பேசினாலும், தனிப்பட்ட முறையில அவரவர் குடும்பங்களுக்கு பாரம்பரிய எதிர்பார்ப்புகள் இருக்கில்லையா? எங்க குடும்பத்துல இது பெரிய புயலை உண்டாக்கும். எத்தனை நாளா இந்தக் காதல்?''

''மேடம்... நான் பி.டெக் முடிச்சிட்டு, விப்ரோல வேலை பார்க்கறேன். மூணு வருஷ சர்வீஸ். சம்பளம் பிடித்தம் போக, நாப்பதாயிரம். எங்கப்பா கார்மென்ட் பிஸினஸ்ல இருக்காரு. அம்மா குடும்பத் தலைவி. ரெண்டு சகோதரிகள் - கல்யாணமானவங்க. சொந்த வீடு இருக்கு. சுதாவை நான் கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா விரும்பறேன். அவளைக் கல்யாணம் செய்துகிட்டு கண்ணியமா குடித்தனம் நடத்த என்னால முடியும்!''

''உங்க வீட்ல இந்தக் காதல் தெரியுமா!''

''இல்ல... சொன்னா, முதல்ல ஒரு சலசலப்பு இருக்கும். ஆனா, கன்வின்ஸ் பண்ண என்னால முடியும்!'' - குரலில் திடமும், நம்பிக்கையும்!

''எங்க வீட்ல இந்தக் காதலை ஏத்துக்க மாட்டாங்க அன்வர்! என்ன செய்ய போறீங்க..?''

''சுதாதான் முடிவெடுக்கணும்! உங்களை எல்லாம் அவ தூக்கி எறிஞ்சிட்டு வரணும்னு நான் நினைக்கல. அதுக்காக பின்வாங்கறதுலேயும் உடன்பாடு இல்ல. போராட நான் தயார். நம்ம கையில எதுவும் இல்லை. அல்லா மாலிக்!''

''இறைவனை எஜமானன்னு சொல்றீங்களா..? நீங்க சீரடி சாய் பக்தரா?!''

சிரித்தான் அன்வர். அவனை ஏற இறங்கப் பார்த்தாள் துர்கா. கண்களில் கலங்கமில்லாத சிரிப்பு. ஆண் மகனுக்குள்ள கம்பீரம். ஒளிவு மறைவில்லாத வார்த்தைகள்.

''என்னை அளவெடுக்கறீங்களா அக்கா?''

''அக்காவா?'' என்று குரலில் அதிர்ச்சி காட்டியவள், வேறு எங்கோ பார்வையை சுழலவிட்டாள்.

துர்கா

''சுதாவுக்கு அண்ணினா, எனக்கு அக்காதானே?'' என்று அவளை தன் பக்கம் திருப்பினான் அன்வர்.

''ஓ... உறவுக்குள்ளே புகுந்தாச்சா? அத்தனை நம்பிக்கையா?''

''நியாயமான நல்ல வாழ்க்கைக்கு நம்பிக்கைதானே வேர்? புயல் வீசினாலும், இதுல எங்க ரெண்டு பேருக்கும் பக்கபலமா இருப்பீங்கனு உள்மனசு சொல்லுது. அதான் அக்கானு கூப்பிட்டேன்!''

தேர்ந்தெடுத்த இனிமையான வார்த்தைகளால், துர்காவை அடித்துச் சாய்த்துவிட்டான்.

''சுதாவுக்கு நான் அண்ணிதான். அவளைப் பெத்தவங்க, அக்கா, அண்ணானு ஒரு குடும்பமே இருக்கு. அவங்கள்லாம் முடிவெடுக்கணும். நான் சுதாகிட்ட தனியா பேசணும். அவசரப்பட்டா நெருப்புல கை விட்ட மாதிரி ஆயிடும். முதல் சுற்று பேசி முடிச்சிட்டு, கான்டாக்ட் பண்றேன்!''

''சரிக்கா. இது என் விசிட்டிங் கார்ட். என்னைப் பற்றி நீங்க தரோவா விசாரிக்கலாம்!''

வாசலுக்கு வந்து பைக் உதைத்து, ஒரு முறை கையசைத்துவிட்டு போக்குவரத்தில் அவன் கலக்க, துர்கா முகத்தில் இளம் சிரிப்பு!

''நல்லவனா இருக்கான். சுதாவுக்கு இவன் கிடைச்சா, யோகம்தான்! இது நடக்குமா?’

வெளியே வந்தாள். 'ஆபீஸுக்கும் லீவு சொல்லியாச்சு. மாமா, அத்தை கல்பனா வீட்டுக்குப் போயிருப் பாங்க. அவர், அஞ்சுவை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுவார். வீட்டுக்குப் போனா, உதவியா இருக்கும். மெதுவா இந்த அன்வர் மேட்டரை அவர்கிட்ட உடைக்கலாம்!’ வண்டியை இயக்கினாள்.

''துர்கா!''- குரல் கேட்டுத் திரும்ப, ஆட்டோவிலிருந்து பாலாஜி இறங்கினார். துர்காவின் அக்கா கல்யாணியின் கணவர்.

''என்னம்மா? ஆபீஸுக்கு லீவா?''

''நீங்க என்ன இந்தப் பக்கம்?''

''உங்கக்காவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த ஒரு ஸ்பெஷல் மாத்திரை, தேனாம்பேட்டை அப்போலோ ஹாஸ்பிட்டல்லதான் இருக்குமாம். வாங்க வந்தேன். இப்பத்தான் உனக்கு போன் பண்ணினேன். ஸ்விச்ட்டு ஆஃப்னு வருது!''

''சரி, வீட்டுக்குத்தானே போறீங்க?''

''ஆமாம்மா! வர்றியா? நீ வீட்டுக்கு வந்து ஒரு மாசமாச்சு. உங்கக்கா ஏங்கிப் போயிட்டா.''

யோசித்தாள் துர்கா!

''சரி, ஆட்டோவை அனுப்பிடுங்க. என் வண்டியில போயிடலாம்!''

அவள் வண்டியை இயக்க, பாலாஜி பின்னால் உட்கார, சிக்னலில் வண்டி நிற்க, ஆட்டோவுக்குள் இருந்த துர்காவின் மூத்த நாத்தனார் கல்பனா, இருவரையும் பார்த்தாள். சிக்னல் விடுபட, துர்கா வண்டி வேறு திசையில் பயணிக்க, கல்பனாவுக்குக் குழப்பம்.

இருபது நிமிடங்களில் பாலாஜி வீட்டுக்கு வந்துவிட்டாள் துர்கா. பத்து வயதுச் சிறுவன் ராஜா, 'அக்கா’ என ஓடி வந்து துர்காவின் இடுப்பைக் கட்டிக் கொள்ள, ''என்னை சித்தினு கூப்பிட நீ ஒருத்தன்தான் இருக்கே! நீயும் அக்கானு கூப்பிட்டா எப்படி?''

பாலாஜி அருகில் வந்து, ''நீ எனக்கும் உங்கக்காவுக்கும் மூத்த மகள் இல்லையா? அதான் அக்கானு கூப்பிடறான்!''

கல்யாணி படுத்திருந்தாள். துர்காவை பார்த்ததும் அழுதாள்.

''என்னக்கா... எதுக்கு அழுகை?!''

''உடம்புல ஒரு வியாதி பாக்கியில்ல துர்கா. உங்க அத்தான் வாங்கற சம்பளத்துல பாதிக்கு மேல மருந்துக்கே போகுது. வீட்ல எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு, ஆபீஸுக்கும் அவர் போறார். எதுக்கும் உபயோகமில்லாத நான், ஏன் உயிரோட இருக்கணும்?''

''என்னக்கா பேசுற நீ?''

''நல்லா கேளு துர்கா!''

''இதப்பாருங்க... சுறுசுறுப்பா, நல்ல ஒரு குடும்பத் தலைவியா நிர்வாகம் பண்ண வேண்டியவ இப்படி முடங்கிக்கிடந்தா, வாழற ஆசையே இருக்காதுங்க. அனுபவிச்சாத்தான் தெரியும் அந்தக் கஷ்டம்.''

''ஏன் அத்தான்ட்ட கோவப்படற?''

''அவ கோபப்படல. இயலாமையில விரக்திதானே வெடிக்கும்?''

துர்கா அருகில் வந்து உட்கார்ந்து, அக்காவை தன் மேல் சாய்த்துக் கொண்டு கூந்தலை வருடிக் கொடுத்தாள்.

''நீ தைரியமா இருக்கணும். அத்தான் கஷ்டப்பட மாட்டார். உன் குழந்தை தவிக்க மாட்டான். நான் உள்ளூர்லதானே இருக்கேன். அத்தானுக்கும் தம்பிக்கும் நான் இன்னிக்கு சூப்பரா சமைச்சுப் போடறேன் பாரு..! அத்தான்! கூட மாட உதவி செய்யவாங்க. மெனு சொல் லுங்க. இன்னிக்கு அசத்திடலாம்!''

துவண்டு போயிருந்த வீட்டுக்குள் ஒரு துள்ளல் வந்துவிட்டது! மாலை ஆறு மணி வரை நேரம் போனது தெரியவில்லை.

மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துர்கா புறப்பட்டாள். வீட்டை அடையும்போது மணி ஏழரை!

மூத்தவள் கல்பனா உட்பட, அத்தனை பேரும் வீட்டுக்குள் இருந்தார்கள். உள்ளே தலையில் கட்டுடன் அஞ்சு படுத்திருக்க, அருகில் ஆனந்த்!

''என்னாச்சு குழந்தைக்கு? ஏன் தலையில கட்டு?'' - பதறிய துர்கா அவளை நெருங்க,

''கொஞ்சம் தள்ளி நில்லு. ஏன் இத்தனை சீக்கிரம் வந்துட்டே?''

''என்ன பேசுறீங்க?''

ராஜம் உள்ளே வந்தாள்.

''அக்கா புருஷனோட ஆயிரம் வேலைகள் அவளுக்கு இருக்கும்! சீக்கிரம் வர முடியுமா?''

துர்கா நிமிர்ந்தாள்.

''என்ன பொய் சொல்லலாம்னு யோசனை பண்ணிட்டு வந்தியா? கல்பனா - உன்னை, உங்க அத்தானை ஒரே வண்டியில பார்த்துட்டா. இனி இல்லைனு சொல்ல முடியாது!''

அடுத்து, சுதா ஆவேசமாகத் தொடங்கினாள்... ''நீங்க அந்தப் பக்கம் போனதும் குழந்தைக்கு அடிபட்டாச்சு. உங்க செல்போன் சார்ஜ் இல்லாம வீட்ல. ஆபீஸ்ல கேட்டா, லீவு. ஆடிட்னு பொய் சொல்லிட்டு அக்கா புருஷன்கூட ஊரைச் சுத்தறீங்களா?''

துர்கா, சுதாவை நெருங்கினாள்.

''உன் செல்போனை தவறுதலா நான் எடுத்துட்டுப் போயிட்டேன்!'' - துர்கா சொன்னதைக் கேட்டதுமே, சைலன்ட் மோடில் எங்கோ கிடக்கிறது என்று நினைத்து காலையில் இருந்து வீட்டில் சல்லடை போட்டு தன் மொபைலை தேடிக்கொண்டிருந்த சுதாவுக்கு திக்கென்றிருந்தது!

''அக்கா புருஷன்கூட ஊரை சுத்தறீங்களானு கேட்டியே? பதில் சொல்லிடட்டுமா? அல்லா மாலிக்!''

சுதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. நரம்புகள் புடைத்து, வியர்வை ஊறி, கைகள் நடுங்கின.

''இறைவனே எஜமானன்னு சொல்றேன்! எல்லாருக்கும்தான். என் குழந்தையை அவர் காப்பாத்துவார். அத்தானைப் பார்த்தேன். அக்காவுக்கு முடியலைனு தெரிஞ்சப்போ, அவர் கூடப் போனேன். என்ன தப்பு? தாலியைக் கட்டிட்டு வந்துட்டா, பிறந்த வீடு இல்லைனு அர்த்தமில்ல. ரெண்டுமே ஒரு பொண்ணுக்கு ரெண்டு கண்கள்தான். என்னை யாரும் குற்றவாளிக் கூண்டுல ஏற்ற வேண்டாம். அப்புறமா நான் பேச ஆரம்பிச்சா, இந்த வீடு, கோர்ட் ஆயிடும். ஆகணுமா?''

அவளது அழுத்தமான கேள்விகள் அத்தனை பேரையும் துளைக்க, வீட்டு போன் அலற, துர்கா போய் எடுத்தாள். எதிர்முனை என்ன சொன்னதோ தெரியவில்லை... துர்காவின் முகம் படிப்படியாக மாறிகொண்டே வந்து அதிர்ச்சியில் உறைந்தது!

- தொடருங்கள் தோழிகளே...

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

 

இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் குரலிலேயே அதை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிஸோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

 

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!