மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 18

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

படங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

ல்லநாட்டுக்குப் பக்கத்தில் உள்ள 'அந்தநம்பிக்குறிச்சி’யை நாங்கள் 'அந்தலங்குறிச்சி’ என்றுதான் சொல்வோம். அங்கு உள்ள நிலம், வயல்களை மேற்பார்வையிட அவ்வப்போது ஆச்சி, திருநெல்வேலியில் இருந்து செல்வாள். அப்படி ஒருமுறை ஆச்சியுடன் அந்தலங்குறிச்சிக்குச் சென்றபோது, அங்கு ஏதோ ஒரு கோயிலில் கொடை விழா. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களில் வருடத்துக்கு ஒரு முறை இப்படிக் கொடை விழா நடைபெறும். ஆச்சியுடன் கோயில் கொடையைப் பார்க்கப் போன நான், முதலும் கடைசியுமாக அங்குதான் ஓர் ஆட்டைப் பலி கொடுப்பதைப் பார்த்தேன். அம்மன் அருள் வந்து, நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடிய சாமிகொண்டாடியைப் பார்க்கவே பயமாக இருந்தது. பின்பு, எம்.டி.வாசுதேவன் நாயரின் 'நிர்மால்யம்’ திரைப்படம் பார்க்கும்போது, வாளால் தன் தலையில் அடித்துக்கொண்டு பகவதி அம்மனுக்கு பூஜை செய்யும் வெளிச்சப்பாடு, எனக்கு அந்தலங்குறிச்சி சாமிகொண்டாடியை ஞாபகப்படுத்தினார். கோர முகம்கொண்டு இருந்த அந்த சாமிகொண்டாடியையும், பீடத்தில் தனியே அறுத்து வைக்கப் பட்டு, என்னையே முறைத்துப் பார்த்த ஆட்டின் தலையையும் என்றைக்கும் மறக்க முடியாது.

மூங்கில் மூச்சு! - 18

 கொடை முடிந்த பிறகும் ஆச்சி இன்னும் இரண்டு நாட்கள் அந்தலங்குறிச்சியில் இருந்தாள். கொடைக்கு மறுநாள் நான் பார்த்துப் பயந்த அந்த சாமிகொண்டாடி, ஆச்சியிடம் வந்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அவர் பேசும் சத்தமே காதில் விழவில்லை. அவ்வளவு மென்மையாக சாந்த முகம்கொண்டவராக இருந்தார். கண்களை உருட்டி, வாயைப் பிளந்து, காட்டுக் கூச்சல் போட்ட அந்த மனிதரா இவர் என்ற ஆச்சர்யம் தாங்காமல் அவரையே பார்த்தேன். 'எத்தனாங் கிளாஸ்ஸுய்யா படிக்கிய?’ என்று என் அருகில் வந்து தலையைத் தடவி அவர் கேட்டபோது, உடலும், மனமும் நடுங்க... பதிலே சொல்லாமல் ஓடிவிட்டேன். 'நல்லாப் பேசுவான். நேத்து நீரு சாமியாடுனதப் பாத்தாம்லா. அதான் கொஞ்சம் பயப்படுதான். வேற ஒண்ணுமில்ல!’- சாமிகொண்டாடியின் மனம் கோணாமல் ஆச்சி சமாளித்தாள்.

மூங்கில் மூச்சு! - 18

திருநெல்வேலி டவுணிலும் நிறையக் கோயில் கொடைகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு சாமிகொண்டாடிகள் என்கிற கோமரத்தாடிகள் யாரைப் பார்த்தாலும் நமக்குப் பயமே ஏற்படாது. காரணம், அவர்கள் அனைவருமே அப்பாவி சைவப் பூச்சிகள். 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்’ என்பதுபோல கிராமங்களில் நடைபெறும் அசல் கோயில் கொடைகளைப் பார்த்து தாங்களும் நடத்துவதாக நினைத்துக்கொண்டு, வருட பூஜையை திருநெல்வேலி நகரவாசிகள் 'கொடை’ என்ற பெயரில் நடத்தி மகிழ்கிறார்கள். ஆனால், சம்பிரதாயமாகக் கொடைக்கு முன்பே, கால் நடுதல், 11 நாள் விரதம், பால் குடம், தீச்சட்டி, சாமக் கொடை, படையல் (சைவம்தான்) எல்லாமே உண்டு.

பங்குனி, சித்திரையில் நடைபெற இருக்கும் கொடைக்கு தை மாதமே மனதளவில் தயாராகிவிடுவார்கள். முதலில் கொடை விழா கமிட்டி ஒன்று அமைப்பார்கள். வருடா வருடம் இந்த கமிட்டியின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை மாறாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். செயலாளர் பதவிக்கு பிரமநாயகம் மாமாவைச் சொன்னவுடன், காலில் வெந்நீர் பட்ட மாதிரி பதறி எழுந்து மறுப்பார். உடனே, நான்கைந்து பேர் பிரமநாயகம் மாமாவை, 'ஒங்களவிட்டா வேற யாராலயும் இத செறப்பா செய்ய முடியாது மாமா’ என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவார்கள். மூன்றாவது வற்புறுத்தலிலேயே மாமா சம்மதித்துவிடுவார். நான்காம் முறை வற்புறுத்த மாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கெனவே ஒரு முறை அப்படி அனுபவப்பட்டு அநாதை ஆகியிருக்கிறார்.

மூங்கில் மூச்சு! - 18

கையில் ஒரு கொயர் நோட்டுப் புத்தகம் ஒன்றுடன் வீடு வீடாகத் தலைக்கு 100 ரூபாய் வரி பிரிப்பதில் தொடங்கும், செயலாளரின் பணி. கூடவே, 'சின்ன’ மணி, இரண்டு நார்ப் பெட்டிகளும், பெரிய தூக்குச் சட்டியும் தூக்கிச் செல்வான். வீடு வீடாகப் பணம், அரிசி மற்றும் எண்ணெய், பருப்பு கொடுப்பார்கள். குஞ்சு வீட்டில் வரி பிரிக்கும்போது, 'சின்ன’ மணியிடம் குஞ்சு நைஸாகப் பேச்சுக் கொடுப்பான். 'எல மக்கா, இந்த வருசம் கொடைக்கு கும்பக் குடம் உண்டுல்லா?’ கரகாட்டத்தை திருநெல்வேலியில் கும்பக் குடம் என்றுதான் சொல்வோம். ஆசிரியரான பிரமநாயகம் மாமா, குஞ்சுவிடம் கோபத்தை அடக்கிக்கொண்டு 'ரிசல்ட் வந்துட்டா? பாஸ் பண்ணிட்டியா? ஹிஸ்டரி, ஜியாக்ரஃபில எத்தன மார்க்கு?’ என்று கோடை விடுமுறையில் சம்பந்தம் இல்லாமல் படிப்பைப்பற்றிப் பேசிச் செல்வார்.

அம்மன் சந்நிதி, கீழப் புதுத் தெரு, மாடத் தெரு என அடுத்தடுத்த தெருக்களில் உள்ள கோயில்களிலும் வரிசையாகக் கொடை விழா நடைபெறும். ஒவ்வொரு கோயில் கொடைக்கும் தவறாமல், நானும் குஞ்சுவும் ஆஜராவோம். ஒரு கோயில் கொடையாவது வித்தியாசமாக நடக்குமா என்றால், நிச்சயமாக இல்லை. 'எல, நம்ம கோயில் கொடை மாதிரிதான அங்கெயும் நடக்கு! அப்பிடி என்ன அங்கெ புதுசா செய்தாங்க? தெரியாமத்தான் கேக்கேன்!’- விஷயம் புரியாமல் அங்கலாய்ப்பார்கள் அம்மாக்கள். ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு கும்பக் குடக்காரிகள் ஆடுவார்கள் என்ற விவரம் அவர்களுக்குத் தெரியாது.

கொடையன்று இரவில் சாமிகொண்டாடி தீச்சட்டியைக் கைகளில் ஏந்தித் தெருக்களில் வலம் வருவார். மனதுக்குள் தன்னைக் கடவுளாக நினைத்தபடி கம்பீரமாக நடந்துவரும் அவர், போலீஸைப் பார்த்தால் மட்டும் கையில் இருக்கும் தீச்சட்டியுடன் பவ்யமாக வணங்குவார். கொடையின்போது எப்போதும் வாசிக்கும் சில சம்பிரதாயத் தீர்மானங்கள் போக, நையாண்டி மேளக்காரர்கள் பெரும்பாலும் சினிமா பாடல் களைத்தான் வாசிப்பார்கள். அந்தத் தாளத்துக்கு ஏற்ப சாமிகொண்டாடி ஆடுவதுதான் வேடிக்கை. அப்படி ஒருமுறை ஒரு கோயில் கொடையில் நையாண்டி மேளக்காரர்கள், 'இது நம்ம ஆளு’ படத்தின் 'அம்மாடி... இதுதான் காதலா’ பாடலை வாசிக்க, ஷோபனாவை மிஞ்சும் வகையில் அதற்கேற்ப சாமிகொண்டாடி நயினார் பிள்ளை ஆடினார். அந்தப் பாடலின் 'அட ரா... மா... இது என்ன வேதமோ?’ என்ற வரிக்கு நயினார் பிள்ளை ஆடியதைப் பார்த்திருந்தால், பத்மா சுப்ரமணியமே வெட்கித் தலை குனிந்து இருப்பார். இடுப்பு வேட்டி அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் பாம்புபோல வளைந்து, நெளிந்து ஆடினார் நயினார் பிள்ளை.

வழக்கமான உள்ளூர் மேளக்காரர்களை அழைக்காமல், ஒரு முறை கீழப் புதுத் தெரு கோயில் கொடைக்கு வாடிப்பட்டியில் இருந்து மேளக்காரர்களைக் கூட்டி வந்தனர். வாடிப்பட்டிக்காரர்கள் அடித்த அடியில், கீழப் புதுத் தெருவில் பாதிப் பேருக்குக் காது ஜவ்வு கிழிந்துவிட்டது. அந்த வருடம் மதுரையில் இருந்து புதிதாக ஒரு கரகாட்டக் கோஷ்டி வர இருப்பதாகச் செய்தி கிடைத்தது. நள்ளிரவு நடக்க இருக்கும் அந்த கரகாட்டத்துக்கு மாலையிலேயே குளித்து நல்ல சட்டை போட்டுத் தயாராகி வந்தான் நண்பன் ராமசுப்ரமணியன்.  

முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் பிச்சையா மாமா வீட்டில்தான் கரகாட்டக் குழுவினர் தயாராகிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மேக்கப் போடுவதைப் பார்க்க, ராமசுப்ரமணியன் ஆசைப்பட்டான். ஆனால், அதற்கு யாரும் சத்தம் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் தயங்கித் தயங்கிச் சென்றோம். எங்களுக்கு முன்னால், அங்கு ஒரு பெரும் கூட்டம் கூடி இருந்தது. திக் ரோஸ் கலரில் உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு இருந்த ஒரு நடனப் பெண்மணிக்கு அவ்வப்போது ஒரு சொம்பில் இருந்து டம்ளரில் தண்ணீர் சாய்த்துக் கொடுத்துக்கொண்டு இருந்தான் குஞ்சு. 'அந்தப் பிள்ள சரோஜா குடிக்கத் தண்ணி கேட்டுது. நான்தான் பிச்சையா மாமா வீட்டு அடுக்களையில இருந்து கொண்டுவந்து குடுத்தேன்’ - பெருமையாகச் சொன்னான். 'பாத்தியால... அதுக்குள்ள பேரெல்லாம் சொல்லுதான். இதுக்குத்தான் அப்பமே வரணும்னு சொன்னேன்’ என்று தாங்க முடியாத வயிற்றெரிச்சலில் ராமசுப்ரமணியன் பொருமினான்.

இரவு 11 மணிக்கு மேல் ஆட்டம் ஆரம்பமானது. நாங்கள் அதுவரையில் கண்டிராதபடி நிறைய அயிட்டங்களைச் செய்து காண்பித்தனர். அவற்றில் ஒன்று, சரோஜாவின் வயிற்றில் வாழைக் காய்களை வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு ஒருவர் ஆடிக்கொண்டே கையில் உள்ள கத்தியால் மிகச் சரியாக இரண்டு துண்டுகளாக்கினார். வெட்டப்பட்ட வாழைக் காய்த் துண்டுகளுக்கு 'நான்... நீ’ என அங்குள்ள ஆண்கள் போட்டி போட்டு எடுத்து வைத்துக்கொண்டனர். 'மக்கா, ஒடனே கொளம்புல போட்டுராதே. வச்சிருந்து பளமான பெறகு சாப்பிடுவோம், என்னா?’

கொடையன்று பகலில் பால் குடம் எடுப்பார் கள். பால் குடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அது சக்தி வாய்ந்த கோயில் என்று அர்த்தம். குறைந்தது ஒரு வாரம் விரதம் இருந்து, பால் குடம் சுமந்து, நான்கு ரத வீதிகளிலும் வெயிலில் வலம் வந்து கோயிலைச் சேர்வார்கள். சரியாகக் கோயிலை வந்து அடையும்போது மேளக்காரர்கள் உச்சஸ்தாயியில், துரிதகதியில் வாசிப்பார்கள். பால் குட பக்தர்கள் வேர்த்து, களைத்து 'ஆராதனை’ வந்து மயங்கிச் சரிவார்கள். ஒரு வருடம், பால் குட எண்ணிக்கை ரவுண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, கீழப் புதுத் தெரு கோயில் கொடையில் சீத்தாராமன் தலையில் ஒரு பால் குடத்தை ஏற்றிவிட்டார்கள். துவக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாமல் 'கம்பாக’ நடந்து வந்தான் சீத்தாராமன். ஒரு வேளை பால் குட ஊர்வலத்தின்போது சீத்தாராமன், நைஸாகத் திருப்பணி முக்கில் நின்று குடத்தில் உள்ள பால் அனைத்தையும் குடித்திருப்பானோ என்று தோன்றியது. 'சீத்தாராமன் வெரதம் இருந்தானா, இல்லையால? ஆராதனயே வர மாட்டெங்கெ?’

'வெரதம் இருக்குற மோரையப் பாரு. நேத்து ராத்திரி 'ராஜா விலாஸ்’ல எங்கூடதான்ல புரோட்டா சாப்பிட்டான்’-ரகசியம் உடைத்தான் குஞ்சு.

யோசித்துப் பார்த்தால், இதுபோன்ற கோயில் கொடை விழாக்களை அந்தக் காலத்தில் ஊர் கூடி ஒற்றுமையாக இருக்க ஒரு காரணமாகத் தேர்ந்தெடுத்துச் செய்திருக்கிறார்கள். ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக, 10 நாட்களுக்குப் பல வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து, ஒன்றாகச் சுற்றி, ஒன்றாக உண்டு, உறங்கி எழுந்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

மூங்கில் மூச்சு! - 18

சென்ற வருடத்தில் ஒருநாள், லொகேஷன் பார்ப்பதற்காக ஆழ்வார் கற்குளம் பக்கம் சுற்றிக்கொண்டு இருந்தேன். அருகில் ஒரு கிராமத்தில் கொடை விழா. ஊரில் ஒரு  டீக்கடையில் நின்றபோது, கொடைக்காக எடுக்கப்பட்ட புது சட்டை, டிராயருடன் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒலிபெருக்கியில் முருகக் கடவுள், ஒளவைக் கிழவியிடம், 'ஒளவையே, அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?’ என்று சத்தமாகக் கேட்டார். விளையாட்டில் இருந்த சிறுவர்களில் ஒருவன், மற்றொரு சிறுவனைப் பார்த்து, ஸ்டைலான உச்சரிப்பில், 'How dare you?’ என்று சத்தம் போட்டான். 'தம்பி, உனக்கு எந்த ஊருடே?’ என்று கேட்டேன். 'டெல்லி’ என்றான். 'லீவுக்கு வந்திருக்கியா?’ என்று கேட்டதற்கு, 'இல்ல... இல்ல... நான், எங்க dad, mom என் sister எல்லாருமே லீவு போட்டுட்டு வந்திருக்கோம், கோயில் கொடைக்கு’ என்றான்!

- சுவாசிப்போம்...