என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

கடைசிச் சடலம்

யோ.கர்ணன்ஓவியங்கள் : ஸ்யாம்

##~##

னக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்!

 எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டு, வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர், ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவது, பிளந்த வயிறு, மரண ஓலம், அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிர, வேறு எதுவும் நினைவில் இல்லை. நான் வளர வளர... நாட்டில் யுத்தமும் இனச் சிக்கலும் என்னைவிட வேகமாக வளர்ந்தன.

அவை மரணங்களை வளர்த்தபடியே இருந்தன. மரணத்தின் சுவடுகள் என்னுடன் பயணித்தபடியே இருந்தன!

கடைசிச் சடலம்

இதற்கு இரண்டு வருடங்களின் பின்னொரு நாள், எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த இந்தியன் ஆமி செக் பொயின்றுக்குப் போராளிகள் குண்டெறிந்துவிட்டனர். காலையில் இருந்து மாலை வரை ஊரைச் சல்லடை போட்டும் ஒருவரும் அகப்படவில்லை. இறுதியில் போராளிகளுக்குச் சாப்பாடு கொடுத்தாரென கிளியண்ணையைப் பிடித்து வந்து, கண்ணைக் கட்டி சந்தியில் இருத்தினார்கள். நாங்கள் வீதிக் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தோம். தன்னைச் சுட வேண்டாம் என அவர் கும்பிட்டுக் கதறிக்கொண்டு இருந்தார். ஓர் இந்தியன் அவருக்கு முன் நின்று, சப்பாத்துக் காலினால் நிலத்தில் தட்டிச் சப்தமெழுப்பி, அவரைப் போக்குக் காட்டிக்கொண்டு இருக்க, இன்னொருவன் ரகசியமாகப் பின்னால் வந்து, அவரது உச்சந் தலையில் வெடி வைத்தான். அந்தக் கோரத்தை நான் பார்க்கக் கூடாதென அம்மா நினைத்திருக்க வேண்டும். என் கண்ணைப் பொத்த முயன்றார். நான் அவரது கையை உதறிவிட்டுப் பார்த்தேன். அப்போது நான் மரணத்துள் வாழத் தொடங்கியிருந்தேன். பின்னாட்களில், நான் இயக்கத்தில் இருந்தபோது, மரணத்தின் கணங்களை இலகுவாகக் கடந்துகொண்டு இருந்தேன். தலை பிளந்துகிடந்த கீதன், பாதி உடம்பு மட்டும் எஞ்சியிருந்த ராகவேந்திரன், சில சதைத் துண்டுகளாக மட்டும் எஞ்சியிருந்த நிலாவினி அக்கா என மரணங்களை ஒரு சம்பவமாக மட்டுமே எதிர்கொள்ளப் பழகி இருந்தேன்.  

கடைசிச் சடலம்

முல்லைத் தீவுச் சண்டையின் முதல் நாள் இரவு, ஒரு நண்பனென நினைத்து, ராணுவச் சடலம் ஒன்றுடனும்... இறுதி யுத்த நாளில், வேறு வழி இல்லாமல் பதுங்கு குழிக்குள் ஒரு குழந்தையின் சடலத்துடனும் படுத்திருந்தேன்.

துப்பாக்கியில் இருந்து ஒரு ரவை புறப்படுவதுபோல... பீரங்கியில் இருந்து குண்டு புறப்படுவதுபோல... மரணம் என்பது உடலில் இருந்து உயிர் புறப்படும் ஒன்றாகவே இருந்தது. ஒருநாள், மரணம் தன் வலிமையை எனக்குக் காட்டியது. கொல்லப்படுவதைவிடவும் மரணம் நெருங்கும் கணங்களின் கொடூரத்தை உணரவைத்தது. நான் முழுவது மாக அதனிடம் தோற்றுப்போய் இருந்தேன்.

வன்னியின் பெருங் காடுகளில் ஒன்றான அம்பகாமத்தில் இலங்கைப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றில் ராணுவத்தின் நிலைகளுக்குள் நான் தனியாகத் தவறிவிட்டேன். அன்று நான் திசை காட்டி வைத்திருந்தமையினால், துப்பாக்கிகூட இருக்கவில்லை. அந்தப் பெருங் காட்டில் மரணத்தை அன்று முழுவதும் உணர்ந்தேன். ஆனாலும், அதிர்ஷ்டத்தினால் மட்டுமே பின் மாலைப் பொழுதில் அங்கிருந்து தப்பித்துவிட்டேன்.

மரணங்களை வெறுக்கத் தொடங்கிய சம்பவங்கள் கோவையாக, அதன் பின் தொடர்ச்சியாக இடம்பெற்றன. அவற்றில் இது முதன்மையானதாக இருந்தது. இதன் பின், மிக நெருங்கிய நண்பர்கள் தவிர்த்த வேறு எவரது மரணச் சடங்கிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தேன்.

சில வருடங்களின் முன் இன்னொரு நண்பனுடன் புதுக்குடியிருப்பு போய்க்கொண்டு இருந்தபோது, செஞ்சோலை மீது கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன. சம்பவ இடத்துக்கு உடனே போய்விட்டோம். வெடி மருந்து மணம், ரத்த நெடி, அழுகுரல், சதைத் துண்டங்கள் என அது மரணத்தின் குடியிருப்பாக இருந்தது. அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் எடுத்தன. இதன் பின்பு மரணமே வாழ்க்கையாகிவிட்டது.

கடைசிச் சடலம்

குறிப்பாக, யுத்தத்தின் இறுதி நாட்கள். தினமும் எண்ணில் அடங்காத மரணங்களைக் கடந்துகொண்டு இருந்தேன். சரியாக இரண்டு வருடங்களும் ஒரு நாளும் முன்பு... மாத்தளன் பிரதேசத்தை ராணுவம் முற்றுகையிட்டுவிட்டது. குடிமனைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி, மக்களைத் தமது பக்கம் வரவழைத்துக்கொண்டு இருந்தது. ராணுவத்திடம் போக மனம் இல்லாத நானும் இன்னொரு நண்பனும் பதுங்கு குழி ஒன்றில் இருந்துகொண்டோம். அந்தச் சம்பவத்தில், ஒரு லட்சத்துப் பதினாலாயிரம் மக்கள் தமது பக்கம் வந்ததாக அரசாங்கம் பின்னர் அறிவித்து இருந்தது. மாலையில் செல்லடி குறைந்ததும் பதுங்கு குழியைவிட்டு வெளியில் வந்தோம். ஊரில் ஒரு சனம் இல்லை. நாங்கள் இருவரும்தான்!

சனங்களின் இரைச்சலாலும் அழுகையினாலும் நிறைந்திருந்த மாத்தளனில் முதன்முறையாக யாரும் இல்லாத கடற் காற்றின் ஊளையைக் கேட்டேன். எங்களுக்கு வலது பக்கமாக இருந்த சாலைத் தொடுவாயில் புலிகளின் நிலை இருந்தது. முன்னால் மிக அருகில் ஆமி. இடது பக்க நிலவரம் தெரியவில்லை. பின்னால் கடல். வெளியில் திரிந்து நிலவரத்தைப் பார்க்க வும் முடியாது. செல்லடி, நெஞ்சு மட்டத்தில் சீறியபடி போய்க்கொண்டு இருந்த ரவைகள், ராணுவம் எங்கு நிற்கிறது எனத் தெரியாத நிலை எனப் பல காரணங்கள் நடமாட்டத்தைத் தடுத்தபடி இருந்தது.

மாலையில் செல்லடி குறைந்ததும் அருகில் இருந்த மாத்தளன் ஆஸ்பத்திரிக்குப் போனோம். உறவினர்கள் இல்லாத மிகச் சில காயக்காரர்களும் இரண்டு தாதியர்களும் மட்டும் இருந்தனர். அந்தக் காயக்காரர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு எங்களைப் பார்த்துக் கதறத் தொடங்கினர். ஒரு முதியவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். எம்மிடம் வேறு வழி இருக்கவில்லை. ராணுவம் திரும்பிப் போய்விட்டது, ஒன்றுக்கும் பயப்படத் தேவை இல்லை எனப் பொய் சொல்லிவிட்டு வெளியேறினோம்.

ராணுவம், எங்களுக்கும் புலிகளின் பகுதிக்கும் இடையில் நிற்க வேண்டும் என நாங்கள் யூகிக்க முடிந்தது. காரணம், இடையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. ஆகவே, இரவில் அந்த ஆபத்தான பகுதியைக் கடக்காமல்விடுவதெனவும், மறு நாள் இங்கிருந்து எப்படியாவது தப்பி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய்விட வேண்டும் எனவும் முடிவு செய்து, ஆஸ்பத்திரிக்குப் பின்னால் இருந்த பதுங்கு குழி ஒன்றில் அன்றிரவைக் கழித்தோம்.

மறுநாள் அதிகாலையிலேயே செல்லடி ஆரம்பித்துவிட்டது. கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஆஸ்பத்திரிக்கும் கடற்கரைக்கும் இடையிலான பகுதியில், மனிதர்கள் என்றால் அது நாங்கள் இருவரும்தான் என்பது எமது நினைப்பு. காரணம், ஒரு மனித நடமாட்டமும் சத்தமும் இருக்கவில்லை. அந்த மயான அமைதி பேரச்சம் தருவதாக இருந்தது.

கடைசிச் சடலம்

மாத்தளன் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருந்த காவல் துறை அலுவலகத்துக்கு நான்காவது வீட்டில், ஒரு சிறுவனின் முனகல் கேட்டுக்கொண்டு இருந்தது. நின்று நிதானிக்க அவகாசம் இல்லாத நிலையிலும், அந்த முனகலைக் கைவிட்டுப் போக முடியவில்லை. நான்தான் படலையைத் திறந்து பார்த்தேன். அது ஒரு துயரமான காட்சி. அத்தியாவசியப் பொருட்களுடன் அந்தக் குடும்பம் வீட்டில் இருந்து வேறு இடத்துக்குப் புறப்பட்டு இருக்க வேண்டும். முதலில் தந்தை, பிறகு தாய், பின்னால் மூன்று பெண்களென ஐந்து சடலங்கள் வரிசையாக நடந்து வந்த ஒழுங்கில்கிடக்கின்றன. பத்துப் பன்னிரண்டு வயதான சிறுவன் மட்டும் தலையில் காயத்துடன் தப்பியிருக்கிறான். அவர்கள் முதல் நாளே இறந்திருக்க வேண்டும். அவனைப் பிடித்து நிறுத்துவதே மிகச் சிரமமாக இருந்தது. எங்களைக் கண்டவுடன் பெரிய சத்தமாக அழுதுகொண்டு சடலங்களைச் சுற்றி ஓடத் தொடங்கினான். அப்போது இருந்த சாத்தியமான ஒரேயரு வழியை அவனுக்குச் சொன்னேன். 'நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு, நீரேரியைக் கடந்து போ’ எனச் சொல்லிவிட்டு, கடற்கரைக்குப் போய் பாதமளவு தண்ணீரில் இறங்கி, முள்ளிவாய்க்காலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கொஞ்ச தூரம் போக... இன்னும் கொஞ்சம் பேரைக் கண்டோம். இப்போதுதான் ஒரு நம்பிக்கை வருகிறது... எப்படியாவது தப்பிவிடலாமென!

ஓடத் தொடங்கினோம். 'என்னைப் பார்க்காமல் ஓடு’ என ஏற்கெனவே நண்பனுக்குச் சொல்லிவிட்டேன். இடைவெளி அதிகரித்து அதிகரித்து, இருவருக்கும் இடையில் சுமார் 100 மீற்றர் இடைவெளி ஆகிவிட்டது. பொக்கணை நெருங்குகையில், ஆமியைக் கண்டேன். வலது பக்க வீதியில் இருந்து கடற்கரையை நோக்கிச் சுட்டபடி வருகிறார்கள். அநேகமாக எனது நண்பனுக்கு நேராக அவர்கள் வந்துகொண்டு இருக்க வேண்டும். அவர்கள் கடற்கரையை அடையும் முன்பு நாங்கள் கடக்க வேண்டும். அவர்கள் சுட்டுக்கொண்டு இருந்தாலும், குனிந்தபடி ஓடியாவது தப்பிவிடலாமென நம்பினேன். நண்பன் குனிந்தபடி ஓடிக் கடந்துவிடுகிறான். சிப்பாய்கள் இருவர் வேகமாக வருகிறார்கள். நான் முழுச் சக்தியையும் திரட்டி ஓடுகிறேன். ஆனால் முடியவில்லை. அவர்கள் வென்றுவிட்டனர்!

துப்பாக்கியைத் தோளில் வைத்து இலக்கு பார்த்தபடி எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு சிப்பாய் புகுந்துவிட்டான். என்னைக் குறி பார்த்தபடி தமது பிரதேசத்துக்குப் போகுமாறு சைகை செய்தான். அவன் சுடுவானோ என்ற ஐயம், இனி ராணுவம் என்ன செய்யும் என்ற சந்தேகம்... என விவரிக்க முடியாத உணர்வுடன் மீண்டும் ஊர்மனையை நோக்கி தனியாக நடக்கத் தொடங்கினேன்.

ஊர்மனைக்குள் எஞ்சியிருந்தவர்களை ஒன்றாக்கி, நீரேரியை நோக்கி நடக்கச் சொன்னார்கள். வழியெல்லாம் சடலங்கள். அவற்றை என்னால் கணக்கிட முடியவில்லை. இதுதான் கடைசிச் சடலமாக இருக்கலாம் என நினைத்துக்கொள்வேன். ஆனால், பக்கத்தில் இன்னும் சடலங்கள் இருக்கும். பிரதான வீதியில் ஏற சில போராளிகளின் சடலங்கள் இருந்தன. தெரிந்த முகங்கள் இருந்தும் வடிவாகப் பார்க்க முடியவில்லை. ராணுவம் எங்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. மாத்தளன் சந்தி கடந்து நீரேரிக்கரைக்கு வர... அங்கே ஒரு சடலம் இருந்தது. அவ்வளவு பதற்றத்துக்குள்ளும் இதுதான் நான் காணும் கடைசிச் சடலம் என்பது புரிந்தது. சினிமாவில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற தோற்றம் உடையவர். தலையில் சக்தி வாய்ந்த ரவை பாய்ந்திருக்க வேண்டும். தலை பிளந்திருந்தது. பக்கத்தில் வந்தவரிடம் 'இதுதான் நாங்கள் காணும் கடைசிச் சடலம்’ என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நீரேரிக்கரையில் சில நிமிடங்கள் தாமதித்ததாக நினைவு.

நீரேரியைக் கடப்பதென்பது தோல்வியின் அடையாளமாக இருந்தது. கைவிடப்பட்ட உணர்வே என்னுள் எஞ்சியிருந்தது. 35 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் இருந்தும்... ஆறரைக் கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் இருந்தும்... 400 மில்லியனுக்கும் அதிகமாக இந்த உலகத்தில் மனிதர்கள் இருந்தும்... மிகச் சரியாக இன்றிலிருந்து, இரண்டு வருடங்களின் முன்பு... ஓர் அநாதைபோல உணர்ந்தேன்!