என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மதுரை சித்திரைக் கொண்டாட்டம்

''நீதான் கள்ளழகர்... உன் தங்கச்சிதான் மீனாட்சி!''

##~##

துர குலுங்கக் குலுங்க இனிதே நடந்து முடிந்து இருக்கிறது சித்திரைத் திருவிழா. விழாத் துளிகள் இங்கே கொஞ்சம்...  

• 'வாறாரு... வாறாரு... அழகரு வாறாரு’ பாடல்தான் அழகருக்கான ஆரவார வரவேற்பு டோன். ஓரிடத்தில் 'அட்றா அட்றா நாக்க முக்க...’ பாட்டுக்கு மதுரை மாப்புகள் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருக்க, 'பாட்டுப் புரியலை... ஆனா, மியூஸிக் சூப்பர்!’ என்று  அவர்களுடன் இணைந்து ஆடிச் சென்றார்கள் வெளிநாட்டு விருந்தினர்கள்!  

•   வைகை ஆற்றை ஒட்டிப் பல இடங்களில் இலவச மோர், தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தார்கள். அதே ஞாபகத்தில் தமுக்கம், புதூர், தல்லாகுளம் பகுதிகளில் இருந்த சில இடங்களில் மோர் வாங்கிக் குடித்த பக்தர்கள், ரூபாய் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து, பேந்தப் பேந்த விழித்தார்கள். ''ஓசின்னு நினைச்சுக் குடிச்சுப்புட்டேன். ஸாரிம்மா!'' என ஒருவர் நழுவ, ''ஓசியில மோர் கொடுக்க நான் என்ன உன் பொண்டாட்டியா? காசைக் கொடுத் துட்டு போய்யா!'' என்று அதட்டி மிரட்டி காசை வசூலித்தார் மோர் கடைப் பெண் மணி!

மதுரை சித்திரைக் கொண்டாட்டம்

•  இந்தச் சித்திரை திருவிழாவில் கவனம் கலைத்த ஒரு விஷயம் ஹாரன் பீப்பி. பைக், கார் ஹாரன்கள் போலவே ஒலி எழுப்பிய அந்த பீப்பியை ஊதி, அடிக்கடிக் கூட்டத்தை கலைத்துக்கொண்டு இருந் தார்கள்  சேட்டைக்கார மச்சான்கள்!

• ''ஏன் அழகர் ஆத்துல இறங்குறாருப்பா?'' என்று கேட்ட தன் மகனுக்கு, ''நீதான் கள்ளழகர். உன் தங்கச்சிதான் மீனாட்சி!'' என்று கள்ளழகரின் கதையை அழகாக விளக்கிப் புரியவைத்தார் கூட்டத்தில் நசுங்கிப் பிதுங்கிக்கொண்டு இருந்த புதூரைச் சேர்ந்த முருகன் என்ற பக்தர்!

• கள்ளழகரைத் தரிசிக்க முடியாதவர்கள், நேர்த்திக்கடனுக்காக கருப்பணசாமி, கள்ளழகர் வேடத்தில் வந்தவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று திருப்தி அடைந்தார்கள்!

• நெருக்கித் தள்ளிய கூட்டத்தில் அடிக்கடி பலர் மயங்கி விழ, தண்ணீர் பாக்கெட்டுகளை மயக்க பார்ட்டிகளின் முகத்தில் அடித்து விழிக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள்!  

•  பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகரின் அழகில் மயங்கியவர்கள், ''இனி எல்லாம் நல்லாவே நடக்கும்'' என்று மன நிறைவுடன் கலைந்து சென்றார்கள்!

- பூ.ஜெயராமன், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, க.கார்த்திக்