அண்டன் பிரகாஷ்
##~## |
இந்த வாரத்தின் டெக் நிகழ்வுகளைக் கொஞ்சம் அலசலாமா?
முதலில் யாஹூ. இணைய உலகத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளில் கூகுளைச் சமாளிக்க முடியாமல் தள்ளாடுவது தெளிவாகத் தெரிகிறது. நிறுவனர்களில் ஒருவரான ஜெரி யாங், இரண்டு வருடங்களுக்கு முன்னால் CEO பதவியிலிருந்து விலகி, சிலிக்கான் வேலி டெக் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ள கேரல் பார்ட்ஸ் CEO ஆனார். அவரும் பல முயற்சிகளை எடுத்தாலும், யாஹூவின் நிலைமை முன்னேறியதாகத் தெரியவில்லை!

'பட்ட காலிலே படும்!’ என்பதற்கு இந்த வார உதாரணம்... யாஹூ!
என்ன நடந்தது?
தேடல் இயந்திரத் தளங்கள் கூகுள், பிங், யாஹூ இன்ன பிற எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் தேடுவதற்காகக் கொடுக்கும் சொற்பதங்களை (keywords) உங்களது IP விலாசத்துடன் சேர்த்துச் சேமித்து வைத்துக்கொள்ளும். உங்கள் வீட்டு முகவரி போல, இணையத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் கணினி அல்லது மொபைல் சாதனத்தின் முகவரி IP விலாசம். உதாரணத்துக்கு, பாஸ்டனில் இருக்கும் பிரிட்டோ டிரோஸ், கூகுளில் 'இந்தியாவுக்குச் செல்ல மலிவான டிக்கெட்’ என்ற பதங்களுக்கு அவரது வீட்டில் இருக்கும் கணினியில் இருந்து தகவல் தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது கணினிக்கு உரிய IP விலாசத்துடன் மேற்கொண்ட பதங்கள் சேமிக்கப்படும். அவர் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதங்களைத் தேடினால், அத்தனையும் கூகுளின் டேட்டாபேஸில் சேமித்துவைக்கப்படும்.
தேடல் இயந்திர நிறுவனத்துக்கு இந்தத் தகவல் மிகவும் தேவை.
மேற்கண்ட உதாரணத்தையே எடுத்துக்கொண்டால், கூகுளுக்கு பாஸ்டனில் இருக்கும் இந்த நபருக்கு இந்தியாவுடன் இருக்கும் இணைப்பு தெரியவரும். பிரிட்டோவின் மனைவி லிண்டா இசையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், அவர் இசை சம்பந்தமான விவரங்களைத் தேடக் கூடும். அவர்களது மகன் படிப்புக்காகவோ, விளையாட்டுக்காகவோ கூகுளைப் பயன்படுத்தலாம். சேமித்து வைக்கப்படும் இந்த விவரங்களை அலசி ஆராய்ந்து, கூகுளால் மேற்கண்ட குடும்பத்தின் ஒட்டுமொத்தத் தகவல் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற விளம்பரங்களை அவர்களுக்குக் காட்ட முடியும்!

தேடல் இயந்திரங்கள் இவ்வாறு பயனீட்டாளர் கொடுக்கும் தகவல்களைச் சேகரித்துவைக்கின்றன என்ற விவரம் தெரிந்ததும், பிரைவசிக்காகக் குரல் கொடுப்பவர்கள் உரத்த குரலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இது பெரிய வழக்காக மாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தாங்கள் அந்தத் தகவலை ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே சேமித்து வைப்போம் என்று சொல்லி, இந்தக் குரலை மட்டுப்படுத்தியது. யாஹூவோ ஒரு படி மேலே சென்று, நாங்கள் மூன்று மாதமே சேமித்து வைப்போம் என்று கைதட்டல் வாங்கிச் சென்றது.
இது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்!
இந்த வாரம் யாஹூ தங்களது Privacy Policy ஐ அமுக்கமாக மாற்றிவிட்டிருக்கிறது. (உரலி : http://www.ypolicyblog.com/policyblog/2011/04/15/updating-our-log-file-data-retention-policy-to-put-data-to-work-for-consumers/) இதன்படி, பயனீட்டாளர்கள் தகவல்கள் 18 மாதங்கள் வரை சேமிக்கப்படுமாம். ஐடி இண்டஸ்ட்ரியின் பிரைவசி பாதுகாவல் குழுக்களும் தனி நபர்களும் யாஹூவை எதிர்த்துக் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர். யாஹூ இதை மதிக்குமா அல்லது மறுக்குமா என்பது சில வாரங்களில் தெரிய வரும்!
இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள் 'புவி அன்னை நாள்’. (International Mother Earth Day) 1970-வது வருடத்தில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நாள், 2009-ல் ஐக்கிய நாடுகளால் சர்வதேச நாளாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, பூமி வெப்பமயமாதலைப்பற்றிய கருத்துக்களும் விவாதங்களும் மீடியாவில் அதிகம் கவர் செய்யப்படும்.
கடந்த 10 வருடங்களில் இணையம் நம் வாழ்க்கையைப் பெருமளவில் பாதித்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இணையம் பூமிக்கு நண்பனாக இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டால், ஒருவித ஏமாற்றமே ஏற்படுகிறது. அமெரிக்காவில், இன்டெர்நெட்டில் இணைக்கப்பட்டு இருக்கும் பெருங்கணினிகளுக்கு மட்டுமே அந்த நாட்டின் மொத்த மின் செலவில் 1.5 சதவிகிதம் செலவிடப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

Paperless office என்பது சில வருடங்களுக்கு முன்பு வரை பல நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருந்தது. வங்கிகள் தொடங்கி பயனீட்டாளர் சேவை நிறுவனங்கள் வரை பேப்பர் அல்லாத transactions செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த முயற்சிகளில் பெரும்பாலானவை அவர்களுக்கான செலவுகளைக் குறைக்கவே அன்றி, பயனீட்டாளருக்கோ அல்லது பூமிக்கோ பயன்படும் நோக்கம் இல்லாததாகத் தெரிகிறது. உதாரணத்துக்கு, ரயில்வே ஆன்லைன் பதிவு வசதியைச் சொல்லலாம். கால் கடுக்க வரிசையில் நின்ற காலம் போய், வீட்டில் லுங்கி கட்டியபடி கணினியில் நுழைந்து ரயில்வே டிக்கெட் பெற்றுவிடலாம். ஆனால், ரயில்வே துறை அதை பிரின்ட் செய்து கொடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் அதை பிரின்ட் செய்துகொள்ள வேண்டும். சமீபத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்றபோது, பெட்டியில் உடன் இருந்தவர் ஒரு டிக்கெட்டின் நான்கு காப்பிகள் வைத்திருந்தார். கேட்டதற்கு 'ஒண்ணு தொலைஞ்சுபோனா, இன்னொண்ணு இருக்குல்லே!’ என்றார். இது எப்படி இருக்கு?
LOG OFF