மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நாடக மேடையில் சில கேள்வி பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ரூபாய் நோட்டு மாலைகள் போடுவது சரியா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

சரியே! மற்ற எந்த நாட்டிலும் இந்திய மக்களுக்கு இருப்பதுபோன்ற இளகிய மனதைக் காண முடியாது. மக்களுக்காக, இரவு பகலாக உழைக்கிறவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? அவர் குடும்பம் பட்டினிகிடக்க முடியுமா? தலைவர் அரிசி, பருப்பு போன்ற மளிகைச் சாமான்கள் வாங்கவும், சொக்காய் தைத்துக்கொள்ளவும் ஏதோ நம்மாலான உதவி என்று ரூபாய் நோட்டுகளை மாலையாகப் போடுகிறார்கள். கையில் பணம் கொடுத்தால், வாங்கக் கூச்சப்படுவதும் ஒரு காரணம்!

இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

சிவாஜியின் வயதான காலத்தில் அவருக்குச் சரியான படங்களைக் கொடுக்காமல் வீணடித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே, ரஜினியையும் கமலையும் வீணடித்துக் கொண்டு இருக்கிறார்களா? (அமிதாப் மட்டும் கலக்குகிறாரே!)

ஹாய் மதன் கேள்வி - பதில்

அப்படிச் சொல்ல முடியாது. நடிகர் திலகம், நடிக்க மட்டுமே பிறந்தார். அது மட்டுமே அவருக்குத் தெரிந்துஇருந்தது. ரஜினி, கமல் அவரைவிட எச்சரிக்கையாக காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள். இருவரும், போகப்போக, வயதுக்கேற்ற படங்களை உருவாக்கிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்!

##~##

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

உறவினர்களை ஒட்டுமொத்தமாக உதறித் தள்ளிவிட்டு, வாழ்க்கையை முழுமையாக ஓட்டிவிட முடியுமா?

ஓட்டிவிட முடியுமே. ஆனால்... எதற்கு?!

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

'உலகம் ஒரு நாடக மேடை. அதில், நாம் அனைவரும் நடிகர்கள்’ என்கிறார்கள். இந்த நாடகம் தேவைதானா?

மிக்கேல் ராஜ்! 'இந்த நாடக மேடை தேவைதானா?’ என்று கேட்பதுகூட உங்களுக்குத் தரப்பட்ட 'டயலாக்’தான் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய பல ஜாம்பவான்களின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த வரிசையில் தங்களைக் கவர்ந்தவர்கள்..?

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

அமெரிக்கா மட்டும் ஏன் இவ்வளவு புகழ்பெற்ற நாடாக, எல்லோரும் செல்லவும் மற்றும் அங்கேயே இருக்க விரும்பும் நாடாக உள்ளது?

என்னைக் கவர்ந்த ஜாம்பவான்களின் 'லிஸ்ட்’ நீளமாகப் போய்விடும். அதில் லேட்டஸ்ட் ஆக இடம் பெறுபவர் சுஜாதா! எஸ்.ராமகிருஷ்ணன் 'என்றும் சுஜாதா’ என்று தற்போது ஒரு புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் (உயிர்மை பதிப்பகம்). அகண்ட கண்டத்தையே சுற்றி வரும் சுஜாதாவின் எழுத்து வீச்சை ரசனையோடு நம் முன் வைக்கும் அந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன், தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜாம்பவான்பற்றியும் இப்படி ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அட, ரெண்டு கேள்விக்கும் இந்த ஒரு பதிலுக்கும் என்ன சம்பந்தம்? அதான்... அந்தப் புத்தகத்தில் 'அமெரிக்கா’ என்று சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்று இருக்கிறது. படியுங்கள்!

ப்ரியதர்ஷினி, சென்னை-78.

ஏழேழு ஜென்மத்துக்கும் இதே மனைவி - கான்செப்ட்! மதனுக்குப் பிடித்திருக்கிறதா?

போன ஜென்மத்தில் இதே கேள்விக்கு, 'பிடித்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டேன். வாக்கு மாற முடியாது!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

'வெயிட்’டான பார்ட்டியாக இருப்பது எப்போது ஆபத்தாக முடியலாம்?

தெரு நாய் துரத்தும்போது!