
பெரியம்மா
'பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’ஜென் தத்துவம்
கோடை தொடங்கிவிட்டது. காலையில் கிளம்பும்போதே மனைவி சொன்னாள், ''நாளைல இருந்து ஆதவனுக்கு ஸ்கூல் லீவு.'' ''அப்படியா?'' என்ற படி அலுவலகம் கிளம்பினேன். செய்வ தற்கு எவ்வளவோ வேலைகள் இருந்தன என்றாலும், எதுவும் செய்யாமல் மனசு எதை எதையோ நினைத்துக்கொண்டு இருந்தது. மதியம் ஒரு மணிக்கு என்னையும் அறியாமல் என் கால்கள், மகன் படிக்கும் பள்ளியின் வாசலில் நின்று கொண்டு இருந்தன.
சமையல் முடித்து வந்து வியர்வையுடன் பேசிக்கொண்டு இருக்கும் தாய்மார்கள், குழந்தைகளைத் தக்காளிகளைப்போல் கூடை கூடையாக அடைத்துக்கொண்டு கிளம்பக் காத்திருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள், கையில் குடையுடன்செய்தித் தாள் படிக்கும் தாத்தாக்கள், ஆங்காங்கே ஒன்றிரண்டு அப்பாக்கள் எனப் பள்ளியின் வாசல் பரபரப்பாக இருந்தது.
எல்லோருக்கும் நிழல் கொடுத்துக்கொண்டு இருந்த முதிர்ந்த பாதாம் மரத்தில் இருந்து, ஒரு சருகு காற்றில் அலையாடி யார் தோளிலோ விழுந்தது. அந்தக் கணம்... அந்தக் காட்சி... காலங்களின் சாட்சியாக அது நிற்பதை உணர்த்துவதுபோலப் பட்டது.
பெண்கள் கூட்டத்தில் நின்றிருந்த மனைவி என்னைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்காமல், ''ஆபீஸ்ல வேலை இருக்குன்னுட்டு, இங்க நிக்கிறீங்க? சொல்லவே இல்லையே'' என்றாள். ''திடீர்னு வரணும்னு தோணுச்சு'' என்றேன்.

மெயின் கேட் திறக்க... பூப்பூவாய் குழந்தைகள் பூத்துக்கொண்டு இருந்தன. என் பூ, என்னைப் பார்த்ததும் பரவசமாய்ப் புன்னகை பூத்தது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள். இந்த ஒரு நிமிடம் தரும் சந்தோஷத்தின் சக்தியில் இன்னும் ஒரு வாரம் என் சக்கரம் நிற்காமல் சுழலும்.
வழி முழுக்க மகன் கேட்டுக்கொண்டே இருந்தான். ''லீவுக்கு எங்கப்பா கூட்டிப் போறீங்க? என் ஃப்ரெண்டு லண்டன் போறான்!''
நான் அதிர்ச்சியடைந்து, ''லண்டன் எங்க இருக்கு தெரியுமா?'' என்று கேட்டேன்.
''இது தெரியாதாப்பா? லண்டன்... லண்டன்லதான் இருக்கு'' என்றான்.
லண்டனுக்கு அடுத்து அவன் பட்டியலில், தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் தீம் பார்க்குகள், கடலோர ரிசார்ட்டுகள், காரும் காரும் மோதும் விளையாட்டுத் திடல்கள் என வரிசையாகக் காத்திருந்தன. கடைசியாக, ''நீங்க லீவுக்கு எங்கப்பா போனீங்க?'' என்றான்.
''எங்க பெரியம்மா வீட்டுக்கு!'' என்றேன்.
''லண்டனா?'' என்றான்.
''அம்பத்தூர்!'' என்றேன்.
''அது எங்க இருக்கு?'' என்றான்.
நெஞ்சில் கைவைத்து ''இங்க இருக்கு!'' என்றேன்.
மகன் புரியாமல் விளையாடச் சென்றான்.
என் கோடை விடுமுறை, பெரும்பாலும் பெரியம்மா வீட்டிலேயே கழியும். அம்மாவைப் பெற்ற ஆயா வீட்டில் மாமாக்கள் இருப்பார்கள், மாமிகள் இருப்பார்கள், விளையாட அவர்களின் பிள்ளைகள் இருப் பார்கள். கூடவே, அன்பானதொரு கண்டிப்பும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயா வீடு. ஆகையால், வெளியில் சென்று விளையாட முடியாது. வீட்டுக்குள்ளேயே கேரம்போர்டு, சதுரங்கம், நாடுகளை நம் இஷ்டத்துக்கு விற்கும் டிரேடு விளையாட்டுகள், அதிகபட்சம் மொட்டை மாடியில் மாஞ்சா காத்தாடி.

மாறாக, அம்பத்தூரில் பெரியம்மா வீடு, அன்று நகரத்தில் ஒரு கிராமம். பனை மரங்கள் சூழ்ந்த புழல் ஏரியின் பக்கத்தில் ஆங்காங்கே பாம்புகள் திரிந்துகொண்டு இருந்த அம்பத்தூர், இன்றளவுக்கு அன்று வளர்ந்திருக்கவில்லை. மழைக் காலங்களில் தவளைகளின் கச்சேரியும் பின் தொடர்ந்து வரும் பாம்புகளின் சீற்றமும் இல்லாத நகரத்தில் யார் வந்து விளையாடுவார்? ஆகையால், கிராமத்தில் வளர்ந்த எனக்கு, பெரியம்மாவின் வீடு சொர்க்கமாகத் தெரியும்.
எங்கள் ஊரில் தொலைக்காட்சிப் பெட்டி ஒரே ஒரு வீட்டில் இருந்தது. அன்றைய நாட்களில் பஞ்சாயத்து ரேடியோ தாண்டி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ள கிராமம்... பணக்காரக் கிராமம். ஊரில் ஏழெட்டுத் தறிகள் வைத்து நடத்திக்கொண்டு இருந்த அந்த வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது.
அலாவுதீன் அற்புத விளக்கைப்போல அதை அவர் பாதுகாத்தார். வெள்ளிக் கிழமை 'ஒலியும் ஒளியும்’ பார்க்கவும், ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்கவும் கூட்டம் அலைமோதும். ஒலியும் ஒளியும் பார்க்க 15 காசுகள், படம் பார்க்க 25 காசுகள் எனக் கட்டணம் வசூலிப்பார். விளம்பர இடைவேளைகளில் தொலைக்காட்சியை அணைத்துவிடுவார். படம் ஆரம் பிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் பட்டுத் தறியைச் சுருட்டி, தொலைக்காட்சிப் பெட்டி கூடத்துக்கு வரும். கூடம் நிரம்பிவிட்டால், கதவை மூடிவிடுவார்கள். இப்படிப் படம் பார்த்த எனக்கு, பெரியம்மா வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி ஆச்சர்யம். யாரும் காசு கேட்காமல், ஒவ்வோர் வீட்டிலும் எப்படி டி.வி. இருக்கிறது என்பது எனக்கு இன்னுமோர் ஆச்சர்யம்!
இரண்டு அக்காக்கள், அண்ணன், தங்கை, தம்பி எனப் பெரியம்மாவின் பிள்ளைகளோடு நாளெல்லாம் ஆட்டம்தான். காலச் சக்கரம் திரும்பிச் சுழன்றா லும், அந்த நாட்கள் திரும்ப வராதவை. எத்தனை எத்தனை விளையாட்டுகள். புழல் ஏரியில் சேலை வீசி, மீன் பிடிப்போம். சில வேலைகளில் மீன் என நினைத்து, தலைப்பிரட்டைகளைப் பார்த்து ஏமாந்துவிடுவது உண்டு. இப்போது யோசிக்கையில், வாழ்க்கையே இந்த சுவாரஸ்யமான சின்னச் சின்ன ஏமாற்றங்கள்தானோ!
ஜல்லிக் கற்களை வைத்து ஐந்தாங் கல் ஆட்டம், ஏழாங் கல் ஆட்டம், பேப்பர் சுற்றிய கல் எறிந்து ஆடும் முதுகு பஞ்ச்சர், கடவுளின் கண்களும் கண்டுபிடிக்காமல் ஒளியும் கள்ளன் போலீஸ், ஏணியும் பாம்பும் அலைக்கழிக்கும் பரமபதம், மரப்பாச்சி பொம்மை, மையிருட்டில் பாண்டி ஆட்டம்... என விளையாடி முடிக்கையில், விடுமுறை முடிந்திருக்கும். இன்று என் மகன், வீடியோ கேம்ஸில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறான். அவன் கையில், காலத்தின் பாதையைக் கடக்கும் அவசரம்.
பெரியம்மா எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யும். மீன் வாங்கும், கறி வாங்கும், கிடைத்துஇருந்தால் மான்கூட வாங்கி இருக்கும். விடுமுறை முடியத் தொடங்கும் கடைசி வாரத்தில், எனக்காகத் துணி எடுத்து, அளவு கொடுத்து வரும்.
நுனியில் மஞ்சள்வைத்து அணியவைத்து அழகு பார்க்கும். ஏனோ அந்தத் தருணத்தில் அது அழத் தொடங்கிவிடும். அம்மா இல்லாத என்னை நினைத்து என்பது அப்போது புரியாத வயசு. தங்கை பிள்ளையானாலும் தன் பிள்ளைதானே!
ஆயினும் அப்படியும் சொல்லிவிட முடியாது. விடுமுறை நாள் சம்பவம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. பெரியம்மா மகனான தம்பி, பந்து எறிந்து தொலைக்காட்சியை உடைத்துவிட்டான். பெரியம்மா ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்கத் துரத்தியது. பிஞ்சு வயதின் வேகத்தில் நான் ஓடிச் சென்று அவனைப் பிடித்தபடி, ''பெரியம்மா! இங்க வாங்க மாட்டிக்கிட்டான்'' என்றேன்.
மூச்சு வாங்க ஓடி வந்த பெரியம்மா, கட்டையைக் கீழே போட்டுவிட்டு, ''ஏன்டா... என் புள்ள அடி வாங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?'' என்றது.
அந்தக் கணம் என் கால்களுக்குக் கீழே தரை நான்கு அடி பிளந்தது. உள் மனசில் இருந்து ஒரு குரல் சொன்னது 'உறவு வேறு... உதிரம் வேறு!’
'நதியின் குற்றமன்று நறும்புனல் இன்மை’ என்பது கம்பன் வாக்கு. காலம் கடந்து இப்போது ஒரு கவிஞன், கம்பனின் கைகளைப் பிடிக்கிறான். தோட்டம் என்றால் சருகுகளும் இருக்கும்தானே?
- அணிலாடும்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan