மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அப்பாவி சாதுவுக்கு ஏன் பிரதமர் பதவி?

##~##

வி.தீனதயாளன், சென்னை-40.

 பிரதமர் அலுவலகத்தின் மீது குற்றம் சாட்டியதாக பொதுக் கணக்குக் குழுவில் நிகழ்ந்த ரசாபாசம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (கொஞ்சம் அரசியல் பக்கமும் வரலாம் மதன் சார்!)

இதுபோன்ற எந்தக் குழுவிலும் அரசியல் பிரமுகர்கள் இடம் பெறுவதையே நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதுவே, வாஜ்பாய் இப்போது பிரதமராக இருந்திருந்தால், முரளிமனோகர் ஜோஷி இப்படி ஒரு குற்றச்சாட்டை வெளியிட இடம் கொடுத்து இருப்பாரா? (அட, அரசியலுக்கு வந்துட்டேன் போலிருக்கே!) சரி, இவர்கள்எதற்கு பிரதமரை புத்த பகவான் அளவுக்கு உயர்த்தி, அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்லக் கூடாது என்கிறார்கள் என்று புரியவில்லை. கோடானுகோடி ரூபாய் மக்கள்

ஹாய் மதன் கேள்வி - பதில்

பணத்தைக் கொள்ளை அடித்திருக் கிறார்கள். அதுபற்றி தீர விசாரிக்காமல் மழுப்புவதைப் பார்த்துக்கொண்டு இருக்க, நாம் என்ன மாங்காய் மடையர்களா? பிரதமரின் அமைச்சரவையில் நடந்த ஒரு மாபெரும் அநியாயம் இது. பிரதமருக்கு ஒன்றுமே தெரியாது என்றால், அப்படிப்பட்ட 'அப்பாவி சாதுக் குழந்தை’ நமக்குப் பிரதமராக இருக்க வேண்டுமா? பிரதமர் அலுவலகம் மீது எந்தத் தவறும் இல்லை என்றால், அதை நிரூபித்து, தங்கள் தூய்மையை நிலைநாட்டிக் காட்ட வேண்டி யதுதானே? பிரதமர் அலுவலகம் மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்தா குதித்தது?!

பஞ்ச்தர்மா, வெள்ளாளப்பட்டி.

சிலரின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க முடியவில்லையே?

எனக்கென்னவோ, மனைவியிடம் நீங்கள் உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது என்று தோன்றுகிறது!

விஜயலட்சுமி, சென்னை-74.

சாம்ராஜ்யத்துக்கும் ராம்ராஜ்யத்துக்கும் என்ன வேறுபாடு?

ஒன்று, குவான்டிட்டி. மற்றது, குவாலிட்டி!

வஜ்ரசுந்தரேசன், வேலூர்.

பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது?

ஹாய் மதன் கேள்வி - பதில்

  விண்ணில் திசைகள் கிடையாது. திசைக்கு காந்த துருவங்கள் வேண்டும்  Magnetic Poles. சூரியனை மையமாக வைத்துக்கொண்டால்கூட, பூமி அதை வட்டமாகச் சுற்றுகிறது. வட்டமாகச் சுற்றும் பூமி சூரியனுக்கு எந்தத் திசையில் இருக்கிறது?! சூரியனும் சுற்றுகிறது. பால் வீதியும் சுற்றுகிறது. சுற்றிக்கொண்டே அத்தனை 'காலக்ஸி’களும் ஒரு கோட்டில் அகண்ட கண்டத்தில் - சுழல் பந்து வீச்சுக்காரர் வீசும் பந்தைப்போலப் பயணிக்கின்றன. அங்கே... திசையாவது, மண்ணாவது?!

த.மகேந்திரன், நெய்விளக்கு.

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’

- என்பது திருவள்ளுவர் வாக்கு. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது ஒளவையாரின் வாக்கு. இதில் எந்த வழியைப் பின்பற்றுவீர்கள்?

  ரெண்டு வழிகளையும்! அதாவது, மதியாதார் வாசலை மிதிக்காமல், அதுவே அவர் என் வீட்டுக்கு வந்தால், இன்னா செய்தாரை நாணம்கொள்ளும் அளவுக்கு வரவேற்று... உபசரித்து நன்னயம் செய்வேன்!

ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.

அறிவாளியின் பகுத்தறிவு - முட்டாளின் பகுத்தறிவு... வித்தியாசம்?

  பகுத்தறிவில் தேர்ந்து விளங்கினால் தான், அறிவாளியாக முடியும். பகுத்தறிவு என்பது - தேர்ந்தெடுப்பது. வட்டமான சதுரம் என்பதுபோல, அது என்ன முட்டாளின் பகுத்தறிவு? Buridan's Ass என்று கதை உண்டு. ஒரு கழுதையின் இரண்டு பக்கமும் அதற் குப் பிடித்த உணவை வைத்தார்கள். எதை முதலில் சாப்பிடுவது என்று கழுதைக்குத் தேர்ந்தெடுக்க முடியாமல், கடைசியில் பட்டினியில் அது செத்துவிட்டது!

க.ரவிக்குமார், நெய்வேலி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

நல்ல பதில் என்பது, சரியான பதிலா? கேள்வி கேட்பவருக்குத் திருப்தியான பதிலா?

  தெரியவில்லை! உதாரணமாக, நீங்கள் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பி, கூடவே 'எப்படி என் கவிதை?’ என்று கேள்வியும் கேட்கிறீர்கள். நான் 'சகிக்கவில்லை’ என்று பதில் எழுதுகிறேன். அது சரியான பதிலாக இருந்தாலும், உங்களுக்குத் திருப்தியான பதிலா?!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மன நிம்மதியின் முகவரி என்ன?

  மன நிம்மதியில்... முகவரிகள் இருக்காது!