மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 31

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்

இவர்களால்தான் மழை!

##~##

நேரில் கண்டு-

நெஞ்சு நிலந்தோய நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து -

சேவித்திருக்கிறேன்

செல்லம்மாள் பாரதியை!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 31

ன்போலவே - எப்பொழுது திருச்சி வந்தாலும் -

பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பத்தினியின் வீட்டுக்குச் சென்று -

தலை முதல் தாள் வரை தரை தழுவத் தண்டனிடுவார்.

இதை - அருகிருந்து பார்த்த ஓர் அன்பர் -

பாரதிதாசனிடம், 'பாரதியார் உங்கள் குரு; அதற்காக குருபத்தினியிடம்கூடவா - இப்படி சாஷ்டாங்க நமஸ்காரம்? செல்லம்மாளிடம் அப்படி என்ன சிறப்பைக் கண்டீர்?’ என்று கேட்டாராம்.

நெஞ்சு நெகிழ, பார்வை பனிக்க பாரதிதாசன் -

'பாரதியாரை முழுமையாய்ப் பார்த்தது - அந்த அம்மையாரல்லவா!’ என்றாராம்.

ரு முறை, என் இனிய இளவல் கவிவேந்தர் திரு.மு.மேத்தா என்னிடம் சொன்னார்-

'நான் பாரதியாரைவிட - செல்லம்மாள் பாரதியைத்தான் தலைமேல் வைத்துக் கொண்டாடுவேன்!’ என்று.

'அது ஏன் அப்படி?’ என்று நான் கேட்டதற்கு -

'ஒரு ஞானக் கிறுக்கனோடு குடித்தனம் நடத்திய குணவதியல்லவா அந்த அம்மாள்! அது, அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா என்ன?’ என்று, மேத்தா மெய் சிலிர்க்கச் சொன்னார்.

நேற்று இதை நான் சிந்தித்தவாறு இருக்கையில் -

எத்தகு சூழலிலும் நடுநிலை பிறழா நங்கையர் தம் நினைவு என்னுள் கிளைத்து -

கண்ணதாசனின் கீழ்க்கண்ட பாடலுக்கு - அதாவது...

'கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்; அதுவே
கையளவு ஆனாலும்
கலங்க மாட்டேன்!’
- எனும் கருத்தையட்டி -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 31

வளமையில் வீங்குதலும்; வறுமையில் விம்முதலும் விடுத்து -

புன்னகையைக் கண்ணீரைப் புறத்தேவைத்து, எது வரினும் இயல்பாக ஏற்று நிற்கும் -

விளாம்பழமும் ஓடுமாய் விளங்குகின்ற, நானறிந்த ஒரு சில மாதரார் தோற்றம், மனமெனுந் திரைச்சீலையில் வரிசை வரிசையாய் வந்து போனது!

ந்த ஊரில் நான் - சகல சௌகரியங்க ளோடும் - ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக ரவுண்டடித்துக்கொண்டிருந்தேனோ -

அதே ஊரில் -

என் தந்தை மோட்சத்திற்கும்; என் தாய் மும்பைக்கும் போன பிறகு -

ஏறத்தாழ ஓர் ஏதிலியாக அலைய நேர்ந்தபோது -

எனக்கு உண்ணஉணவும், இருக்க இடமும் உதவியவன் -

என் எதிர் வீட்டில் இருந்த திரு.கிருஷ்ணன். கண்ணன் என்று என்னால் அழைக்கப் பெற்ற என் நெஞ்சுக்கினிய நண்பன்.

என்னுடைய எழுத்து என்றாவது ஒருநாள் சினிமாச் சந்தையில் விலை போகும் என்று என்பால் மிகுந்த நம்பிக்கை வைத்துஇருந்தவன்.

HIGHWAYS DEPARTMENT -  ல் இளம் வயதிலேயே பெரிய பதவியில் இருந்த கண்ணன் -

என்பால் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. நான் விரைவில் சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்.

பிறகு - அவ்வளவாக சந்திக்க வாய்ப்பின்றிப் போயினும் -

கண்ணன்பால் எனக்குஉள்ள நன்றியைக் கங்குலும் பகலும் - என் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும், எனக்கு நானே சொல்லிக்கொண்டு இருந்தேன்.

த்தகு அருமைத் தோழன் - 'ஹைவேஸ் கண்ணன்’ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அமரராகிவிட்ட நிலையில் -

திருச்சி - பொன்மலை சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் -

கண்ணனின் மனைவியார் திருமதி.சுகந்தவல்லி கிருஷ்ணனை சென்ற ஆண்டு சந்திக்க நேர்ந்தது.

திருச்சியில் அந்த அம்மையார் இருக்கும் வீடு தேடி -

என் நெருங்கிய நண்பர் கோவை திரு.கிருஷ்ணகுமாருடன் சென்றேன்.

சொந்த வீடு; பென்ஷன்; மற்றும் அந்த அம்மையாரும் ஆசிரியப் பணியில் இருந்து, ஓய்வு பெற்றவர் -

என எல்லாம் இருந்தும் - கணவனில்லாத குறையோடு - தனியாக வாழ்ந்து வந்தார்கள் திருமதி.சுகந்தவல்லி.

நான் சென்று - துக்கம் விசாரித்துவிட்டு - எனக்கும் கண்ணனுக்கும் இருந்த நெருங்கிய நட்பை நினைவுகூர்ந்தேன்.

அது சுகந்தவல்லிக்கும் தெரிந்த விஷயம்தான்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 31

பிறகு நான் -

'அம்மா! நான் கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணன் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கார்; அவருக்கு, என் நன்றியறிதலைக் காட்டும்படி, நான் எதுவும் பண்ணல்லே! இப்ப - நீங்க வசதியா இருக்கீங்க; எந்தப் பொருளாதாரப் பிரச்னையும் உங்களுக்கு இல்லேன்னு எனக்கு நன்னாத் தெரியும்.

இருந்தாலும் - நான் கண்ணனுக்கு என் நன்றியைக் காட்ட, ஏதோ சின்னதாய் என் காணிக்கையா...

இந்த இருபத்தையாயிரம் ரூபாயை நீங்க பெரிய மனசு பண்ணி ஏத்துக்கணும்!’

- என்று தயங்கித் தயங்கித் திருமதி.சுகந்தவல்லி கிருஷ்ணனிடம் சொன்னேன்.

அந்த அம்மா -

அந்தப் பணத்தைத் தொடக்கூட மறுத்துவிட்டார்கள்.

நான் சொன்னேன் -

'கண்ணனிடம் நான் சிறுகச் சிறுகக் கடன்பட்டிக்கிறேன்; அதை இப்போது திருப்பித் தருவதாக எண்ணிக்கொள்ளுங் களேன்!’ என்று.

'அவரிடம் கடன் வாங்கினால் - நீங்கள் அவரிடம்தானே திருப்பித் தர வேண்டும்! என்னிடம் தருவது எப்படி நியாயமாகும்?’ என்றார் சுகந்தவல்லி.

'கண்ணனிடம் நான் எப்படித் தர முடியும்? அவர்தான் காலமாகிவிட்டாரே!’ என்றேன் நான்.

'நீங்களும் ஒருநாள் - காலமாகக்கூடும் அல்லவா! அப்போது - அவரை நேரில் சந்தித்துக் கொடுங்கள்!’ என்றார் கண்ணனின் மனைவி.

'என்ன இவ்வளவு HARSH -ஆ, சொல்லுகிறீர்களே!’ என்றேன்.

'நான் சொன்னது - NAKED TRUTH! நீங்க - நான் - எல்லாருமே ஒருநாள் போக வேண்டியவர்கள்தானே?!’ என்று திருமதி சுகந்தவல்லி சொன்னதும் -

செவிட்டில் ஒரு அறை விழுந்தாற்போல், நான் சப்த நாடியும் ஒடுங்கிப்போனேன்.

அன்று - அந்த இடத்தில், சுயமரியாதை உள்ள ஓர் உத்தம ஸ்திரீயை மட்டுமல்ல; எனக்கு அறிவு கொளுத்திய ஓர் ஆசிரியை யும் கண்டேன்.

கரங்குவிக்காத குறையாக - மனத்துள் அந்த மாதரசியை வந்தித்து நின்றேன்!

ஓர் உண்மை - அன்று எனக்குப் புலனானது!

'உலகத்தில் வண்மை என்பது - கொடுப்பவரால் விளங்குவது அல்ல;  கொள்பவரால்தான் விளங்குகிறது; ஏற்பாரில்லையேல் - இடுவார்க்கென்ன ஏற்றம்?’ என்பதுதான் அந்த அறிவார்ந்த உண்மை!

சுகந்தவல்லிபோல், சுகுணவதிகள் - திரையுலகிலும் இருக்கிறார்கள், அவர்களது - 'ஸ்திதப் பிரக்ஞை’ கண்டு நான் வியந்திருக்கிறேன்.

ஏற்றத்திலும் இறக்கத்திலும் - எவ்வகை மாற்றத்திற்கும் ஆளாகாத மனோபாவம்தான் - 'ஸ்திதப் பிரக்ஞை’ என்பது...

இதுபற்றி - இதன் உயர்வுபற்றி - கண்னன் கீதையிலே, கரடியாய்க் கத்தியிருக்கிறான்.

இது - எளிதில் வாய்க்கும் குணமல்ல; வாய்த்துவிடின், 'குணக் குன்றேறி நின்றோர்’ எனக் குவலயம் அவர்களைக் கும்பிடும்!

நாற்பத்துநான்கு ஆண்டுகளுக்கு முன் - சிவாஜி நடித்த படத்தில் - நான் எழுதிய பாட்டைப் பாடும்போது -

சின்னஞ் சிறுமியாய்ப் பாவாடை சட்டை யில் பார்த்திருக்கிறேன்.

இன்று - அந்தச் சிறுமி - ஒரு குலமாது; படத் துறையில், மணாளனும் மகனும் - முறையே மிக மிகப் புகழ்வாய்ந்த இயக்குநராகவும், நடிகனாகவும் இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் பணம் புரண்டாலும் - இதழ்க் கோடியில் ஓர் இள நகையோடு-

எங்கே என்னைப் பார்த்தாலும் 'அண்ணே!’ என்று - அன்று, பத்து வயதில் அழைத்த அதே பாசத்தோடு என்னை அழைப்பார் அந்தப் பெண்மணி!

உடைகூடச் சாதாரணமாகத்தான் உடுத்துவார். அவ்வளவாக ஆபரணங்களையும் அவர் அணிந்து நான் பார்த்ததில்லை.

சுருங்கச் சொன்னால் -

புகழும் பொருளும் - அவரது எளிய பண்புகளை - எள்ளளவும் பாதித்ததில்லை!

அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போது எல்லாம் - நான் வியப்பின் விளம்பில் நிற்பேன்!

ன்னொரு மகத்தான ஸ்திரீ ரத்தினம்; என் மனத்துள், அவரைக் காணும்போதெல்லாம் மரியாதை முகிழ்க்கும்!

அவரது கணவரும் - புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குநர்; திரைப்படத் தயாரிப்பாளர்.

இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் - பலரது வாழ்க்கையில் விளக்கேற்றிவைத்த பெருந்தகை அந்த இயக்குநர்.

அத்தகு ஒருவரின் மனைவியாய் வாழ்க்கைப்பட்டும்; புகழிலும் பொருளிலும் புரளும் வாய்ப்புப் பெற்றும் -

'எளிமையோ எளிமை’ எனும்படி ஓர் எளிமையை நான் அந்த அம்மையாரிடம் கண்டு -

உண்ணா ஈரம் உலர - வாய் பிளந்து பார்த்திருக்கிறேன்-

நாற்பதாண்டுகளுக்கு மேலாக!

முதலில் குறிப்பிட்ட பெண்மணி -

திருமதி ஷோபா சந்திரசேகரன். இவரே இளைய தளபதி விஜய்யின் தாயாரும் ஆவார்.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெண்மணி - திருமதி ராஜம் பாலசந்தர்.

இயக்குநர் சிகரத்தின் இல்லத்தரசி. இந்த அம்மையார், தனது வீட்டுக்கு -

பால்கே விருது வந்தாலும், பால் கார்டு வந்தாலும் -

ஒரு புன்னகையோடு சரி!

வர்களால்தான் -

இன்னும் வானம் பொய்ப்பதில்லை!

- சுழலும்...