மற்ற எபிசோடுகள்
Published:Updated:

''நானும் விகடனும்!'' - 11

நானும் விகடனும்
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் விகடனும் ( விகடன் டீம் )

இந்த வாரம் : நல்லகண்ணும.கா.செந்தில்குமார், படம் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்கம்!

##~##

னந்த விகடன் 86-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. எனக்கும் அதே வயது!

இதில் 75 ஆண்டு காலம், கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக நான் விகடன் வாசகன். நினைக்கும்போதே, பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு நிறைவு என் நெஞ்சில் பொங்குகிறது. பள்ளிக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவன் நான். அப்போது நான் சிக்ஸ்த் ஃபார்ம் படித்துக்கொண்டு இருந்தேன். பள்ளியில், கலை, இலக்கிய அமைப்பு ஒன்றை நடத்தி வந்தோம். அங்கு விகடன் போன்ற பத்திரிகைகளை வாங்கி நாங்கள் படிப்பதோடு, மற்ற தோழர்களுக்கும் விநியோகிப்போம். அப்போது இருந்து விகடன் என் வாழ்க்கையில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டது. கால ஓட்டத்தில் மற்ற பத்திரிகைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட, விகடன் மட்டும் பல புதிய மாற்றங்களுடன் காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்து, இன்னும் மெருகேற்றிக்கொண்டு மிளிர்கிறது!

''நானும் விகடனும்!'' - 11

ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய இயக்கம் வேகமாக வளர்ந்து வந்த காலகட்டம் அது. அப்போது இரண்டாவது உலகப் போரை எதிர்த்து இந்தியாவில் பெரிய இயக்கம் நடந்தது. 'உலகப் போரில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவையும் இணைத்துவிட்டது. இந்த யுத்தத்துக்கு ஆள் உதவியோ, பொருள் உதவியோ செய்யக் கூடாது’ என காங்கிரஸ் களத்தில் இறங்கியது. அப்போது பிரிட்டிஷ் அரசின் இந்தப் போக்கை எதிர்த்து, காந்தி தனி மனித சத்தியாகிரகம் நடத்தக் கேட்டுக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் நான் காங்கிரஸ் தொண்டன்.

அப்போதுதான் தமிழகத்தில் வார, மாத இதழ்கள் பெரிய அளவில் வெளிவரத் தொடங்கின. ஆங்கிலேய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும்போது, விடுதலை வேட்கை, தாய்மொழிப் பற்று, சுதந்திர உணர்வு, இலக்கிய ரசம், மொழியின் பெருமைகள் எல்லாம் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டன. அந்த வகையில் தமிழை, விடுதலை வேட்கையை மக்களிடம் வீரியமாகக் கொண்டு சேர்த்ததில் விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு.

விகடன், வாசகனின் இலக்கியப் பார்வையிலும் மாற்றத்தை நிகழ்த்தியது. தீவிர அரசியல் ஈடுபாடு, சிறைவாசத்தால் விகடன் வாசிப்பில் எனக்குக் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. ஆனால், சிறையில் இருந்து வெளிவந்த 1959 முதல் இன்று வரை ஆனந்த விகடனை வாரம் தவறாமல் படித்து வருகிறேன். என் குடும்பத்திலும் தொடர்ந்து படிக்கிறார்கள்!

1938-களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த பாலதண்டாயுதம், சுப்ரமணிய சர்மா, எஸ்.ராமகிருஷ்ணன், கே.முத்தையா, பா.மாணிக்கம் போன்றோர் பின்னால் கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவானார்கள். இவர்கள் அங்கு படிக்கும்போதே மாணவர் இயக்கம் நடத்தினார்கள். அப்போது மாணவர்களின் உரிமைக்காகவும், பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினர். பி.எஸ்சி., இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்த பாலதண்டா யுதம்தான் போராட்டத்துக்குத் தலைமை. அந்த ஸ்டிரைக் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்தது. 'ரைட் ஹானரபுள்’ சீனிவாச சாஸ்திரிதான் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர். அந்த ஸ்டிரைக் பற்றி விகடன் அப்போது தலையங்கம் எழுதியது. அப்போது பல்கலைக்கழகம் என்ற பெயர் கிடையாது. அதனை 'சர்வகலா சாலை’ என்றுதான் சொல்வார்கள். பாலதண்டா யுதத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'சர்வகலா சாலையா... சர்வ கலாட்டா சாலையா?’ என்ற தலைப்பில் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுகொண்டு எழுதப்பட்டு இருந்தது அந்தத் தலையங்கம். அந்த பாலதண்டாயுதம்தான் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆனார். அவர் 1949-ல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பாலதண்டாயுதத்தின் போக்கைக் கண்டித்து தலையங்கம் எழுதிய அதே விகடன், சிறையில் இருந்து அவர் விடுதலையானதும், 1965-க்குப் பிறகு 'ஆயுள் தண்டனை அனுபவங்கள்’ என்ற தலைப்பில் அவரது சிறை அனுபவத்தைத் தொடராக வெளியிட்டது.

1947-க்குப் பிறகு சுதந்திரம்தான் கிடைத்து விட்டதே என்று சோம்பி இருக்காமல், அதன் பிறகான அரசு விமர்சனங்கள், சுதந்திரத்தை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை விகடன் இலக்கிய உருவத்தில் வெளிப்படுத்தத் தவறவில்லை. இது மக்கள் மத்தியில் வாசிப்பு ஆர்வத்தைப் பெரும் அளவில் அதிகரித்தது.

ஓர் அரசியல்வாதிக்கே உள்ள களப் பணிகள், மக்கள் சார்ந்த பணிகளால் ஒவ்வொரு வாரமும் நினைவு வைத்து தொடர்கதைகளைப் படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், சிறுகதைகளைப் படித்துவிடுவேன். சிறுகதையை ஓர் இலக்கியமாக வளர்த்ததில் விகடனின் பணி குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

60-கள் தொடங்கி விகடனில் பரவலாக நல்ல கதைகளை வாசித்திருக்கிறேன். இன்றும் வாசித்து வருகிறேன். இதில் ஜெயகாந்தனின் அக்னிபிரவேசம், யுகசந்தி, சினிமாவுக்குப் போன சித்தாளு போன்ற சிறுகதைகள் இன்றும் என் நினைவலைகளில் நீந்திக்கொண்டே இருக்கின்றன. ஒரே நேர்க் கோட்டில் பயணிக்கக் கூடிய எங்களுக்குச் சில பல விஷயங்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு உண்டு.விகடனில் வரும் சிறுகதைகளைப் படிக்கும்போது சமூகச் சூழலைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுதான் விகடன் சிறுகதைகளின் சிறப்பு. சமூகத்தில் உள்ள தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பழைய சமூகத்தில் இருந்து மாறக்கூடிய பழக்க வழக்கங்கள், நெருடல்கள், மன உணர்வுகளை அறிந்துகொள்ள இலக்கியச் சுவையோடு வந்த ஜெயகாந்தன் கதைகள் அப்போது எங்களுக்குப் பெரிய அளவில் உதவின.

அவரின் சிறுகதைகளைப் படித்த பிறகு, அவருடனான சந்திப்புகளின்போது அந்தக் கதைகளைப்பற்றி விவாதிப்பதும் உண்டு. 'அக்னிபிரவேசம்’ போன்ற அவரின் முற்போக்குச் சிந்தனை சிறுகதைகளை வெளியிட விகடன் அப்போதும் தயங்கியது இல்லை. அதேபோல் விதவை மறுமணம்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திய அவரின் 'யுகசந்தி’ சிறுகதையும் அந்தக் காலத்தில் மிகத் துணிச்சலான ஒரு முயற்சி!

தனுஷ்கோடி ராமசாமி, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜோதிர்லதா கிரிஜா, சிவசங்கரி என ஏகப்பட்ட எழுத்தாளர்களின் முத்திரைச் சிறுகதைகளைப் படிப்பேன். இன்றும் படித்து வருகிறேன். ஆரம்ப காலத்தைப்போல் கணவன் - மனைவி சண்டை, குடும்பக் குழப்பங்கள் என்று ஒரு சிறிய வட்டத்திலேயே சுற்றி வந்த சிறுகதைக் களம், இன்று பரவிப் படர்ந்து, பல தளங்களையும் தொடுவது மகிழ்ச்சி. இப்போதைய விகடனில் வரும் சிறுகதைத் தேர்வு என்னை ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பொதுவாக, சினிமா தொடர்பான விஷயங்களை நான் அதிகம் படிப்பது இல்லை. ஆனால், இப்போதைய காலகட்டத்தில் என்ன மாதிரி யான திரைப்படங்கள் வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விகடன் சினிமா விமர்சனத்தைத் தவறாமல் படிப்பேன்!

அதேபோல் புதுக்கவிதை வாசிப்பையும், புதுக் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தி வாசகர்களுக்கு அடையாளம் காட்டியதில் விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு. உடனே படிக்கத் தூண்டும் வகையில் கவிதைகளை அலங்கரிக்கும் ஓவியங்களுக்கும் அதில் பங்கு உண்டு. 'சொல்வனம்’ என்று விகடன் தொகுக்கும் வாசகர்களின் கவிதைகள் அனைத்தும் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன.

படிக்க நேரம் இல்லாதவர்கள்கூடப் படிக்கும் வகையில் மிகச் சுருக்கமான வார்த்தைகளில் தரும் உலக நிகழ்வுகள், கூர்மையான தலையங்கம், உலகத் தலைவர்கள்பற்றி அஜயன் பாலா எழுதிய தொடர் என்று விகடனில் எனக்கும் உங்களுக்கும் பிடித்த பகுதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாஞ்சில் நாடனின் 'தீதும் நன்றும்’ தொடர் கட்டுரைகளை வைத்தே பல சமூகப் பிரச்னைகளை முன்னெடுத்தோம். எதையும் விட்டுவிடாமல் பல விஷயங்களைச் சுருக்கித் தருவதுதான் விகடனின் பலம். மருது போன்ற நவீன ஓவியர்களுக்கு விகடனில் தரப்படும் முக்கியத்துவம் பாராட்டுக்கு உரியது.

இதைத் தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் தவறாமல் இடம் பிடிக்கும் ப.திருமாவேலனின் ஈழம் தொடர்பான கட்டுரைகள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

''நானும் விகடனும்!'' - 11

இலங்கைப் போரின்போது தணிக்கை என்ற பெயரில் அமுக்கப்பட்ட பல அவலங்கள், அந்தக் கட்டுரைகளின் மூலம் உலகின் கவனத்துக்கு வந்தன. தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சிக்கு விகடனின் பங்கு முக்கியமானது.

அவ்வபோது சிறிதும் பெரிதுமான நேர்காணல்கள் மூலம் நானும் விகடனில் பங்கு பெற்றிருக்கிறேன். அதில் என் 80-வது ஆண்டு விழா சமயத்தில், 'தமிழ் மண்ணே வணக்கம்’ என்ற தலைப்பில் வந்த நேர்காணல்கள் நினைவில் உள்ளன. ஆனால், அவற்றைவிடவும் நான், விகடன் வாசகன் என்பதில்தான் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. வெகுஜன ரசனையை உள்வாங்கிக்கொண்டு அதை இலக்கியத் தரத்தோடு வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் இலக்கிய இயக்கம் என்றே விகடனைச் சொல்வேன்!''