மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 19

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : ஜெ.முருகன்

##~##

றவினர் ஒருவரை வழிஅனுப்புவதற்காக  எக்மோர் ரயில் நிலையத்துக்குச் சென்று இருந்தபோது, உடன் ஒரு நண்பரும் வந்திருந்தார். சென்னைக்காரரான அந்த நண்பர், சென்னையைத் தவிர வேறு எந்த ஊரைப்பற்றியும் அறிந்திராதவர். தான் அதுவரைக்கும் எக்மோர் ரயில் நிலையத்துக்குள்ளேயே வந்தது இல்லை என்றும், அதற்கான அவசியமே தன் வாழ்க்கையில் ஏற்படவில்லை என்றும் சொன்னார். 'நெல்லை எக்ஸ்பிரஸ்’ ரயிலின் நீளத்தைப் பார்த்து மலைத்தார் நண்பர். அதில் பயணிக்க இருக்கும் நபர்களையும், வழிஅனுப்ப வந்தவர்களையும், அவர்கள் பேசும் 'திருநவேலி’ பாஷையையும் பார்த்து அசந்து போய்ச் சொன்னார்,

 'ஏங்க, ஒங்க ஊருக்கு டெய்லி இத்தன பேரு போய் வராங்களா என்ன?’

ஒரு 'நெல்லை எக்ஸ்பிரஸ்’ஸைப் பார்த்து மிரண்ட அந்த நண்பரிடம், 'நெல்லை எக்ஸ்பிரஸ்’ தவிர, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஹெளரா எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நான்கைந்து ஸ்பெஷல் ரயில்கள் இருப்பதையும் சொன்னேன். நண்பர் மிரண்டுபோனார். திருநெல்வேலிக்குச் செல்லும் ரயில்கள் பற்றிய விவரத்துக்கே மலைத்த நண்பரிடம், தினமும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ் களின் எண்ணிக்கையைச் சொன்னபோது, அஜீரணக் கோளாறினால் அவதியுறும் முக பாவம் காட்டினார்.

மூங்கில் மூச்சு! - 19

'வேணா, ஒரு பத்து நாள் ஊருக்குப் போயிட்டு வாயேன்டா!’ - திடீரென்று 'வாத்தியார்’ பாலு மகேந்திரா சொல்வார். உடனே, துணிமணிகளை அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு, சாலிகிராமத்தில் இருந்து பரபரப்பாகக் கிளம்பி பாரிமுனைக் குச் செல்வேன். அப்போது கோயம்பேடு பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. திருநெல் வேலிக்குச் செல்வதாக இருந்தால், பாரி முனைக்குத்தான் செல்ல வேண்டும். இது மாதிரியான திடீர் பயணத்துக்கு பஸ்தான் லாயக்கு. ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், கல்யாணத்துக்கு முன்னாடியே பிறக் கப்போகும் குழந்தையின் எல்.கே.ஜி ஸீட்டுக்கு விண்ணப்பிப்பதைப்போல, போன ஜென்மத்தி லேயே ரிசர்வ் செய்ய வேண்டும்.

பாரிமுனைக்குள் நுழைந்து, திருநெல்வேலி செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்றுவிட்டாலே, திருநெல்வேலிக்கே போய்விட்ட உணர்வு ஏற்பட்டுவிடும். மாப்பிள்ளை, மச்சான் கேலிப் பேச்சுகள், ஆங்காங்கே காதுகளில் விழும்.

'வே மாப்ளே... என்னவே, வெள்ளையும் சொள்ளையுமாத் துள்ளிக்கிட்டு வாரேரு? தங்கச்சிய எங்கெ?’

'சந்தோஷமா நான் வாரதப் பாத்தால, தெரியலையா அத்தான்? மொகப்பேர்ல அவ அண்ணன் வீட்ல கொண்டுபோய்த் தள்ளிட்டுத்தானே வாரேன்? ஒரு மாசம் சவம் ஒளிஞ்சுதுன்னு நிம்மதியா இருப்பெம்லா!’

மூங்கில் மூச்சு! - 19

'வே... என் தங்கச்சியவெச்சுத்தான் ஒமக்கு மரியாத, தெரிஞ்சுக்கிடும்’ - உரத்துச் சொன்னவர், பின்பு தனக்கு மட்டும் கேட்கும்விதமாகச் சொல்வார். 'ஹ்ம்ம்ம்... கொடுத்துவெச்ச மகராசன். நம்ம வீட்டு மூதிக்கு இப்பிடி ஒரு அண்ணன்காரன் இல்லயே!’

ண்ணிக்கையில் அதிகமான பஸ்கள் திருநெல்வேலிக்குக் கிளம்பத் தயாரான நிலையில் நிற்க, ஸீட் நிறையாமல் ஒரு பஸ்ஸும் லேசில் கிளம்பாது. ஸ்டார்ட் செய்யப்பட்டு, கொஞ்சம் முன்னால் நகரும் பஸ் முதலில் கிளம்பிவிடும் என்று நம்பி, அவசர அவசரமாக டிக்கெட் எடுத்து உட்கார்ந்து, பல முறை ஏமாந்து இருக்கிறேன். 'த்ரும்... த்ரும்’ என பஸ்ஸை டிரைவர் உறுமவிடுவாரே ஒழிய... கிளம்புவேனா என்பார். நின்றபடியே அசைந்து கொண்டு இருக்கும் பஸ்ஸுக்கு வெளியே, 'திருநேலி... திருநேலி’ என கண்டக்டர் திருநெல்வேலியை விற்க முனைவார். ஒரு மாதிரியாக போகிற வருகிற ஆட்களை எல்லாம் பிடித்து பஸ்ஸை நிரப்பிக் கிளம்பு வதற்குள் தூக்கம் வந்துவிடும்.

பாரிமுனையில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் வரையில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் தரும் எரிச்சலில், பேசாமல் இறங்கி நடந்தே திருநெல்வேலி சென்றுவிடலாமா என்று நினைத்து இருக்கிறேன். தாம்பரம் தாண்டிய பிறகுதான் உண்மையாகவே பஸ் கிளம்பி நம் ஊருக்குத் தான் போகிறது என்பதை நம்ப ஆரம்பிப்பேன்.

பஸ்ஸுக்குள் எப்படியும் ஒரு தெரிந்த முகம் இருக்கும். திருநெல்வேலியில் இருக்கும்போது பேசிப் பழக்கம் இல்லாதவர்கள்கூட இப்போது பேசுவார்கள். 'என்னடே, சினிமா ஃபீல்டு எப்பிடி இருக்கு?’ என்று மெதுவாகப் பேச்சு கொடுத்து, வரிசையாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் அனைவரைப்பற்றியும் விசாரிப்பார்கள். சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது அவர்களது நம்பிக்கை. கமல்ஹாசனைத் தவிர, மற்ற அனைவரையும் நானுமே வெள்ளித்திரையில் மட்டும்தான் பார்த்து இருக்கிறேன் என்பதை மறைத்தபடி, 'ஆங்... ரஜினி சார் இமய மலைக்கு முந்தா நாள்தான் கௌம்பிப் போனாரு. விஜயகாந்த் சார், வீட்டுக்குச் சாப்பிட வாடேன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு. எனக்குத்தான் போக டைமில்ல’ என்றெல்லாம் அடித்துவிடுவேன். கண்களை அகல விரித்துக் கேட்டுக்கொண்டு இருப்பார் கள். கொஞ்சம் பேசிப் பழகிய பின் நைஸாகக் கேட்பார்கள். 'கௌதமியும் கமலகாசனும் ஒரே வீட்லதான் இருக்காங்களோடே?’

பேசிப் பேசித் தூங்கிய பின், 'விளுப்புரம் விளுப்புரம்... சாப்பிடணும்னா, எறங்கி சாப்பிட்டுக்கிடுங்க. வண்டி ஒரு பதினஞ்சு நிமிசம் நிக்கும்!’ என்ற குரல் எழுப்பும். விழுப்புரத்துக்கு முன்போ, தாண்டியோ, ஏதோ ஒரு வனப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மோட்டலில் வண்டி நிற்பது அப்போதுதான் தெரிய வரும். அங்கு இரண்டு மோட்டல்கள் உண்டு. ஒன்று அசைவம். அதற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கும் சைவம்.

முகத்தைக் கழுவிவிட்டு, சைவ மோட்டலில் போய் உட்கார்ந்தவுடனே, சப்ளையர் நாம் கேட்காமலேயே நமக்கு ஒரு பிளேட்டில் தோசை கொண்டுவந்து வைப்பார். தோசைக்குத் துணையாக, நம் மண்டை தண்டிக்கு ஒரு வடையும் வீற்றிருக்கும். எத்தனையோ முறை வடை வேண்டாம் என்று சப்ளையரிடம் சொல்ல முயன்று தோற்றிருக்கிறேன். அப்படிச் சொன்னால், உடனே இன்னொரு வடையைக் கொண்டுவைத்துவிடுகிற மாதிரியே ஒரு முறைப்பான பார்வை பார்ப்பார். 'வேற என்ன வேணும்?’ என்று அவர் அதட்டிக் கேட்கும் தொனியிலேயே, 'ஒண்ணும் வேண்டாம்’ என்று சொல்லிவிடுவேன். அடுத்த நொடியில், ஏற்கெனவே எழுதித் தயாராகவைத்திருந்த பில்லைக் கையில் திணித்துவிடுவார்.

துபோன்ற மோட்டல்கள் அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நான் பார்க்கிற சினிமாப் பாட்டு, சி.டி கடைகளில், அந்த நள்ளிரவில், துல்லியமான ஒலிப்பதிவில் சில பாடல்களைக் கேட்டு இருக்கிறேன். அப்படி ஒருமுறை நான் கேட்ட பாடல், 'சலங்கை ஒலி’ திரைப்படத்தின் 'மௌனமான நேரம்’. அதுபோன்ற, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில், இரவு நேரங்களில் கேட்பதற்காகவே, இளையராஜா அந்தப் பாடலை அமைத்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில், விலை மலிவாக உள்ள அந்த சி.டி-க்களை வாங்காமல், நம்மால் திரும்ப முடியாது. இன்றளவும் என்னிடம் உள்ள பல பாடல்கள் அடங்கிய சி.டி-க்கள் அங்கு வாங்கியவைதான்.

மூங்கில் மூச்சு! - 19

அதற்குப் பிறகு, அவ்வளவு பெரிய திருச்சியை, பஸ் தாண்டிய செய்தி அதிகாலை யில் மதுரையில் ஒரு பத்து நிமிடங்கள் வண்டி நிற்கும்போதுதான் தெரியும். மதுரையில் இருந்து கிளம்பி, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் தாண்டி கோவில்பட்டி வந்தவுடன் 'இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்குப் போயிரலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். கோவில்பட்டி தாண்டி, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையைக் கடக்கும்போதே நிமிர்ந்து உட்கார்ந்துகொள்வேன். தாழையூத்து சங்கர் சிமென்ட் தொழிற்சாலை வழியாக பஸ் தச்சநல்லூரை நெருங்கும்போதே, திருநவேலி வாசம் அடிக்க ஆரம்பித்து, 'அப்பாடா!’ என்றிருக்கும்.

நாளடைவில் திருநெல்வேலிக்குச் செல்வது குறைந்து விட்டது. அப்படியேபோனா லும், முன்கூட்டியே பயணத் திட்டம் வரைந்து, ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்து போவது என்றாகிவிட்டது. பஸ் பயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரயில் பயணமும் சுவாரஸ்யம்தான்.

பஸ்ஸில் கிடைக்காத பல சௌகர்யங்களை ரயிலில்தான் அனுபவிக்க முடியும். புஸ்தகம் படிக்கலாம், சீட்டு விளையாடலாம், சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு புளியோதரை சாப்பிடலாம். நண்பர்கள், உறவினர்களுடன், எதிர் எதிரே முகம் பார்த்தபடி பேசிச் சிரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, நினைத்த நேரத்தில் பாத்ரூம் போய் வரலாம். பஸ் பயணமாக இருந்தால், கண்டக்டர்- டிரைவர் தயவு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது.

ஒரு முறை பெரிய மீசை வைத்த ஒருவர், பரிதாப முழி முழித்தபடி அவ்வப்போது பஸ்ஸின் முன் பகுதிக்கு வந்து கண்டக்டரிடம், 'ஏ தம்பி, அடுத்தாக்ல வண்டி எங்கனெ நிக்கும்டே?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார். கண்டக்டர் சொன்ன நேரம் தாண்டிச் செல்லச் செல்ல... மீசைக்காரரின் முழி பிதுங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்கு மேல், தன் மகன் வயதையத்த டிரைவரிடம், 'அண்ணாச்சி... நல்லாயிருப்பிய. வண்டிய கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க. ஒங்க கால்லன் னாலும் விளுதென்!’ என்று கதறினார்.

திருநெல்வேலிக்கு விமானத்திலும் சென்று இருக்கிறேன். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானப் போக்குவரத்து உள்ளது. மூன்று மணி நேரத்துக்குள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்றுவிடலாம்தான் என்றாலும் பஸ், ரயில் பயண சுவாரஸ் யங்கள் விமானப் பயணத்தில் இல்லை.

அதிகமாக விமானப் பயணம் மேற் கொள்ளாத திருநெல்வேலிக்காரர்கள், சென்னை விமான நிலையத்துக்குள்ளேயே பதற்றத்துடன்தான் நுழைவார்கள். சென்னை யில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஏர் டெக்கான் விமானத்துக்காக, சென்னை விமான நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தபோது, வேர்க்க விறுவிறுக்க ஒரு மனிதர் வந்தார். முரட்டுக் கதர் வேட்டி, சட்டையில் இருந்தவர், பதற்றம் தணியா மலேயே என் அருகில் அமர்ந்தார். தன் சட்டைப் பையில் இருந்த ஏதோ ஒரு சீட்டை எடுத்து, மீண்டும் மீண்டும் சரிபார்த்தவர், சிறிது நேரம் கழித்து என்னிடம் மெதுவாகக் கேட்டார்.

'சார், டெக்கான் குரோனிக்கிள் ப்ளேன்காரன் இன்னும் வரலேல்லா?’

விமானம் கிளம்பியவுடன் அதில் பயணிக்கும் திருநெல்வேலிக்காரர்கள் எல்லோரும் கண் மூடி நெல்லையப்பர், காந்திமதி அம்மையைப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிடுவதால், விமானப் பயணத்தில் சக பயணிகளுடன் உரையாடும் வாய்ப்பு மிகக் குறைவு. பயண நேரம் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் செல்ல 12 மணி நேரம் ஆகும். தொட்டில் குழந்தைபோல லேசான குலுக்கலுடன் நன்றா கக் கால் நீட்டிப் படுத்துத் தூங்கிக்கொண்டே திருநெல்வேலி போகும் சுகம் தனிதான். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்த குஞ்சுவுடன், நானும் திருநெல்வேலிக்கு ரயிலில் கிளம்பினேன். ஏற்கெனவே, எனக்கும் சேர்த்து டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தான் குஞ்சு.

அவனிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தனக்கு லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைத்தாலும், அதை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அப்பர் பெர்த்தில் படுத்துக் கொள்வான்.

'எல்லாரும் லோயரத்தான் விரும்புவாங்க. எந்திருச்சு பாத்ரூமுக்குப் போக வர, அவங்களுக்குச் சௌர்யமா இருக்கும்லா. நாம அப்பர்ல படுத்துக்கிட்டொம்னு வையி. காலைல கொஞ்சம் முன்ன பின்ன எந்திரிக்கலாம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்ல. என்ன சொல்லுதெ?’

குஞ்சுவின் இந்த உதவும் தன்மை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கைகலப்பு வரை சென்று, ஒரு குடும்பம் அபாயச் சங்கிலியை இழுக்கப்போய்விட்டது. பிறகு உண்மை விளங்கி, சமாதானமாகி திருநெல்வேலி வரும் வரைக்கும் தங்கள் உணவைப் பகிர்ந்து தந்து, நட்புடன் பழகினார்கள் என்றாலும், அந்தச் சம்பவம் மறக்க முடியாத ஒன்று.

விஷயம் இதுதான். லோயர் பெர்த் டிக்கெட்டைக் கையில் வைத்திருந்த குஞ்சு, அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்த ஒரு பெண்மணிக்கு உதவும் நோக்குடன் இப்படிச் சொன்னான்.

'எக்கா... நீங்க வேணாக் கீளெ படுத்துக்கிடுங்க. நான் மேல படுத்துக்கிடுதென்!’

-  சுவாசிப்போம்...