என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

'பாணா ஃப்ரெண்ட் ராஜ்... மாட்டு வண்டி ஸ்டேஜ்!'

##~##

''இந்த சிவமணியை உலகம் அறிந்த முகம் ஆக்கியதில் மூலக்கொத்தளம் மக்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. காரணம், டிரம்ஸ் பயிற்சிக்கு ஒருநாள் பிரேக் விட்டால்கூட, 'என்னாச்சு மச்சான்... உடம்பு நோவா’ன்னு வீடு தேடி வந்து விசாரிக்கிற அளவுக்கு நான் ஏரியா செல்லம். என் டிரம்ஸ் பீட்டை அவங்க தாலாட்டா நினைச்சாங்களே ஒழிய, ஒருநாள்கூடத் தொந்தரவா நினைச்சது இல்லை. மொத்தத்தில், மூலக்கொத்தளம் மக்களின் எதிர்பார்ப்பு இல்லாத அன்புதான் என் வளர்ச்சிக்கான எரி பொருள்!'' ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு தோய்த்துப் பேசு கிறார் 'டிரம்ஸ்’ சிவமணி.

என் ஊர்!

 ''சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டித் தொடங்கும் வால்டாக்ஸ் சாலை, நான்கு சாலைகள் சந்திப்பில் முடியும். அந்தச் சந்திப்புதான் மூலக்கொத்தளம். அதாவது, பேசின் ப்ரிட்ஜ். பிராட்வேயில் உள்ள 'அவர் லேடீஸ் நர்சரி பள்ளி’, முத்தியால்பேட்டை தம்புச் செட்டித் தெருவில் உள்ள ராஜகோபால் செட்டி ஹைஸ்கூல், பெரியமேடு வேப்பேரியில் உள்ள செயின்ட் பால்ஸ் ஹைஸ்கூல்னு மொத்தம் மூணு பள்ளிகளில் மாறி மாறிப் படித்தும் பத்தாவது தாண்டலை நான். பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போதுதான் இசை மீது எனக்கு ஆர்வம் உண்டானது. அப்பா எஸ்.எம்.ஆனந்தன் சினிமாத் துறையினர் அறிந்த டிரம்மர். இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் டீம் மெம்பர். குழந்தைப் பருவத்தில் இருந்தே கேட்டு வந்த அவரின் டிரம்ஸ் பீட்தான் என் பேருக்கு முன்னாடி 'டிரம்ஸ்’ அடைமொழி சேரக்

காரணம். தவிர, எங்கள் ஏரியா விலேயே கன்னியப்பன், குஷால் தாஸ்னு ஏகப்பட்ட டிரம்மர்கள்  இருந்தாங்க. இதில் குஷால்தாஸ் பயங்கர ஷோ மேன். டிரம்ஸை சீரியல் லைட்டால அலங்கரிச்சு ஆச்சர்யப்படுத்துவார்.

நானும் குஷால் தாஸும் சேர்ந்து சென்னையில் வாசிக்காத இடங்களே இல்லைன்னு சொல்லலாம். சின்னச் சின்ன கோயில் கச்சேரிகள், கல்யாணம், காது குத்துன்னு எப்பவும் பரபரப்பா சென்னையைச் சுத்திட்டே இருப்போம்.  

திடீர்னு 'இதுதான் இன்னிக்கு உங்க ஸ்டேஜ்’னு சொல்லி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏத்தி விட்ருவாங்க. முகம் சுழிக்காம அதிலும் ஏறி நின்னு கவனம் ஈர்ப்போம். அப்போ அப்பாவுக்கு ஒரு சின்ன விபத்து. பிறகு, கே.வி.மகாதேவன் சார் டீமில் சேர்ந்தேன். 1979-ல் பத்தாம் வகுப்பு ஃபைனல் எக்ஸாம். ஆனால், அன்று நான் ஏ.எம்.ராஜா, ஜிக்கி கச்சேரிக்காக சிங்கப்பூரில் இருந்தேன். அதில் இருந்துதான் என் படிப்புக்கு ஃபுல்ஸ்டாப் விழுந்தது!

என் ஊர்!

என் ஏரியாவில் ஒரு ஆயா இருந்தாங்க. நான் தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது எல்லாம் எதிர்ப்படுவாங்க. என்னைப் பார்த்துச் சிரிப்பாங்க. நானும், 'வணக்கம் பாட்டி’ன்னு சொல்வேன். உடனே, ஏதாவது ஒரு பழத்தை எனக்கு ஊட்டி விடுவாங்க. அவங்க யாரு, எங்கே இருந்து வர்றாங்க, எனக்கு உறவா... எதுவும் தெரியாது! ஆனா,  அந்த ஆயாவின் அன்பை மட்டும் நான் உணர்ந்துட்டே இருந்தேன். இப்போ, சமீபத்தில் அவங்க இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் அன்னிக்கு முழுக்க வேலையே ஓடலை. கலங்கிப்போனேன்.  

என் ஊர்!

எனக்குக் காத்தாடின்னா ரொம்ப இஷ்டம். பெரிய பெரிய பாணா காத்தாடிகளை ஃப்ரெண்ட்ஸ் வாங்கிக் கொடுப்பாங்க. அப்போது பாலன்கிறவர் ஏரியாவில் காத்தாடி கிங். அவரோட காத்தாடியை நானும் என் ஃப்ரெண்ட் ராஜாவும் வெட்டி விட்டுட்டோம். அது அப்போ பெரிய ரவுசு ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் மனசுக்குள் ஓர் இனம் புரியாத உற்சாகம் தொத்திக்கும். அதேபோல் வேணு கடை வாடகை சைக்கிள்களில் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டது, மட்டன்  கடை பாய், அப்புனி கடை, கவிதா, கோபால்நாயர் ஹோட்டல்கள், வாக்கிங் தோழன் வைரம்னு இப்பவும் ஏரியா பக்கம் போனா, பார்க்குறதுக்கு எனக்கு ஏகப்பட்ட நண்பர்களும் இடங்களும் இருக்கு.

'சொஸைட்டிக்காக வாழாதே. ஆத்மார்த்தமா உனக்குப் பிடிச்சதைச் செய். இறைவன் உனக்கு அருள் புரிவார்’னு அடிக்கடி சொல்வார் இளையராஜா சார். 'எவ்வளவு சம்பளம் வேணுமோ சொல்லு... தர்றோம். ஆனா, எங்களுக்கு மட்டும்தான் வாசிக்கணும்’னு பணத்தைக் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்காங்க பலர். ஆனால், 'இசை என்பது கடவுளின் பிரசாதம். அதைப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரணும். மறைத்து வைக்கக் கூடாது’ என்ற எண்ணத்தை எனக்கு '32, பிபி அம்மன் கோயில் தெரு, பேசின் பிரிட்ஜ், சென்னை- 21-ல் வாழ்ந்த நாட்கள் கத்துக் கொடுத்திருக்கு. இதே மனநிலைதான் என் ஆயுள் முழுக்க என்னைக் கொண்டுசெலுத்தும்!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜெ.தான்யராஜு

என் ஊர்!