என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஊரெல்லாம் பூ வாசம் !

ஊரெல்லாம் பூ வாசம் !

வேலூர்... பகல் முழுதும் உச்சி மண்டைக்குள் ஊடுருவும் வெயில். ஆனால், புஷ்பப் பல்லக்குத் திருவிழாவை நினைக்கும்போது மட்டும் மனசுக்குள் பூ மழை பெய்கிறது! நிறைந்த பௌர்ணமி. அதுவும் சித்திரை பௌணர்மி அன்று அரங்கேறியவிழாவின் போது உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூருக்கு வாக்கப்பட்டுப் போனவர்களும் பிழைக்கப் போனவர்களும் கூடிக் குதூகலித்தார்கள். சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து குவியும் மக்கள் கூட்டம் கடைத் தெருக்களில் நுழைந்து வேண்டியதை வாங் கிக் குவிக்கிறது. இன்னொருபுறம் குடும்பத்தோடு வட்டமாக அமர்ந்து கட்டுச்சோறு பிரித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பூக்களின் வாசனையும் புழுதி வாசனையும் புளியோதரை வாசனையுமாக வேலூரே கமகமக்கிறது!

ஊரெல்லாம் பூ வாசம் !
##~##

ஆரம்பமாகிவிட்டது பூப் பல்லக்கு நகர்வலம். வெல்ல மண்டி புஷ்பப் பல்லக்கு, அரிசி மண்டி புஷ்பப் பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் பூப் பல்லக்கு, ஜலகண்டேஸ்வரர் கோயில் பூப் பல்லக்கு, வேம்புலியம்மன் கோயில் பூப் பல்லக்கு, துர்க்கையம்மன் கோயில் பூப் பல்லக்கு, வேலப்பாடி பூப் பல்லக்கு என அடுத்தடுத்து ஏழு பூப்பல்லக்குகள் வீதிகளில் பவனி வரத் தொடங்கின.

இந்த புஷ்பப் பல்லக்குகள் டிரெய்லர் வண்டிகளில் ஜோடிக்கப்பட்டு மல்லி, சாமந்தி, கனகாம்பரம், கோழிக்கொண்டை பூ என விதவித மலர்களால் அலங்கரிக்கப் பட்டு வரும் அழகுக்கு திருஷ்டி சுத்திப் போடலாம். எல்லாப் பல்லக்குகளையும் அலங்கரித்து முடிக்க முழுதாக மூன்று நாட் கள் ஆகுமாம். சித்ரா பௌர்ணமி இரவு 11  மணிக்குத் தொடங்கும் ஊர்வலம் நடுநிசி யைத் தாண்டிவிட்டது. ஊர்வலத்துக்கு முன் பேண்டு வாத்தியம், நாகஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், கூடவே இளசுகளின் குத்தாட்டம் என ஆட்டம் பாட்டமாய்த் தேர் நகரத் தொடங்குகிறது.

ஊரெல்லாம் பூ வாசம் !

எப்படியும் பூப் பல்லக்கு ஊர்வலம் முடிய நடுநிசி 3 மணி ஆகிவிடுவதால், உள்ளூர்த் திரையரங்குகளில் சிறப்பு நடுநிசிக் காட்சிகளும் உண்டு. பல்லக்கின் உயரம் 18 அடி, அகலம் 15 அடி. எல்லா புஷ்பப் பல்லக்குகளும் ஊர்வலம் முடிந்து கோட்டை மைதானம் அருகில் ஒன்று கூடிய பிறகு, கண்களும் மனசும் நிறைய, கலையத் தொடங்கியது மக்கள் கூட்டம். இப் போது தனியாக காயத் தொடங்கியது சித்திரை பௌர்ணமி நிலா!

- கோ.செந்தில்குமார்
படங்கள்: ச.வெங்கடேசன்