என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

அண்ணாவுக்கு பிடித்த மன்னார் கடை மட்டன்!

காஞ்சி நெகிழ்ச்சி

##~##

காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதியில் உள்ள 'மன்னார் அசைவ உணவகம்’ ஏரியாவில் ரொம்பவே பிரபலம். அந்த உணவகத்தின் உணவுச் சுவை ஒரு பக்கம் இருக்க, உணவகத்தின் சுவரை அலங்கரிக்கும் அரிய புகைப்படங்கள் கிளாஸிக் ரசனை யாக மனதில் பதிகிறது!       திராவிட இயக்கத் தளபதியான அறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்கள் அவை. அசைவ உணவை மெய்ம்மறந்து ருசிக்கும் அண்ணா, பிரசாரக் கூட்டம் ஒன்றில் அண்ணா நாற்காலியில் அமர்ந்து இருக்க, அவருக்குக் கீழே அமர்ந்து இருக்கும் ராஜாஜி, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டபோது ஓய்வு நேரத்தில் அண்ணா வரைந்த ஓவியம் என ஒவ்வொன் றும் பொக்கிஷ கலெக்ஷன்!  

அண்ணாவுக்கு பிடித்த மன்னார் கடை மட்டன்!

உணவக உரிமையாளர் சந்தானத்திடம் பேசினோம். ''60 வருஷங்களுக்கு முன்னாடி என் அப்பா ராஜமன்னார் இந்த ஹோட்டலைத் தொடங்கினார். ஒரு நண்பர் மூலம் அண்ணாவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அண்ணா எங்கள் ஹோட்டல் பிரியாணியை விரும்பிச் சாப்பிடுவார். சென்னைக்குப் போன பிறகும்கூட தொடர்பிலேயே இருந்தார் அண்ணா. காஞ்சி புரத்தைச் சுற்றி பொதுக் கூட்டங்கள் நடந்தால், அன்றைய இரவு எங்கள் ஹோட்டலில்தான் அண்ணா சாப்பிடுவார். அவருடன் தொண்டர்கள் பலரும் வருவார்கள். அவர்களிடம் என் தந்தை வற்புறுத்திக் காசு கேட்க மாட்டார். அதனாலேயே சில சமயங்களில் அண்ணா, 'என்னய்யா, உன் ஹோட்டலால் தான் இன்னிக்கு மீட்டிங்ல கூட்டம் ஜாஸ்தியோ’ன்னு கிண்டல் அடிப்பாராம்.

அண்ணாவுக்கு பிடித்த மன்னார் கடை மட்டன்!

வாலாஜாபாத் பொதுக் கூட்டம் முடிந்து வீடு திரும்பும் வழியில், எங்கள் ஹோட்டலில் அண்ணா உணவு அருந்திய போது எடுத்த படம் இது. அப்போது இரவு 10.30 மணி. அண்ணாவுக்கு வலது பக்கம் உள்ளவர் சி.வி.ராஜகோபால். இடது பக்கம் உள்ளது ஏ.கே.தங்கவேல் முதலியார். பின்னாளில் இவர் காஞ்சிபுரம் நகராட்சி சேர்மனாகவும் இருந்தவர். அது மார்கழி மாதம் என்பதால் குளிருக்கு அடக்கமாக தங்கவேல் முதலியார் தன் தலை மீது துண்டை முக்காடுபோல் போட்டு இருக்கிறார். 'ஏன்யா, காங்கிரஸையே விரட்டு விரட்டுனு விரட்டுறோம்.  உன்னால இந்தக் குளிரைத் தாங்க முடியா தாய்யா’ன்னு அண்ணா அவரைக் கிண்டல் அடித்தாராம்.  

இந்தியாவின் உயர் பொறுப்புகளை வகித்த ராஜாஜி, அண்ணாவின் கீழே அமர்ந்து இருக்கும் போட்டோ ராஜாஜி யின் பெருந்தன்மையையும், அண்ணாவின் ஆளுமையையும் ஒருசேர உணர்த்தும். காங்கிரஸுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாக 1964-ல் அண்ணா கைது செய்யப்பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையின் ஒரு பகுதியை ஓவியமாக வரைந்து இருக்கிறார் அண்ணா. அதை அவரே என தந்தையிடம் பரிசாகக் கொடுத்திருக்கிறார். உணவு அருந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் இந்த புகைப்படங்களைப் பார்த்த பின் ஆச்சர்யத்தோடு வெளியே செல்வதைக் காணும்போது, எங்களுக்கு ஏற்படும் பெருமை,  அண்ணா அளித்த கவுரவம்'' என்கிறார் சந்தானம் பூரிப்புடன்!

- எஸ்.கிருபாகரன்