அனுபவங்கள் பேசுகின்றன !
வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஓவியங்கள்: சேகர்
பேச்சில் பக்குவம்!

##~## |
என் உறவினர் ஒருவர், உடல் நலமின்றி சமீபத்தில் இறந்து போனார். பத்தாம் நாள் காரியத்துக்கு காபியில் இருந்து சாப்பாடு வரை ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்கினர். அன்று துக்கம் விசாரிக்க வந்த பெண் ஒருவர், ''காபி நல்லா இருக்கே...'' என்று அந்த துர்சூழ்நிலையிலும் வாய்விட்டுச் சொல்லி ரசித்துக் குடித்ததோடு, வீட்டின் மருமகளை நிறுத்தி, ''காபி சூப்பரா இருந்துச்சு. வீட்டுல போட்டதா... ஹோட்டல்ல சொல்லி வாங்கினதா..?'' என்று இங்கிதமின்றி கேள்விகளை அடுக்க, அந்தப் பெண் தன் வெறுப்பை விழுங்கி, பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக நகர்ந்துவிட்டார்.
நல்லது, கெட்டது என எந்த விசேஷமானாலும், சூழ்நிலை உணர்ந்து பேச வேண்டும் என்பதை இவர்களுக்கெல்லாம் யார் எடுத்துச் சொல்வது?
- எஸ்.மங்கை, குளித்தலை
கண் கெட்ட பின்னே!

'ஆட்கள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, இன்டர்வியூவுக்கு சென்றாள் தோழி. ''இந்த வேலைக்குத் தேவை... உங்க உழைப்பு, உழைப்பு மட்டுமே. ஆர்வத்தோட உழைச்சா, எதிர்பார்க்கற சம்பளமும், போகப் போக எதிர்பார்க்காத வசதி வாய்ப்புகளையும் இந்த வேலை உங்களுக்குத் தரும்'' என்று பிரசங்கமே நடத்தியுள்ளனர் அந்த தனியார் நிறுவனத்தினர்.
''சம்பளம் எவ்வளவு சார்?'' எனக் கேட்க, ''நீங்க நினைச்சா... மாசம் பத்தாயிரத்துக்கும் மேல சம்பதிக்கலாம்'' என தேன் தடவி பேசியிருக்கின்றனர். நம்பி வேலை யில் சேர்ந்தவளை, பொருட்களை வீடு வீடாக சென்று விற்கச் சொல்லியிருக்கிறார்கள். பல சமயம் அவமானப்பட நேர்ந்தாலும், 'கஷ்டப் பட்டால் உயரலாம் என்று சொன்னார்களே...’ என்று நினைத்துக் கொண்டே அலைந்து திரிந்திருக்கிறாள் தோழி. ஆனால், அந்த மாதத்துக்கான சம்பளம் வாங்கச் சென்றபோது, ''நீ விற்ற பொருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே உன் சம்பளம்'' என்று சொல்லி, குறைந்த அளவு தொகையைச் சம்பளமாகக் கொடுத்துள்ளனர். நொந்து உடைந்தே விட்டாள் 'ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜுவேட்'டான என் தோழி.
சம்பளத்தில் இருந்து விடுப்பு வரை அனைத்து விஷயங்களையும் தெளிவாக விசாரித்துவிட்டு வேலையில் சேர்வதுதான் புத்திசாலித்தனம். பட்ட பிறகு புலம்புவதால் என்ன லாபம்?!
- எம்.ப்ரியா, சென்னை-21
ஸ்டிக்கர் பிரளயம்!

சமீபத்தில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருந்த குழந்தை திடீரென வீறிட்டு அழ ஆரம்பித்தது. எதற்கு அழுகிறது என்பது புரியாமல் தவித்த பெற்றோ ரைப் பார்க்க பாவமாகிவிட்டது சக பயணிகளுக்கு. சில நிமிடங்களில் குழந்தையின் கண் சிவப்பாகி இருந்ததை கவனித்த நாங்கள், 'கண்ணில் ஏதோ தூசிதான் விழுந்திருக்க வேண்டும்’ என்று பார்க்க, குழந்தையின் நெற்றியில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டில் இருந்த 'ஸ்டோன்’ ஒன்று எப்படியோ அதன் கண்களில் விழுந்து, படுத்தி வைக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். அவசரமாக வழியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் களை இறக்கிவிட்டு, மற்ற பயணிகள் பதைபதைப் புடனேயே பயணத்தைத் தொடர்ந்தோம்.
விவரம் தெரியாத சின்னக் குழந்தைகளுக்கு மை பொட்டே போதுமே?! ஸ்டிக்கர் பொட்டில் இருக்கும் பசை, கற்கள் போன்றவற்றால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாமே!
- மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்
சார்ஜர்... டேஞ்சர்!

அன்று பக்கத்து வீட்டுக் குழந்தை, அவளுடைய அம்மா, நான் என்று அனைவரும் எதிரிலிருக்கும் தோழியின் வீட்டில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். மெள்ள வீட்டுக்குள் நகர்ந்த குழந்தை, பிளக்கிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செல்போன் சார்ஜர் ஒயரை தன் வாயில் வைக்க, எதேச்சையாக கவனித்த நாங்கள் பதறிப் போய் குழந்தையைத் தூக்கினோம்.
''காலையில கிளம்பும்போது ஆபீஸ் போற என் மகன், மருமகள், காலேஜ் போற பேரன், பேத்தினு எல்லாரும் ஆளாளுக்கு ஒரொரு சார்ஜ்ல போட்டிருக்கற செல்போனை எடுத்துட்டு அப்படியே போயிடுவாங்க. நான்தான் ஆஃப் பண்ணுவேன். இன்னிக்கு பேச்சு சுவாரஸ்யத்துல மறந்துட்டேன்'' என்று சங்கடப்பட்டார் தோழி.
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் வீட்டிலும் இப்படி 'ஆன்’ நிலையில் சார்ஜர் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் காண முடிகிறது. சார்ஜரில் வரும் வோல்டேஜ் குறைவாகத் தான் இருக்கும். ஏதாவது கோளாறு காரணமாக அதிக வோல்டேஜ் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
சார்ஜரில் இருந்து மொபைலை எடுக்கும் போதே, ஸ்விட்சை ஆஃப் செய்யப் பழகுவது அத்தனை கடினமா என்ன..?!
- கே.உமாமணி, கரூர்