Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 12

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

இம்முறை நானும் குற்றவாளிக் கூண்டில் நின்றதால், ''அப்படியா'' என்றேன் எச்சரிக்கையாக.

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்!
தாகூர் ('வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து...)

லேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ''ஹலோ...'' என்றேன்.

''நான்தாம்பா... அண்ணன் பேசறேன். நம்ம பெரியப்பா இறந்துட்டாரு!'' என்றது எதிர் முனைக் குரல். அதிகம் பழகாத குரல். கண்ணுக்கு முன் எல்லாப் பெரியப்பாக்களும் வந்து போனார்கள். ''எந்த அண்ணன்... சரியாத் தெரியலியே!'' என்று தயங்கினேன்.

''அதாம்பா...'' என்று அவர் உறவு முறையை விளக்கினார்.

அப்பாவின் பெரியப்பா மகனின் மகன். பங்காளி அண்ணன். அப்பாவின் இன்னொரு சித்தப்பா மகன் இறந்துவிட்டாராம்.

''நம்ம வேலூர் பெரியப்பாதாம்பா. நீகூடச் சின்ன வயசுல வந்திருக்கியே. காலையில எழுந்து கோயிலுக்குப் போயிருக்காரு. திரும்பி வந்து தண்ணி கேட்டாராம். அவங்க மருமக எடுத்துட்டு வர்றதுக்குள்ள திண்ணையில்சாஞ்சி கெடந்தாராம். தூங்குறாருன்னு தொட்டுப் பார்த்தா, மூச்சு இல்லையாம்!''

அணிலாடும் முன்றில்! - 12

'அப்படியா’... 'அய்யோ’... 'ஓஹோ’ என மூன்று வார்த்தைகளில் எதைச் சொல்லலாம் என யோசித்து, கடைசியாக 'ம்’ என்றேன்.

''அப்புறம் எப்படிப்பா இருக்கே?'' என்று அவர் என் நலன் விசாரித்தார்.

''நல்லாருக்கேண்ணே!'' என்றேன்.

''டி.வி-ல உன்னைப் பார்க்கும்போது குழந்தைங்க சந்தோஷப்படுங்க. உங்க சித்தப்பாதான்டானு சொல்லுவேன்!''

''என்ன படிக்கிறாங்க?''

அவர், அவர்களின் மதிப்பெண் விவரத்தில் தொடங்கி, விளையாட்டுப் புத்தி வரை, விவரித் துக்கொண்டு இருந்தார். கடைசியாக, ''சினிமா தான் எல்லாப் பசங்களையும் கெடுக்குது'' என்றார்.

இம்முறை நானும் குற்றவாளிக் கூண்டில் நின்றதால், ''அப்படியா'' என்றேன் எச்சரிக்கையாக.

''என்னமோப்பா... உங்கப்பா இருந்த வரைக்கும் எல்லாப் பங்காளி விசேஷத்துக்கும் மறக்காம வருவாரு. வர்ற ஞாயித்துக் கிழமை காரியமாம். ஒரு எட்டு வந்து தலை காட்டிட் டுப் போ'' என்று முடித்துக்கொண்டார்.

அணிலாடும் முன்றில்! - 12

''சரிண்ணே...'' என்று சொல்லிவிட்டு, ஜன்னல் வழியாகக் கடந்து செல்லும் மேகங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் இருந்தது 48-வது மாடி. கண் எதிரே காற்றில் மிதக்கும் மேகங்கள். தோன்றிக் கலைந்து மீண்டும் புதிதாகத் தோன்றி எதைச் சொல்ல வருகின்றன இந்த மேகங்கள். ஓடி ஓடிக் காற்றில் உடைவதற்கா, இந்த ஓட்டம்?

அறைக்குத் திரும்பியவுடன் ''ட்யூன் ரெடி... ஏதாச்சும் டம்மி லிரிக் சொல்லுங்க'' என்றார் யுவன்ஷங்கர் ராஜா.

''பாடுங்க...'' என்றேன்.

''தனனா தனனா தனனா'' என்றார். என்னை அறியாமல் வார்த்தைகள் வந்தன.

''அலைமேல் நுரையாய் உடைவோம்...''

விமானத்தில் சென்னை திரும்புகையில், நினைவுகள் அப்பாவைச் சுற்றியே அலைஅடித்துக்கொண்டு இருந்தன. அப்பா... நீங்கள் இல்லாதபோதுதான் உங்கள் அருமை இன்னும் அதிகமாகப் புரிகி றது. எங்கள் கிளைகள் பூப்பதற்காகவே, நீங்கள் வேராக மண்ணுக்குள் மறைந்துகிடந்தீர்கள். உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வதுஎல்லாம், வேர்களை முத்தமிடத்தானோ?

எங்களுக்காக நீங்கள் இருந்தீர்கள். எல்லா இடங்களிலும் இருந்தீர்கள். இதோ சின்ன வயதில், விசேஷங்களில் மட்டும் பார்த்த உங்கள் பங்காளிகளிடம் இருந்து அழைப்பு, உங்கள் வேரின் இன்னொரு பகுதி.

நினைவலைகளை நடுவில் நிறுத்தி 'எக்ஸ்கியூஸ் மீ!’ என்று ஒரு குரல் கேட்டது.

விமானப் பணிப் பெண். கையில் சிறிய கோப்பையில் மது வைத்திருந்தாள். அந்த நேரத்தில் அது எனக்குத் தேவையாக இருந்தது. மது, நினைவுகளின் பொக்கிஷத்தைத் திறக்கும் சாவி. சில நேரங்களில் அதுவே நினைவுகளின் புதைகுழியை மூடும் வேலியாகவும் அமைந்துவிடுகிறது. விமானமும் நானும் மேகத்தில் மிதந்தபடி குலுங்கிக்கொண்டு இருந்தோம்.

ஞாயிற்றுக் கிழமை வேலூர் கிளம்புகையில் மனைவி கேட்டாள். ''காரியம்னா, பங்காளிங்க மீசை-தாடியை எடுப்பாங்க. நீங்க எடுப்பீங்களா?''

''நிச்சயமா...'' என்றேன்.

''நம்ம கல்யாணத்துக்குக்கூட நீங்க தாடியை எடுக்கல...'' என்றாள் ஊடலாக.

''அது வேற... இப்ப நான் பங்காளி'' என்றேன்.

''ஆமாம், நல்ல பங்காளி'' என்றாள் சிரித்தபடி.

வேலூர், அகன்ற தெருக்களில் புழுதியும் வெயிலும் படிந்துகிடந்தது. அகழி சூழ் கோட்டையும் புளிய மரங்களும் தாண்டி, சிக்னலில் நின்று ஊரீஸ் கல்லூரியைக் கடந்து கிழக்கே பாலாற்றங்கரையில் இருந்த பெரியப்பாவின் கிராமத்தை அடைந்தேன்.

முன்பு எப்போதோ சின்ன வயதில் இங்கு வந்திருக்கிறேன். பாலாற்றங்கரையில் விளையாடி இருக்கிறேன். லாரிகளில் மண் அள்ளிய பெரும் பள்ளங்களும், ஆங்காங்கே சாயக் கழிவுகளுமாய், பாலாறு இப்போது பாழும் ஆறாய்க் கிடந்தது. பெரிய பந்தல் போட்டு பாலிமர் நாற்காலிகளில் உறவினர்கள் கூடியிருந்தார்கள். ''நம்ம சண்முகம் மகன் என்ன பண்றான்?'' என்ற குரல் தேய்ந்து... ''நாகராஜி பையம்பா. சினிமால ஃபேமஸா இருக்கான்'' என்று பேச்சு என் பக்கம் திரும்பியது. ''நான்தான்டா உங்க அப்பனைத் தூக்கி வளர்த்தேன். மூக்கு ஒழுகிட்டுத் திரிவான்'' என்றார் ஒரு பெரியவர். நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன்.

அணிலாடும் முன்றில்! - 12

பாலாற்றங்கரையில் ஓர் ஆல மரத்தடியில் பங்காளிகள் நாங்கள் அமர்ந்தோம். புரோகிதர் எல்லோரையும் குளித்து விட்டு வரச் சொன்னார். பாலாறு நீரின்றி மணலுடன் நீண்டிருக்க... தொலைவில் ஒரு பம்பு செட்டில் குளித்துவிட்டு ஈர வேட்டியும் வெற்றுடம்புமாய் மீண்டும் எதிரில் அமர்ந்தோம். என் முறை வந்தபோது புரோகிதர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

''அப்பா பேரு?''

''நாகராஜன்...''

''தாத்தா பேரு சொல்லுங்கோ..?''

''எத்திராஜன்...''

''தாத்தாவோட அப்பா பேரு..?''

என் மௌனத்தைப் பார்த்து பக்கத்திலே இருந்த பங்காளி அண்ணன் சொன்னார்.

''ரத்னம். அதாம்பா நம்ம எல்லோருடைய தாத்தா வோட அப்பா பேரு!''

அந்தக் கணத்தில் நான் அந்த அண்ணனின் கைகளைப் பிடித்தேன். அவர் உடலிலும் என் உடலி லும் எஞ்சியிருந்த, நாங்கள் பார்த்தே இராத ரத்னம் தாத்தாவின் உதிரச் சூட்டை அப்போது நான் உணர்ந்தேன்.

தலைக்கட்டு முடிந்து, இலை போட்டு கறிச் சோறு தின்று, பங்குத் தொகை கொடுத்து, விடைபெற்றுக் கிளம்புகையில், யாரோ ஓர் உறவுக்காரப் பெண் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். ''காலையில் எழுந்து கோயிலுக்குப் போயிருக்காரு. திரும்பி வந்து தண்ணி கேட்டாராம். அவங்க மருமக எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ள திண்ணையில சாஞ்சி கெடந்தாராம். தூங்குறாருன்னு தொட்டுப் பார்த்தா, மூச்சு இல்லையாம்...''

சென்னை வந்து அழைப்பு மணி அழுத்த, கதவு திறந்த மனைவி, மீசை, தாடி இல்லாத என்னைப் பார்த்ததும், ''அய்யய்யே!'' என்றாள்.

''என்ன அய்யய்யே? நாயகன் கமல் மாதிரி இருக்கேன் பாரு!'' என்றேன்.

''முதல்ல போய் கண்ணாடியைப் பாருங்க'' என்றாள்.

பார்த்தேன்.

நாயகன் கமலைவிட இளமையாகக் காட்டியது. தூங்கி விழித்த மகன், என்னை யாரோபோல் பார்த்தான்.

''டேய், அப்பாடா...'' என்றேன்.

கொஞ்சம் சந்தேகம் தெளிந்து, ''நம்ம அப்பாம்மா...'' என்றான் ஆச்சர்யம் விலகாமல்.

அன்றிரவு கனவில் அப்பா வந்தார். அவருடைய அப்பா வந்தார். கூடவே, உருவமே காட்டாமல் ரத்னம் தாத்தாவும்!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan