மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 21

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடம் : எல்.ராஜேந்திரன்

##~##

'நானும் 'இருளும் ஒளியும்’லருந்து 'திருமகள் தேடி வந்தாள்’ பாட்டு போடுவான்... போடுவான்னு பாக்கென். திருநவேலிலயும் போட மாட்டெங்கான். சிலோன்லயும் போடுவெனாங்கான்!’ - ராஜேஸ்வரி அக்கா புலம்புவாள்.

நேயர் விருப்பத்தில் கடிதம் எழுதிப் போட்டு பாட்டு கேட்கும் அளவுக்கு அவளுக்கு விவரம் பத்தாது. மனதுக்குப் பிடித்த திரை இசைப் பாடலைக் கேட்பதற்கு அப்போது எல்லாம் நாள்கணக்காக, மாதக்கணக்காக எல்லாம் காத்துக்கிடக்க வேண்டும். பழைய பாடல்களுக்கே இந்தக் கதி என்றால், புதுப் பாடல்கள்பற்றிச் சொல்லவே வேண்டாம். படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிய பிறகு, எப்போடா அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்போம் என்று இருக்கும். எங்கோ தொலைவில் 'ஒரு வானவில் போலே’ என்ற பாடல் காற்றில் மிதந்து வரும். ஓடோடிச் சென்று வானொலியில் தேடிக் களைத்து ஒருவழியாகக் கண்டுபிடிக்கும்போது, 'ஹூ இஸ் தி ப்ளாக்ஷீப்?’ என்று கோபமாக டி.எம்.சௌந்தர்ராஜன் நம்மிடம் கேட்பார். மறுபடியும் 'ஒரு வானவில் போலே’ பாடல் என்றைக்கு வருகிறதோ, அதுவரை காத்துக்கிடக்க வேண்டும்.

மூங்கில் மூச்சு! - 21

வானொலிக்கு அடுத்த கட்டமாக டேப் ரிக்கார்டர் வந்துவிட்டபோதும், விருப்பப்பட்ட பாடல்களை உடனே கேட்கும் வசதி வரவில்லை. சிறு வயதில், வீட்டில் இருந்த ரிக்கார்ட் பிளேயரில், 'சங்கராபரணம்’, 'யாதோங்கி பாராத்’, 'பாபி’, 'ஜவானி திவானி’ படப் பாடல்களைக் கேட்ட ஞாபகம். அப்போதே டேப் ரிக்கார்டரும் வந்துவிட்டது என்றாலும், இந்தியாவின் முதல் ஸ்டீரியோஃபோனிக் இசையான 'ப்ரியா’ படப் பாடல்களை சாதாரண மோனோ 'பெட் டைப்’ டேப் ரிக்கார்டரில் கேட்கப் பிரியம் இல்லை. ஸ்டீரியோ டேப் ரிக்கார்டரில் 'ப்ரியா’ பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு வந்தபோது, ப்ரியாவுக்குத் துணையாகச் சில நூறு ஸ்டீரியோஃபோனிக் இசைப் படங்களின் பாடல்கள் இருந்தன.

மூங்கில் மூச்சு! - 21

'பாத்தியால... ரெண்டு ஸ்பீக்கர்லயும் வேற வேற ம்யூஸிக் கேக்கு!’ - புதிதாக வாங்கி இருந்த ஸ்டீரியோ டேப் ரிக்கார் டரில் 'மூன்றாம் பிறை’யின் 'வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட’ பாடலைப் போட்டுவிட்டு, பெரியண்ணன் கவனிக்கச் சொன்னான். கிதார் ஒரு ஸ்பீக்கரிலும் புல்லாங்குழல் மற்றொரு ஸ்பீக்கரிலும் கேட்டதை என் காதுகள் நம்பின. மனது நம்ப மறுத்தது. 'அதெப்படிண்ணே, ரெண்டுலயும் தனித் தனியாக் கேக்கு?’

'அதாம்ல ஸ்டீரியோ எஃபெக்ட்டு’ - பெரியண்ணன் சொன்னது புரிய வில்லை என்றாலும், ஸ்டீரியோ எஃபெக்ட் கேட்பதற்குச் சுகமாக இருந்தது.

வானொலி கேட்பது அதற்குப் பிறகு, வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. வீட்டில் கேஸட்டுகள் வாங்கிப் பாடல்கள் கேட்டாலும், நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் சத்தமாகப் பாட்டு கேட்கும் ஆசை தணியாமலேயே இருந்தது. வடுவக்குடி முடுக்குத் தெரு வழியாக பார்வதி தியேட்டருக்குப் போகும் வழியில், ஒரு வீட்டில் 'டுஜும் டுஜும்’ என்று எப்போதும் ஸ்பீக்கர்கள் அதிர்வது கேட்கும். யாரோ ஒரு வங்கி அதிகாரி அங்கு குடியிருக்கிறார் என்று சொல்வார்கள். அந்த வீட்டுக்காரர்கள் யாரையுமே நாங்கள் பார்த்தது இல்லை. ஆனாலும், இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்கள் வீட்டில் இருந்து அதிர அதிர ஒலித்த ரூனா லைலாவின் 'சூப்பருனா’ ஆல்பத்தில் உள்ள 'சுனோ சுனோ மேரி யெ கஹானி சுனோ’, முகம் தெரியாத அந்த மனிதர் களை நினைவில் வைத்து இருக்க உதவுகிறது.

குஞ்சுவின் வீட்டில் மனதுக்குப் பிடித்த பாடல்களை டேப் ரிக்கார்டரில் சத்தமாக ஒலிக்கவிட்டு, நாங்கள் கேட்பது உண்டு. வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் குஞ்சுவின் அப்பா, செருப்பைக் கழட்டும்போதே, எங்களைப் பார்த்து 'ரெண்டு டீ’ என்று உரத்த குரலில் ஆர்டர் செய்வார். டீக்கடையில் ஒலிப்பதுபோல் வீட்டில் பாட்டு கேட்பதை, நாசூக்காக இப்படி குத்திக்காட்டுவார். உடனே பாட்டை நிறுத்திவிட்டு, டீக்கடைக்கே சென்றுவிடுவோம். பூதத்தான் முக்கு, வாகையடி முக்கு மற்றும் சந்திப் பிள்ளையார் முக்கில் உள்ள டீக்கடைகளில் போய் நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் பாட்டு கேட்பதற்காகவே டீ குடிப்போம். 'முதல் மரியாதை’ படத்தின் 'வெட்டி வேரு வாசம்’ பாடலை, இப்போதும் லாலா சத்திரமுக்கில் உள்ள 'சதன்’ டீ ஸ்டாலில் குடித்த 'விவா’ டீயுடனேயேதான் நினைவுகூர்கிறேன். 'அப்பிடியே கணேசன் பாடுத மாரியே இருக்கு, பாத்தியா! மலேசியாவையும் சும்மா சொல்லக் கூடாது, என்னா?’ லாரியில் மூட்டை களை ஏற்றிவிட்டு, வேர்க்க விறுவிறுக்க வந்து இளைப்பாறியபடியே டீ குடித்துக்கொண்டு இருந்த லோடுமேன்கள் பேசிக்கொண்டனர்.

மூங்கில் மூச்சு! - 21

புதுப் பட கேஸட்டுகள் வெளியானவுடனேயே வாங்கிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் பொன்ராஜ் ஒரு ரகசியம் சொன்னான். 'மக்கா, கேஸட்டு வாங்காதெ. ரெக்கார்டுல இருந்து நல்லா ஈக்கொலைஸர் வெச்சு கேஸட்ல பதிஞ்சு கேளு. ஸ்பீக்கர்லாம் சும்மா ஒதரும்லா’. கேஸட்டுகள் வந்து ஒரு சில நாட்கள் கழித்துதான் ரெக்கார்டுகள் வெளியாகும். அதுவரை பொறுமையாகக் காத்திருப்போம். பாளையங்கோட்டையில் 'ட்ராக்’ என்னும் ரிக்கார்டிங் சென்டர் ரொம்பப் பிரசித்தம். பாட்டு லிஸ்ட் எழுதிக்கொடுத்தால், வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும். நல்ல தொழில்நுட்ப அறிவுடன் அந்தந்தப் பாடலின் ஒலியமைப்புக்கு ஏற்ப, அருமையான முறையில் பாடல்களை கேஸட்டில் பதிவுசெய்து கொடுப்பார்கள். மற்ற ரிக்கார்டிங் சென்டராக இருந்தால், 'எண்ணே, 'இஸ் நாய்ஸ்’ இல்லாம பேஸ் நல்லா வெச்சுப் பதிங்க’ என்று சொல்ல வேண்டியதிருக்கும்.

இது போக, கேஸட் கடைகளுக்குச் சென்று பழைய பாடல்கள் அடங்கிய கேஸட்டுகளையும் வாங்குவது உண்டு. 'போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைக் கொடுத்தானே’ போன்ற எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள், 'சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்’ போன்ற சிவாஜியின் சோகப் பாடல்கள், 'ஓகோ எந்தன் பேபி’ போன்ற ஜெமினி கணேசனின் காதல் பாடல்கள் அடங்கிய கேஸட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும். 'அண்ணாச்சி, வாணி ஜெயராமோட தனிப் பாடல்கள்ல, 'மேல்நாட்டு மருமகள்’ல 'முத்தமிழில் பாட வந்தேன் பாட்டு இல்லையே?’ வேண்டும் என்றே இல்லாத பாடலைக் கேட்பான் கணேசண்ணன். 'அதுக்கு நான் என்னடே பண்ணட்டும்? ஹெச்.எம்.வி-க் காரன் போடுதான். நான் வாங்கி விக்கேன்’- சலிப்புடன் பதில் வரும்.

நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டுத் திருமணம், கிரஹப்பிரவேசம், கோயில் கொடை போன்ற விசேஷங்களுக்கு என்னென்ன ரெக்கார்டுகள் கொண்டுவர வேண்டும் என்பதை சவுண்ட் சர்வீஸ்காரர் தனுஷ்கோடி அண்ணனிடம் அட்வான்ஸ் கொடுக்கும்போதே, சொல்லிவிடுவோம். 'எண்ணே, 'பொண்ணு ஊருக்குப் புதுசு’ புது ரெக்காடு வாங்கினேளா? இல்ல, அதே கீறல் விளுந்த ரெக்காடுதானா? ஸ்ரீராமஜெயம் மாரி சைலஜாவ 'சோலைக்குயிலே சோலைக்குயிலே’ன்னு நூத்தியெட்டு மட்டம் சொல்ல விட்டுராதிய’. அவ்வளவு பெரிய விசேஷ வீட்டில் அங்கும் இங்கும் அலைவதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் என்பது தெரிந்தாலும், பிடித்த இசைத் தட்டுக்கள் வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்போம். அதுவும் திருமண வீடுகளில் தவிர்க்கவே முடியாத 'மணமகளே மருமகளே வா வா’, 'பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’, 'வாராய் என் தோழி வாராயோ’ போன்ற சம்பிரதாயப் பழைய சினிமா பாடல்கள் முடிந்து, புதிய சினிமா பாடல்களைப் போடும்போது, உட்கார்ந்து பொறுமையாக ரசித்துக் கேட்க முடியாதுதான். ஆனாலும், காதில் கேட்டபடியே, உற்சாகமாக கல்யாண வேலைகளைப் பார்ப்போம். அதுவும் மனதுக்குப் பிடித்த பெண்கள் நடமாடும்போது, சில பொருத்தமான பாடல்கள் தற்செயலாக ஒலித்து மனசுக்குள் மழை பெய்ய ஆரம்பிக்கும்.

நண்பன் ஒருவன் திருமண வீட்டில், அந்தச் சமயத்தில் அறிமுகமாகி இருந்த பெண் ஒருத்திக்காக, 'மண் வாசனை’ படத் தின் 'பொத்திவச்ச மல்லிகை மொட்டு’ பாடலை ஏழெட்டு முறை ஒலிக்கவிட்டான் குஞ்சு. 'எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும்னு எப்படித்தான் ஒனக்குத் தெரியுமோ! ரொம்ப தேங்க்ஸு’ என்று குஞ்சுவின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி உணர்ச்சி பொங்க நன்றி சொன்னார், அந்தப் பெண்ணின் வயதான அத்தை.

இப்போது ரெக்கார்டு ப்ளேயர், டேப் ரெக்கார்டர் போன்றவை எல்லாம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுவிட்டன. சி.டி. ப்ளேயரும்கூட மறைந்து, எம்.பி3 புண்ணியத் தில் கட்டை விரல் சைஸுக்கு ஐ-பாட் வந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் அடைத்துவைத்து, வேண்டும்போது விரும்பிய பாடலைத் தட்டி னால் ஒலிக்கிறது. இந்த நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வளைந்து கொடுக்காத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'பாட்ட நாம தேடிப் போகணும்யா. கைக்குள்ளயே எல்லாம் இருந்துதுன்னா, அப்பொறம் அதுக்கு என்ன மதிப்புங்கென்? நாம எதிர்பாக்காத நேரத்துல, எதிர்பாக்காத பாட்டு வந்து நம்மத் தொடணும். அந்த சொகமே தனில்லா!’ - வீரகேரளம்புதூர் விநாயகத்து பெரியப்பா சொல்வார். தனது கடைசி மூச்சு வரை ஆல் இண்டியா ரேடியோ செய்திகளையும், திருநெல்வேலி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்படும் சினிமா பாடல் களையும், அகில இந்திய ஒலிபரப்பில் கர்னாடக, மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் கேட்டு வந்தவர் அவர்.

அண்மையில் திருநெல்வேலிக்குப் போயிருந்தபோது, அலுவல் விஷயமாக குஞ்சு பணகுடிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தான். 'சும்மா அப்பிடியே வாயேன். தனியாத்தான் போறேன். பேசிக்கிட்டே போவோம்’ என்று சொல்லி, என்னையும் அழைத்தான். அன்று மாலையில் திருநெல்வேலியில் ஒரு திருமண வரவேற்புக்கு நான் செல்ல வேண்டி இருந்தது என்பதால் தயங்கினேன். 'சீக்கிரம் வந்துரலாம்ல. ஜீப்லதானெ போறோம்! ஒரே அளுத்துல போயிட்டு வந்திருவோம்’ என்று நம்பிக்கையாகச் சொல்லி ஜீப்பை எடுத்தான்.

பணகுடியில் குஞ்சுவின் வேலைகள் முடியும்போது, பொழுது சாயத் தொடங்கி இருந்தது. நான் அவசியம் போய் கலந்துகொள்ள வேண்டிய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து, 'கௌம்பியாச்சா?’ என்று தொடர்ந்து போன் அழைப்புகள். பொறுமை இழக்கத் தொடங்கி னேன். 'ஏசாத ஏசாத... இந்தா போயிரலாம்’ என்றபடியே அவசர அவசரமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தான் குஞ்சு. எதுவுமே பேசாமல் உட்கார்ந்து இருந்தேன்.

மூங்கில் மூச்சு! - 21

வருகிற வழியில் ஒரு சடங்கு வீடு. தெரு அடைக்கப் போடப்பட்ட பந்தல் தோரணத்துக்கு இடையே ஜீப் புகுந்து சென்றது. அலங்கார ஜிகினா பூ வேலைகள் மற்றும் புஷ்பவதியான பெண்ணின் புகைப்படம் அச்சிட்ட போஸ்டர்களுக்கு மத்தியில், ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. மிகச் சரியாக நாங்கள் இடத்தைக் கடக்கும் போது, 'தூறல் நின்னு போச்சு’ திரைப் படத்தின் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’ பாடலை, வெட்கம் கலந்த ரகசியக் குரலில் ஜானகி பாடத் தொடங்கி னார். 'எல, கொஞ்சம் நிறுத்து’ என்று நான் சொல்ல வாய் எடுத்தேன். அதற்கு முன்பே அனிச்சையாக ஜீப்பை ஓரமாக நிறுத்தி னான் குஞ்சு. எப்போதும் என் கணினியிலும், ஐ-பாடிலும் இருக்கிற அந்தப் பாட்டு முடிந்த பிறகுதான் நாங்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம்!

- சுவாசிப்போம்...