என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

புதிய உயிராக்கிய புனித பூமி!

##~##

பிறந்தது மதுரை என்றாலும்,  குன்றக்குடி பொன்னம்பல அடிக ளாரை வளர்த்து, வார்த்தது குன்றக்குடி. தான் நேசிக்கும் குன்றக்குடியைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார் அடிகளார்.

 ''குன்றக்குடி... நம்மைப் புதிய உயிராக்கித் துறவு நெறிக்கு ஆட்படுத்தப்பெற்ற, ஆன்மிக அற வாழ்வு தொடங்கப் பெற்ற புனித பூமி! குன்றில் குமரன் குடியிருக்கும் இயற்கை வளம் சூழ்ந்த இனியஊர் எமது குன்றக்குடி. அன்பிலும் ஆற்றலிலும் புகழிலும் குன்றாத மக்களைகொண்ட பெருமை குன் றக்குடி. மதுரை யாதவா கல்லூரி யில் பி.எஸ்சி படிப்பை முடித்த பிறகு, வர்த்தக நிமித்தமாக அடிக்

என் ஊர்!

கடி நாம் குன்றக்குடி திருமடத்துக்கு வந்து போவது உண்டு. எம்மையும் எமது சிந்தனைகளையும் கூர்ந்து கவனித்து வந்த அடிகளார் பெரு மான் அவர்கள், ஒரு சமயம் நாம் திருமடத்துக்கு வந்திருந்தபோது, 'மடத்துக்கு சந்நியாசியாக வந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள். துறவறம் என்றால் என்ன என்று தெரியாத நாம், 'சரி’ என்றோம். பிறகு அதுபற்றிய சிந்தனையே இல்லை. சில நாட்கள் கழித்து நாம் மடத்துக்கு வந்து இருந்தபோது மகா சந்நிதானம், 'நாள் நன்றாக இருக்கிறதே... இன்றைக்கே நீ மடத்துக்கு வந்துவிடலாமே!’ என்றார்கள். அன்றே அவர்கள் கையால் காவி வாங்கிக்கொண்டு துறவி ஆனோம். நாம் வருவதற்கு முன்பே மகாசந்நிதானம் குன்றக்குடி கிராமத்தை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றி இருந்தார். பல நேரங்களில் அந்த மரங்கள் உதிர்க்கும் மலர்கள் நல்ல மணத்தையும் சுகந்த சூழலையும் உருவாக்கி நிற்கும். சிவப்பு மலர்கள் உதிர்க்கும் மரங்கள் குன்றக்குடியின் தெருக்களின் அழகைக் கூட்டும். குன்றக்குடி எங்கும் அப்போது மயில்கள் நிறைய உண்டு. மழை வருவதற்கு முன்பு தோகை விரித்து மயில்கள் ஆடும் காட்சி, மழைக்கு வரவேற்பு பாடுவதுபோல இருக்கும்.

நான்கு புறமும் நல்ல குளங்கள் நிறைந்த ஊர் குன்றக்குடி. குழாய்த் தண்ணீர் வருவதற்கு முன்பே குன்றக்குடி மக்களுக்குத் தாகம் தீர்த்த நன்னீர்க் குளம் இன்னும் தண்ணீர் சுரந்து நிற்கிறது.

குன்றக்குடி கோயில் திருவிழாக்களின்போது அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் சாரை சாரையாக வந்து இறங்குவார்கள். தெருக்களில், தோப்புகளில் சமையல் செய்து நான்கைந்து நாட்கள் தங்கி இருப்பார்கள்.  திருவிழாமுடிந்து மக்கள் கிளம்பிச் சென்ற பின், மனம் வெறுமையாக இருப் பதைப்போன்று தோன்றும். எப்போது கண்மாய் நிறைந்தாலும், பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க நம்மைத்தான் முதலில் அழைப்பார்கள் மக்கள். நாம் மண்வெட்டி எடுத்துக் கொடுத்ததும், கண்மாய் மடை திறந்து தண்ணீர் பாயும்போது, மக்கள் மனசு துள்ளும். அந்த மகிழ்ச்சிக்கு இணை எதுவும் இல்லை.  

என் ஊர்!

குன்றக்குடி மக்களின் மனசு எப்போதும் ஈரத்தால் நிறைந் தது. ஆழிப் பேரலைகள் தமிழகத்தைச் சுழற்றிப் போட்ட நேரம்... செய்தி யைக் கேட்டதும் நாகை ஆட்சியர் ராதாகிருஷ் ணனைத் தொடர்பு கொண்டு, 'எங்களிடம் இருந்து என்ன உத வியை எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டோம். 'பணம், பொருட்களை விட மனித உழைப்புதான் தேவை’ என்றார் ஆட்சியர். அடுத்த நிமிடமே நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களைத் திரட்டி நாகைக்கு விரைந்தோம்.

ஊருக்குள் ஓர் இழப்பு என்றால் ஊராரைக் கூப்பிடலாம். ஊரே இழப்பாகிப்போனால், யாரைக் கூப்பிடுவது? அழுகிப்போன சடலங் களின் துர்நாற்றம் கடல் காற்றில் கரைந்து குடலைப் புரட்டியது. அதை எல்லாம் சகித்துக்கொண்டு, நம்மோடு வந்த இளைஞர்கள் உடல்களை அப்புறப்படுத்தும் புனிதப் பணியில் ஈடுபட்டனர். இந்த அறப் பணியில் ஈடுபட்ட குன்றக்குடி இளைஞர்களைப் பாராட்ட இன்று வரை வார்த் தைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

மனம் களைப்பு அடையும் நேரங்களில், நமக்கு ஆறுதலாக இருப்பது திருமடத்தின் மேல்தளம்தான்.  அங்கே சிறிது நேரம் நடைப் பயிற்சி எடுத்தால், கவலைகள் கரைந்து புதுத்தெம்பு சுரக்கும். ஆலயத்தைத்  தவிர குன்றக்குடியில் எமக்குப் பிடித்தமான ஓர் இடம் உண்டு என்றால், அது இங்கு உள்ள மேல்நிலைப்பள்ளி மைதானம்தான்.  பெரும்பாலான நேரங்களில் நமது எழுத்துப் பணியை இங்குதான் மேற்கொள்வோம்.

மகா சந்நிதானங்கள் ஐக்கியம் ஆகி இருக்கும் திருமண்ணில், நம் அடிகள் பெருமான், விண் ணிலும், மண்ணிலும், காற்றிலும் கலந்து நிற்கும் உணர்வுகளோடும், அன்பு நிறைந்த குன்றக்குடி மக்களின் ஆதரவோடும் நமது பணிகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன!''

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

என் ஊர்!