ஸ்பெஷல் 1
Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு!

கிளென்ஸிங்...டோனிங்...மாய்ஸ்ச்சரைசிங்... சன்ஸ்க்ரீன்....

 'அழகுக் கலை அரசி’ வீணா குமாரவேல்
மாடல்: மிஷா

என்ன அழகு... எத்தனை அழகு!

'பற்களை பிரஷ் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறேன் வாருங்கள்!’ என்று யாராவது ஆரம்பித்தால்... 'ஆமாம்... நாங்கெல்லாம் அவ்வாச்சி பாப்பா. எங்களுக்கு பிரஷ் செய்ய தெரியாது பாரு!’ என்று கிண்டல் அடிப்போம். ஆனால், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழ்நோக்கியும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேல்நோக்கியும் பிரஷ் செய்யாமல், இடது வலதாகவே பற்பல ஆண்டுகளாக நம்மில் பலர் பிரஷ் செய்து கொண்டிருப்போம்.

பற்களுக்குப் பொருந்தும் உதாரணம், சருமப் பாதுகாப்புக்கும் பொருந்தும். கிளென்ஸிங், டோனிங், மாய்ஸ்ச் சரைசிங், சன்ஸ்க்ரீன்... ஆகிய நான்கு பொருட்களும் நாள் தவறாமல் பயன்படுத்த வேண்டியவை என்று சொல்லியிருந்தேன். இந்த நான்கு விஷயங்களையும் முறையாக செய்வது தான் முக்கியம். நான் சொல்லப்போகிற சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருந்தால், முழுப்பலனும் கிடைக்கும். அதற்கு முன்பாக, சரும அமைப்பு பற்றி தெரிந்து கொண்டால்... நான் சொல்லப் போவதை அறிவியல் அடிப்படையில் புரிந்து கொண்டு, நீங்கள் தொடர்ந்து பின்பற்ற உதவும்.

உங்கள் சருமத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால்... அதில் ஏராளமான துவாரங்கள் (Pores) இருப்பது தெரியும். சிலருக்கு முகம் முழுவதும் சருமம் ஒரே மாதிரியாக (Evenness)இல்லாமல், ஆங்காங்கே திட்டுத்திட்டாக (Patch) தெரியும். அடுத்ததாக சிலருக்கு சருமம் தெளிவாக (Clarity)இருக்காது. அதேபோல டெக்ஸ்ச்சர் (Texture).சருமத்தைத் தொட்டால் சிலருக்கு அது மென்மையாக இல்லாமல் கடினமாக இருக்கும்.

##~##
முக சருமம் எதுவாக இருந் தாலும்.... கிளென்ஸிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன்  ஆகிய நான்கையும் முறையாக செய்தால்... சருமம் தெளிவாக இருப்பதோடு, தொட்டால் பூப்போல இருக்கும்.

சரி,  இந்த நான்கு விஷயங்களையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

கிளென்ஸிங்: இது, முகத்தில் இருக்கும் அழுக்கை அப்புறப் படுத்தும் செயல். சோப்புகளில் டிட்டர்ஜென்ட் இருக்கிறது. அதனால்தான் உடம்புக்கு போடும் சோப்பை, முகத்துக்கு போட்டால் சருமம் டிரையாக மாறிவிடுகிறது. சருமத்தில் இருக்கும் துவாரங்கள் தான் அழுக்கும் தூசும் தஞ்சமாகும் இடம். குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவினால், இந்த துவாரங்கள் திறக்காது. தூசு, அழுக்கும் போகாது. கதகதப்பான நீரில் சுத்தம் செய்தால், சருமத்தில் இருக்கும் துவாரங்கள் திறக்கும். அப்போது ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்து, அழுக்கு மற்றும் தூசுகளை அகற்றுவது சுலபம். பிறகு, முகத்தை டர்க்கி டவல் கொண்டு ஒத்தி எடுத்து, டோனிங் செய்யத் தயாராக வேண்டும்.

டோனர்: சருமத்தில் திறந்து கொண்டிருக்கும் துவாரங்கள் மூடிக் கொள்ளாத நிலையில், அப்படியே வெளியே சென்றால், உடனடியாக அதில் மீண்டும் தூசு படிந்துவிடும். அதனால் சருமத்தில் இருக்கும் துவாரங்களை பழைய நிலைக்குத் திருப்ப, டோனர் தேவை. டோனரை முகத்தில் அப்ளை செய்கிறேன் பேர்வழி என்று கையில் ஊற்றி, பரபரவென்று முகத்தில் தேய்க்கக் கூடாது. ஒரு பஞ்சு உருண்டையில் நான்கு அல்லது ஐந்து சொட்டு டோனரை விட்டு, முகத்தில் முதலில் ஒற்றி எடுக்க வேண்டும். பிறகு, விரல்களைக் கொண்டு லேசாகத் தட்டி தட்டி எல்லா இடத்திலும் பரவ வைக்க வேண்டும். அல்லது டோனரை உள்ளங்கையில் ஊற்றி, விரல்களைக் கொண்டு முகத்தில் தட்டித் தட்டி அப்ளை செய்யலாம்.

என்ன அழகு... எத்தனை அழகு!

மாய்ஸ்ச்சரைசிங்: சருமத்தில் ஈரப்பதம் இல்லையென் றால், வெயிலில் முகம் வாடிவிடும். 'ஏ.சி-யில்தானே இருக்கிறேன். எனக்கு மாய்ஸ்ச்சரைசிங் தேவையில்லை’ என்பவர்கள் கவனத்துக்கு... ஏ.சி-யிலேயே இருப்பவர் களாக இருந்தால்கூட, முகத்தின் சருமத்தில் இருக்கும் நீரின் அளவு குறைந்து போகும். அதனால் நெற்றியில், மூக்கின் நுனி, முகவாய், இரண்டு கன்னங்கள், கழுத்து என்று ஆறு இடங்களிலும் மாய்ஸ்ச்சரைஸரைப் பொட்டு மாதிரி விரலால் தொட்டு வைத்துவிட்டு... பிறகு, மெள்ள முகம் முழுதும் விரல்களை கொண்டு தடவிப் படரவிட வேண்டும்.

சன்ஸ்க்ரீன்: முகத்தில் ஏற்படும் அநேக குறைபாடு களுக்கு காரணமாக இருப்பதே சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள்தான். வீட்டில் இருக்கும் ட்யூப் லைட், டி.வி. ஸ்க்ரீன், கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ஆகியவற்றில் இருந்தும் புற ஊதாக் கதிர்கள் வெளிப்படும் என்பதால் வீட்டிலே இருக்கும் பெண்களுக்கும் சன்ஸ்க்ரீன் அவசியம்.

சன்ஸ்க்ரீன் வாங்கும்போதே 'மேட் ஃபினிஷ்’ கொண்டதாக கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம். அதேபோல சன்ஸ்க்ரீனில் எஸ்பிஎஃப் (SPF -Sun Protection Factor)குறியீடு 30 கொண்ட சன்ஸ்க்ரீனை கைகளுக்கும், குறியீடு 15 கொண்ட சன்ஸ்க்ரீனை முகத்துக்கும் கவனித்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

காலையில் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்தால் நாள் முழுதும் அது நம்மை புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் என்று நினைத்தால் அதுவும் தவறு. உதாரணத்துக்கு நீங்கள் பயன்படுத்துவது 15 என்ற குறியீடு கொண்ட சன்ஸ்க்ரீனாக இருந்தால்... இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே உங்கள் சருமத்தை பாது காக்கும். எனவே, டிஷ்யூ பேப்பர் கொண்டு முகத்தைத் துடைத்துவிட்டு மீண்டும் ஒரு சொட்டு சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்து கொள்வது உசிதம்.

இந்த நான்கும் அடுத்தடுத்து செய்யவேணடும் என்பதால், இதற்கு இரண்டு நிமிடம்கூட ஆகாது. பெரும் பணம் செலவாகும் என்று நினைத்து பயப்ப டவும் தேவையில்லை. கணக்குப் போட்டால், நாள் ஒன்றுக்கு எட்டு ரூபாய்க்கும் குறைவாகத்தான் வரும்.

கிளென்ஸிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்  ஸ்க்ரீன் என்று நான்கு விஷயங்களையும் அப்ளை செய்து கொண்ட பிறகு... நீங்கள் எப்படிப்பட்ட மேக்கப் செய்து கொள்ள விரும்பினாலும் செய்து கொள்ளலாம்!

- மிளிரும்...

படங்கள்: கே.ராஜசேகரன்