
சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்
##~## |
ராஜா ரவிச்சந்திரன் என்றொரு அசோசியேட் இயக்குநர், எங்கள் வாத்தியார் பாலுமகேந்திரா அவர்களிடம் பணிபுரிந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. நான் வாத்தியாரிடம் வந்து சேர்ந்த புதிதில், ராஜா ரவிச் சந்திரனுடன் அவர் பணி புரிந்த படங்கள்பற்றியும் அவரது திரையுலக அனுபவங்கள்பற்றியும் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பேன். சுமார் 40 படங்களில் பணிபுரிந்தவர். சில படங்க ளின் பெயர்களை மறந்திருந்தார். இன்னும் சில படங்களின் பெயர்களை மட்டுமே நினைவில் வைத்திருந்தார். அவர் சொல்லச் சொல்ல, நான் அந்தப் படங்களின் பாடல்கள், நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அத்தனை தகவல்களையும் சொல்வேன். 'ஏன்டா... நீ திருநெல்வேலில வேற எந்த வேலையுமே பாக்கலியா? எனக்கே ஞாபகம் இல்லாத விஷயங்களை எல்லாம் சொல்ற?’ என்று ஆச்சர்யப்பட்டார். நான் மட்டும் அல்ல... திருநெல்வேலிக்காரர்கள் அனைவருமே சினிமா கோட்டிகள் என்பது சென்னைக்காரரான அவருக்குத் தெரிந்துஇருக்க வாய்ப்பு இல்லை!

திருநெல்வேலியில் தடுக்கி விழுந்தால், சினிமா தியேட்டர்கள்தான். அவ்வளவு சிறிய ஊரில் பத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் இருந்தன. வேறு எந்தப் பொழுதுபோக்குக்கும் வழி இல்லாத நெல்லை வாழ் மக்களுக்கும் சினிமா தியேட்டர்களுக்கும் உள்ள உறவு ஆத்மார்த்தமானது. எல்லா தியேட்டர்களையும் தத்தம் சொந்த வீடுபோலவே மனதார நினைத்து வந்தார்கள். நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ள டவுணில் மட்டுமே, ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர், லட்சுமி டாக்கீஸ், பார்வதி, ரத்னா தியேட்டர் என ஐந்து தியேட்டர்கள் இருந்தன. ஒன்றில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், மற்றொன்று என தியேட்டர் விட்டு தியேட்டர் மாறி எப்படியும் படம் பார்க்காமல் யாரும் வீடு திரும்புவது இல்லை.
பாப்புலர் தியேட்டரில் ஆரம்பித்து, லட்சுமி, ராயல், பார்வதி, ரத்னா தியேட்டர்களைத் தாண்டி... சென்ட்ரல், சிவசக்தி, பூர்ணகலா வரை ஒரு ரவுண்ட் சென்று படங்கள் பார்த்து முடிப்பதற்குள், அடுத்த வெள்ளிக் கிழமை வேறு படம் ஏதாவது வெளியாகிவிடும். அப்படி எதுவும் புதுப் படங்கள் வெளியாகவில்லை என்றால், மறுபடியும் ஒரு ரவுண்ட் பார்த்த படங்களையே பார்ப்போம்.

'ஹரிதாஸ்’ ராயல் டாக்கீஸ்ல மூணு தீபாவளில்லாவே ஓடிச்சு. சைடு சொவத்துல ஹரிதாஸ்னு தண்டியா சிமின்ட்ல பதிச்சே வெச்சிருந்தாங்கல்லா’ - சுந்தரம் பிள்ளை பெரியப்பா அடிக்கடி சொல்வார். எனக்கு விவரம் தெரிந்து ராயல் டாக்கீஸில் 'கிழக்கே போகும் ரயில்’ படத்தின் வெற்றி விழாவுக்கு நான்கு ரத வீதிகளிலும் ஒரு ரயிலையே உருட்டிவிட்டார்கள். தண்டவாளமே இல்லாமல் அந்த பொம்மை ரயில் ஓடுவதை ஆச்சர்யம் தாங்காமல் பார்த்தபடி அதன் பின்னாலேயே நானும் குஞ்சுவும் சென்றது, இன்னும் நினைவில் உள்ளது.
அப்போது எல்லாம் தினத்தந்தியில் சினிமா விளம்பரங்கள் முழுப் பக்கத்தில் வரும். உருட்டிப் போடப்பட்ட கொண்டையும், எங்கள் ஊர் சுப்பையா பாண்டியன் மாதிரி பெரிய முரட்டு மீசையும்வைத்த கமல்ஹாசன், பக்கவாட்டில் உதட்டைக் கடித்தபடி 'சகலகலா வல்லவன்’ என்ற எழுத்துக்களைக் கோபமாக முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஏவி.எம் நிறுவன முத்திரையுடன் உள்ள அந்த விளம்பரத்தை தினத்தந்தியின் கடைசிப் பக்கத்தில் பார்த்தவுடனேயே, எங்களுக்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. சாஃப்டர் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, தாலுகா ஆபீஸ் சுவரில் 'சகலகலா வல்லவன்’ போஸ்டர் பெரிதாக ஒட்டி இருந்தார்கள். சின்னச் சின்னக் கட்டங்களில் அம்பிகா, ரவீந்தர், துளசி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன் தலைகள் இருந்தன. குறுந்தாடி வைத்து குல்லா போட்ட கமல்ஹாசனும், ஊதா கலரில் ஜிகினா டிராயர் போட்ட சில்க் ஸ்மிதாவும் தன்னிலை மறந்து ஆடிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு வீட்டுக்குச் செல்லக் கூடுதலாக அரை மணி நேரம் ஆனது.

சின்ன வயதில் திருநெல்வேலியில் பார்த்த 'சகலகலா வல்லவன்’, 'குரு’, 'அன்புக்கு நான் அடிமை’, 'கிராமத்து அத்தியாயம்’, 'கல்லுக்குள் ஈரம்’ போன்ற படங்களின் நினைவுகள் பார்வதி தியேட்டருடனேயேதான் மலர்கின்றன. அதுவும் மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தையும், நானும் குஞ்சுவும் எங்கள் அம்மாக்களுடன் பெண்கள் டிக்கெட்டில்தான் சென்று பார்த்தோம். ஓரளவு பெரிய பையன்கள் ஆன பிறகு, தனியாக படத்துக்குச் செல்ல ஆரம்பித்தோம். அப்போதும் குஞ்சு, பெண்கள் டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்று டிக்கெட் எடுக்க முயன்றான். 'எல அம்பி... என்ன கொளுப்பா? ஒளுங்கா ஆம்பிளைங்க கவுன்ட்டருக்குப் போறியா, இல்ல நான் வெளிய எந்திருச்சு வரட்டுமா?’ என்று சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் சத்தம் போட்டார். 'தப்பா நெனச்சுக்கிடாதிய அண்ணாச்சி. பளக்கதோஷத்துல வந்துட்டேன்’ என்று சமாளித்தான் குஞ்சு.
திருநெல்வேலி ஊரின் பெருமைகளில் ஒன்று எனத் தாராளமாக சென்ட்ரல் தியேட்டரைச் சொல்லலாம். நகரின் மையப் பகுதியில் கப்பல் வடிவத்தில் கட்டப்பட்டு இருக்கும் சென்ட்ரல் தியேட்டருக்கு உள்ளே, ஒப்பனை இல்லாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி போன்ற நடிக, நடிகைகளின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200-வது படமான 'திரிசூலம்’ திரைப்படம், சென்ட்ரல் தியேட்டரில்தான் திரையிடப்பட்டது. 'திரிசூலம்’ திரைப்படத்தின் மூன்று சிவாஜிகளின் கட்-அவுட்களும் சென்ட்ரல் தியேட்டரின் வாசலில் பிரமாண்டமாக வைக்கப்பட்டு இருந்தன. அவ்வளவு உயரத்தில் அதற்கு முன்பு நெல்லையப்பர் கோயிலில் சக்கரங்கள் பொருத்திய பீமசேனன் பொம்மையைத்தான் நாங்கள் பார்த்து இருந்தோம்.
'இதுக்கே இப்பிடிச் சொல்லுதியே, 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்ட்ரல் தியேட்டர்ல ஓடும்போது, மெயின் கேட்டையே தொறக்கலெல்லா...’
'அப்பொறம் எப்பிடிப் படம் பாத்திய?’
'என்னவே கேள்வி... ஏறிக் குதிச்சுத்தான்’ என்பார் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான டெய்லர் மகாலிங்கம்.
அந்தக் காலத்து ஆட்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாலஸ் டி வேல்ஸ் திரைஅரங்கை விசேஷமாகச் சொல்வார்கள். எங்களுக்கு விவரம் தெரிந்து, பாலஸ் டி வேல்ஸில் பழைய திரைப்படங்களை மட்டுமே திரையிட்டார்கள். நிறையத் தூண்கள் உள்ள பாலஸ் டி வேல்ஸில் 'சுவாமி ஸ்ரீ ஐயப்பன்’, 'பாகப் பிரிவினை’, 'தேர்த் திருவிழா’ போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு பாலஸ் டி வேல்ஸ் மூடப்பட்டு, அதன் வாசலில் பண்டாரவிளை நாடார் எலும்பு முறிவுக்கு முட்டைப் பத்து போட ஆரம்பித்துவிட்டார்.
பாலஸ் டி வேல்ஸ் மூடப்பட்டுவிட்டாலும், அதற்கு அருகிலேயே உள்ள பூர்ணகலா தியேட்டர் இன்றைக்கும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. திருநெல்வேலியில் உள்ள திரையரங்குகளிலேயே பூர்ணகலாவில் மட்டும்தான் ஒவ்வொரு காட்சி துவங்கும் முன்னும் திரைச்சீலை ஏறும், இறங்கும். அதுவும் படம் துவங்கும்போது புகழ் பெற்ற 'come september’ இசை ஒலிக்கும். பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருப்பதால், எப்போதுமே பூர்ணகலாவில் கூட்டம் இருக்கும். அப்போது எல்லாம் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, தென்காசி, சங்கரன்கோவில் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் திருநெல்வேலிக்கு சினிமா பார்க்க ஜனங்கள் வருவார்கள். வேறு வேலையாக திருநெல்வேலிக்கு வருபவர்கள், ஒரு சினிமா பார்க்காமல் அவர்களின் ஊருக்கு பஸ் ஏறுவது இல்லை.
'திருநவெலி வரைக்கும் வந்துட்டு சினிமா பாக்காமப் போலாமாவே?’
வயல்வெளிக்கு நடுவே திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் அமைந்திருந்த சிவசக்தி தியேட்டரில் மாலைக் காட்சி பார்ப்பது என்றால், எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். படம் போட்ட சிறிது நேரத்திலேயே கதவுகளைத் திறந்துவிடுவார்கள். சில்லென்று வீசிய காற்று, 'வாழ்வே மாயம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நாங்கள் வடித்த கண்ணீரை உடனே காயவைத்தது. நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த 'சதிலீலாவதி’ படத்தின் முதல் காட்சியை வாத்தியார் பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் கமல்ஹாசன், மறைந்த அனந்து அவர்கள், கிரேஸி மோகன் போன்றோருடன் குளிரூட்டப்பட்ட 'சுப்ரகீத்’ ப்ரிவியூ தியேட்டரில் பார்த்தபோது கிடைக்காத சந்தோஷம், திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் சிலுசிலு காற்று வீச, ஒரு மாலைக் காட்சி பார்த்தபோது கிடைத்தது!
'கமலகாசன் அப்பிடியே கோயமுத்தூர்க்காரனாவே மாறிட்டானே! சும்மா சொல்லக் கூடாது. வலுத்த நடிகன்வே!’ - கோயம்புத்தூரை மேப்பில்கூடப் பார்த்திராத சொக்கலிங்கம் மாமா சர்ட்டிஃபிகேட் வழங்கினார்.
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெப்பக்குளத் தெருவை ஒட்டித்தான் ராயல் டாக்கீஸ் இருந்தது. அங்கு ஓடிக்கொண்டு இருக்கும் படங்களின் பாடல்களும், வசனங்களும்தான் தெப்பக்குளத் தெருவாசிகளுக்குத் தாலாட்டு. ராயல் டாக்கீஸில் படம் பார்ப்பது நெல்லைவாசிகளுக்கு ஏதோ தங்கள் வீட்டுப் பட்டாசலில் படுத்துக்கொண்டு பார்ப்பது மாதிரி, அவ்வளவு சௌகரியமானது. அதுவும் ராயல் டாக்கீஸில் செகண்ட் ஷோ பார்க்கப் போனால், முன் வரிசையில் இருந்து, விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர் கலந்த ஒரு நறுமணம் வீசும். காரணம், சுவாமி சந்நிதியில் உள்ள நெல்லையப்பர் கோயில் பட்டர்கள் கோயில் நடை சாத்தியவுடன், ராயல் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவார்கள். அந்த வகையில் ராயல் டாக்கீஸ் அவர்களின் 'ஹோம் தியேட்டர்’ என்றே சொல்லலாம்!
படப்பிடிப்புக்காகச் சமீபத்தில் திருநெல்வேலிக்குச் சென்று இருந்தபோது, 'மௌன ராகம்’ பார்த்த ராயல் டாக்கீஸ், 'புன்னகை மன்னன்’ பார்த்த லட்சுமி தியேட்டர், 'முதல் மரியாதை’ பார்த்த சிவசக்தி தியேட்டர் போன்றவை இப்போது இல்லை என்றார்கள். இவை எல்லாவற்றையும்விட, எங்கள் கண் முன்னாலேயே கட்டப்பட்ட செல்வம் தியேட்டர்கூட இப்போது இல்லை என்னும் செய்தி மனதுக்குச் சங்கடமாக இருந்தது. 'வருஷம் 16’ வெளியான செல்வம் தியேட்டரைக் கடந்து செல்லும்போது, 'இங்கெதானே அந்தப் பிள்ளைய அநியாயமா சுட்டுக் கொன்னானுவொ?’ என்று குஷ்புவை நினைத்துக் கண்ணீர் சிந்தாமல் ஒரு நாளும் சென்றது இல்லை. தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் குறுக்குத் துறை ரோட்டில் அமைந்த அருணகிரி தியேட்டர் இன்னும் நல்ல முறையில் இயங்கும் செய்தி மட்டுமே ஆறுதல். அங்குதான் 'இதுதாண்டா போலீஸ்’, 'எவனா இருந்தா எனக்கென்ன?’ போன்ற படங்கள் திரையிடப்பட்டன.
திருநெல்வேலியில் எனக்கு ஏதாவது ஒரு தியேட்டரில் ஒரு காட்சியைப் படமாக்க வேண்டி இருந்தது. மணிரத்னம் அவர்களின் 'இதயத்தைத் திருடாதே’ படத்தை நான் பார்த்த பார்வதி தியேட்டரில், அதே 'இதயத்தைத் திருடாதே’ படத்தின் போஸ்டர்களை ஒட்டி, கதாநாயகனும் கதாநாயகியும் படம் பார்ப்பதுபோன்ற காட்சியைப் படம் பிடித்துக்கொண்டு இருந்தேன். படப்பிடிப்பின் மும்முரத்தில் பார்வதி தியேட்டரின் உரிமையாளர் வந்து தியேட்டர் வாசலில் நிற்பதைக் கவனிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து உரிமையாளர் என்னைப் பார்க்க வேண்டும் என்கிறார் என்றார்கள். உடனே, அவர் அருகில் சென்று வணங்கினேன்.
கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னார், 'ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர்க்காரரு நம்ம தியேட்டர மறக்காம வந்து படம் எடுக்கிய. ஒரே ஒரு விண்ணப்பம்...’

'சொல்லுங்க...’
'நம்ம தியேட்டர்லயே ஒங்க படத்தப் போடறதுக்கு நீங்க ஏற்பாடு பண்ணணும். எங்களுக்கும் ரொம்பப் பெருமையா இருக்கும்லா...’
'நிச்சயமா!’
கொடுத்த வாக்கை நான் இன்னும் மறக்கவில்லை. ஆனால், அவரது விருப்பத்தை இனி நானும் அவருமே நிறைவேற்ற வழி இல்லை. காரணம், பார்வதி தியேட்டர் இப்போது... பார்வதி சேஷ மஹால்!
- சுவாசிப்போம்...