Published:Updated:

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

'வேலை இல்லையா... கவலை வேண்டாம். உடனே அழையுங்கள்... 9894......', 'மாணவர்கள், பெண்கள், ஓய்வு

பெற்றவர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. முதலீடு இல்லை. அலைச்சல் இல்லை. கை நிறையச் சம்பாதிக்க உடனே தொடர்புகொள்ளுங்கள்!', 'முழு நேரம் 50,000. பகுதி நேரம் 25,000. சனி, ஞாயிறுகளில் மட்டும் 10,000. கல்வித் தகுதி தேவை இல்லை. வருமானத்துக்கு நல்ல வாய்ப்பு...'

- இப்படி எத்தனையோ விளம்பரங்களை பேருந்துகள், மின்தொடர் வண்டிகள், பேருந்து நிலையங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றில் பார்த்துப் படித்துக் கடந்து வந்திருப்பீர்கள். நம்மில் சிலர் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டும் இருப்பீர்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்று சில பல ஆயிரங்களைப் பெற்றும், இழந்தும் இருப்பீர்கள். இந்த விளம்பரங்களுக்குப் பின் இருப்பது ஒரு மாய வலை. அந்த வலையில் சிக்கியோர் தற்கொலை வரை சென்றதுகூட உண்டு. இந்த நெட்வொர்க் வில்லன் களின் முதல் குறி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரை!

அது என்ன M.L.M?

'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' (Multi-level Marketing) என்பதன் சுருக்கமே M.L.M. இதனை நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்றும், செயின் மார்க்கெட்டிங் என்றும் அழைப்பார்கள். அதாவது, பொருட்களையோ அல்லது சில சேவைகளையோ உங்களுக்குத் தெரிந்தவர்களிடத்தில் பரிந்துரை செய்து, அவர்களை வாங்கச் செய்வது. அவர்கள் மூலமாக இன்னும் சிலரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிடுவது. இதுதான் எம்.எல்.எம். இப்படி எத்தனை பேரிடத்தில் நீங்கள் பொருட்களை விற்கிறீர்கள், எத்தனை பேரைச் சேர்த்துவிடுகிறீர் கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைக்கும். நீங்கள் அறிமுகப் படுத்தும் இருவர், தங்கள் பங்குக்கு தலாமேலும் இருவரைச் சேர்த்து விட வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கீழே தலா இரண்டு பேர். இப்படியே அது ஒரு சிலந்தி வலை போலப் பெருகிக்கொண்டே போகும்.

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

இந்த எம்.எல்.எம்-ல் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று, பொருட்களை விற்பது. இன்னொன்று, 'பணத்தைக் கட்டு, ஆள் சேர்,கமிஷன் பிடி!' வகை. முதல் வகையில்கூட பெரிய ரிஸ்க் இல்லை. ஆனால், இரண்டாவது வகை நமது சேமிப்பைக் கரைத்துவிடுவ துடன், நண்பர்கள், உறவினர்களிடத்தில் நமது பெயரைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிக் குழியில் தள்ளிவிடும். 'கோல்ட் குவெஸ்ட்', 'காந்தப் படுக்கை போன்ற திட்டங்கள் இது போன்ற திட்டங்களுக்கான உதாரணங்கள். தங்கக் காசு என்று சொன்னதை நம்பி வாங்கி, பணத்தை இழந்து ஏமாந்து தவித்தவர் களை தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா என்ன?

99 சதவிகிதம் மக்கள் இந்தத் திட்டத்தால் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறார் கள்.

ப்போது முதல் பத்தி விளம்பரங்களுக்கு வருவோம். நீங்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்து, அவர்களைத் தொடர்புகொண்டால், ஒரு நட்சத்திர அந்தஸ்துகொண்ட ஹோட்டலுக்கு வரச் சொல்வார்கள். அதிலும் சில நிறுவனங்கள் உங்கள் வீட்டுக்கே கார் அனுப்பி உங்களை அழைத்து வருவார்கள். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் உங்களை 'வாங்க சார்... எப்படியிருக்கீங்க? வீட்ல எல்லோரும் சௌக்கியமா?' என்று பல நாள் பழகிய நண்பர்களைப்போல மென்மையாகத் தோள் அணைத்து அழைத்துச் செல்வார்கள். மீட்டிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்று குஷன் இருக்கையில் அமரவைப்பார்கள். குளிர்பானம், டீ என உங்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அங்கே எல்லோ ரும் கோட், சூட் அணிந்து 'டிப் டாப்' ஆசாமிகளாக இருப்பார்கள். அதன் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு எல்.சி.டி-யில் பவர் பாயின்ட் ஒளிரும். டிப் டாப் ஆசாமிகளுள் ஓரிருவர் மேடைக்கு வந்து, அந்தத் திட்டத்தைப்பற்றி விளக்குவார்கள். சிலர், தான் எந்தளவு வறுமையில் இருந்தேன்... இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு படிப்படியாக 'உழைத்து' முன்னேறி இன்று கார், பங்களா, சந்தோஷமான குடும்பம் என வளமாக இருக்கிறேன் என்று வாயால் வலை பின்னுவார். நீங்களும் அசந்து போய் அவர்கள் சொல்வதையே கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்.

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

அதன் பிறகுதான் மெயின் சினிமா ஆரம்பிக்கும். குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு வாராவாரம் அன்பளிப்பு 'செக்' வரும் என்று வலை விரிப்பார்கள். தொடர்ந்து, வாராவாரம் நடக்கும் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு, நீங்கள் தெரிந்தவர், அறிந்தவர் களையும் அழைத்து வர வேண்டும். அவர் களை உங்களுக்குக் கீழ் உறுப்பினர் களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அவர்களுக் குக் கீழ் ஆட்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குக் கீழ் சேரும் ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க... உங்களுக்கு வரும் 'செக்' தொகையும் அதிகரிக்கும் என்பார்கள். நீங்களும் கனவுலகில் மிதந்து, 'ஒரே பாடலில் ஓஹோ! வாழ்க்கை அந்தஸ்தை அடையலாம்!' என்று கனவு கண்டு, அவனைப் பிடிக்கலாம், அவன் மூலம் இவனைப் பிடிக்கலாம், நம்ம அத்திம்பேர் மூலம் அந்த அக்கவுன்டன்ட்டை வளைத்துவிடலாம், மச்சான் மூலம் அந்த மாட்டு டாக்டரைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போடுவீர்கள். நீங்கள் பணம் செலுத்திவிட்டு, ஒவ்வொருவரின் வீட்டுப் படி ஏறி இறங்கும்போதுதான் உங்களுக்கு விஷயமே புரியவரும். 'சார், எனக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்துவிட்டேன். அப்போ ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்தது. அதுக்கு அடுத்த வாரம் செக் வரலையே!' என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, 'உங்களுக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்தீங்க. ஆனா, அவங்களுக்குக் கீழே ரெண்டு பேர் சேரலையே! சேர்க்கச் சொல்லுங்க' என்பார்கள். அப்போதுதான், 'அடடா... புதைகுழிக்குள் கால் வைத்துவிட்டோமே!' என்று உணர்வீர்கள். அப்போது உங்களின் ஒரு கால்தான் அந்தப் புதைகுழியில் சிக்கி இருக்கும். கொஞ்சம் சுதாரித்தால்ஒற்றைக் காலை வெளியே இழுத்துக்கொள்ளலாம். ஆனால், விட்ட காசைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மேலும் மேலும் அலைபாய்ந்தால், உங்களை நம்பி வந்தவர்களுக்கும் சேதாரம் சேர்ப்பதில்தான் முடியும்!

ஆரம்பத்தில் வளையத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் பணத்தை வேறு ஒருவருக்கும், வேறு ஒருவருக்குக் கிடைக்கும் பணத்தை உங்களுக்குக் கீழே இருப்பவருக்கும், அவருக்குக் கீழே இருப்பவருக்குச் சேர வேண்டிய பணத்தை உங்களுக்கும் கொடுத்து பணத்தைப் புழக்கத்தில் விடுவார்கள். நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக! அது மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று வாரங்கள் வரை வரும். அதன் பிறகு அம்பேல்தான்!

ப்படிப் பல பிரச்னைகள் இருந்தும் 'அது அப்படி எல்லாம் இல்லை' என்று கண்களைத் திறந்துகொண்டே படுகுழியில் விழுகிறார்கள் சில இளைஞர்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசினார் அந்தக் கல்லூரி மாணவர். "முதல் தடவை மீட்டிங்னு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே வந்திருந்தவங்களைப் பார்த்தபோது மனசுல ஒரு நம்பிக்கை வந்துச்சு. பணத்தை வாங்கிட்டுப் பொருட்களைக் கொடுத்தாங்க. 'இன்னிக்கு பலரோட லைஃப் ஸ்டைல் மாறி இருக்கிறதால விலை உயர்ந்த தரமான பொருட்களை வாங்க விரும்புறாங்க. அவங்கதான் எங்க டார்கெட். தினமும் ஒரு மணி நேரம் செலவழிச்சா போதும். ஞாயிற்றுக்கிழமை கூடுதலா ஒரு மணி நேரம். வாரத்துக்கு எட்டு மணி நேரம் வேலை செஞ்சா போதும். பணம் நம்ம அக்கவுன்ட்ல அது பாட்டுக்கு ஏறிக்கிட்டே இருக்கும். கவலைப்படாம களமிறங்கி வேலை பாருங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்கக் கவலைப்படாமல் கால் ஆட்டிக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம்'னு சொன்னாங்க. இப்போ நான் கட்டின 75 ஆயிரத்தை அவங்ககிட்ட இருந்து மீட்க, கால் தேயத் தேய நடந்து அலையுறேன்!" என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

ந்த வியாபாரத் தந்திரம்பற்றி வழக்கறிஞர் விஷ்ணு அவர்களிடம் கேட்டபோது, "மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறை என்பது நம் நாட்டில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இன்னும் பல இடங்களில் இது போன்ற விளம்பரங்கள், வியாபாரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு உரிய மதிப்புள்ள பொருட்கள்தான் வழங்கப்படுகின்றனவா, அவை மக்களின் பயன்பாட்டுக்குஏற்றது தானா என்பதை எங்கு, யாரிடம் பரிசோதித்துக்கொள்வது என்பதும் தெளிவில்லாத ஒன்று. எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த 'எம்.எல்.எம்'-ல் மட்டும் நஷ்டமே இல்லை. பணத்தை முதலீடு செய்தால் போதும். உங்கள் வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது எந்த வழியில் என்பதைத் தெரிவிப்பது இல்லை. நாம் ஏமாந்துவிட்டோமே என்ற உண்மை தெரிந்த பிறகு, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்தால், 'இந்த நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் தலைவர் அங்கு இருக்கிறார். இங்கு புகார் பதிவு செய்ய முடியாது!' என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் வரும். விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடியாது. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீது என்று உங்களிடம்தான் எந்த ஆதாரமும் இருக்காதே. இப்படியான சூழலில் இளைஞர்கள் தான் அதீத கவனமாக இருக்க வேண்டும்!" என்கிறார் விஷ்ணு.

விரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். ஆனால், நீங்கள் அப்படிச் சம்பாதிக்கும் பணம் நேர்மையான வழியில் வந்ததாக இருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பிறகு அறியாமையால், 'சரி, இன்னொருத்தரை இதில் சேர்க்கலாம். பணம் வருமா என்பதைப் பார்ப்போம்' என்று சமூகத்தையும் இதில் இழுக்காதீர்கள்.

'குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!' என்ற வாசகங்களை நினைவில்கொள்வது நல்லது நண்பர்களே!

எம்.எல்.எம்....

சில விடை தெரியாத மர்மங்கள்!

M.L.M மல்டி லெவல் மாய வலை! உங்கள் பணம் பத்திரம்

துபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது!மக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.

யார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்!

பொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்!

ஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கேள்விக்குறி!

சட்டம் என்ன சொல்கிறது?

துபோன்ற எம்.எல்.எம். நிறுவன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2005-ல் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது 'மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது எந்த வகையில், எந்தப் பெயரில் நடந்தாலும் அது ஏமாற்றுதல்தான்' என்று அடித்துச் சொல்லிஇருக்கிறது. மேலும், 'மக்கள் கட்டும் பணத்துக்குத் தகுந்த பொருட்கள் கிடைப்பது இல்லை. மற்றும் பொருள்களை விற்கும் முன்பே அதற்கான சர்வீஸ் சார்ஜை அந்த நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இது தவறு' என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்!

ஒரு செக் லிஸ்ட்!

நீங்கள் சேரும் நிறுவனம் பொருட்களை விற்கும் நிறுவனமா என்று பாருங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச நம்பிக்கை மிச்சம்!

நீங்கள் பணம் கொடுத்து அவர்கள் தரும் பொருட்களுக்கும் சந்தையில் உள்ள அதே பொருட்களுக்கும் ஒப்பீடு செய்து பாருங்கள். சந்தையில் உள்ள பொருட்களைவிட விலை அதிகமாகவும் தரம் குறைவாகவும் இருந்தால் அங்கிருந்து நழுவுவது நல்லது!

பொருட்களைக் கொடுக்காமல் வெறும் முதலீடுகளை மட்டும் எதிர்பார்த்தால்... மிக மிக உஷார்!

நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யார், அவர்கள் இதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள், இந்த நிறுவனத்துடன் வேறு ஏதாவது ஒரு நிறுவனம் தொடர்புவைத்திருக்கிறதா, மோசடிச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறதா என்பதை எல்லாம் ஓரளவேனும் தெரிந்துவைத்து இருப்பது நல்லது!