
புதுடெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குளறுபடியால் மத்திய அரசுக்கு ரூ.12,489 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அது, கடந்த 2006-2007 ஆம் நிதி ஆண்டில் இருந்து 2009- 2010 -ம் நிதி ஆண்டு வரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த ஒட்டுமொத்த வருவாயை தணிக்கை செய்தது பற்றிய அறிக்கை ஆகும்.
அந்த அறிக்கையில், ''மேற்கண்ட காலகட்டத்தில் ரிலையன்ஸ், டாடா டெலிகாம், வோடஃபோன், ஏர்டெல், ஏர்செல், ஐடியா ஆகிய 6 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த வருவாயை குறைத்துக் காண்பித்துள்ளன. அவர்கள் குறைத்து காண்பித்த மொத்த தொகை ரூ.46 ஆயிரத்து 45 கோடியே 75 லட்சம் ஆகும்.
டீலர்களுக்கு கமிஷன் வழங்கியது, இலவச டாக் டைம் சலுகை வழங்கியது, ரோமிங் கட்டண தள்ளுபடி போன்ற வகையில், தங்கள் வருவாயை குறைத்துக் காண்பித்துள்ளன. மேலும், முதலீடுகளை விற்றதால் கிடைத்த லாபம், வட்டி வருவாய் போன்றவற்றை சேர்க்காததன் மூலமும், வருவாயை குறைத்து காட்டின.
இதனால், மத்திய அரசுக்கு ரூ.12 ஆயிரத்து 489 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய நுழைவுக்கட்டணத்தை சரிசெய்த விதத்திலும் மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரத்து 476 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ''இந்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு பிறகு, பொது கணக்கு குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். அக்குழுவின் சிபாரிசே இறுதியானது.
ஆனாலும், கடந்த 2009-2010 -ம் நிதி ஆண்டில் இருந்து 2010-2011-ம் நிதி ஆண்டு வரையிலான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்கு புத்தகங்கள் சிறப்பு தணிக்கை செய்யப்படும். அவர்கள் ஏதேனும் கட்டண பாக்கி வைத்துள்ளார்களா என்பதை கண்டறிய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.