மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 29

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணிபடம் : கே.ராஜசேகரன்

எம்.ஜி.ஆர்.

##~##
றத்தாழ இருபத்தைந்தாண்டுகள் - கட்டிப் புரளாத குறைதான் - அப்படி எம்.ஜி.ஆரோடு அணுக்கமாகப் பழகியவன் நான்.

என்னை அவரறிவார்; அவரை நானறிவேன். பரஸ்பரப் புரிதலில் - நீள வேர் பரப்பி நின்றிருந்தது எங்கள் நேசத் தரு.

கலகக்காரர்கள் இல்லாமல் இல்லை; எனினும் - எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அவர்கள் மூட்டிய கலகங்கள் முனை முறிந்துபோயின.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 29

ஊடுவதும்; ஊடிய வேகத்திலேயே கூடுவதும் -

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாடிக்கைஆகிவிட்டதால் -

'நாம் வைத்த வாணமெல்லாம், நமத்துப்போனதே!’ என்று நாணி நகர்ந்து போன நபும்சகர்கள் அற்றை நாளில் அநேகர்!

டக்கை; வலக்கை; மற்றும் ஈகை - என மூன்று கைகொண்ட மூன்றெழுத்துக் காரர் எம்.ஜி.ஆர். என்று -

கோடம்பாக்கத்தில் பறக்கும் காக்கா குருவியைக் கேட்டால்கூடச் சொல்லும்!

'ஈ’யென்றிளித்து, ஈயென்றிரப்பவர்க்கு - ஈயும் ஈரம்.

எம்.ஜி.ஆர் மாட்டு இருந்ததுபோல், எவர்மாட்டும் இல்லை; ராமாவரம் தோட்டத்து உப்பை உள் வாங்காத தொப்பை - சினிமா ராஜ்ஜியத்தில், அறவே இல்லையென அறுதியிட்டுச் சொல்லலாம்!

'ஏழு வள்ளல்கள்
ஏட்டிலும் பாட்டிலும் இருந்தது முன்னாலே;  எங்கள் -
மன்னவன் வந்தான்
மற்றவரெல்லாம் இவனுக்குப் பின்னாலே!’

- என்று எம்.ஜி.ஆரைப்பற்றி ஒருமுறை நான் எழுதினேன்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 29

ஆம்; அவர் எட்டாம் வள்ளல்; அதே நேரத்தில், எவர்க்கும் எட்டும் வள்ளல்!

வ்வளவு விரிவாக இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்றால், நான் அவரோடு பழகிய இருபத்தைந்தாண்டுகளில்-

ஒருமுறை கூட - எதையும் அவரிடம் கைநீட்டி வாங்கியதில்லை; அது குறித்து அவருக்கு என்பால் மனவருத்தமுண்டு.

'விஷு’ அன்று -

எல்லார்க்கும் பணம் தருவார். எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் - அவரது படங்களில் சம்பந்தப்பட்ட இதர தொழில்நுட்பக் கலைஞர்களும் -

தோட்டத்திற்குப் போவார்கள். ஆளுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளை எம்.ஜி.ஆர். வழங்குவார்.

அதற்குக்கூட நான் வருவதில்லையென்று, எம்.ஜி.ஆர். என்னைப்பற்றி விசனித்ததை நான் அரசல்புரசலாகக் கேட்டதுண்டு.

என் இயற்கை குணம் அது. இல்லாவிட்டால், எவரும் எவரிடமும் இரக்கலாம்; இருக்கையில் இரக்கலாமா?

அன்னணம் இரத்தலும், இறத்தலும் - ஒன்றென ஓர்பவன் நான்.

இன்னும் என் இரைப்பைக்குள் இறங்கும் உணவில், எம்.ஜி.ஆர்தான் இருக்கிறார். ஆனால் அவ் உணவு, அவர் உதவியதல்ல; அவருக்கு நான் செய்த ஊழியத்திற்காக, வாங்கிய ஊதியம்.

அந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு நான் உட்கார்ந்து சாப்பிடலாம், ஏழு தலைமுறைக்கு!

ருநாள்-

ஒரு நண்பகல் நேரத்தில் -

எம்.ஜி.ஆரிடமிருந்து எனக்கு PHONE வந்தது.

'நான் முதலமைச்சரா? நீங்க முதலமைச்சரா? நான் கேட்டபோது ஒரு நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டீங்க... அடுத்த நாள் - அவ்வை நடராஜன்கிட்டே - அந்த நிகழ்ச்சிய மாத்தி வேற மாதிரி, நீங்களா ஒண்ணு சொல்லியிருக்கீங்க! உங்களுக்கு ஏதாவது கருத்து மாறுபாடிருந்தா - என்கிட்டயே சொல்லிஇருக்கலாமே?’

இப்படிப் பேசிவிட்டு என் பதிலுக்கு எதிர்பார்க்காமல், தொலைபேசியைத் 'தொப்’பெனக் கீழே வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால் -

மதுரையில், உலகத் தமிழ் மகாநாட்டை நடத்த எம்.ஜி.ஆர், முடிவுசெய்து - அதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

தமிழ் அறிஞர்களையெல்லாம் உடன் வைத்துக்கொண்டு - அவர்களது யோசனையின்படி, நிகழ்ச்சி நிரல்களை எம்.ஜி.ஆர். தயாரித்துக்கொண்டிருந்தார்.

அவ்வமயம் தமிழ்த் துறையின் பொறுப்பில் இருந்த திரு. அவ்வை நடராஜன் அவர்களிடம்,

'கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம்; சுரதா தலைமையில் ஒரு கவியரங்கம்; புலமைப்பித்தன் தலைமையில் ஒரு கவியரங்கம்! இப்படி மூன்று தினங்களில் மூன்று கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்!’ என்று எம்.ஜி.ஆர் பணித்தார்.

முதலமைச்சரின் கருத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட கையோடு -

திரு. அவ்வை நடராஜன் மிகுந்த பவ்வியத்தோடு எம்.ஜி.ஆரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னார்.

'வாலி தலைமையில், ஒரு கவியரங்கம் வைக்கலாமே!’

இது கேட்டு திரு. எம்.ஜி.ஆர் வியப் பில் தன் புருவங்களைப் பொட்டுக் கேற்றியவாறு,

'வாலியா? அவர், படப் பாட்டுகள் எழுதறதுலே, அபாரமான திறமைசாலி, கவியரங்கங்களிலே கலந்துகொள்ளுகிற அளவுக்கு, அதிலும் - கவியரங்கத் தலைமை ஏற்கும் அளவுக்கு, தமிழ்ல...’ என்று அவ்வை நடராஜனை நோக்கி, வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினார்.

இதழ்களில் மெல்லிய நகை இழையோட, நடராஜன் அவர்கள் -

'கம்பனடிப் பொடிகள் நடத்துகின்ற கம்பர் விழாக் கவியரங்கங்களிலேயே - வாலி, தலைமையேற்றுப் பாடியிருக்கிறார்; காரைக்குடிக் கம்பர் கழகம், பெரும் புலவர்கள் நிறைந்த சபை. அந்த சபையிலேயே கவிபாட அனுமதிக்கப் பெற்றவர் இருவர்தான். ஒருவர் கண்ணதாசன்: மற்றொருவர் வாலி!’ என்றார்.

ந்த இடத்தில் என் இனிய நண்பர் திரு. அவ்வை நடராஜன் அவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டும்.

அவ்வை மூதாட்டியை, சரஸ்வதியின் அவதாரம் என்றும் -

ஆதிசிவனாகிய நடராஜனை - அருந்தமிழைப் பெற்றெடுத்தவன் என்றும் -

பாரதி பாடிவைத்திருக்கிறான்.

அத்தகு - அவ்வையும் நடராஜனும் ஒரு சேர ஓர் ஆக்கைக்குள் புகுந்து உயிர்த்து உலவினால் எப்படியிருக்கும்?

அப்படியிருப்பவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள். இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை!

அவ்வையின், உச்சந் தலை முதல் உள்ளங் கால் வரை - கோதற்ற தமிழறிவு கொப்பளித்துக்கொண்டு ஓடுகிறது - குருதிப் புனலாய்!

'உரைவேந்தர்’ திரு. துரைசாமிப் பிள்ளையின் பிள்ளை இவர். எனினும், இவரை ஒரு 'திரைவேந்தர்’ எனச் சொல்லுமளவு -

கண்ணதாசன்; பட்டுக்கோட்டை; அடியேன் - ஆகியோர் எழுதிய திரைப் பாடல்களை வெகுவாகச் சிலாகித்து சிரக்கம்பம் செய்யும் நவீன சிந்தை படைத்தவர்.

பழுத்த தமிழ்ப் புலமை பெற்றவர்கள், படப் பாடல்களைப் பாராட்டுவது என்பது -

மரபில் ஒரு காலும்; புதிதில் ஒரு காலும் வைத்து உலா வரத்தக்க உள்ளங்களுக்கே சாத்தியமாகும்.

இந்த வகையில், இன்னொரு ரசிகமணி ஆவார்.

தாமரைத் திரு - அதாவது, பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் அவர்கள்!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 29

றுநாள் எம்.ஜி.ஆர். என்னோடு தொலைபேசியில் மிகுந்த மகிழ்வோடு பேசினார்.

'என்ன ஆண்டவனே! நீர் - கவியரங்கங்களிலே கலந்துண்டு பாடுற சங்கதியை, அவ்வை நடராஜன் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா?

அந்த மாதிரிக் கவியரங்கங்களுக்கு என்னைக் கூப்டிருந்தாக்கூட, நான் வந்திருப்பேனே! சரி - போனது போகட்டும். உலகத் தமிழ் மகாநாட்டுல, கடைசி நாளைக்கு முதல் நாள் - கண்ணதாசன் தலைமையிலே கவியரங்கம் நடக்கிறது. அந்தக் கவியரங்கத்தை, நீர் தொடங்கிவையும்!’

- பேசிவிட்டு ஃபோனைக் கீழே வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!

ப்போது - அவரிடம் அதற்கு நான் சம்மதம் சொல்லிவிட்டு -

மறுநாள் அவ்வை நடராஜனிடம் தொலைபேசியில் கீழ்க்கண்டவாறு பேசினேன்.

'அண்ணே! எம்.ஜி.ஆர்கிட்ட, கண்ணதாசன் கவியரங்கத்தைத் தொடங்கி வைக்கிறதா ஒத்துக்கிட்டேன். ஆனா - இப்ப யோசிச்சுப் பாக்கறப்போ - கண்ணதாசன் என்னைவிட ஆறு வருஷம் சீனியர். அவர், கவியரங்கத்தை நான் தொடங்கிவைக்க, எனக்குக் கூச்சமாயிருக்கு. என் தலைமையிலே, தனியா ஒரு கவியரங்கம் இருந்தாத் தேவலேன்னு - மெள்ள முதல்வர் காதுல சொல்லிடுங்களேன்!’

- இப்படி நான் சொன்னதும், அவ்வை அவர்கள், 'O.K. அண்ணா’. அப்படியே செஞ்சுட்டாப் போறது. உங்க தலைமையில் நடக்கிற கவியரங்கத்துக்கு என்ன தலைப்பு?’ என்று கேட்டார்.

'எண்களும் - எண்ணங்களும்’ என்றேன்; திரு. அவ்வை அதை எம்.ஜி.ஆருக்குத் தெரியப்படுத்திய வுடன்தான் -

எம்.ஜி.ஆர் என்னைத் தொலைபேசியில் அழைத்து - 'நான் முதலமைச்சரா? நீங்க முதலமைச்சரா?’ என்று சினந்துகொண்டார், ஆரம்பத்தில் எழுதியிருக்கிறபடி.

பிறகு, நான் எம்.ஜி.ஆரைத் தோட்டத்தில் சந்தித்து சமாதானம் செய்துவிட்டேன். உலகத் தமிழ் மகாநாட்டில், மதுரையில் -

என் தலைமையில் கவியரங்கம் நடந்தது!

ம்.ஜி.ஆரின் கோபம் - கோடை மேகம் மாதிரி. அவருடைய 'மனிதம்’ பற்றி - ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டால்தான், புரிய வரும்.

எம்.ஜி.ஆர். நடிக்கும் ஒரு படம். டைரக்ஷன் திரு.டி.ஆர். ராமண்ணா அவர்கள். அதில், எம்.ஜி.ஆருக்குத் தாயாக - அதுவும் குடிசையில் வாழும் ஏழைத் தாயாக ஒருஅம்மையார் நடித்துக்கொண்டிருந்தார்.

நான் ராமண்ணாவைப் பார்க்கப் படப்பிடிப்புத் தளத்திற்குப் போயிருந்தேன். மெல்ல, ராமண்ணாவிடம் கேட்டேன் -

'ஏன் அண்ணா? இந்த அம்மா, எம்.ஜி.ஆரின் தாயா நடிக்கிறது எம்.ஜி.ஆருக்குத் தெரியுமா?’ என்று!

'தெரியாது! ஏன் - என்ன விஷயம்?’ என்று ராமண்ணா வியப்போடு என்னை வினவினார்.

பல வருடங்களுக்கு முன், ராஜா சந்திரசேகர் டைரக்ஷனில் 'சாயா’ என்னும் படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தார்.

அதில் - குதிரை மேல் கதாநாயகன் தாவி ஏறும் காட்சி வருகிறது. எம்.ஜி.ஆர். அன்னணம் தாவி ஏறும்போது, தவறி விழுந்துவிட -

கதாநாயகியாக நடித்த நடிகை 'களுக்’கெனச் சிரித்துவிட்டார். அந்த நடிகைதான் - இப்போது ராமண்ணா படத்தில், எம்.ஜி.ஆர் - தாயாக நடிக்க வந்திருந்தார்.

இதை - நான் ராமண்ணா விடம் சொன்னவுடனேயே, 'அய்யய்யோ!’ என்று அந்த நடிகையை மாற்றிவிட்டு, வேறு ஒருவரைத் தாய் வேஷத்தில் நடிக்கவைத்துப் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

என் வாய் சும்மா இருக்காதே! ஓரிரு வாரம் கழித்து இதை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது -

'சேச்சே! அந்த அம்மாவை மாத்தினது தப்பு; அன்னைக்கு அவங்க பெரிய கதாநாயகி. நான் குதிரையில் ஏறுகிறபோது விழுந்ததைப் பாத்து சிரிச்சது, எனக்குக் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அதை இப்ப மனசில வெச்சுக்கிட்டுப் பழிவாங்குறது பாவம்!’ என்று சொல்லி -

ராமண்ணாவை அழைத்து, அந்த அம்மாவையே தனது தாயாகப் படத்தில் போட்டுத் திரும்ப SHOOT செய்யச் சொல்லி-

அந்த அம்மாவுக்கு - ரூபாய் பத்தாயிரம் - அந்த நாளில் அது பெரிய தொகை - எம்.ஜி.ஆர் வாங்கித் தந்தார்!

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!’

- இது குறள்; எம்.ஜி.ஆர் இதன் பொருள்!

- சுழலும்...