Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 14

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

மாமன்கள்

'மலையும் அதே மலைதான் வழியும் அதே வழிதான் மாறியிருப்பது மனசு மட்டுமே!’
- ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பூசன்

தேர்வுக் கூடம் பரபரப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது. இவன் தாமதமாகத்தான் உள்ளே நுழைந்தான். தனக்கான எண்ணையும் அதற்கான அறையையும் கண்டுபிடித்து இவன் உள்ளே நுழைகையில், எல்லா மாணவர்களும் தேர்வு எழுத ஆரம்பித்து இருந்தனர். இடம் தேடி அமர்ந்து, கைகள் நடுங்க கேள்வித்தாளை வாங்கிப் படிக்கத் தொடங்குகையில், எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்த மாதிரியும் தெரியாத மாதிரியும் இருந்தது. விடைத் தாளைத் திருத்தப்போகிறவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, முதல் கேள்வியைப் படிக்க ஆரம்பித்தான்.

1. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் மூன்று உறவுகளைப்பற்றி 150 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக.

அ) தாய் மாமா ஆ) அக்கா மாமா இ) அத்தை மாமா ஈ) அத்தைப் பையன், மாமா பையன்

இவன் தாய் மாமாவைப்பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டதால், அதை சாய்ஸில் விட்டுவிட்டு, மற்ற மூன்று உறவுகளைப்பற்றி எழுதத் தொடங்கினான்.
அணிலாடும் முன்றில்! - 14
(ஆ) அக்கா மாமா

இவனுக்கு அக்கா மாமாவை ஆரம்பத்தில் இருந்து பிடிக்கவே பிடிக்காது. தோட்டத்துக்கு பாத்தி பிரித்ததைப்போல் ஸ்டெப் கட்டிங் தலையுடனும், தெருப் புழுதியை இடம் வலமாக விரட்டி அடிக்கும் பெல்பாட்டம் பேன்ட்டுடனும், அக்காவைப் பெண் பார்க்க அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது, 'ஏய் இவளே... புருஷன் வீட்டுல உனக்குப் பெருக்குற வேலையே இருக்காது! அவரு பேன்ட்டே பார்த்துக்கும்!’ என்று அக்காவின் தோழி ஒருத்தி சொன்னபோது, அக்கா மாமாவின் மேல் முதல் வெறுப்பு விழுந்தது.

பெண் பார்க்கும் படலத்தின்போது சிற்றுண்டி சாப்பிடுகையில், 'உப்புமாவில் கடுகு அதிகம். கடுகு எனக்குப் பிடிக்காது!’ என்று ஒரு தமிழ்ப் புலவர் தொனியில் மாமா சொன்னதும், உறவினர்கள் சிரித்ததும் வெறுப்பின் அடுத்த கட்டம்.

காபி டம்ளரை வாங்கி சத்தம் போட்டு உறிஞ்சி உறிஞ்சி அவர் குடித்ததைப் பார்த்ததும், அக்காவை நினைத்து இவனுக்குப் பாவமாக இருந்தது. ஆண்கள் மனதில் பாவமாகத் தோன்றுவது, பெண்கள் மனசுக்குப் பரவசமாகத் தோன்றும்போல. அக்காவுக்கு அந்த மாமாவை ரொம்பவும் பிடித்திருந்தது. 'ரசிச்சு ரசிச்சுச் சாப்பிடுறாருரா... என்னமாப் பேசுறாரு!’ என்று அக்கா சிலாகித்தது. என்ன ரசனையோ?!

திருமணம் முடிந்து மறு வீட்டுக்கு வந்திருக்கையில், அக்காவும் மாமாவும் படம் பார்க்கக் கிளம்பினார்கள். துணைக்கு இவனையும் கூட்டிச் சென்றார்கள். வேண்டா வெறுப்பாகப் போனான். இடைவேளையில், மாமா ஆண்கள் கழிவறைக்குப் பக்கத்தில் நின்று சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டான். வேண்டாம் வேண்டாம் என மறுத்தும் இரண்டு கோன் ஐஸ் வாங்கிக் கொடுத்தார் மாமா. நல்லவர்தானோ என்று முதல் விருப்பம் அவர் மேல் விழுந்தது.

பின் வந்த நாட்களில் மைதானத்துக்குக் கூட்டிப் போய் ஸ்பின் பௌலிங் போட அவர் கற்றுக்கொடுத்ததும்; இவனையும் ஒரு பெரிய மனுஷனாக நினைத்து தன் பைக்கை ஓட்டச் சொல்லி பின்னால் அவர் அமர்ந்து வந்ததும், அவர் மீதான விருப்பத்தின் அடுத்தடுத்த கட்டங்கள்.

இன்று இவன் வளர்ந்துவிட்டான். வாழ்வின் வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு பிரியங்களை அவரிடம் இருந்து இவன் பெற்றிருக்கிறான்.

அணிலாடும் முன்றில்! - 14

சில நேரங்களில் தந்தையாகவும், சில நேரங்களில் அண்ணனாகவும், சில நேரங்களில் தோழனாகவும் உணரவைப்பதுதான் அக்கா மாமா உறவோ!

(இ) அத்தை மாமா

அத்தைகளிடம் இருக்கும் நெருக்கம், அத்தை மாமாக்களிடம் எப்போதும் எந்தப் பிள்ளைகளுக்கும் வாய்ப்பது இல்லை. தன் வீட்டில் அந்நியர்போல அத்தை மாமாவையும், அவர் வீட்டில் அந்நியன்போல் தன்னையும் அடிக்கடி இவன் உணர்வது உண்டு.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அத்தை வீடுகளுக்குச் செல்லும்போது, அத்தை மாமாக்களின் கண்களைப் பார்க்கக் கூச்சப்பட்டு, இவன் தலை குனிந்தே பேசுவான். அத்தை மாமாக்களுக்கும் அப்படி ஒரு கூச்சம் இருக்கிறது என்பது இவனது அவதானிப்பு.

அணிலாடும் முன்றில்! - 14

விடுமுறை முடிந்து ஊருக்குக் கிளம்புகையில், 'மாமாவிடம் சொல்லிட்டுப் போ!’ என்று அத்தை சொல்லும். இவன் அவரிடம் போய், 'நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!’ என்பான்.

'இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போலாமே!’ என்பார்.

'இல்ல... அடுத்த வாரம் ஸ்கூல் திறக்குறாங்க’ என்பான்.

அவர் ஆண்டுதோறும் கேட்கும் அதே பழைய கேள்வியை மீண்டும் புதிதாகக் கேட்பார், 'ரிசல்ட் வந்துருச்சா? என்ன கிளாஸுக்குப் போற?’

இவன் தன் புதிய பதிலைப் பழைய தொனியில் சொல்வான். பின்பு அவர் லுங்கியை மடித்துக் கட்டி எழுந்தபடி, ஹேங்கரில் தொங்கும் பேன்ட்டில் இருந்து பர்ஸை எடுத்து, 'இந்தா வெச்சுக்க!’ என்று 20 ரூபாய் கொடுப்பார். இவன் மறுத்தாலும் பாக்கெட்டில் திணிப்பார்.

அவருக்குத் தெரியாமல் அத்தை கொடுத்த 100 ரூபாய் ஏற்கெனவே பாக்கெட்டில் இருக்கும். அந்த 100 ரூபாயில் அவரது விரல்கள் உரசுகையில், இவன் நெஞ்சை ஒரு குற்ற உணர்வு உரசும்.

சட்டையைப் போட்டுக்கொண்டு பேருந்து நிலையம் வரை வந்து வழி அனுப்புவார். வழிஎல்லாம் 'அந்த 100 ரூபாய் எப்படி வந்தது?’ என்று அவர் கேட்டுவிடுவாரோ என்கிற குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். அது எப்படி வந்தது என்று அவருக்குத் தெரியும் என்றாலும், கடைசி வரை கேட்க மாட்டார்.

இந்த அத்தை மாமா வீடு மட்டும் இல்லை, எல்லா அத்தை மாமா வீட்டில் இருந்து கிளம்பும்போதும், இவன் சட்டை பாக்கெட்டில் ஒரு 100 ரூபாய் குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும், கூடவே அத்தை மாமாக்களின் 20 ரூபாய் பிரியமும்!

(ஈ) அத்தைப் பையன், மாமா பையன்

இவன், தன்னைவிட வயதில் மூத்த அத்தை பையன்களையும், மாமா பையன்களையும், மாமா என்றே அழைப்பான். ஐந்தாறு மாதங்களே வயது வித்தியாசம் என்றாலும்கூட, மாமா என்று அழைக்காவிட்டால், திட்டு விழும். இவன் வயதுக்குக் கீழே உள்ள முறைப் பையன்கள், இவனை மாமா என்பார்கள்.

ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட் ஆட்டங்களில் இவன் தோளுக்கு மேல் வளர்ந்த அத்தைப் பையன்கள், இவனை மாமா என்று கூப்பிட்டுப் பந்து எறிகையில், மற்ற நண்பர்கள் கேலி செய்வார்கள். இவனுக்கு எரிச்சலாக இருக்கும்.

அத்தைப் பையன், மாமா பையன் என முறைப் பையன்களுடனான உறவு எப்போதும் விநோதமானது.

பால்யத்தில் இவனும் இவனது அத்தைப் பையனும் ஒரே பெண் ணைக் காதலித்தார்கள். காதலிப்பது என்றால், தூரத்தில் நின்று பார்ப்பது. கூட்ட நெரிசலில் ஒரே பேருந் தில் பயணிக்கையில், டிக்கெட் வாங்கி சில்லறையுடன் பாஸ் செய்வது. அந்தப் பெண் சென்றுவிட்டதே தெரியாமல் அவள் படிக்கும் பள்ளிக்கூட வாசலில் அநாதையாகக் காத்திருப்பது.

யார் போய் அவளிடம் முதலில் பேசுவது என்கிற போட்டியில், இவனும் இவனது அத்தைப் பையனும் கடைசி வரை அவளிடம் பேசாமலே இருந்தார்கள். யாருக்கு முதலில் ஓ.கே. ஆனாலும், அடுத்த நாளே அவள் மற்றவருக்குத் தங்கை என்று இவர்களுக்குள்ளான ரகசிய உடன்பாடு. அவள் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஓ.கே. ஆகி, அவள் கண்காணாத ஊருக்குச் சென்று, வேறு யாருக்கோ ஓ.கே. ஆகிப் போனாள்.

மாமா பையன்களிடமும் இவனுக்கு அந்நியோன்யம் அதிகம். வீட்டுக்குத் தெரியாமல் பைக்கில் செல்வது, படம் பார்ப்பது, பீடி பிடிப்பது என எல்லாத் திருட்டுத்தனங்களையும் இவனுக்கு அவர்களும்; அவர்களுக்கு இவனும் பரஸ்பரம் கற்றுத்தந்தே பால்யத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள். அத்தைப் பையன், மாமா பையன் உறவை, நண்பர்களுக்கு இடைப்பட்ட இடத்தில் நிறுத்துவதா? நண்பர்களுக்கு மேற்பட்ட இடத்தில் நிறுத்துவதா என இவன் குழம்பிக்கொண்டு இருக்கிறான்.

விடை எழுதி முடிந்ததும் தேர்வுத் தாளைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, இவன் வெளியே வந்தான். இன்னும் சில கேள்விகளுக்குப் பதில் எழுதாமல் வந்தது உறுத்திக்கொண்டே இருந்தது. அடுத்த தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என நடக்கத் தொடங்கினான்!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan