
வாலிஓவியம் : மணி, பாரதிராஜா
'வாலி! எங்கே - டவாலி?’
##~## |
'' 'வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் மாதிரி ஓர் 'அகலிகை வெண்பா’வோ;
கிருஷ்ணப்பிள்ளை மாதிரி ஒரு 'இரட்சணிய யாத்திரிக’மோ;
இவரால எழுத முடியும்! ஆனா, சினிமாவ்ல நிறைய சம்பாதிக்கறதுனாலே - இதையெல்லாம் ஏன் இவர் பண்ணப்போறாரு!
இவுரு மட்டும் - கவிதை காவியம்னு எழுத பேனா புடிச்சா -
நான்கூட ரெண்டாம் பட்சந்தான்!''
- இப்படிப் பாவேந்தர் பாரதிதாசனார் உரைத்தார், உடுமலை நாராயணக் கவியைப் பற்றி!
'கா! கா! கா!’
'எல்லாம் இன்ப மயம்!’
'ஆடல் காணீரோ!’
'உலகே மாயம்!’ -

ஒன்றா? இரண்டா? ஏராளமான பாடல்கள்; எல்லாம் முத்துப் பரல்கள்; எழுதப் புகுந்தால் நீளும் அவற்றின் நிரல்கள்; சுருங்கச் சொன்னால் - விழுந்து வணங்கத்தக்கவை, அவரது விரல்கள்!
கருத்தாழமிக்க கலைவாணரின் பாட்டுகள் எல்லாம் - உடுமலையாரின் உதடுகள் உமிழ்ந்தவையே!
அத்தகு உடுமலையார் மேல் -
ஒரு முறை, தன் வாய்த் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டார் கலைவாணர்; வெகுளியின் உச்சத்தில் நடந்த விபரீதம் இது!
கோபித்துக்கொண்டு ஊருக்குப் போன உடுமலையாரின் -
கால் கை பிடித்துக் கெஞ்சாத குறையாக அவரை அழைத்து வந்தார் என்.எஸ்.கே!

ஒருவர் வெண்ணெய்; ஒருவர் தொன்னை. எதற்கு எது ஆதாரம் என்று எவர் சொல்வது?
சாந்தி பிலிம்ஸ் திரு.பெரியண்ணன் படம் 'அன்புக் கரங்கள்’;
சிவாஜி, தேவிகா நடித்தது; கே.சங்கர் டைரக்டர்; ஆர்.சுதர்சனம் இசை; அடியேன் பாட்டு!
சுதர்சனம் அவர்கள், அப்போதுதான் ஏவி.எம்மைவிட்டு விலகி வந்து - முதன்முதலாக வெளிப் படம் செய்யலானார்.
சுதர்சனம் ஒரு சுக புருஷர். வாய் நிறையத் தாம்பூலம் தரித்துக்கொண்டு, வர்ண மெட்டை வாசித்துக் காட்டுவார்.
நடு நடுவே -
வாசிப்பதை நிறுத்திவிட்டு, நிறைய 'A’ ஜோக்குகள் சொல்வார்.
நானும் டைரக்டர் சங்கரும், அந்த ஜோக்குகளைக் கேட்டுவிட்டு, 'சீச்சீச்சீ’ என்று சொல்லியவாறே -
அவருடைய அடுத்த ஜோக்குக்காகச் செவிகளைச் சாணை பிடித்து வைத்துக்கொண்டு காத்திருப்போம்!
பாட்டுக் கேட்க சிவாஜி வந்ததும் திடீரென்று ஒரு நிசப்தம் நிலவுவதைப் பார்த்து -
'என்ன - இங்க நான் வர்றத்துக்கு முன்னாடி ஏதோ நடந்திருக்காப்பல இருக்கே?’ என்று என்னை நோண்டுவார்.
நான், சுதர்சனம் அவர்கள் சொன்ன கெட்ட வார்த்தை ஜோக்குகளை - சென்ஸார் பண்ணாமல் சிவாஜியிடம் சொல்வேன்!
சிவாஜி, அவற்றை மனப்பாடம் செய்யாத குறையாகக் கேட்டுவிட்டு -
தான் உள்ளூர ரசித்ததைக் காட்டிக்கொள்ளாமல் -
'கண்றாவி! கண்றாவி! BULLSHIT!’ என்று தமிழ் பாதியும் ஆங்கிலம் பாதியுமாக சலித்துக்கொள்வார்!
இதுபோல் -
சாந்தி பிலிம்ஸில் -
சிவாஜியோடும் சங்கரோடும் - SONG COMPOSING-ல் இருக்கும்போதுதான் -
சுதர்சனம் அவர்களைப் பார்க்க, ஒருநாள் உடுமலை நாராயணக் கவி அங்கு வந்தார்.
சிவாஜிதான் என்னைக் கவிராயருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
எழுந்திருந்து, அவர் பாதம் தொட்டு வணங்கினேன் நான்.
சற்றே அதிர்ச்சியுற்ற உடுமலையார் - 'படகோட்டி பாட்டெல்லாம் கேட்டேன்; அப்பவே யாரிந்த வாலி - பார்க்கணும்னு நாராயணன்கிட்ட சொன்னேன்!’ என்றார்.
அவர் - நாராயணன் என்று குறிப்பிட்டது, வசனகர்த்தா திரு. ஏ.எல்.நாராயணனை!
அந்த நேரத்தில் -
நான், வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு அவரிடம் 'கொழகொழ’ என்று பேசியதை -
உடுமலையார் சற்று கவுரவக் குறைவாக நினைத்தார் போலும்!
உடனே - சற்று எகத்தாளமாக என்னிடம் -
'வெத்தலெ போட்டாதான், பாட்டு வருமோ?’ என்று தோள்பட்டையைத் தட்டிக் கேட்டார்.
'இல்லண்ணே! வெத்தலெ போடாட்டியும் பாட்டு வரும்; ஆனா, வாசனெ வரும்!’ - என்றேன் நான்.
'என்ன வாசனெ?’ - வினவினார் உடுமலை.
'ராத்திரி சாப்டதுதான்... 'கோல்டன் க்ரேப்’புனு - மோசமான சரக்கு; தாம்பரம் மிலிட்டிரி கேம்ப்லதான் கிடைக்குது!’
- இப்படி நான் சொன்னதும், 'தண்ணிப் பழக்கமெல்லாம் உண்டா?’ என்று விழிகளில் வியப்பை அப்பிக்கொண்டு கவிராயர் கேட்டார்.
எனக்குப் பதிலாக, சிவாஜி பேசினார்.
'தண்ணியோட போச்சா? தந்தூரி சிக்கன் வேற இருக்கே!’
உடுமலைக் கவிராயர் குழப்பத்தின் உச்சிக்கே போனார்.
'ஏன்யா, வாலி! நீ ஸ்ரீரங்கத்து அய்யங்கார்னு கேள்விப்பட்டேனே!’ என்றார்.
'சாக்ஷ£த் வடகலை அய்யங்கார்; ரங்கராஜன்தான் சொந்தப் பேரு!’ என்றேன் நான்.

'வாலியானாலும் - டவாலி இருக்குதா இல்லியா? அதையும் கழட்டிட்டுயா?’ - கேட்டார் கவிராயர்.
அவர் - 'டவாலி’ என்று சொன்னது. அய்யங்கார் என்கிற முறையில், நான் அணிய வேண்டிய பூணூலை!
'பூணூலை எப்பவோ கழட்டிட்டேன்! ஏன்னா ஒழுங்கா, சந்தி சாவித்ரி பண்ணாமெ - காயத்ரீ சொல்லாமெ - முதுகு சொறியறத் துக்கு மட்டும், பூணூலைப் போட்டுக்க - என் மனசு இடங்கொடுக்கல்லே!’ என்று ஒரு குட்டிப் பிரசங்கம் நிகழ்த்தினேன் நான்.
அப்போது உடுமலையார் சொன்னார்.
'எனக்குக்கூடத்தான் பூணூல் உண்டு! சுதர்சனத்துக்கும் உண்டு. நாலு ஜாதீல - மூணு ஜாதிக்கு உண்டு.
நாலாவது ஜாதிக்குதான் பூணூல் கிடையாது; அந்த ஜாதீலயும் - கல்யாணம் காட்சீன்னு விசேஷம் வந்தா -
பூணூலை மாட்டிவிட்டுத்தான், அய்யருங்க மணமகனெ மணையில உக்காத்திவெப்பாங்க!’
- என்று ஜாதி ஆசாரங்களை, உடுமலையார் பேசப் புகுந்ததை,
சிவாஜியும் டைரக்டர் சங்கரும் அவ்வளவாக ரசிக்கவில்லை.
'பாட்டைப் பாடுங்க - கேப்போம்!’ என்று சுதர்சனத்திடம் சொல்ல, அவர் பாடினார் -
'காகிதத்தில் கப்பல் செய்து -
கடல் நடுவே ஓடவிட்டேன்!’ என்று.
கவிராயருக்கு வலக்கரமாய் இருந்தவர் திரு.செல்லமுத்து அவர்கள்.
திரு.செல்லமுத்துவை என்னுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளச் சொன்னார் திரு.விசுவநாத அண்ணன்.
கவிராயர் பெருமைகளை செல்லமுத்து சொல்லக் கேட்டிருக்கிறேன்.
செல்லமுத்துவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு; உடுமலையாருக்கு சிகரெட் நாற்றம் ஆகாது.
உடனே ஒரு பாட்டுப் பாடினாராம்.
'சிகரெட்டுப் பிடிக்காதே! நிறுத்து! - என்
செல்வச் சிரஞ்சீவி யேசெல்லமுத்து!
பீ நாத்தம் நாறுதுன் வாயி; - அட!
பினாயில் போட்டதைக் கழுவுடா போயி!’
- சாதாரணப் பாட்டுதான். என்ன இயைபுத் தொடை பாருங்கள்!
கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு COMPOSING; சங்கர் கணேஷ் இசை; கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
ஒரு டாக்ஸியில் உடுமலையார் வந்து இறங்குவதைப் பார்த்த, கே.எஸ்.ஜி. அவர்கள்-
'வாலி! கிழவன் வரான்! ஏதாவது ஏடாகூடமாக் கேள்வி கேப்பான் உன்னெ! உனக்குக் கோவம் வரும்; எதுக்கு ரசாபாசம்? நாளைக்கு வெச்சுக்கலாம், பாட்டு வேலைய...’ என்று என்னிடம் சொல்லி, எழ முயற்சிக்கையில்...
உடுமலை உள்ளே வந்துவிட்டார்.
'என்ன வாலி! எப்படியிருக்கே?’ என்று கேட்டுவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தார். கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்தது நடந்தது.
'வாலி! உங்கிட்டே ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன்!
'நான் ஆணையிட்டால்’னு பாட்டு எழுதினியே - அப்புறம் என்ன 'அது நடந்துவிட்டால்’னு? நாம ஒண்ணு சொன்னா, அது நடக்கும்னு நினைக்கறவன்தானே - ஆணையிடற இடத்துல இருக்க முடியும்? அப்படியிருக்கறச்சே -
'நடந்துவிட்டால்’னு நினைக்கிறவன், என்ன மயித்துக்கு ஆணையிடணும்?’ என்று -
உடுமலையார் என்னை ஒரு பிடி பிடித்தார்; நான் பதில் சொல்லாமல், சிரித்து மழுப்பிவிட்டு -
'அது இருக்கட்டும் அண்ணே! ராமகிருஷ்ணன் என்ன பண்றாரு?’ என்று கேட்டேன்.
திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் உடுமலையாரின் மகன்.
'அவன் எங்கே - என் பேச்சைக் கேக்குறான்?’ என்று சலித்துக்கொண்டார் கவிராயர்.
உடனே நான் சொன்னேன்.
'அண்ணே! நீங்க அப்பா, அவரு, உங்க பிள்ளெ! ஆணையிடற இடத்துல, நீங்க இருக்கீங்க! ஆனா, நீங்க ஆணையிட்டாலும் - உங்க பேச்சை உங்க பிள்ளெ கேக்கல்லியே!
அதனாலதான் - ஆணையிட்டால்கூட, அது நடந்தால்தான் உண்டூன்னு - நான் பாட்டு எழுதினேன்!’
- உடுமலையார் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு -
'ஒத்துக்கறேன்! உன் பாட்டு கரெக்ட்!’ என்று சற்று வாய் திக்கியவாறு சொன்னார்.
கவிராயர் அவர்களுக்கு சற்று திக்குவாய் உண்டு; 'திக்குவாய்’ ஆயினும் - அது தேன்தமிழ்ச் சிந்துகள் 'கக்குவாய்’ அல்லவா!
பகுத்தறிவுப் பாடல்கள் புனைந்த அந்தப் பெருந்தகை - குடும்பத்தில் நேர்ந்த ஒரு நிகழ்வின் காரணமாக - மன அமைதி வேண்டி -
அடிக்கடி பழனி மலை அடிவாரத்தில் போய் உட்காரலானார். உட்கார்ந்தவர் -
ஒருநாள் படுத்தார்; எழவில்லை!
ஆனால் -
அவரால் எழுந்து நின்ற தமிழ் -
எஞ்ஞான்றும் படுக்க வாய்ப்பில்லை!
- சுழலும்...