என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நான் போகிறேன் மேலே...மேலே...

நான் போகிறேன் மேலே...மேலே...

பெயர் ராசியோ என்னவோ பெரும்பாலான நாட்களில் மலையிலேயே காலம் கழிகிறது திருவண்ணாமலை சரவணனுக்கு!

''பிறந்து வளர்ந்தது திருவண்ணாமலையில்தான். மலை அடி வாரத்தில்தான் எங்கள் வீடு. சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து மலை மீது ஏறி விளையாடுவோம். 12 வயது இருக்கும். மேலே வெகு தூரம் சென்றுவிட்டோம். தாகமாக இருந்ததால், எல்லாரும் கீழே இறங்கலாம்னு சொன்னாங்க. நான் மட்டும் மேலே இருக்கும் அருவியில் தண்ணீர் குடிக்கலாம்னு மேலே ஏறிட்டேன். அங்கே நாராயணா என்பவரைச் சந்தித்தேன். சுனை இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்று என் தாகம் தணித்தார். அப்புறம் அவரை மறந்துவிட்டேன்.

நான் போகிறேன் மேலே...மேலே...
##~##

ப்ளஸ் டூ படிக்கும்போது ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டதால், படிப்பைத் தொடர முடியவில்லை. அந்த சமயத்தில் நான் முன்பு பார்த்த அதே நாராயணன் என் கனவில் வந்தார். மறுநாள் கனவில் அவரைப் பார்த்த இடத்துக்கு நேரில் சென்றுபார்த்தால், அங்கே நாராயணன் இல்லை. என்ன செய்வது என்று தெரியா மல் குழம்பிப் போயிருந்தபோது ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார். 'எனக்கு மலையைச் சுற்றிக்காட்டு’ என்றார். 'எனக்கு ஆங்கிலம் அரைகுறையாகத்தான் தெரியும்’ என்றாலும், பிடிவாதம் பிடித்தார். ஒருவழியாக அவரை அழைத்துச் சென்று அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினேன். 'நீ ஒரு சூப்பர் கைடு’ என்று மலை இறங்கியவுடன் பாராட்டிவிட்டுப் போனார். எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. பிறகு என் தொழில் இதுதான் என்று முடிவெடுத்து விட்டேன்.

மலை ஏற வேண்டும் என்று யார் எப்போது வந்து சொன்னாலும், நேரம் காலம் பார்க்காமல் கிளம்பிவிடுவேன். பொதுவாகத் திருவண்ணாமலை மக்க ளுக்கே ஒரு சில குகைகள் தான் தெரியும். ஆனால், மொத்தம் 32  பெரிய குகைகள் இங்கு உள்ளன. ரமணர் தவம் செய்த குகை, பாம்பு படம் எடுப்பதைப் போன்ற தோற்றம் உள்ள குகை, கால் பாதம்போலவே காட்சி அளிக்கும் குகை என்று விதவிதமான குகைகள் உள்ளன. எத்தனை சிடுமூஞ்சிக்காரரும் மலை ஏறி இறங்கும்போது, குழந்தையைப்போல குதூகல மனசுக்காரராக மாறிவிடுவார்.

நான் போகிறேன் மேலே...மேலே...

அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள்தான் அதிக மாக வருகிறார்கள். இது வெறுமனே ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; சவால் விடும் சாகசப் பயணமும் கூடத்தான். ஆனால், எனக்கு இந்தப் பயணம் இனித்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. மலை ஏறுவதற்காக வந்த அமெரிக்கப் பெண்ணைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டேன். இப்போது காதலுக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தை இருக்கிறது!

நான் போகிறேன் மேலே...மேலே...

என் ஒவ்வொரு முயற்சிக்கும் பக்கபலமாக இருப்பது அவள்தான். கீழைக் கலாசாரமும் மேலைக் கலாசாரமும் இணைந்ததாக இருக்கிறது இப்போது என் குடும் பம். அவளும்கூட சமயங்களில் கைடாகப் பணிபுரிவாள். காலையில் மலை ஏறி மாலையில் இறங்கி விடுவது இல்லை. சமயங்களில் வாரக்கணக்கில்கூட மலை சுற்றுவது உண்டு.

இப்போது என்னால் சரளமாக ஆங்கிலம் பேச முடி கிறது. வெளிநாட்டினரைவிட நம் ஊர்க்காரர்களை அழைத்துச் செல்வது தனி சந்தோஷம்தான். ஆனால், வெளிநாட்டினரோடு ஒப்பிடும்போது, நம் மக்களுக்குச் சுற்றுலா மீது ஆர்வம் குறைவு!'' என்கிறார் சரவணன்.

நான் போகிறேன் மேலே...மேலே...

எப்போதும் ஏதாவது பாறைகளில்  ஏறிக்கொண்டும், குகைகளில் படம் எடுத்துக்கொண்டும் சுற்றுவதால் நண்பர்கள் வட்டாரத்தில் இவருக்கு 'ஸ்பைடர் மேன்’ என்று செல்லப் பெயரும் உண்டு. ''ஒருநாள் மலை ஏறாவிட்டாலும், ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருக்கும்!'' என்கிறார் சரவணன்.

- யா.நபீசா