என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி-பதில்

கருவின் 'மதர்' போர்டு!

##~##

பொன்விழி, அன்னூர்.

 முப்பத்து முக்கோடி தேவர்களின் பெயர்கள் மதனுக்குத் தெரியுமா?

அதாவது 90 கோடி தேவர்கள்! யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம், விநாடிக்கு ஒரு பெயர் என்று வைத்துக் கொண்டாலும், 90 கோடியை எண்ணி முடிக்க 30 வருடங்கள் பிடிக்கும். பரவாயில்லை, நான் ஒவ்வொருவராகச் சொல்லத் தயார். ஏதாவது பெயரில் தப்பு இருந்தால், நீங்கள் கண்டுபிடித்துத் திருத்தத் தயாரா?!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நக்சலைட், மாவோயிஸ்ட் இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இடம்தான்! ஒன்று - வங்காளத்தில் உள்ள நக்சல்பாரி என்கிற கிராமத்தில் நிலச்சுவான்தார்களுக்கு எதிராகக் கிளம்பிய புரட்சி. மற்றது சீனாவில், மாசேதுங் துவக்கிய சித்தாந்தம். அடிப்படையில் இரண்டுமே கம்யூனிசக் கொள்கைதான்!

சிபி.சிவா, புளியரை.

  மனிதனின் உடல் இயக்கத்துக்கு மூளைதான் முழுக் காரணம் என்றால், ஒரு பெண் கருவுற்று இருக்கும்போது, குழந்தையை இயக்குவது, தாயின் மூளையா... அந்தக் குழந்தையின் மூளையா?

நல்ல கேள்வி! தனித் தனி மூளைதான். இதயம் உட்பட, உடலை முழுவதும் இயக்குவது மூளையே. கருவில் இருக்கும்போது அது தனிப்பட்ட கம்ப்யூட்டர் மாதிரி இயற்கையிலேயே (Nature) தயாராகிவிடுகிறது. வெளியே வந்ததும் அதன் மற்ற 'சாஃப்ட்வேர்’கள் 'ஆன்’ செய்யப் படுகின்றன (Nurture). தலைக்குள் இந்த 'கம்ப் யூட்டரோடு’ உருவாகி இருக்கும் உடலை உயிரோடு வைத்திருப்பதுதான் தாய். தாயின் உடல் என்று சொல்வது இன்னும் சரி!

  மூளையைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள சுஜாதாவின் 'தலைமைச் செயலகம்’ படியுங்கள்!

மா.வி.கோவிந்தராசன், ஆரணி.

பெரியவர்கள் பழைய உதாரணங்களையே சொல்லிச் சொல்லிப் போர் அடிக்கிறார்களே... தற்போது யாருமே நல்ல கருத்துக்களைச் சொல்வது இல்லையா?

போரடிப்பதற்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம்? History repeats itself, old is gold என்கிற பழமொழிகளை நீங்கள் கேட்டது இல்லையா? எனக்கு முதியவர்களிடம் அமர்ந்து பேசுவதில் மிகுந்த விருப்பம் உண்டு. என்ன? அவர்கள் போரடிக்காத மாதிரி கேள்விகள் கேட்க உங்களுக்குத் தெரிய வேண்டும்!

   எனவே, நீங்கள் பெரியவராகும்போது எச்சரிக்கையாக இருந்து, இளைஞர்களிடம் போரடிக்காமல் பேசுவீராக!

மா.வி.கோவிந்தராசன், ஆரணி.

கார்ட்டூனிஸ்ட்டான உங்களுக்கு ஓர் சிலை வைத்தால் என்ன?

சிலை வைக்கும் அளவுக்குத் 'தகுதி’ பெற்றவர்களைக் கிண்டல் செய்வதுதான் கார்ட்டூனிஸ்ட் வேலை! அதனாலேயோ என்னவோ, எனக்குத் தெரிந்த வரையில், உலகில் எங்குமே கார்ட்டூனிஸ்ட்டுக்கு சிலை கிடையாது. வால்ட் டிஸ்னிக்கு மட்டும் சிலை உண்டு. அதை, 'டிஸ்னி லேண்ட்’ உள்ளேதான் பார்க்கலாம் (நான் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேன்). மற்றபடி, 'சிலை வைக்காத ரிக்கார்டு’ அப்படியே தொடரட்டும்!

அனுராதா ரமேஷ், பாண்டிச்சேரி-4.

ஒருவரின் முக ஜாடையைக்கொண்டே அவர்களின் எண்ணங்களை யூகித்து அறியும் சக்தி ஆண்களுக்கு அதிகமா... பெண்களுக்கு அதிகமா?

பெண்களுக்குத்தான் அதிகம். முக ஜாடை வேறு. முக பாவங்கள் வேறு. முதலாவதை வைத்து குணநலன்களைச் சொல்வதின் பெயர் The art of Physiognomy. இந்தக் கலையை முதன்முதலில் ஆராய்ந்து எழுதியவர்கள் பண்டைய சீனர்கள். ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போக்ரடீஸ் போன்ற பலர் இதுபற்றி விரிவாக எழுதி இருக்கிறார்கள். அமுக்கமானவர்களுக்கு (Introverts) இந்தத் திறமை அதிகம் இருக்கும். அவர்கள்தான் எதிராளியைக் கூர்ந்து கவனிக்கிறவர்கள். பெண்களுக்கு இந்த எச்சரிக்கை உணர்வும், கவனமும் ஆண்களைவிட அதிகம். பெண்கள் எப்போதுமே எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசுவார்கள். (வேறு எங்கெங்கோ பார்த்துக்கொண்டு பேசும் பெண்களை நீங்கள் பார்த்துஇருக்கிறீர்களா?!) ஆகவே, அதிகமாக மற்றவரை எடை போடப் பெண்களால் முடிகிறது. ஆனால், சில சமயம் 'எடை போட்டுவிட்டு’ முழுசாக நம்பிவிடுவார்கள். அந்த ஒரே ஒரு 'வீக்னெஸ்’தான் பிரச்னை!

ச.ராஜசேகர், செய்யாறு.

பஸ், ரயில் கூரை மீது அமர்ந்து பயணம் செய்வதைப்போல, விமானத்தின் கூரை மீது பயணம் செய்ய முடியுமா?

ஆக்ஷன் சினிமா படங்களில்ஹீரோக்கள் அதைச் செய்து காட்டுகிறார்களே! நீங்கள் அப்படிச் செய்ய நினைத்தால், விமானம் டேக் ஆஃப் ஆன சில விநாடி களில், நிலத்தில் உள்ள ஏதாவது வீட்டுக் கூரை மீது குப்புறக் கிடப்பீர்கள்!

சி.என்.ஸ்ரீனிவாசன், சென்னை-40.

பாட்டு இல்லாத ஆட்டம் மட்டும் பரிமளிக்குமா? வெறும் இசைக்கு மட்டும் நடனம் ஆட முடியுமா?

பாம்பு, இசைக்கு நடனம் ஆடும் என்று நான் சொன்னால் - அது தப்பு! பாம்புக்கு செவிப் புலன் கிடையாது. பார்வை கூர்மை. மகுடி அசைய, அதுவும் தலையசைத்து ஆடுகிறது. மனிதனைப் பொறுத்த வரை மொழி வந்த பிறகுதான், பாடல். ஆனால், கால்கள் முளைத்தவுடனேயே ஆடல் வந்துவிட்டது. ஆடலுக்கு ரிதம், தாளம் போதும். பாலே நடனங்கள், ஸ்பானிஷ்(ஜிப்ஸி) நடனங்கள் போலப் பல வகை நடனங்களுக்குப் பாடல் கிடையாது. டப்பாங்குத்துக்கும் பாடல் கிடையாது. தேர்தல் முடிவுகள் வெளி வரும்போது, நிறைய டப்பாங்குத்துகளை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்!

விஜயலட்சுமி முருகன், சென்னை-74.

உட்கார்ந்தபடியே தூங்குவதிலும் ஒரு சுகம் இருக்கு இல்லையா?

உங்களுக்குச் சுகம். பக்கத்தில் நான் (முழித் துக்கொண்டு) உட்கார்ந்து இருந்தால் எனக்குச் சுகம் கிடையாது!

கண்.சிவகுமார், திருமருகல்.

சைட் அடிப்பதை சட்டப்பூர்வமான குற்றமாக அறிவித்தால்?

எது சைட் என்று எப்படி நிர்ணயிப்பது? கேஸ் சுப்ரீம் கோர்ட் வரைகூடப் போகும். 'மைக்ரோ விநாடி சைட்’ என்றுகூட உண்டு! 'பார்வையாலேயே பலாத்காரம்’ செய்பவர்களும் உண்டு. கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு, சைட் அடித்தால்? மொத்தத்தில் நடக்காத விஷயத்தைப்பற்றி நீங்கள் கேட்க, நான் வேறு மெனக்கெட்டுப் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் பாருங்கள். நான் எதில் சேர்த்தி?!