மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 20

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

##~##

தாமிரபரணிக்குச் செல்லும் வழியில், குறுக்குத் துறை ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் திறந்தார்கள். 'சிட்டி இங்கிலீஷ் நர்சரி ஸ்கூல்’ என்ற அந்தப் பள்ளிக்கூடத்தின் முதல் செட் மாணவர்கள், நானும் என் நண்பன் குஞ்சுவும். இப்போது உள்ள மாணவர்கள் மாதிரி அதிகம் பொதி சுமக்காமல், ஒரே ஒரு பை மட்டும்தான் பள்ளிக்குக் கொண்டுசெல்வோம். அம்மன் சந்நிதியில் காந்திமதியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் குஞ்சுவின் வீட்டில் அவனை ஏற்றிக்கொண்டு, பின்பு எதிர்க் கோடியில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வரும் சைக்கிள் ரிக்‌ஷா. அழுகையும், கண்ணீருமாக, வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்குச் செல்லும் எங்களைக் குஷிப்படுத்துபவர், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் செல்லப்பா மாமாதான்.

 வாழ்க்கையில் நாங்கள் பயணித்த முதல் வாகனமான சைக்கிள் ரிக்‌ஷாவை ஓட்டியதன் மூலம், குடும்பத்தார் தவிர வெளி உலகத்தில் நாங்கள் அறிந்த, பழகிய முதல் வேற்று ஆள் செல்லப்பா மாமா. மிகக் குறுகிய காலத்திலேயே, செல்லப்பா மாமா எங்கள் பிஞ்சு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். ஒரு நைலான் கயிற்றின் முனையில் கட்டப்பட்ட எவர்சில்வர் கிண்ணம்தான் சைக்கிள் ரிக்‌ஷாவின் பெல். இப்போதும் எங்காவது 'க்ளிங்’ என்ற அந்த பெல் சத்தத்துக்கு நெருக்கமான ஒலியைக் கேட்க நேர்ந்தால், சட்டென்று ஒரு சில நொடிகள் செல்லப்பா மாமாவின் முகம் என் மனதில் வந்துபோகிறது.

மூங்கில் மூச்சு! - 20

கட்டுமஸ்தான உடற்கட்டுகொண்டவர் செல்லப்பா மாமா. பிள்ளைகள் எங்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு சைக்கிள் ரிக்‌ஷாவை அவர் உந்தி அழுத்தும்போது, அவரது கை, கால் தசைகளைப் பார்ப்பதற்கு ஆசை ஆசையாக இருக்கும். 'மாமாக்கு பாடில எப்பிடி கட்ஸ் விளுது, பாத்தியா! நாமளும் பெரிய ஆள் ஆகி இதைவிட பெரிய பெரிய ரிக்‌ஷால்லாம் ஓட்டணும்ல’ என குஞ்சுவும் நானும் பேசிக்கொள்வோம். 'எல, ஒங்களுக்கு எதுக்குல இந்தக் கஷ்டம்லாம்? இது என்னோட போகட்டும். நீங்க நல்லாப் படிச்சு ஆபீசராகி, பிளஷர் கார்ல போகும்போது, மாமா ஒங்கள 'யேலா, எங்கல போறிய’ன்னு கேக்கணும். அதான் என் ஆச!’ இதைச் சொல்லி முடிக்கும்போது, செல்லமாக ஒரு கெட்ட வார்த்தை சொல்லாமல் மாமா முடித்தது இல்லை. ஆக, எங்களுக்கு முதலில் கெட்ட வார்த்தை சொல்லிக்கொடுத்தவரும் செல்லப்பா மாமாதான்.

மூங்கில் மூச்சு! - 20

எல்.கே.ஜி-யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஏழு வருடங்கள் நாங்கள் செல்லப்பா மாமாவின் சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் பள்ளிக்குச் சென்று வந்தோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு, ரிக்‌ஷா ஓட்ட மாமா அனுமதிப்பார். வளைத்து, ஒடித்து நாங்கள் ஓட்டும்போது, ஹேண்டில் பாரைப் பிடித்தபடி ரிக்‌ஷாகூடவே ஓடி வருவார். 'ஆங்... அவ்வளவுதான். இடுப்ப வளைக்காதல... பாத்துப் பாத்து, நொடி’. பள்ளத்தில் ரிக்‌ஷா இறங்கிவிடாமல், திருப்பிவிடுவார். பள்ளத்தை மாமா நொடி என்றே சொல்வார். ஆற்றுக்குச் சென்று திரும்பிக்கொண்டு இருப்பவர்களில் யாராவது நாங்கள் ரிக்‌ஷா ஓட்டுவதைப் பார்த்துவிட்டால், எங்களுக்குப் பெருமை பிடிபடாது. 'ரிக்‌ஷாதான் ஒலகத்துலயே ஓட்டுறதுக்குக் கஷ்டமாம்ல. இத ஓட்டியாச்சுன்னா, ஹெலிகாப்டரே ஈஸியா ஓட்டிரலாமாம்’- குஞ்சு சொல்வான். இன்று வரை நான் ஓட்டிய ஒரே கனரக வாகனம் சைக்கிள் ரிக்‌ஷாதான்.

மூங்கில் மூச்சு! - 20

அம்மன் சந்நிதியில் இருந்து சிட்டி இங்கிலீஷ் நர்ஸரி ஸ்கூலுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்ல அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால், எங்களுக்கு அது ரொம்ப நேரம் ஆவதுபோல் இருக்கும். காரணம், செல்லப்பா மாமா சொல்லும் கதைகள். 'எல, நேத்து மூந்திக்கருக்கல்ல ஆத்துல குளிச்சுட்டு வரும்போது, நல்லா இருட்டிட்டு, கேட்டேளா. வார வளில, நம்ம படித்துறை எசக்கியம்மன் தலைய விரிச்சுப்போட்டு உக்காந்திருக்கா. நல்ல வேள, கையோட திருநாறு கொண்டுபோயிருந்தேன். நெத்தி நெறைய அள்ளிப் பூசிட்டு திரும்பிப் பாக்காம நடந்துட்டெம்லா... இதே இது வேற ஒருத்தனா இருந்தா, அந்தாக்ல அங்கனயே கருப்பந்துறைல கொண்டுபோயி வச்சிர வேண்டியதுதான்’- ரிக்‌ஷாவை அழுத்திய படியே மூச்சிரைக்க மாமா சொல்லும்போது, அந்த வயதுக்கே உரிய பகுத்தறியாப் பக்குவத் துடன் பயந்தபடி கேட்போம்.

இதுபோன்ற கதைகள் சொல்லும்போது மூச்சிரைக்கிற செல்லப்பா மாமாவுக்கு, பாடும்போது ஏனோ மூச்சு வாங்கியது இல்லை. தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான செல்லப்பா மாமா பாடித்தான், எம்.ஜி.ஆரின் பல பாடல் களை நாங்கள் முதன்முதலாகக் கேட்டுஇருக்கிறோம். எந்த ஒரு பாடலையும் இடை வரியில் இருந்து பாடுவதுதான் மாமாவின் வழக்கம். திடீரென்று, 'ராணியின் முகமே, ரசிப்பதில் சுகமே, பூரண நிலவோ, புன்னகை மலரோ’ என்று பாடுவார். மாமா கூடவே பாடி வந்து, அந்தப் பாடலின் முதல் வரி 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்பதைக் கண்டுபிடிப்போம். செல்லப்பா மாமாகூடவே இந்தப் பாடலை ஒருமுறை நாங்கள் பாடியபோது கடுமையாக ஏசினார். 'எல, அறஞ்சு போடுவேன் அறஞ்சு. படிக்கிற பிள்ளைய இந்த மாரிப் பாட்டுல்லாம் படிக்கக் கூடாது என்னா?’ பிறகு தனக்குத்தானே, 'என் தப்புத்தான். ஒங்க முன்னாடி இந்தப் பாட்டுல்லாம் படிச்சிருக்கக் கூடாது’ என்று சொல்லிக்கொண்டார். திருநெல்வேலி பகுதிகளில், பாட்டு பாடுவதை பாட்டு படிப்பது என்றுதான் சொல்வார்கள்.

இன்னொரு பாடலை மாமா அடிக்கடி படிப்பார். வழக்கம்போல அதுவும் இடை வரியில் இருந்துதான். 'உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட இருட்டில் பிரிகின்றது. வெளிச்சம் வரும்போது உடலை நிழல் தேடி இணைய வருகின்றது’ என்ற வரிகள் அந்த வயதில் இருந்தே எனக்கு மனப்பாடம். 'உரிமைக் குரல்’ திரைப்படத்தின் 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்’ என்ற அற்புதமான வரிகள்கொண்ட அந்த எம்.ஜி.ஆர். படப் பாடலை செல்லப்பா மாமா கூடவே நாங்கள் பாடும்போது, மாமா ஏசியது இல்லை. 'வாள்க்கைல இந்தப் பாட்ட ஒருத்தன் ஒரே ஒரு மட்டம் ஊனிக் கேட்டுட்டான்னா, அப்பொறம் ஆயுசுக்கும் அவனால மறக்க முடியாதுடே. ச்சை... பாட்டா இது’ என்று சொல்லிவிட்டு, வழக்கமாக எங்களை விளிக்கிற அந்த கெட்ட வார்த்தையைச் சொல்வார்.

செல்லப்பா மாமாவின் ரிக்‌ஷாவில் உள்ள எம்.ஜி.ஆர். புகைப்படங்களை அகற்றச் சொல்லி ஒருமுறை பள்ளி நிர்வாகம் சொன்னதற்கு, செல்லப்பா மாமா ஒரே ஒரு பதில் சொன்னார். 'அப்பிடின்னா, நான் இனிமெல் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு ரிக்‌ஷா ஓட்டலெம்மா’. அதற்குப் பிறகு, அதுபற்றி யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை. செல்லப்பா மாமாவுக்கு எம்.ஜி.ஆர்தான் நெல்லையப்பர்.

எம்.ஜி.ஆர் படங்கள் தவிர வேறு எந்தப் படங்களையும் பார்க்காதவர். 'எல, அவாள் எல்லாத்துக்கும் ஒரு படம் நடிச்சிருக்காள்லா! என்னைய மாதிரி ஆளுகளுக்கு... ரி‌ச்சாக்காரன். பால் கறக்காம் பாரு என் சேக்காளி, அதாம்ல... கோவிந்தன் மாமா. அவனுவொளுக்கு... மாட்டுக்கார வேலன். நம்ம தூத்துக்குடி, திருச்செந்தூர்ல மீன் புடிக்காங்கள்லா... அவங்களுக்கு படகோட்டி’. 'எம்.ஜி.ஆர நேர்ல பாத்திருக்கேளா மாமா?’ என்று கேட்டதற்கு, 'ஒரே ஒரு த்ரிப்பு, சாப்டர் ஸ்கூல்ல வச்சுப் பாத்திருக்கென். ஏ பாவி, என்னா கூட்டங்கெ. மூச்சு முட்டிட்டு. மஞ்ச மஞ்சேன்னு இருந்தாரு’. எங்களுக்கு எம்.ஜி.ஆரை எல்லாம் நேரில் பார்க்க முடியும் என்பதே நம்புவதற்குச் சிரமமாக இருந்தது.

ஐந்தாம் வகுப்பின் கடைசிப் பரீட்சை அன்று வீட்டில் எங்களை இறக்கிவிடும்போது, செல்லப்பா மாமா கண் கலங்கினார். முள் முகம் குத்த, எங்கள் கன்னங்களில் முத்தினார். 'எல, எங்கென பாத்தாலும் மாமான்னு கூப்புடணும், என்னா?’ எங்களுக்கும் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. அதன் பிறகு ஆறாம் வகுப்பில் இருந்து சாஃப்டர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டோம். பத்தாம் வகுப்பு வரைக்கும் நடந்தும், பின் ப்ளஸ் டூ படிக்கும்போது, வீட்டில் அழுது அடம்பிடித்து வாங்கிய சைக்கிளிலும் செல்ல ஆரம்பித்தோம்.

நீண்ட நாட்கள் கழித்து, செல்லப்பா மாமாவை சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராகப் பார்த்தோம். 'இப்பொ ரிச்சா ஓட்டுறதில்லலெ’. நாங்கள் கேட்பதற்கு முன் மாமாவே சொன்னார். 'நீங்க போனதுக்கப்புறம், ஒண்ணும் சரியில்லடே. இப்போ இருக்குற பிள்ளையள்லாம், ரிச்சாக்காரா ரிச்சாக்காரான்னு கூப்பிடுது. அதுகள சொல்லி என்னத்துக்கு? வீட்ல, அவங்க அம்மையும் அப்பனும் சொல்லிக்குடுக்குறதத்தானெ அதுக சொல்லும்? ஒண்ணும் சரிப்பட்டு வரல. அதான் இங்கனெ வந்துட்டேன். கலர் குடிக்கேளாலெ?’ வேண்டாம்... வேண்டாம் என்று மறுக்க, டொரினோ வாங்கிக் கொடுத்தார்.

பின்பு, நான் சென்னைக்கு வந்த பிறகு, குஞ்சுவிடம் போனில் பேசும்போது எல்லாம் செல்லப்பா மாமாவைக் கேட்கத் தவறுவது இல்லை. ஒருமுறை குஞ்சு சொன்னான். 'அத ஏன் கேக்கே? அன்னைக்கு ஒருநாள் சங்கர் கஃபே பக்கத்துலவெச்சு செல்லப்பா மாமாவப் பாத்தேன். ஆளு கொஞ்சம் அசந்த மாதிரி இருந்துது. 'மாமா... ரூவா கீவா வேணுமா?’ன்னு கேட்டதுக்கு, அடிக்க வந்துட்டா. 'எல, நான் ஒனக்குக் குடுக்கணுமா, நீ எனக்கு குடுக்கணுமால?’னு பேயாக் கோவப்பட்டுட்டா. சரின்னு அந்தாக்ல சங்கர் கஃபேக்குக் கூட்டிட்டிப் போயி, ரவா தோசையும் காப்பியும் வாங்கிக் குடுத்தேன். அதுக்கும் தாந்தான் பில்லு குடுப்பேன்னு சண்ட போட்டுக் குடுத்துட்டா’. எனக்கு உடனே செல்லப்பா மாமாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. ஆனால், அது உடனே நடக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து எனது திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு செல்லப்பா மாமாவைப் பார்ப்பதற்காக சென்ட்ரல் தியேட்டருக்கு நானும் குஞ்சுவும் போனோம். கட்டுமஸ்தான உடற்கட்டுடன் என் மனதில் இருந்த செல்லப்பா மாமாவின் உருவம் முற்றிலும் மாறி இருந்தது. உடல் மெலிந்து, தலை முடி அனைத்தும் நரைத்து, வாயில் பற்களே இல்லை. பொக்கை வாயுடன் சிரித்தபடி வரவேற்றார். திருமண அழைப்பிதழில், 'உயர்திரு செல்லப்பா மாமா’ என்று எழுதி இருந்தேன். வெளிச்சத்தில்வைத்து அழைப்பிதழைப் பார்த்தார்.

'என்னைக்குல கல்யாணம்? அடுத்த மாசம் ஒம்போதாம் தேதியா? மாமா ஒனக்கு நெறைய செய்யணும்’-சந்தோஷத்தில் கண்கள் நனையச் சொன்னார். 'அதுல்லாம் ஒண்ணும் வேண்டாம். கோட்டிக்காரன் மாதிரி தேவையில்லாமக் கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருக்காதே. நீ வந்தேன்னாலே போதும் மாமா’- குஞ்சு சத்தம் போட்டான். 'அதெப்பிடில? கைய்யில செளிப்பா ரூவா இருந்தாத்தானெ, மருமகன் கல்யாணத்த போட்ஸா நடத்தலாம்!’- உரிமையுடன் சொன்னார்.

மூங்கில் மூச்சு! - 20

அழைப்பிதழில் உள்ள விவரங்களை எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டு இருந்தவரிடம், 'மாமா, கைல ரூவா இல்லேன்னு வராம இருந்துராதே. நீ வாரது மட்டுந்தான் எனக்கு முக்கியம்’ என்றேன்.  'கவலப்படாதெ. முன்னாடி நின்னு ஒன் கல்யாணத்த மாமாதான் நடத்துவேன். சந்தோசமாப் போயிட்டு வா’- பல் இல்லாப் பொக்கை வாயால் இதைச் சொல்லிவிட்டு, செய்யது பீடி நாற்றத்துடன், நரைத்த முள் முகம் என் கன்னத்தில் பதிய முத்தம் கொடுத்தார். 'இப்பொ ஒன் தாடி எனக்குக் குத்துது’ என்று என்னைப் பார்த்து சிரித்தபடி சொல்லும்போது, கூடவே வழக்கமாக எங்களைப் பார்த்துச் சொல்லும் கெட்ட வார்த்தையையும் சொன்னார்.

'வாத்தியார்’ பாலு மகேந்திரா, அரசியல் தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், தமிழறிஞர் பா.நமச்சிவாயம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அறிவுமதி அண்ணன் போன்றோர் வந்திருந்து வாழ்த்திய என் திருமணத்துக்கு, செல்லப்பா மாமா கடைசி வரை வரவில்லை!

- சுவாசிப்போம்...