என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

கொண்டாட்டம்... குதூகலம்... கூவாகம் !

திருநங்கைத் திருவிழா

தேர் இழுப்பதும் திருவிழா கொண்டாடுவதுமாக சித்திரை மாதம் முழுக்கவே தமிழகம் உற்சாக ஜூரத்தில்தான் இருக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் திருநங்கை களின் திருவிழா மட்டும் கண்ணீரும் சந்தோஷமும் கலந்தே அரங்கேறும்!

கொண்டாட்டம்... குதூகலம்... கூவாகம் !
##~##

திருவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளைத் தமிழ்நாடு அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன. 'மிஸ் கூவாகம்’ என்ற திருநங்கை களுக்கான அழகிப் போட்டி துவங்கியதும் இளை ஞர்களின் கைதட்டலால் மண்டபமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது. மற்ற அழகிப் போட்டிகளிடம் இந்தப் போட்டி வித்தியாசப்படும் இடம், போட்டியாளர்களிடம்  ஹெச்.ஐ.வி. பற்றிய கேள்விகள் மட்டுமே இடம்பெறும் சுற்றுதான். இந்த வருடம் போட்டியில் மூன்றாம் இடத்தை  சென்னை ரகசியாவும், இரண்டாம் இடத்தை  பெங்களூரு பூமிகாவும், முதல் இடத்தை  மதுரை ரம்யாவும் வென்றனர்.

மாலையில் திருநங்கைகள் அனைவரும் கூவாகம் வயல்வெளிகளில் இருக்கும் பம்ப் செட்களில் குளித்து மணப் பெண் அலங்கார உடை அணிந்து கொண்டு கூத்தாண்டவர் கோயிலுக்கு அணிவகுத் தனர். அங்கு வரிசையாக ஒவ்வொரு திருநங்கைக்கும் தாலி கட்டினார் பூசாரி. நிஜ வாழ்க்கையில் திரும ணம் என்பது கானல் நீராகவும், கனவாகவும் மட்டுமே இருக்கும் திருநங்கைகளுக்கு இந்த ஒருநாள் ஒப்பனைத் திருமணம் ஒரு சின்ன ஆறுதல்.

கொண்டாட்டம்... குதூகலம்... கூவாகம் !

''நாங்க வருஷம் முழுக்க சம்பாதிக்கிற காசு, இந்த திருவிழாவில் செலவு பண்றதுக்காகத்தான். மத்த நாட்களில் எவ்வளவோ ஏச்சுப் பேச்சுகள், கேலி கிண்டல்கள், புறக்கணிப்புகள், நிராகரிப்புகள், அத்துமீறல்கள்னு சந்திக்கிறோம். ஆனா, அத்தனை அவஸ்தையும் இந்த ஒருநாள் சந்தோஷத்தில கரைஞ்சு போயிடுது!'' எனும் நிவேதிதா மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறார். ''நாங்க  பல மொழிகள் பேசினாலும், எங்களுக்குள்ளே சில சமிக்ஞை சைகைகள் உண்டு. அதுல முக்கியமானது கைதட்டல். ஏதாவது பிரச்னைன்னா கைதட்டல் மூலமே  பக்கத்தில் இருக்குற திருநங்கைகளுக்குத் தகவல் தெரிவிப்போம். பலர் கிண்டல் அடிக்கிற அந்தக் கைத்தட்டல் எங்களுக்கு அடையாளம்!'' என்கிறார் பெங்களூரு அமலா.

கொண்டாட்டம்... குதூகலம்... கூவாகம் !

அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கியது தேரோட்டம். அரவான் உருவில் இருக்கும் தேர் வீதி உலாவாகச் செல்ல பக்திப் பரவசத்தோடு கூடவே செல்கிறார் கள் திருநங்கைகள். இறுதியாகப் பந்தலடி எனப்படும் அழுகளத் துக்குத் தேர் வந்தவுடன் திருநங்கை களிடம் மெதுவாகப் பரவுகிறது ஒரு பதற்றம்.  அர வானின் தலை வெட்டப்பட்டவுடன் உயிர் வலியோடு உரத்த குரல் எழுகிறது. திருநங்கைகளின் அழுகை ஓலம். அருகில் இருக்கும் காளி கோயிலுக்கு அரவானின் உடல் கொண்டுசெல்லப்பட அழுதுகொண்டே பின் தொடர்கிறார்கள் திருநங்கைகள். தாலி அறுத்து, பூ களைந்து, ஆயிரக்கணக்கில் திருநங்கைகளை வெள்ளைப் புடவையில் பார்க்கும்போது கூடியிருக்கும் மற்றவர்கள் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். மாலை 7 மணிக்கு தலை, உடலோடு ஒட்ட வைக்கப்பட, 'உயிர்ப்பு’ வருகிறது அரவானுக்கு!

கொண்டாட்டம்... குதூகலம்... கூவாகம் !

திருவிழா முடிந்து கலையத் தொடங்கும்போது, அடுத்த நாள் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய தவிப்பு அவர்கள் கண்களில்!

- ஜெ.முருகன்