Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 11

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

தங்கை

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகய

'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று

அன்னை கூறினள் புன்னையது நலனே

அம்ம! நாணுதும், நும்மொடு நகய

விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப

வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்

துறைகெழு கொண்க! நீ நல்கின்,

இறைபடு நீழல் பிறவுமார் உளவே!

- நற்றிணை

அணிலாடும் முன்றில்! - 11

(பாணர்களின் மெல்லிசை முழக்கத்தைப்போல, நீர் விளங்கும் கடல் துறை பொருந்திய நாட்டின் தலைவனே! விளையாடி அயரும் ஆய மகளிரோடு வெண் மணல் இடத்தே புன்னைக் காய்களை அழுத்தியபடியே விளையாடி இருந்தோம். அவற்றுள் ஒன்றை எடுக்க மறந்தும் போனோம். அந்த புன்னைக் காய் முளைவிட்டு வளர்ந்தது. நாங்கள் அதனை நீர் விட்டு வளர்த்தோம். அதனைக் கண்ட எம் அன்னை 'நீ வளர்த்த இம்மரம் உனக்குத் தங்கை போன்றது’ என்று கூறினாள். ஆகையால், இப்புன்னை மரத்தின் நிழலடியில் உன்னோடு நகைத்து விளையாடி இன்புறுவதற்கு, நாங்கள் நாணம் அடைகிறோம்!)

து ஒரு கதை. இரண்டு கிளிகளின் கதை. இரண்டு கிளிகளும் வெவ்வேறு கிளிகள். மனிதக் கண்களுக்கு எல்லாக் கிளிகளும் ஒரே கிளிகளாகத் தோற்றம் அளிப்பது இயல்புதானே. பச்சை மா இலைபோல் மேனியும்; பவழ வாய் இதழும் தவிர்த்து, கிளிகளை என்றாவது நாம் உற்றுப் பார்த்து இருக்கிறோமா? ஒரு கிளிக்கும் இன்னொரு கிளிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது கிளிகளும் மரங்களும் மட்டுமே அறிந்த ரகசியம்.

இரண்டு கிளிகளில் முதல் கிளியின் கதையைச் சொல்கிறேன். இந்தக் கிளி ஓர் அக்காவுக்குத் தங்கையாகப் பிறந்த கிளி. 'அக்கா... அக்கா’ என்று, அக்கா பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். அக்காவுக்கும் அதற்கும் ஐந்து வயது வித்தியாசம். அக்காவைப்போலவே பொட்டு வைத்துக்கொள்ளும். ரெட்டை ஜடை பின்னல் போட்டுக்கொள்ளும். அக்காவுக்குத் தைத்ததைப்போலவே மாம்பழக் கலர் பட்டுப் பாவாடை தனக்கும் வேண்டும் என்று சாப்பிடாமல் அடம்பிடித்து, முதுகில் நான்கு அடி வாங்கிக்கொண்டு, அதைப்போலவே தைத்துக்கொள்ளும்.

அக்கா வளர்ந்து சடங்கான நாளில் தேன், தினை மாவு, நல்லெண்ணெய் கலந்த புட்டு... என அக்காவுக்கு நடந்த கொண்டாட்டங்களில் மயங்கி, தானும் சடங்காகும் நாளை அந்தக் கிளி கனா கண்டுகொண்டு இருக்கும்.

அணிலாடும் முன்றில்! - 11

வளர்ந்த அக்காவின் தாவணியை எல்லோரும் உறங்கும் பின் மதியத்தில் கண்ணாடி முன் அணிந்து பார்க்கும்போது, தான் அக்காவாகி வந்த தங்கையோ என அந்தக் கிளி குழம்புவது உண்டு.

வெள்ளிக் கிழமை மாலைகளில் பெருமாள் கோயிலுக்கு அக்காவுடனும் அவள் தாவணித் தோழிகளுடனும் செல்லும்போது, மீசை முளைத்த பையன்களின் பக்திப் பார்வை அக்கா மீதும் அவள் தோழிகள் மீதும் விழக் காண்கையில், தனக்கும் ஒரு காலம் வரும் என அந்தக் கிளி நினைத்துக்கொள்ளும். அக்காவுக்குத் திருமணமாகி கண்காணா ஊருக்குக் கிளம்பும்போது, அக்கா மீது அந்தக் கிளிக்குக் கோபம் கோபமாக வந்தது. சிறு வயதில் ஒரு கோடை விடுமுறையில் அக்காக் கிளி செய்த சத்தியம் அந்தக் கிளிக்கு அப்போது ஞாபகத்தில் வந்தது.

அன்று அக்காக் கிளி சொன்னது;

'நாம எப்பவும் இப்படிப் பிரியாம இருப்போம்!’

'அது எப்படிக்கா? உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னா..?’

'நாம ரெண்டு பேரும் ஒரே மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணிப்போம்!’

'மெய்யாலுமா?’

'சத்தியமா!’ என்று அக்காக் கிளி தலை மீது கைவைத்தது. இப்போது இந்தப் புது மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. அதற்கடுத்த மூன்று நாட்களும் மனசு சரியில்லாமல் இந்தக் கிளி தத்திக்கொண்டே இருந்தது.

பின்புக்கும் பின்பு, ஒரு சுபமுகூர்த்த நாளில், தங்கைக் கிளிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு, தான் எப்படி எல்லாம் அசடாக இருந்தோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொள்ளும். அக்காக் கிளிக்கு தங்கைக் கிளியாக இருப்பதில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்!

அடுத்து, இரண்டாவது கிளியின் கதையைச் சொல்கிறேன்.

இது ஓர் அண்ணனுக்குத் தங்கையாகப் பிறந்த கிளியின் கதை. அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்கும் கிளிகள் எப்போதும் செல்லமாக வளரும். கிளிகள் ஆயினும் அந்தச் செல்லம் எல்லாம் தோட்டத்துக்குள் சுற்றி வரும் வரைதான் என்பதை அந்தக் கிளிகளின் ஆழ் மனது அறிந்தேவைத்திருக்கிறது.

அணிலாடும் முன்றில்! - 11

அண்ணன் என்றால், அந்தக் கிளிக்கு அப்படிப் பிடிக்கும். அப்பாவைவிட அண்ணனிடம் இந்தக் கிளிக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்தது. அண்ணனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைக்கும். வீடு திரும்பும் அண்ணன் அள்ளி அள்ளிச் சாப்பிடுவதைப் பார்க்கப் பார்க்க... சமைத்த களைப்பு எல்லாம் நீங்கி, அடுத்த வேளை உணவுக்கு என்ன சமைக்கலாம் என யோசிக்கும். முளி தயிர் பிசைந்த காந்தள் மென் விரல்களுக்குக் கிடைத்த பாராட்டல்லவா அது! அண்ணன் சட்டையை நேர்த்தியாகத் துவைத்து மடிக்கும்போது, அண்ணனைப்போலவே ஓர் அன்பான கணவனை அடி மனதில் அது எதிர்பார்க்கிறதோ என எல்லோருக்கும் தோன்றும்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் அந்தக் கிளி தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்தது. அந்தக் காலத்தில் பெண்களைப் படிக்க அனுப்புவதே சிரமமாக இருந்தது.

பெண்களைப் படிக்கவும் அனுப்பி, கூடுதலாகத் தட்டச்சு கற்கவும் அனுப்புவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அந்தக் கிளியின் அண்ணன் தன் அப்பா - அம்மாவிடம் பேசி, இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

அணிலாடும் முன்றில்! - 11

காலை ஏழு முதல் எட்டு வரை தட்டச்சு வகுப்பு. அந்தக் கிளியின் அண்ணன், தன் சைக்கிளின் பின் இருக்கையில் அதை அமரவைத்து... தட்டச்சு நிலையத்துக்குக் கூட்டி வந்துவிடும். தன் தங்கை தட்டச்சு கற்கும் ஒரு மணி நேரமும் எதிரில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும். asdfg; lkjhj  எனத் திரும்பத் திரும்ப அடிக்கச் சொல்கையில், தன் அண்ணன் தனக்காக வெளியே காத்துக்கொண்டு இருக்கும் பதற்றத்தில் தப்பும் தவறுமாக அடிக்கும். பயிற்றுநர் வந்து விரல்களில் ஸ்கேலால் அடிக்கும்போதே சுய நினைவு திரும்பும். வகுப்பு முடிந்து அண்ணனுடன் திரும்பிக்கொண்டு இருக்கையில், அண்ணனைப் போலவே இந்த உலகில் எல்லோரும் மென்மையானவர்களாக இருக்கக் கூடாதா என நினைத்துக்கொள்ளும்.

மழைக் காலங்களில் குளிர் போக்க அண்ணனின் முழுக்கை சட்டையை எடுத்து அணிந்துகொள்ளும். 'என் சட்டையை ஏன்டி எடுத்தே?’ என்று அண்ணன் செல்லமாகத் தலையில் குட்டும்போது, 'வவ்வவ்வே’ என்று பழிப்புக் காட்டி, அந்தச் சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, சோளக் கொல்லை பொம்மைபோலச் சிரிக்கும்.

தன் தோழிகளுடன் கூடத்திலோ; மொட்டை மாடியிலோ படித்துக்கொண்டு இருக்கும்போது... தலையைக் குனிந்தபடி கடந்து செல்லும் அண்ணனைப்போலவே, தோழிகள் சென்றவுடன் நடித்துக்காட்டி கிண்டல் பண்ணும்.

காலம் முழுவதும் இந்த சின்னஞ்சிறு அண்ணனின் தங்கையாகவே இருந்துவிடக் கூடாதா? ஏன் எல்லோரையும் வயதென்னும் தூண்டில் முன்னே இழுத்தபடி நகர்ந்து செல்கிறது என்று அது அடிக்கடி நினைக்கும்.

எல்லாப் பெண் கிளிகளையும்போலவே தானும் ஒருநாள் பிறந்து வளர்ந்த கூட்டை விட்டு விட்டு, வேறேங்கோ உள்ள துண்டு வானத்தைத் தேடிப் பறந்து போகும் நாள் வரும் என்று நினைக்கும்போது, அதற்கு அழுகையாக வரும். அப்படியே பறந்து போய், அண்ணன் மடியில் அமர்ந்துகொள்ளும். அண்ணன் கிளிக்குத் தங்கைக் கிளியாக இருப்பதில்தான் இன்னும் எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்!

வருடங்களுக்கும் பிறகு நான் என் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டு இருந்தேன். ஜன்னல் ஓரமாக இரண்டு தங்கைக் கிளிகளும் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துக் கேட்டன;

'என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாய்?’

'அணிலாடும் முன்றில்’ என்றேன்.

'நிச்சயம் அதில் தங்கைகளைப்பற்றியும் எழுத வேண்டும்’ என்றன.

'அதைத்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்’ என்றேன்.

'அப்படியானால், நீ பல வருடங்களுக்கு முன் எழுதிய 'சில கேள்விகள்’ கவிதையையும் அதில் எழுது’ என்றன.

'வேண்டாம், எழுதியதையே எழுதுகிறேன் என்பார்கள்’ என்றேன்.

'எத்தனை முறை நனைந்தாலும் மழையில் நனைவது சுகம். அந்தக் கவிதையை எழுதித்தான் ஆக வேண்டும்’ என்றன.

இரண்டு தங்கைக் கிளிகளுக்காகவும் விகடன் வாசகர்களுக்காகவும் அந்தக் கவிதை;

சில கேள்விகள்

முதிர்ந்த மழை நாளில் தொலைக்காட்சி பார்ப்பவளை தேநீர் கேட்டதற்காய்  செல்லமாய் கோபிக்கும் சிணுங்கலை ரசித்ததுண்டா நீ?

கூடப் படிக்கும் கிராமத்துத் தோழியிடம் 'என் அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்குமென்று’ ஜாமென்ட்ரி பாக்ஸ் நிறைய நாவல் பழம் வாங்கி வந்து மண் உதிராப் பழத்தை ஊதித் தரும் அன்பில் உணர்ச்சிவசப்பட்டது உண்டா நீ?

என் அண்ணன் என்றவள் சகதோழிகளிடம் அறிமுகப்படுத்துகையில் வெட்கத்தால் மௌனித்து தலை குனிந்திருக்கிறாயா?

தென்னங்கீற்றுக்குள் சடங்கான வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கையிலே உனக்கும் அவளுக்கும் இடையில் தோன்றிய நுண்ணிய இழைகளை அறுத்ததுண்டா நீ?

கிளிப் பச்சை என்றவள் ஆயிரம் முறை கூறியும் பாசி கலரில் வளையல் வாங்கி வந்து வசைபட்டு இருக்கிறாயா?

மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டாய் நண்பா, 'உனக்கென்ன அக்காவா? தங்கையா? கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர, ஒரே பையன்’ என்று.

எனில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும்?

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan