சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!
##~##
வெ
ளுத்து வாங்குகிற மழையில் தமிழகம் நனையத் துவங்கியதும், உடனே நம் நினைவுக்கு வருவது... பள்ளி விடுமுறை... குடை... மழைக்கோட்டு..? இவை எல்லாவற்றையும்விட, உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் ரமணன். சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில், களப்புயல் மையத்தின் இயக்குநர்.

அடித்துப் பெய்கிற மழையாகட்டும்... கொளுத்தி எடுக்கிற வெயிலாகட்டும், அதன் அளவீடுகளைக் குறிப்பதுதான் ரமணனின் வேலை.

''எப்பவும்போல, இப்பவும் மழையைப் பத்திப் பேசினால், வாசகர்கள் எரிச்சல் ஆயிடுவாங்க. அதனால் இப்ப கொஞ்சம் வெயிலோடு விளையாடுவோமே..!'' - குளிர் மழையைப் போலக் குளுகுளுவெனப் பேசுகிறார் ரமணன்.

''இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், வெயிலோட உக்கிரம் மிக அதிகம். அதனாலதான் அங்கே மிகப் பெரிய வெள்ளை நிறத் தொப்பியைத் தலைக்குப் போட்டுக்கறாங்க. அதேபோல, காட்டன் ஆடைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆந்திராவிலேயும் அப்படித்தான்... அங்கே எப்பவும் ஒரு வெப்ப அலை அடிச்சுக்கிட்டே இருக்கும். இப்ப சமீப காலமா, சென்னை மற்றும் தமிழகத்துலயும் வெப்ப அளவு கூடிக்கிட்டே வருது. இது மேலும் மேலும் அதிகமாகிட்டே போகுதுங்கறதுதான் கொடுமை!'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ரமணன்.  

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!

''நகரமயமாக்கல் என்கிற விஷயம்தான், இன்றைய உக்கிரமான வெயிலுக்கு அடிப்படை. நகரங்கள் விஸ்தரிக்கப்படுறதும், அங்கே மக்கள் அதிக அளவில் குடியேறி செட்டிலாகறதும் தப்பில்லை. வீடு கட்டும்போது பாத்ரூம், பூஜையறை, ஹால், கிச்சன்னு இடம் ஒதுக்கறோம். ஆனா, ரெண்டே ரெண்டு மரம் வளர்க்கறதுக்கு இடம் விட்டா குறைஞ்சா போயிடுவோம்?! நீங்க வளர்க்கற ரெண்டு மரம், உங்க வீட்டைத் தாக்கறதுக்குத் தயாரா இருக்கிற மொத்த வெப்பத்தையும் உள்வாங்கிக்கிட்டு, உங்க வீட்டுக்கு மெல்லிய குளிர்ச்சியைத் தரும். இதை யாருமே புரிஞ்சுக்கறது இல்லை. வீடோ, அப்பார்ட்மென்ட்டோ எது கட்டினாலும், அதைச் சுத்தியும் நடக்கறதுக்காக சிமென்ட் தரை போடுறோம். ஏன்... அந்த இடங்கள் மண்பாதையாவே இருக்கட்டுமே?! அந்த மண்பாதை ஓரத்துல செடிகளையோ மரங்களையோ வளர்க்கலாம். தவிர, தப்பித் தவறி கோடைல பெய்யற மழை நீர் மண்ணுல இறங்கி, ஒரு ஈரப்பதத்துடனே வீட்டை வெச்சிருக்கும்!'' - குளுகுளு ஐடியாக்களைத் தொடர்கிறார் ரமணன்.

''வீட்டு டெரஸ்ல 'ஒயிட்’ அடிக்கறது ஏன் தெரியுமா? அந்த 'வெள்ளை’, வெயிலோட உக்கிரத்தை, தான் ஏத்துக்கிட்டு, வீட்டுக்குள்ளே வெப்பம் தகிக்காம இருக்க உதவுது. உடம்பை ஒட்டின மாதிரி இருக்கிற ஜீன்ஸ் பேன்ட், டைட்டா போட்டிருக்கிற கறுப்புச் சட்டைன்னு பைக்ல போற பசங்களைப் பார்க்கும்போது, பாவமா இருக்கும். ஏன்னா, கறுப்பு நிறம் வெயிலின் மொத்த உக்கிரத்தையும் சேமிச்சு வெச்சுக்கும். அது மெதுவா நம்ம உடம்புக்குள்ளேயேதான் இறங்கும். இதனால உடம்புல எந்நேரமும் படர்ந்திருக்கற வியர்வை, கசகசப்பு, அதனால ஏற்படற வியர்க்குரு, கடைசியில் அதுவே புண்ணாகவும் அக்கியாகவும் வளர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, வெள்ளை நிற ஆடைகளை உடுத்தறதுதான் நல்லது.

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!

இன்னொரு விஷயம்... ஆண்கள், கழுத்துப் பிடரி வரைக்கும் முடியை வளரவிடுறதும் தப்பு. அந்தக் காலத்துல உச்சிக்குடுமியும், அப்புறமா வந்த சம்மர் கட்டிங்கும் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்கறதுக்கான கேடயங்களா இருந்துது. அதேபோல, அடிச்சுத் தாக்கற வெயில்லேர்ந்து கிளம்புற 'அல்ட்ரா வயலட்’ கதிர்களின் தாக்கத்தால, தோல்களில் பிரச்னை வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதனால, கைகளையும் முகத்தையும் காட்டன் துணிகளால் மறைச்சபடி, கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு வாகனங்கள்ல போறதுதான் நல்லது!

'கோடை' டிப்ஸ் தருகிறார் 'மழை' ரமணன்!

அப்புறம்... ஜில் வாட்டர் வேண்டாம்; உணவில் காரம் அதிகம் சேர்க்காம இருக்கறது நல்லது. வயசானவங்களும் குழந்தைங்களும் வெயில்ல தலைகாட்டாம இருக்கணும்.  காலை, ராத்திரி என ஒரு நாளைக்கு ரெண்டு குளியல் போடறது, உடம்புச் சூட்டையும் கண் எரிச்சலையும் குறைக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ள காய்- கனிகளைச் சேர்த்துக்கறது, உடம்புக்குத் தேவையான தண்ணீரைத் தந்து, தெம்பைக் கொடுக்கும்.

கோடை மழையை வரவேற்க வேண்டாமா? வீட்டைச் சுற்றியோ, மொட்டைமாடியிலேயோ செடி- கொடிகளை வளர்க்கறதுக்கு இனிமேலாவது முயற்சி பண்ணுவோம். அப்படிப் பண்ணினாத்தான், வெயிலின் தகிப்பிலேருந்து தப்பிக்கலாம்; ஏன்.. வெயிலோடயே விளையாடலாம்!'' எனச் சொல்லும் ரமணன் தன் வாழ்வின் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இங்கே சொல்கிறார்.

''போன வருஷம் கோடையில, அக்கினி நட்சத்திர வேளைல, என் மகள் நிவேதிதாவுக்குச் சென்னையில் கல்யாணம். பாவம்... உறவுக்காரங்களும் நண்பர்களும் வெயில்ல எப்படித்தான் வருவாங்களோனு நினைச்சுட்டிருக்கும்போதே, வருண பகவான் அழையா விருந்தாளியாக வந்து வெளுத்து வாங்கிட்டார். அந்த விருந்தாளியின் கூடவே ஒரு முரட்டு விருந்தாளியும் வந்தார். அவர்- லைலா புயல்!'' - சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிற ரமணனின் சொந்த ஊர்... ஒருகாலத்தில் 'தண்ணி இல்லாத ஊரு’ என்று பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் ஜில்லா!

எப்பூடி?!

- வி.ராம்ஜி
படங்கள்: எம்.உசேன், வீ.நாகமணி