துர்கா !
'இந்தச் சூழ்நிலையில், துர்காவிடம் அன்வர் என்ன கேள்வி கேட்டிருப்பான்?’
- சென்ற அத்தியாயத்தின் கடைசியில் விடப்பட்டிருந்த கேள்வியை அழகாக அலசி, சூப்பராகக் கணித்து, இந்த எபிஸோடில் வெற்றிக் கனியைப் பறித்து கேமராவை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் (வாசகி) யார்..?

அண்ணா நகர் ஜெயந்தி சந்திரசேகர், மடிப்பாக்கம் சுப்புலட்சுமி இந்த இரண்டு பேரும் துர்காவின் புத்திசாலித்தனம் மற்றும் மனிதாபிமான பக்கங்களைக் கையில் எடுத்துவிட்டார்கள். வாழ்த்துக்கள்!
'குடும்பத்தை விட்டுவிட்டு அப்படியென்ன சமூக சேவை?' என அன்வர் கேட்பதாக துர்காவை சாடியிருக்கிறார் தோழி மதுரை சாமுண்டீஸ்வரி.
##~## |
'உங்கள் அக்கா திடீர் என்று இறந்தால், அத்தான், குழந்தை, புகுந்த வீடு என தவியாய் தவிக்க வேண்டியிருக்குமே... என்ன செய்வீர்கள்?' என அன்வர் கேட்பதாக அதிரடி 'ஷாக்' தருகிறார் போரூர் பர்வதி.
'ஏன்க்கா... பாதிக்கப்பட்ட விதவை மல்லிகாவுக்கு நான் வாழ்வு தரட்டுமா?' என்று அன்வர் கேட்பதாக... நினைத்தே பார்த்திர முடியாத திடீர் திருப்பத்தைத் தருகிறார் லால்குடி சரஸ்வதி. புரட்சிகரமான, ஆனால்... அவசர சிந்தனை!
'துர்கா, அன்வரைப் பார்த்து நாத்தனார் சுதாவுக்கு ஷாக்’ என்கிறார் திருப்பூர் இந்திரா. போட்டிருக்கும் கணக்குக்கு வழி சொல்லாமல், விடையை மட்டும் சொல்கிறார் இவர்.
இதோ... பொருத்தமான வழியோடு வருகிறார்... பரிசைப் பெறுகிறார் சென்னை கிருஷ்ணவேணி!
''நீங்க பதற்றமே படமாட்டீங்களா அக்கா..?'' என்று இயல்பாக அன்வர் கேட்க, வண்டியை விட்டு இறங்கும் துர்கா... தடுமாறி கீழே விழப்போக, அன்வர் தாங்கிப் பிடிக்க, வாசலுக்கு வரும் சுதா அதைப் பார்த்துவிட, அவளுக்கு ஆவேசம், ஆத்திரம்! இதன் பிறகு, காதலர்களுக்குள் நேரடி மோதல். அன்வருக்கு சுதா மேல் வெறுப்பு! நிலைமையைச் சரி செய்ய, சுதாவிடம் துர்கா பேச, சுதா அண்ணியை வெறுக்க, அப்படியும் அவர்களைச் சேர்த்து வைக்கத் துடிக்கும் துர்கா... என நீளமாக இந்தச் சகோதரி கதை சொல்கிறார்.
இதுதான் வேண்டும்! கதாபாத்திரங்களின் உணர்வுகளை வைத்து, எதுவரையில் கதையைக் கொண்டு போகலாம் என தீர்க்கமான பார்வையோடு யோசிக்கும் தன்மை பாராட்டுக்குரியது. சரளமாக சிந்தித்து அழகாக அதை தொலைபேசியில் தங்கு தடங்கல் இல்லாமல் பதிவு செய்திருக்கும் கிருஷ்ணவேணி இந்த எபிஸோடை இயக்குகிறார்!
இனி... துர்காவின் பயணம் தொடர்கிறது.
ஸ்ட்ரோக் வந்த அக்கா கல்யாணியை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு துர்கா திரும்ப, ''நான் வீட்ல ட்ராப் செய்கிறேன்'' என்கிறான் அன்வர். வீட்டு வாசலுக்கு இருவரும் வர, ''நீங்க பதற்றமே படமாட்டீங் களாக்கா..?'' என அன்வர் கேட்க, சிரித்தபடி பைக்கை விட்டு இறங்கும் துர்கா... விழப் போகிறாள். அன்வர் தாங்கிப் பிடிக்க, வீட்டுக்குளிருந்து வெளியே வரும் சுதாவுக்கு இதைப் பார்த்து பலத்த அதிர்ச்சி. அங்கு நிற்க முடியாமல் உள்ளே ஓடுகிறாள்.
''அன்வர்... உள்ள வாப்பா!''
''இல்லக்கா... இன்னொரு நாளைக்கு வர்றேன்!''
''உன் சுதாவைப் பார்க்க வேண்டாமா?''
''இல்லக்கா... அதுக்கு இது நேரமில்ல. குட்நைட்!'' - அன்வர் பைக்கை திருப்பிக் கொண்டு போக, துர்கா உள்ளே நுழைந்தாள். குழந்தை அஞ்சு ஓடி வந்து இடுப்பைக் கட்டிக்கொள்ள, தூக்கி முத்தமிட்டாள்.
''சாப்பிட்டியா ராஜாத்தி?''
''இல்லம்மா...''
''இதோ வந்துட்டேன்... உனக்குச் சாப்பாடு ஊட்டி விடறேன்...''
ராஜம் வெளியே வந்தாள்.
''இப்ப மணி ஒன்பது. நீ வீட்டுக்கு வர்ற மாதிரியா வர்றே? ஏதோ லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கற மாதிரியில்ல இருக்கே? எல்லாரும் பசியோட உனக் காக காத்துக்கிட்டு இருக்க முடியுமா?''
''அக்காவுக்கு முடியாம ஆஸ்பத்தி ரியில சேர்த்திருக்காங்க. அதான் போகும்படி ஆயிடுச்சு...''
ஆனந்த் வெளியே வந்தான்.
''ஆபீஸ்ல யாரோ தற்கொலை... அடுத்தபடியா அக்காவுக்கு முடியல. இந்த வீட்டையும் நீ ஞாபகம் வெச்சுக்கணும் துர்கா!'' என்று குரலை உயர்த்தினான்.
நெருங்கி வந்த சுதா, ''நமக்காக செய்ய வேண்டாம். அவங்க பெத்த குழந்தை இருக்கில்லையா?''
ஒரு பார்வை பார்த்து எதுவும் பேசாமலே உள்ளே போய்விட்டாள் துர்கா. அஞ்சு பின்னால் ஓடியது!

''அண்ணே... உன் மரியாதையை மட்டுமாவது காப்பாத்திக்கோ!'' - அன்வ ருடன் அண்ணியைப் பார்த்த ஆத்திரத் தில் ஆனந்தை, சுதா உசுப்பி ஏற்றிவிட, வேகமாக ரூமுக்குச் சென்றான்.
''துர்கா, நாளையில இருந்து சாயந் திரம் ஆறு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்தாகணும்!''
பதில் இல்லை!
''இது நம்ம குடும்பம், நம்ம குழந்தை. மத்தவங்களுக்கு பொறுப்பு இல்ல... புரியுதா? சுதா பேசறதைக் கேட்டியா. அவமானமா இருக்கு!''
நிமிர்ந்தாள்!
''ஏதோ ஒரு வகையில என்னால உயிரைவிட்ட பரமு குடும்பத்துக்கு உதவினதுல தப்பில்ல. என் கூடப் பிறந்த அக்கா அட்மிட் ஆனதும் பார்க்காம இருக்க முடியுமா? சுதா பேசறானு நீங்க கேள்வி கேக்கறது தப்பு. சுதாவைப் பற்றி நான் பேச ஆரம்பிச்சா நல்லாருக்காது.''
இதைக் கேட்டதும், சுதாவுக்கு ரத்தம் உச்சந்தலைக்கு ஏறியது. ஆனால், எதையும் இப்போது பேசவும் முடியாத நிலை.
''வேலையை ராஜினாமா பண் ணிட்டு வீட்ல இருனு சொல்லுங்களேன். இந்த வீட்டை மட்டுமே நானும் பராமரிக்கலாம். குடும்பப் பொறுப்பை நீங்க எடுத்துக்குங்க. எனக்குத் தடை இல்லை.''
சரியான இடத்தில் பிடித்துவிட்டாள் துர்கா. ஆனந்த் தடுமாறிப் போனான். இரண்டு சம்பளம் வந்தே சமாளிக்க முடியாத பற்றாக்குறை. அருகில் வந்தாள் துர்கா...
''இதப்பாருங்க... நானும் சம்பாதிக்க றேங்கிற ஆணவத்துல பேசல. அம்மாவும், சுதாவும் உங்களை உசுப்பி விடலாம். ஆனா, பிரச்னைக்குத் தீர்வு காண அவங்க யாராவது ஒருத்தரால முடியுமா? நான் பீச்சுக்கும், சினிமா வுக்கும் போயிட்டா லேட்டா வர்றேன்? அவசியம் இருக்கு. ஒரு பொண்ணு வாக்கப்பட்டா புகுந்த வீடும், புருஷனும் புள்ளைங்களும் பிரதானம்தான். ஆனா, அதுமட்டுமே முக்கியமில்ல. பிறந்த வீடு, நண்பர்கள், உத்யோகம் தொடர்பான நட்புகள் எல்லாம் முக்கியம்தான். இவங்களுக்குப் புரியலைனா, நீங்க புரிய வைக் கணும்...''
ஆனந்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பதில் சொல்லத் தெரியவில்லை. அஞ்சுவுடன் சமையல்கட்டை நோக்கி நடந்தாள் துர்கா. சுதா அம்மாவிடம் வந்தாள்.
''வழக்கம்போல அண்ணன அடக் கிட்டா!''
நடேசன் அருகில் வந்தார்.
''சுதா... நீயும் இன்னொரு இடத்துக்கு வாழப் போகணும்கிறத மறந்துடாதே!''
எல்லாருக்கும் சாப்பாடு போட்டு, சமையல்கட்டு வேலைகளை முடித்து, 'அக்கடா' என்று வந்து படுக்கையில் துர்கா உட்கார்ந்தபோது மணி 11. குழந்தையும் ஆனந்தும் உறங்கியிருந்தனர். டைரி எடுத்து வரவு - செலவு கணக்குப் போட ஆரம்பித்தவள்...
'அக்கா குடும்பம், என் குடும்பம், புதுசா மல்லிகா குடும்பம். ரெண்டு பேரும் சம்பாதிச்சும் நிச்சயமா போதாது. கூடுதல் வருமானத்துக்கு ஏதாவது வழி வகுக்கணும். எப்படி? இதுக்கு மேல உபரி வருமானத்துக்காக உழைக்க ஆரம்பிச்சா, குடும்பத்தைக் கவனிக்க முடியாம போகும். ஏற்கெனவே கசமுசா ஆரம்பமாகிவிட்டது!’ - யோசிக்க யோசிக்க மண்டை கனத்தது துர்காவுக்கு. தூக்கம் அறவே தொலைந்து போனது. நாலு மணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு, ஒரு மணிக்கு உறங்கத் தொடங்கினாள்.
சுதாவும் ஏறத்தாழ தூக்கத்தைத் தொலைத்திருந்தாள். மறுநாள் காலை சுதா சீக்கிரமே புறப்பட்டு வெளியே வந்தாள். செல்போனை உயிர்ப்பித்தாள்.

''அன்வர்... உடனே உங்களை நான் பார்க்கணும்!''
''சாயங்காலம் அஞ்சு மணிக்கு?''
''இல்லை... இப்பவே!''
''அப்படி என்ன அவசரம்? சரி, வர்றேன்!''
இருவரும் வழக்கமாக சந்திக்கும் உணவகத்தில் சுதா காத்திருக்க, அன்வர் வந்துவிட்டான்!
''குட்மார்னிங்!''
சுதா பேசவே இல்லை
''முகத்துல சிரிப்பே இல்ல... மூட் அவுட்டா? எல்லா விஷயங்களும் உங்க அண்ணிக்கு தெரிஞ்சு போச்சேனு...''
சுதா ஏறிட்டு அவனைப் பார்த்தாள்!
''கவலையேபடாதே. உங்க அண்ணி புத்திசாலி. மத்தவங்களை ரொம்ப சுலபமா எடை போட்டு எப்படி புரிஞ் சுக்கறாங்க தெரியுமா?! கணவனை இழந்த மல்லிகாவுக்கு உடனே உதவி. அக்கா குடும்பத்தையும் விடலை. அபாரம்!''
''இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?''
''அவங்ககூட வேலை பார்க்கற பத்ரி, எங்க வீட்டுக்கு பக்கத்து வீடுதானே. மல்லிகா, அக்கா எல்லாருக்கும் உங்க அண்ணி உதவும்போது நான் கூடத்தானே இருந்தேன்!''
''தெரியும்! வாசல் வரைக்கும் கொண்டு வந்து விட்டீங்களே?''
''அட! நீயும் பார்த்துட்டியா?''
''அந்த கண்றாவியை கண்ணால பார்த்த நான் விடிய விடியத் தூங்கல!''
''கண்றாவியா? என்ன சொல்ற சுதா?''
''அவங்க தடுக்கி விழுந்தாங்க... நீங்க தாங்கிப் புடிச்சீங்க! என்னைக்கூட இப்படி நீங்க புடிச்சதில்ல. கைல செல்போன் இருந்திருந்தா, போட்டோ எடுத்திருப்பேன்!''
''விழப்போன அவங்கள புடிச்சா... அது தப்பா சுதா?''
''இப்பத்தானே அறிமுகம்... அதுக்குள்ள இத்தனை நெருக்கமா?''
''ஏய்! ஸ்டாப் இட்! என்ன அர்த்தத்துல நீ பேசிட்டே போற?''
''அதை நான் சொல்லணுமா?''
''நான்சென்ஸ்! பொது இடம்னு பார்க்கறேன். இல்லைனா என் கை நீளும். அண்ணி, உனக்கு அம்மாவைப் போல. வாய் கூசாம பேசுற? வெக்கமா யில்ல? நம்ம காதல் விஷயம் தெரிஞ்சதும், குதிக்காம... எல்லாத்தையும் கேட்டுட்டு, நம்மை வாழ வைக்க முயற்சி எடுத்துட்டிருக்காங்க. தன் குடும் பத்தையும் வெச்சுகிட்டு, எல்லாருக்கும் உதவுற அந்த வெள்ளை மனசு எங்கே? அழுகிப் போன புத்தி படைச்ச நீ எங்கே? ச்சே! இதுக்கு மேல உன் எதிர்ல நான் நின்னாக்கூட எனக்கு அவமானம்! குட்பை!'' - அன்வர் எழுந்து வேகமாக நடக்கத் தொடங்க, சுதா மிரண்டு போனாள்.
''அன்வர்... நில்லுங்க!'' - வேகமாக ஓடி வந்தாள். திரும்பினான்
''இதப்பாரு... உங்க குடும்பத்துக்கு கிடைச்சிருக்கறது ஒரு வைரக்கல். அதைக் குப்பையில வீசிடாதீங்க வர்றேன்!'' - பைக்கை உதைவிட, புழுதி பறந்தது. சுதாவுக்கு ஒரு பக்கம் ஆத்திரம், மறுபக்கம் அழுகை!
'அவசரப்பட்டுட்டேனா? இந்த அளவுக்கு நான் பேசியிருக்கக் கூடாதா? அன்வர் இனி என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டானா? இந்தக் காதல் முறிந்துவிட்டதா?’
அன்வர் பைக்கை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு செல்போனைத் தட்டினான்.
''அக்கா! எங்கே இருக்க..?''
''ஆஸ்பத்திரிக்கு போய் அக்காவை பார்த்துட்டு, ஆபீஸுக்கு போயிடுவேன். என்னப்பா?''
''நான் உன்னை உடனே பார்க்கணும்!''
கபாலீஸ்வரர் கோயில் வாசலில் அன்வர் நிற்க, துர்கா வந்து விட்டாள்.
''உள்ளே போய்ப் பேசலாமா அன்வர்... நீ வருவியா?''
''எனக்கு எம்மதமும் சம்மதம்க்கா. வாரத்துல ஒரு நாள் கபாலீசுவரர், பாபா ரெண்டு கோயிலுக்கும் வருவேனே!'' இருவரும் பழனி ஆண்டவர் சந்நிதியை ஒட்டிய கொலு மண்டபத்தை அடைய,
''எதுக்கு அன்வர் அவசரமா கூப்பிட்டே?''
''காலை அவசரமா சுதா பார்க்க வந்தாக்கா'' என ஆரம்பித்து, ''சிந்தனை கேவலமான ஒருத்திகூட வாழறதை, என்னால கற்பனைகூட செஞ்சு பாக்க முடியலை!'' என்றான்.
துர்கா பேசவில்லை!
''நான் உனக்குத் தம்பியா எப்பவும் இருக்கேன்!''
''என் தம்பிக்கு பொறுமையும், நிதானமும் சகிப் புத்தன்மையும் நிறைய இருக்கும்னு நெனைச்சேன்...''
''இப்படி பேசினா எப்படிக்கா சகிச்சுக்க முடியும்?''
''என்ன அன்வர் நீ..? ஒரு காதல் முழுமையாகி, சம்பந்தப்பட்டவங்ககிட்ட போய்ச் சேரல. அதுக்குள்ளே உடையலாமா?''
''வேண்டாம்! விட்ருக்கா?''
''உன் மேல உள்ள உரிமை காரணமா, அவசரப் பட்டு பேசிட்டா. நீ அவளுக்கு மட்டும்தான் சொந் தம்ங்கற நினைப்புல தப்பில்லையே? நான் சுதாகிட்ட பேசுறேன். அவ வயசும் அப்படி. நீயும் சின்னப் பையன். எதுவும் உடையல; முறியல. பொறுமையா இரு. சரியா..? சரினு சொல்லுடா தம்பி!''
''சரிக்கா!''
''போலாமா..? முடிஞ்சா மல்லிகாவைப் போய் நீ பார்த்து இந்த பேப்பர்கள்ள கையெழுத்து வாங்கி, எங்க ஆபீஸுக்குக் கொண்டு வந்து குடு. முடியுமா!''
''முடியாதுனு சொல்லலாமா அக்காகிட்ட?''
''வா! சாமியைப் பாத்துட்டு ஆசாமிகளை பார்க்கப் போகலாம். நிறைய செலவிருக்கு அன்வர். இன்னும் கூடுதலா சம்பாதிக்கணும், மூணு குடும்பத்துக்கும் நான் செஞ்சாகணும். ஏதாவதொரு ஐடியா கொடேன்!''
''ஐடியா நிறையா இருக்குக்கா... உனக்கு டைம் இருக்கா?''
''அதுதான்டா பிரச்னை. 24 மணி நேரம் போதல!''
''சரி... யோசிக்கலாம்! ஏதாவது ஏஜென்ஸி மாதிரி எடுக்கலாமானு வொர்க் அவுட் பண்ணிப் பார்க்கறேன். நீ டூ-வீலர்ல வந்தியா?''
''அது ரிப்பேர் அன்வர்!''
''நான் உன்னை ட்ராப் பண்றேன். சுதா ஒளிஞ்சு நிக்கறாளானு பாருக்கா...''
''கொழுப்புடா ஒனக்கு. சரி, அக்காவைப் பார்க்க நேரமில்ல. அத்தான்கிட்ட போன்ல பேசிக்கிறேன்.''
துர்காவை ஆபீஸில் இறக்கிவிட்டான்.
துர்கா தன் கேபினுக்கு வந்து, அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு அதற்கான நேரத்தை குறித்துக் கொண்டாள். டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம் அவளுக்கு. வெட்டிப் பேச்சு, அரட்டை என ஒரு நொடி கூட வீணாக்க மாட்டாள். பாஸ்வேர்டை போட்டு, சிஸ்டத்தை செயலுக்குக் கொண்டு வர,

''குட்மார்னிங் துர்கா!''- லஷ்மியின் குரல் கேட்டு துர்கா நிமிர்ந்தாள்.
''குட்மார்னிங் மேடம். பொண்ணோட நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சுதா?''
''ஆச்சு துர்கா! நீதான் வரலியே?''
''வெளியூர்ல நீங்க வெச்சுதால வர முடியல! கல்யாண தேதி குறிச்சாச்சா?''
''இல்லை துர்கா. வர்ற 'தை’ மாசத்துலதான் நடத்த முடியும்!''
''ஏன் அத்தனை மாசம் தள்ளி..?''
''பணம் வேணும், மண்டபம் கிடைக்கணும்னு எத்தனையோ பிரச்னைகள்?'' - துர்காவின் எதிரில் அமர்ந்த லஷ்மி, ''எனக்கு ரிட்டையர்மென்ட்டுக்கு ரெண்டு வருஷங்கள்தான் பாக்கி. அவர் ஏற்கெனவே ரிட்டையர் ஆயாச்சு. அவரோட மொத்தப் பணமும் மூத்தவ கல்யாணத்துல கரைஞ்சாச்சு. தனியார் கம்பெனிங்கற காரணமா, அவருக்கு பென்ஷனும் இல்ல. ரெண்டு வருஷத்துல ரிட்டையர்மென்ட்டுங்கற காரணமா, யாரும் லோன் தர மாட்டாங்க. வாலன்டரி ரிட்டையர் மென்ட் வாங்கித்தான் கல்யாணத்தை நடத்தியா கணும். எல்லாம் யோசிச்சா, கல்யாணமே வேண் டாம்னு சொல்றா சுஜா. நிச்சயத்தை நடத்தியாச்சு. ஆறு மாசம் ஓடிப் போயிடும். பக்பக்னு இருக்கு!''
''கவலைப்படாதீங்க. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் சரியா நடக்கும். ரிடையர்மென்ட் வாங்க அவசரப்படாதீங்க. கடன் வாங்கிட்டு அடைக்க முயற்சிக்கலாம். இந்த வாரக் கடைசில உட்கார்ந்து பட்ஜெட் போடலாம். சுஜாவும் இப்ப சம்பாதிக்கறா இல்லையா!''
''அதை நான் நம்ப முடியாதே துர்கா?''
''இந்த ஆறு மாசம் வரைக்கும் உபயோகப் படுத்தலாமே மேடம்?''
''நானெல்லாம் இன்னும் திட்டம் போட்டு வாழ்ந்திருக்கணும். கோட்டை விட்டுட்டேன். நீ ஒரு பெண் குழந்தையைத்தான் வெச்சிருக்கே. இப்பவே முழிச்சுக்கோ துர்கா!''
பியூன் வந்தான்.
''துர்கா மேடம்... சேர்மன் வரச் சொல்றாங்க!''
துர்கா கையில் சின்ன நோட்டுப் புத்தகம், பேனா சகிதம் சேர்மன் அறையில் நுழைந்தாள்!
''உட்காரும்மா துர்கா! உனக்கொரு நல்ல சேதி சொல்லப்போறேன் நான்!''
''என்ன சார்?''
''லட்சக்கணக்கா சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு ஒண்ணு உன்னைத் தேடி வருதும்மா!''
''அப்படியா?'' - ஸீட் நுனிக்கு வந்தாள்.
மேற்கொண்டு சேர்மன் சொல்லச் சொல்ல, துர்கா விடம் சந்தோஷத்தை விட, 'இது முடியக்கூடிய காரியமா?’ என்ற கேள்விதான் முதலில் வந்து நின்றது!
என்ன அது?
- தொடருங்கள் தோழிகளே...

இந்த இதழின் கதைப் போக்கை, தன்னுடைய அழகான கற்பனை வளத்தின் மூலம் வார்த்தெடுத்து, தொடரின் இந்த எபிஸோடை இயக்கியிருப்பவர்... சென்னை வாசகி கிருஷ்ணவேணி. இவர் அவள் விகடனின் ரெகுலர் வாசகி. வாசகிகள் கைமணம், குட்டீஸ் குறும்பு, அனுபவங்கள் பேசுகின்றன போன்ற பகுதிகளில் இவரின் பங்களிப்பு அதிகம். இதுவரை 40 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, சிறுகதை போட்டியில் பரிசுகளும் வென்றுள்ளார்.
''அவள் விகடன்ல வந்த தன்னம்பிக்கை கட்டுரையைப் படிச்சுட்டுதான், ஆர்த்ரைட்டீஸ் நோயில் இருந்து முழுமையாக விடுபட்டு, இப்ப ஹாயாக நடக்கிறேன்'' என்கிறார் சந்தோஷமாக. கிருஷ்ணவேணிக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது. வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் குரலிலேயே அதை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிஸோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு! முக்கிய குறிப்பு: செவவாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்! |